Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேதனைகள்—கடவுள் தரும் தண்டனையா?

வேதனைகள்—கடவுள் தரும் தண்டனையா?

லுசியா, வலது காலில் நொண்டியபடி நடக்கிறார். நரம்பு மண்டலத்தைத் தாக்கும் போலியோ என்ற பயங்கரமான தொற்றுநோயால் அவர் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டார். அவருக்கு 16 வயதானபோது, அவருடைய எஜமானி அவரிடம், “நீ உன் அம்மாவுக்கு கீழ்ப்படியாம அவங்களுக்கு கஷ்டம் கொடுத்ததுனாலதான் கடவுள் இந்த நோய கொடுத்து உன்ன தண்டிச்சிருக்கார்” என்று சொன்னார். அதைக் கேட்டபோது லுசியா ரொம்பவே வேதனைப்பட்டார்; பல வருஷத்துக்குப் பிறகும்கூட அதை அவரால் மறக்கவே முடியவில்லை.

டமாரிஸ் என்ற பெண்ணுக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, அவருடைய அப்பா அவரிடம், “உனக்கு இந்த நோய் வந்திருக்குன்னா, கண்டிப்பா நீ ஏதாவது பெரிய தப்பு செஞ்சிருப்ப. அதனாலதான், கடவுள் உன்னை தண்டிக்குறார்” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு டமாரிஸ் அப்படியே நொறுங்கிப் போய்விட்டார்.

நோய் என்பது கடவுள் தரும் தண்டனை என்ற கருத்து ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே வந்திருக்கிறது. “ஒருவர் செய்த பாவத்தால், அல்லது அவருடைய சொந்தக்காரர்கள் செய்த பாவத்தால்தான் அவருக்கு நோய் வருகிறது; அது அவருக்குக் கிடைக்கும் தண்டனை” என்று கிறிஸ்துவின் காலத்திலிருந்த ஏராளமான மக்கள் நம்பியதாக மேனர்ஸ் அண்ட் கஸ்டம்ஸ் ஆஃப் பைபிள் லேண்ட்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. கிறிஸ்துவுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த “சில மக்கள், தங்களுடைய பாவச் செயல்களுக்குத் தண்டனையாகத்தான் கொள்ளைநோய்களைக் கடவுள் கொண்டுவந்ததாக நம்பினார்கள்” என்று மிடீவல் மெடிசின் அண்ட் தி ப்ளேக் என்ற புத்தகம் சொல்கிறது. அப்படியென்றால், கடவுள் கெட்டவர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காகத்தான் 14-வது நூற்றாண்டில் கொள்ளைநோயைக் கொண்டுவந்து ஐரோப்பா முழுவதும் லட்சக்கணக்கான பேரைச் சாகடித்தாரா? இல்லையென்றால், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறபடி அந்தக் கொள்ளைநோய்க்குக் காரணம் கிருமிகளா? சிலர் இப்படி யோசிக்கலாம்: மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காகக் கடவுள் நிஜமாகவே நோய்களைப் பயன்படுத்துகிறாரா? a

சிந்தியுங்கள்: நோய்களும் வேதனைகளும் கடவுள் தரும் தண்டனைகளாக இருந்தால், இயேசு ஏன் நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டும்? அப்படிச் செய்வது, கடவுளுடைய நீதிக்கும் நியாயத்தன்மைக்கும் எதிராகச் செயல்படுவதுபோல் ஆகிவிடாதா? (மத்தேயு 4:23, 24) இயேசு ஒருபோதும் கடவுளுடைய செயல்களுக்கு எதிராக நடந்துகொள்ள மாட்டார். ‘நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்றும், “என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்” என்றும் அவர் சொன்னார்.—யோவான் 8:29; 14:31.

யெகோவா தேவன் “அநியாயமே செய்யாதவர்” என்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது. (உபாகமம் 32:4) இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: விமானத்தில் உள்ள யாரோ ஒரு நபரைத் தண்டிப்பதற்காக, அந்த விமானத்தையே விபத்துக்குள்ளாக்கி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கடவுள் சாகடிப்பாரா? நிச்சயம் மாட்டார்! கடவுளுடைய நீதியை மனதில் வைத்திருந்த அவருடைய உண்மை ஊழியரான ஆபிரகாம், கடவுள் ஒருபோதும் ‘பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களை அழிக்க’ மாட்டார் என்று சொன்னார். அப்படிச் செய்வது ‘நினைத்துக்கூடப் பார்க்க முடியாத’ விஷயம் என்றும் அவர் சொன்னார். (ஆதியாகமம் 18:23, 25) “கடவுள் அக்கிரமம் செய்ய மாட்டார்,” “அநியாயம் செய்ய மாட்டார்” என்றும்கூட பைபிள் சொல்கிறது.—யோபு 34:10-12.

வேதனைகளைப் பற்றி பைபிள் நமக்கு என்ன சொல்லித்தருகிறது?

வேதனை என்பது ஒரு குறிப்பிட்ட பாவத்துக்காகக் கடவுள் நமக்குக் கொடுக்கும் தண்டனை அல்ல என்பதை இயேசு தெளிவாகப் புரிந்துவைத்திருந்தார். அதனால்தான், அவரும் அவருடைய சீஷர்களும் பிறவிக் குருடன் ஒருவனைப் பார்த்தபோது, “அவருடைய சீஷர்கள், ‘ரபீ, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமா?’ என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, ‘இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமும் இல்லை’” என்று சொன்னார்.—யோவான் 9:1-3.

தவறான கருத்துகள் பரவலாக இருந்த அந்தச் சமயத்தில், அந்த மனிதன் குருடனாகப் பிறந்ததற்கு அவன் செய்த பாவமோ அவனுடைய அப்பா அம்மா செய்த பாவமோ காரணம் கிடையாது என்று இயேசு சொன்னது அவருடைய சீஷர்களுக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்திருக்கும். இயேசு அந்தக் குருடனுக்குப் பார்வை கொடுத்து அவனைக் குணமாக்கினார்; இப்படிச் செய்ததன் மூலம், வேதனைகள் என்பது கடவுள் தரும் தண்டனை என்ற கருத்து பொய் என்பதை நிரூபித்துக் காட்டினார். (யோவான் 9:6, 7) இன்று மோசமான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள், தங்களுடைய வேதனைகளுக்குக் கடவுள் காரணமல்ல என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் நிச்சயம் ஆறுதலடையலாம்.

மக்கள் செய்த தவறுகளுக்காகக் கடவுள் அவர்களுக்கு நோய்களைக் கொடுத்து தண்டிக்கிறார் என்றால், இயேசு ஏன் அவர்களைக் குணப்படுத்த வேண்டும்?

பைபிள் வசனங்கள் இப்படி உறுதியளிக்கின்றன:

  • “கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது.” (யாக்கோபு 1:13) பல நூற்றாண்டுகளாக மனிதர்களைக் கொடுமைப்படுத்தி வரும் நோய், வேதனை, மரணம் போன்ற ‘கெட்ட காரியங்கள்’ கொஞ்ச நாளில் இல்லாமலேயே போகப்போகிறது.

  • இயேசு கிறிஸ்து ‘எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார்.’ (மத்தேயு 8:16) தன்னிடம் வந்தவர்களைக் குணப்படுத்தியதன் மூலம் கடவுளுடைய அரசாங்கம் உலகளவில் செய்யப்போவதைக் கடவுளுடைய மகன் எடுத்துக் காட்டினார்.

  • “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:3-5.

யார்தான் காரணம்?

அப்படியென்றால், மனிதர்கள் ஏன் இந்தளவு கஷ்டத்தையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள்? பல நூற்றாண்டுகளாக இந்தக் கேள்வி மனிதர்களுடைய மனதைக் குடைந்துகொண்டிருக்கிறது. வேதனைகளுக்குக் கடவுள் காரணம் இல்லையென்றால், வேறு யார்தான் காரணம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

a பைபிள் காலங்களில், யெகோவா சில குறிப்பிட்ட பாவங்களுக்காக மக்களைத் தண்டித்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் இன்று, மக்களைத் தண்டிப்பதற்காகக் கடவுள் நோய்களையோ துயர சம்பவங்களையோ பயன்படுத்துவதில்லை என்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது.