Skip to content

யெகோவா யார்?

யெகோவா யார்?

பைபிள் தரும் பதில்

 யெகோவாதான் உண்மைக் கடவுள் என்று பைபிள் சொல்கிறது; அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர். (வெளிப்படுத்துதல் 4:11) தீர்க்கதரிசிகளான ஆபிரகாமும் மோசேயும் இயேசுவும்கூட அவரைத்தான் வணங்கினார்கள். (ஆதியாகமம் 24:27; யாத்திராகமம் 15:1, 2; யோவான் 20:17) அவர் ஒரேவொரு இனத்தாருக்கு மட்டுமல்ல, “பூமி முழுவதுக்கும்” கடவுளாக இருக்கிறார்.—சங்கீதம் 47:2.

 பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள யெகோவா என்ற பெயர் தனித்தன்மை வாய்ந்த பெயராக இருக்கிறது. (யாத்திராகமம் 3:15; சங்கீதம் 83:18) “ஆகும்படி” என்ற அர்த்தத்தைத் தருகிற எபிரெய வினைச்சொல்லில் இருந்து இது வருகிறது; அதனால், ஏராளமான அறிஞர்கள் இந்தப் பெயருக்கு “ஆகும்படி செய்கிறவர்” என்ற அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். யெகோவா படைப்பாளராக, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறவராக இருப்பதால், இந்தப் பெயரின் விளக்கம் ஏகப் பொருத்தமாக இருக்கிறது. (ஏசாயா 55:10, 11) யெகோவா என்ற பெயரைப் பற்றி மட்டுமல்ல, அந்தப் பெயரின் சொந்தக்காரரைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு, முக்கியமாக அன்பு என்ற அவருடைய பிரதான குணத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு, பைபிள் உதவுகிறது.—யாத்திராகமம் 34:5-7; லூக்கா 6:35; 1 யோவான் 4:8.

 டெட்ராகிரமாட்டன் என்று அழைக்கப்படுகிற நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் יהוה (ய்ஹ்வ்ஹ்) அடங்கிய கடவுளுடைய பெயரின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் ஜெஹோவா. தமிழில் யெகோவா. பண்டைய எபிரெய மொழியில் இந்தப் பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியாது. ஆனால், ஆங்கில மொழியில் “ஜெஹோவா” என்ற பெயர் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது; முதன்முதலாக, 1530-ல் வெளியிடப்பட்ட வில்லியம் டின்டேலின் பைபிள் மொழிபெயர்ப்பில் இது காணப்படுகிறது. a

பண்டைய எபிரெய மொழியில் கடவுளுடைய பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டதென நமக்கு ஏன் தெரியாது?

 பண்டைய எபிரெய மொழியில் உயிரெழுத்துக்கள் இல்லை, மெய்யெழுத்துக்கள் மட்டும்தான் இருந்தன. எபிரெய மொழியை வாசிக்கத் தெரிந்த ஒருவர் எபிரெய வார்த்தைகளைச் சரியான உயிரெழுத்துக்களோடு சேர்த்து எளிதாக வாசித்துவிடுவார். ஆனால், எபிரெய வேதாகமம் (“பழைய ஏற்பாடு”) எழுதி முடிக்கப்பட்ட பிறகு, சில யூதர்கள் கடவுளுடைய பெயரை உச்சரிப்பது தவறு என்ற மூடநம்பிக்கையைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். வசனங்களை அவர்கள் சத்தமாக வாசிக்கும்போது கடவுளுடைய பெயர் வந்தால், அதை உச்சரிக்காமல், அதற்குப் பதிலாக “கர்த்தர்” அல்லது “கடவுள்” என்று உச்சரித்தார்கள். நூற்றாண்டுகள் செல்லச்செல்ல, இந்த மூடநம்பிக்கை பல இடங்களுக்குப் பரவியது; கடைசியில், பண்டைய உச்சரிப்பு அப்படியே மறைந்துபோய்விட்டது. b

 கடவுளுடைய பெயர் “யாவே” என உச்சரிக்கப்பட்டதாகச் சிலர் சொல்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் ஆளுக்கொரு விதமாகச் சொல்கிறார்கள். லேவியராகமப் புத்தகத்தின் ஒரு பகுதியைக் கொண்ட சவக்கடல் சுருள் ஒன்றில், கடவுளுடைய பெயர் யாவோ என்று கிரேக்கில் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, யாயே, யாபே, யாவூவே என்றெல்லாம் அது உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக் கால கிரேக்க எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், எது சரியான உச்சரிப்பு என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. c

பைபிளிலுள்ள கடவுளுடைய பெயரைக் குறித்த தவறான கருத்துகள்

 தவறான கருத்து: “யெகோவா” என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிற பைபிள் மொழிபெயர்ப்புகள், அந்தப் பெயரை வசனங்களில் சேர்த்துவிட்டிருக்கின்றன.

 உண்மை: நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களைக் கொண்ட கடவுளுடைய பெயர் பைபிளில் சுமார் 7,000 தடவை வருகிறது. d பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை ஒரேயடியாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “கர்த்தர்” என்ற பட்டப்பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன.

 தவறான கருத்து: சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு ஒரு தனிப்பெயர் தேவையில்லை.

 உண்மை: பைபிள் எழுத்தாளர்களைக் கடவுள் தன் சக்தியால் தூண்டி, ஆயிரக்கணக்கான தடவை தன்னுடைய பெயரைப் பதிவுசெய்ய வைத்திருக்கிறார்; அதோடு, தன்னுடைய பெயரைப் பயன்படுத்தும்படி தன்னுடைய வணக்கத்தாருக்குக் கட்டளையும் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 42:8; யோவேல் 2:32; மல்கியா 3:16; ரோமர் 10:13) சொல்லப்போனால், மக்கள் தன் பெயரை மறக்கும்படி செய்த பொய்த் தீர்க்கதரிசிகளைக் கடவுள் கண்டனம் செய்தார்.—எரேமியா 23:27.

 தவறான கருத்து: யூதர்களின் பாரம்பரிய வழக்கத்தின்படி, கடவுளுடைய பெயர் பைபிளிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

 உண்மை: யூத வேத அறிஞர்கள் சிலர் கடவுளுடைய பெயரை உச்சரிக்க மறுத்தது உண்மைதான். ஆனால், அவர்கள் தங்களுடைய பைபிள் பிரதிகளிலிருந்து அந்தப் பெயரை நீக்கிவிடவில்லை. எது எப்படியோ, கடவுளுடைய கட்டளைகளுக்கு முரணாக இருக்கிற மனித பாரம்பரியங்களை நாம் பின்பற்றுவது கடவுளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.—மத்தேயு 15:1-3.

 தவறான கருத்து: எபிரெய மொழியில் கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பு யாருக்குமே தெரியாது என்பதால், பைபிளில் அந்தப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது.

 உண்மை: எல்லா மொழியினரும் தன்னுடைய பெயரை ஒரே விதமாகத்தான் உச்சரிக்க வேண்டுமென்று கடவுள் எதிர்பார்ப்பது போல் இந்தக் கருத்து உள்ளது. ஆனால், வெவ்வேறு மொழிகளைப் பேசிய கடவுளுடைய பூர்வகால வணக்கத்தார் வெவ்வேறு விதமாகத்தான் பெயர்களை உச்சரித்தார்கள்.

 உதாரணத்துக்கு, இஸ்ரவேல் நியாயாதிபதி யோசுவாவின் பெயரை எடுத்துக்கொள்ளுங்கள். எபிரெய மொழி பேசிய முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், இந்தப் பெயரை யெஹோஷுவா என்று உச்சரித்தார்கள், ஆனால் கிரேக்க மொழி பேசியவர்கள் ஈஷூஸ் என்று உச்சரித்தார்கள். யோசுவாவின் எபிரெயப் பெயருடைய கிரேக்க மொழிபெயர்ப்பு பைபிளில் இருப்பது, கிறிஸ்தவர்கள் பொதுவாகத் தங்களுடைய மொழியில் உச்சரிக்கப்பட்டபடியே பெயர்களை உச்சரித்தார்கள் என்பதைக் காட்டுகிறது.—அப்போஸ்தலர் 7:45; எபிரெயர் 4:8.

 கடவுளுடைய பெயர் மொழிபெயர்க்கப்படுவதிலும் இதே நியமம் பொருத்தப்படலாம். கடவுளுடைய பெயரின் துல்லியமான உச்சரிப்புக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட அந்தப் பெயர் பைபிளில் இருக்க வேண்டிய இடங்களில் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

a டின்டேல், தான் மொழிபெயர்த்த முதல் ஐந்து பைபிள் புத்தகங்களில், “ஈஹௌவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்தினார். காலம் செல்லச்செல்ல, ஆங்கில மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டதால், கடவுளுடைய பெயரின் எழுத்து வடிவமும் மாறியது. உதாரணத்துக்கு, ஹென்ரி ஐன்ஸ்வர்த் 1612-ல், தான் மொழிபெயர்த்த சங்கீத புத்தகம் முழுவதிலும் “ஈஹோவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்தினார். ஆனால், 1639-ல் அவர் வெளியிட்ட திருத்திய மொழிபெயர்ப்பில், “ஜெஹோவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்தினார். 1901-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் பைபிளை மொழிபெயர்த்தவர்கள், எபிரெய வேதாகமத்தில் எங்கெல்லாம் கடவுளுடைய பெயர் இருந்ததோ அங்கெல்லாம் “ஜெஹோவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்தினார்கள்.

b நியு கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியாவின் இரண்டாவது பதிப்பில், தொகுப்பு 14, பக்கங்கள் 883-884-ல் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் நாடு திரும்பியபின், கொஞ்சக் காலம் கழித்து, யாவே என்ற பெயருக்கு அளவுகடந்த மரியாதையைக் காட்ட ஆரம்பித்தார்கள்; இதனால்தான், அந்தப் பெயருக்குப் பதிலாக அதோனை என்றோ எலோஹிம் என்றோ பயன்படுத்துகிற வழக்கம் ஆரம்பமானது.”

c கூடுதலான தகவல்களுக்கு, புதிய உலக மொழிபெயர்ப்பில்எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்” என்ற தலைப்பிலுள்ள இணைப்பு A4-ஐப் பாருங்கள்.

d தியோலஜிக்கல் லெக்ஸிக்கன் ஆஃப் த ஓல்ட் டெஸ்ட்டமென்ட், தொகுப்பு-2, பக்கங்கள் 523-524-ஐப் பாருங்கள்.