Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு உதவியால் கிடைத்த பலன்

ஒரு உதவியால் கிடைத்த பலன்

இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தில் ஒரு சின்ன ஊரில் ஜானின் குடும்பம் வாழ்ந்துவந்தது. ஜானின் அப்பா, 1950-களின் பிற்பகுதியில் யெகோவாவின் சாட்சியாக ஞானஸ்நானம் எடுத்தார். ஆனால், ஜானும் அவருடைய ஐந்து சகோதர சகோதரிகளும் அம்மாவும் ரோம கத்தோலிக்க மதத்தில் தீவிரமாக இருந்தார்கள். அதனால், ஜானின் அப்பா யெகோவாவின் சாட்சியாக மாறியதை அவர்கள் எதிர்த்தார்கள்.

ஒருநாள், ஜானின் அப்பா, ஒரு சகோதரரிடம் ஒரு கவரைக் கொடுத்துவிட்டு வரும்படி ஜானிடம் சொன்னார். ஆனால் அன்று காலையில், ஜான் ஒரு பெரிய தகர டிரம்மைத் திறக்க முயற்சி செய்தபோது அந்தத் தகரம் அவருடைய விரலை ஆழமாகக் கிழித்துவிட்டது. ஆனாலும், அப்பாவின் பேச்சை மீறக் கூடாது என்பதற்காக, இரத்தம் வடிந்துகொண்டிருந்த தன்னுடைய விரலில் ஒரு துணியைச் சுற்றிக்கொண்டு, அந்தக் கவரைக் கொடுப்பதற்காகக் கிளம்பினார்.

அந்தச் சகோதரரின் வீட்டுக்குப் போய், அந்தக் கவரை அவருடைய மனைவியிடம் கொடுத்தார். அந்தச் சகோதரரின் மனைவியும் ஒரு யெகோவாவின் சாட்சிதான். ஜானின் விரலில் இருந்த காயத்தை அவர் பார்த்தபோது, சரியாகக் கட்டுப்போட்டுவிடுவதாகச் சொன்னார். அதன்பின், முதலுதவி பெட்டியை எடுத்துவந்து, காயத்தைச் சுத்தம் செய்து, கட்டுப்போட்டுவிட்டார். பிறகு, சுடச்சுட டீ போட்டுக் கொடுத்தார். இதையெல்லாம் செய்தபோது, அன்பாக பைபிளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார்.

அவர் செய்த உதவியால், அதாவது அவர் காட்டிய கருணையால், சாட்சிகள்மீது ஜானுக்கு இருந்த அபிப்பிராயம் மாறியது. அதனால், கத்தோலிக்கர்களின் நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசமாக இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி இரண்டு கேள்விகளைக் கேட்டார். அதாவது, இயேசுதான் கடவுளா என்றும், கிறிஸ்தவர்கள் மரியாளிடம் ஜெபம் செய்ய வேண்டுமா என்றும் கேட்டார். அந்தச் சகோதரி, ஜானின் தாய்மொழியாகிய குஜராத்தியைக் கற்றிருந்ததால் அந்த மொழியிலேயே பதில் சொன்னார். ஜானின் கேள்விகளுக்கு அவர் பைபிளிலிருந்து பதில்களைக் காட்டினார். பிறகு, “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” என்ற சிறு புத்தகத்தைக் கொடுத்தார்.

பிற்பாடு, ஜான் அந்தச் சிறு புத்தகத்தைப் படித்தபோது, அதில் சொல்லியிருந்ததுதான் உண்மை என்று புரிந்துகொண்டார். உடனே, தன்னுடைய பாதிரியிடம் போய் அதே இரண்டு கேள்விகளைக் கேட்டார். அந்தப் பாதிரி பயங்கரக் கோபத்தோடு ஒரு பைபிளை எடுத்து ஜானின் மேல் வீசினார். “நீ சாத்தானா ஆயிட்டே! இயேசு கடவுள் கிடையாதுன்னு பைபிள்ல எங்க இருக்குன்னு காட்டு பார்க்கலாம்! மரியாளை வணங்கக் கூடாதுன்னு எங்க இருக்குன்னு காட்டு பார்க்கலாம்! காட்டு பார்க்கலாம்!” என்று அவர் கத்தினார். அது ஜானுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி கத்தோலிக்க சர்ச்சின் பக்கமே தலைகாட்டப் போவதில்லை என்று அந்தப் பாதிரியிடம் சொல்லிவிட்டார். சொன்னபடியே, அதன் பிறகு கத்தோலிக்க சர்ச்சுக்கு அவர் போகவே இல்லை.

ஜான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார், சத்தியத்தை ஏற்றுக்கொண்டார், யெகோவாவுக்குச் சேவை செய்யவும் ஆரம்பித்தார். காலப்போக்கில், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நிறைய பேரும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். கிட்டத்தட்ட 60 வருஷங்களுக்குப் பிறகும் ஜானின் விரலில் அந்தக் காயத்தின் தழும்பு இருக்கிறது; வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்குச் சேவை செய்யத் தன்னைத் தூண்டிய அந்த உதவியை, அதாவது தனக்குக் காட்டப்பட்ட கருணையை, அந்தத் தழும்பு அவருக்கு ஞாபகப்படுத்துகிறது.—2 கொ. 6:4, 6.