Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாவீது ராஜா ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல என்கிறது புதைபொருள் ஆராய்ச்சி

தாவீது ராஜா ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல என்கிறது புதைபொருள் ஆராய்ச்சி

 இஸ்ரவேலை ஆட்சி செய்த தாவீது ராஜா கி.மு 11-வது நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றும், அவருடைய பரம்பரையில் வந்தவர்கள் நூற்றுக்கணக்கான வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. இருந்தாலும், ‘தாவீது என்ற ஒருவர் வாழ்ந்ததே கிடையாது, கட்டுக்கதைகளில் வருகிற ஒரு கதாபாத்திரம்தான் அவர்’ என்று சில விமர்சகர்கள் வாதாடுகிறார்கள். அப்படியென்றால், தாவீது ராஜா நிஜமாகவே வாழ்ந்தாரா?

 1993-ல் புதைபொருள் ஆராய்ச்சியாளரான எவ்ரஹம் பெரனும், அவருடன் வேலை செய்தவர்களும் இஸ்ரவேலின் வடக்குப் பகுதியில் இருக்கும் டெல் டானில் ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார்கள். அதில் ‘தாவீதின் வீட்டை’ குறிக்கும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. கி.மு 9-வது நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பழைய செமிட்டிக் எழுத்துகள்தான் அவை! இஸ்ரவேலர்களைத் தோற்கடித்த பெருமையில் அரமேயர்கள் எழுப்பிய நினைவுச் சின்னத்தின் பகுதியாகத்தான் இந்தக் கல்வெட்டு இருந்திருக்க வேண்டும்.

 பைபிள் ஹிஸ்டரி டெயிலியில் வந்த ஒரு கட்டுரை இப்படிச் சொன்னது: “கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த ‘தாவீதின் வீட்டை’ பற்றி சந்தேகங்கள் இருந்துவந்தன . . . என்றாலும், பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தாவீது ராஜா வாழ்ந்ததற்கு டெல் டான் கல்வெட்டை முதலும் முக்கியமுமான அத்தாட்சியாக நிறைய பைபிள் அறிஞர்களும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதனால், BAR-ன் [Biblical Archaeology Review] பதிவுகளில் இருக்கும் மிக முக்கியமான பைபிள் புதைபொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.”