Skip to content

பைபிளைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

பைபிளைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

பைபிள் தரும் பதில்

 பைபிளைப் புரிந்துகொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பைபிளே சொல்கிறது. நீங்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பைபிளிலுள்ள கடவுளுடைய செய்தி புரிந்துகொள்ள “கஷ்டமானது இல்லை, கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தூரத்திலும் இல்லை.”—உபாகமம் 30:11.

பைபிளைப் புரிந்துகொள்ள அவசியமானவை:

  1.   சரியான மனப்பான்மையோடு இருப்பது. பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளுங்கள். கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார் என்பதால், மனத்தாழ்மையோடு இருங்கள். (1 தெசலோனிக்கேயர் 2:13; யாக்கோபு 4:6) ஆனாலும், குருட்டு விசுவாசத்தைத் தவிர்த்திடுங்கள்; “சிந்திக்கும் திறனை” நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்.—ரோமர் 12:1, 2.

  2.   ஞானத்திற்காக ஜெபம் செய்வது. ‘உங்கள் சொந்த புத்தியை நம்பாதீர்கள்’ என்று பைபிள் நீதிமொழிகள் 3:5-ல் சொல்கிறது. அதற்குப் பதிலாக, பைபிளைப் புரிந்துகொள்ள ஞானத்தைத் தரும்படி ‘கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருங்கள்.’—யாக்கோபு 1:5.

  3.   தவறாமல் படிப்பது. பைபிளை எப்போதாவது ஒரு தடவை படிப்பதற்குப் பதிலாக, தவறாமல் படிப்பதுதான் உங்களுக்கு அதிக பிரயோஜனமாக இருக்கும்.—யோசுவா 1:8.

  4.   ஒவ்வொரு தலைப்பாக எடுத்துக்கொண்டு படிப்பது. குறிப்பிட்ட ஒரு தலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று ஆராய்ச்சி செய்து படிப்பது, பைபிளைப் புரிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. ‘அடிப்படைப் போதனைகளில்’ ஆரம்பித்து, பிற்பாடு ‘முதிர்ச்சியை (ஆழமான போதனைகளை) நோக்கி முன்னேறுங்கள்.’ (எபிரெயர் 6:1, 2) அப்படிச் செய்யும்போது, ஒரு வசனத்தை இன்னொரு வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள், பைபிளிலுள்ள பல்வேறு பதிவுகள், ‘புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கிற’ பதிவுகள்கூட, ஒன்றுக்கொன்று விளக்கமளித்துக்கொள்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.—2 பேதுரு 3:16.

  5.   மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது. பைபிள் விஷயங்களைப் புரிந்திருக்கிறவர்களுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 8:30, 31) ஆர்வமுள்ளவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிள் படிப்பு நடத்திவருகிறார்கள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கு ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போலவே பைபிள் வசனங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.—அப்போஸ்தலர் 17:2, 3.

பைபிளைப் புரிந்துகொள்ள அவசியமற்றவை:

  1.   அறிவுக்கூர்மை அல்லது பெரிய படிப்பு. இயேசுவின் 12 அப்போஸ்தலர்களை “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்று சிலர் கருதினார்கள்; ஆனாலும், வேதவசனங்களை அவர்கள் நன்றாகப் புரிந்திருந்தார்கள், அவற்றை மற்றவர்களுக்குக் கற்பித்தார்கள்.—அப்போஸ்தலர் 4:13.

  2.   பணம். பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை காசு கொடுக்காமலேயே நீங்கள் கற்றுக்கொள்ளலாம். “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார்.—மத்தேயு 10:8.