Skip to content

தங்கள்மீது சுமத்தப்படுகிற எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பதிலளிப்பதில்லை?

தங்கள்மீது சுமத்தப்படுகிற எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பதிலளிப்பதில்லை?

 எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் கேலிப் பேச்சுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற பைபிளின் புத்திமதியை யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் கடைப்பிடிக்கிறோம். உதாரணத்துக்கு, “கேலி செய்கிறவனைத் திருத்தப் பார்க்கிறவன் அவமானத்தைத் தேடிக்கொள்கிறான்” என்று பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது. (நீதிமொழிகள் 9:7, 8; 26:4) பொய்க் குற்றச்சாட்டுகளைப் பற்றி அளவுக்கு மீறி கவலைப்பட்டு, அதற்காக வரிந்துகட்டிக்கொண்டு சண்டை போடுவதற்குப் பதிலாக, கடவுளைப் பிரியப்படுத்துவற்குத்தான் நாங்கள் முழு கவனம் செலுத்துகிறோம்.—சங்கீதம் 119:69.

 “பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.” (பிரசங்கி 3:7) அதனால், சத்தியம் எதுவென்று கண்டுபிடிக்க ஆர்வமாக இருக்கிற நல்மனமுள்ள ஆட்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்கிறோம். ஆனால், அர்த்தமற்ற விவாதங்களை நாங்கள் தவிர்க்கிறோம். இந்த விஷயத்தில், இயேசு மற்றும் ஆரம்பக் கால கிறிஸ்தவர்களின் முன்மாதிரியையும் அவர்களுடைய போதனைகளையும் பின்பற்றுகிறோம்.

  •   இயேசு: பிலாத்துவுக்குமுன் பொய்க் குற்றம்சாட்டப்பட்டபோது, அவர் பதிலே பேசவில்லை. (மத்தேயு 27:11-14; 1 பேதுரு 2:21-23) குடிகாரர், பெருந்தீனிக்காரர் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டபோதுகூட அவர் பதில் பேசவில்லை. “ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என்ற நியமத்தின்படி நடந்தார்; அதாவது, தான் எப்படிப்பட்டவர் என்பதைத் தன் செயல்கள் மூலம் காட்டினார். (மத்தேயு 11:19) இருந்தாலும், நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, தன்மேல் குற்றம்சுமத்தியவர்களுக்குத் தைரியமாகப் பதிலளித்தார்.—மத்தேயு 15:1-3; மாற்கு 3:22-30.

     பொய்க் குற்றச்சாட்டுகளைக் கேட்டு சோர்ந்துபோக வேண்டாம் என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். “நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும், உங்களைத் துன்புறுத்தும்போதும் சந்தோஷப்படுங்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 5:11, 12) அப்படிக் குற்றம்சாட்டப்படும்போது தன் சீஷர்களுக்குச் சாட்சி கொடுக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதாகவும், அப்போது, “உங்கள் எதிரிகள் எல்லாரும் திரண்டு வந்தாலும் உங்களை எதிர்த்து நிற்கவோ எதிர்த்துப் பேசவோ முடியாதபடி நான் உங்களுக்கு வார்த்தைகளையும் ஞானத்தையும் அருளுவேன்” என்ற தன் வாக்குறுதியை நிறைவேற்றப்போவதாகவும் அவர் சொன்னார்.—லூக்கா 21:12-15.

  •   அப்போஸ்தலன் பவுல்: எதிரிகளோடு வாக்குவாதம் செய்வதை அறவே தவிர்க்கும்படி கிறிஸ்தவர்களுக்குப் புத்திமதி சொன்னார்; அப்படிப்பட்ட வாக்குவாதங்கள் “பிரயோஜனம் இல்லாதவை, வீணானவை” என்று அவர் விவரித்தார்.—தீத்து 3:9; ரோமர் 16:17, 18.

  •   அப்போஸ்தலன் பேதுரு: விசுவாசத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களிடம் முடிந்தபோதெல்லாம் பதில் சொல்லும்படி கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (1 பேதுரு 3:15) வாய் வார்த்தைகளைவிட செயல்கள் மூலமாக அதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று அவர் தெரிந்து வைத்திருந்தார். அதனால், ‘நீங்கள் சரியான விதத்தில் நடந்து, முட்டாள்தனமாகப் பேசுகிற புத்தியில்லாத ஆட்களின் வாயை அடைக்க வேண்டும்’ என்று அவர் எழுதினார்.—1 பேதுரு 2:12-15.