Skip to content

குடும்ப ஸ்பெஷல்

நல்ல மார்க் வாங்க உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவலாம்?

நல்ல மார்க் வாங்க உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவலாம்?

 உங்கள் பிள்ளைக்கு ஸ்கூல் என்றாலே அலர்ஜியாக இருக்கிறதா? படிப்பு... ஹோம்வர்க்... என்றாலே அவன் டிமிக்கி கொடுக்கிறானா? அப்படியென்றால், அவனுடைய மார்க் குறைந்துகொண்டே போகலாம், குறும்பும் அதிகமாகலாம். அவன் நன்றாகப் படித்து நல்ல மார்க் வாங்க நீங்கள் எப்படி உதவலாம்?

 நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை

 நச்சரிப்பது நிலைமையை மோசமாக்கும். எப்போது பார்த்தாலும் ‘படி, படி’ என்று பிள்ளையை நச்சரித்துக்கொண்டே இருந்தால், ஸ்கூலிலும் சரி, வீட்டிலும் சரி, அவனுக்கு டென்ஷனும் கவலையும் அதிகமாகிவிடும்! அதனால் பொய் சொல்வான், மார்க்கைக் காட்டாமல் மறைத்துவிடுவான், ரிப்போர்ட் கார்டில் உங்கள் கையெழுத்தைப் போட்டுவிடுவான், அல்லது ஸ்கூலுக்கு மட்டம் போட்டுவிடுவான். இப்படி, நிலைமை இன்னும்தான் மோசமாகும்.

 பரிசு தருவது எல்லா சமயத்திலும் பலன் தராது. “எங்க பொண்ணுக்கு படிப்புல ஆர்வம் வரணும்னு நினைச்சு, அவ நல்ல மார்க் வாங்கறப்பெல்லாம் ஏதாவது பரிசு கொடுத்தோம். ஆனா, அதுக்கு அப்புறம் அவ எப்பவும் பரிச பத்தியே யோசிக்க ஆரம்பிச்சிட்டா. கம்மி மார்க் வாங்குனப்போகூட, அத பத்தி கவலப்படாம, பரிசு கிடைக்காம போயிடுச்சேன்னு கவலப்பட ஆரம்பிச்சிட்டா” என்று சொல்கிறார் ஆண்ட்ரூ.

 டீச்சர்கள்மேல் பழிபோடுவது உதவாது. நீங்கள் டீச்சர்கள்மேல் பழிபோட்டால், நல்ல மார்க் வாங்க தன் பங்கில் எந்த முயற்சியும் தேவை இல்லை என்று உங்கள் பிள்ளை நினைத்துவிடலாம். அதோடு, அவன் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள்மேல் பழிபோட ஆரம்பித்துவிடலாம். அதுமட்டுமல்ல, அவனுடைய பிரச்சினைகளை மற்றவர்கள் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடலாம். சுருக்கமாகச் சொன்னால், எதைச் செய்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக்கொள்ளாமல் போய்விடலாம். ஆனால், வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒரு பண்பு அது.

 நீங்கள் செய்ய வேண்டியவை

 உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் மார்க்கைப் பார்க்கும்போது உங்களுக்குக் கோபம் வருகிறதா? அப்படியென்றால், அப்போதைக்கு அதைப் பற்றி அவனிடம் பேசாதீர்கள். பிரெட் என்ற அப்பா இப்படிச் சொல்கிறார்: “நானும் என் மனைவியும் பிள்ளைங்ககிட்ட அமைதியா பேசுறப்பவும் அனுதாபம் காட்டுறப்பவும்தான் நல்ல பலன்கள் கிடைக்குது.”

 பைபிள் ஆலோசனை: “ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும், சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.”​—யாக்கோபு 1:19.

 உண்மையான பிரச்சினையைக் கண்டுபிடியுங்கள். பிள்ளைகள் சோம்பேறிகளாக இருப்பதால்தான் படிக்காமல் இருக்கிறார்கள் என்று முடிவுகட்டிவிடாதீர்கள். அவர்கள் குறைவான மார்க் வாங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, ஸ்கூலை மாற்றுவதால், மற்ற பிள்ளைகளுடைய தொல்லையால், பரீட்சை பயத்தால், குடும்பத்திலுள்ள பிரச்சினைகளால், தூக்கம் இல்லாததால், எதையும் திட்டமிட்டுச் செய்யாததால், அல்லது கவனம் செலுத்த முடியாததால் அவர்கள் குறைவான மார்க் வாங்கலாம்.

 பைபிள் ஆலோசனை: “விவேகத்தோடு ஒரு காரியத்தைச் செய்கிறவன் வெற்றி பெறுவான்.”​—நீதிமொழிகள் 16:20.

 படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள். ஹோம்வர்க் செய்யவும் படிக்கவும் ஒரு அட்டவணை போட்டுக்கொடுங்கள். ஹோம்வர்க் செய்ய ஒரு நல்ல இடத்தை அமைத்துக்கொடுங்கள். (டிவி, ஃபோன் போன்றவற்றால்) உங்கள் பிள்ளையின் கவனம் சிதறாத இடமாக அது இருக்க வேண்டும். மணிக்கணக்காக உட்கார்ந்து ஹோம்வர்க்கைச் செய்ய வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய வையுங்கள்; அப்போதுதான், உங்கள் பிள்ளையால் அதில் முழு கவனம் செலுத்த முடியும். ஜெர்மனியைச் சேர்ந்த ஹெக்டர் என்ற அப்பா இப்படிச் சொல்கிறார்: “பரீட்சை வரப்போகுதுன்னா, கடைசி நிமிஷம்வரை வெயிட் பண்ணாம, தினமும் கொஞ்சம் கொஞ்சமா படிக்க வைப்போம்.”

 பைபிள் ஆலோசனை: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.”​—பிரசங்கி 3:1.

 படிப்பு ஏன் முக்கியம் என்று சொல்லுங்கள். உங்கள் பிள்ளை இன்னும் ஆர்வமாகப் படிக்க வேண்டுமா? அப்படியென்றால், ஸ்கூலுக்குப் போவதால் இப்போதே என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதைப் புரிய வையுங்கள். உதாரணத்துக்கு, கணக்குப் பாடம் படித்தால் கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தைச் சரியாகக் கணக்குப்போட்டுச் செலவு செய்ய கற்றுக்கொள்ளலாம் என்பதைப் புரிய வையுங்கள்.

 பைபிள் ஆலோசனை: ‘ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி. . . . அதை உயர்வாக மதி.’​—நீதிமொழிகள் 4:5, 8.

 டிப்ஸ்: ஹோம்வர்க் செய்ய உங்கள் பிள்ளைக்கு உதவி செய்யுங்கள், ஆனால் நீங்களே அதைச் செய்து கொடுக்காதீர்கள். “எங்க பொண்ணு அவளோட மூளைய பயன்படுத்துறதுக்கு பதிலா நாங்களே எல்லாத்தயும் செஞ்சு கொடுக்கணும்னு எதிர்பார்ப்பா” என்று சொல்கிறார் ஆண்ட்ரூ. அதனால், உங்கள் பிள்ளையே சொந்தமாக ஹோம்வர்க் செய்வதற்குப் பழக்குங்கள்.