Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்?

எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்?

“யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!”​—சங். 144:15.

பாடல்கள்: 75, 73

1. நாம் வாழும் காலம் ஏன் மனித சரித்திரத்திலேயே மிக வித்தியாசமான ஒரு காலம்?

மனித சரித்திரத்திலேயே மிக வித்தியாசமான ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். பைபிளில் சொல்லப்பட்டபடியே, “எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த” திரள் கூட்டமான மக்களை யெகோவா கூட்டிச்சேர்த்துவருகிறார். 80 லட்சத்துக்கும் அதிகமான அந்த மக்கள் “சக்திபடைத்த தேசமாக,” சந்தோஷத்தோடு “இரவும் பகலும் . . . [கடவுளுக்கு] பரிசுத்த சேவை செய்கிறார்கள்.” (வெளி. 7:9, 15; ஏசா. 60:22) சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு இன்று ஏராளமானவர்கள் கடவுளையும் மற்ற மனிதர்களையும் நேசிக்கிறார்கள்.

2. தேவபக்தியற்ற மக்கள் என்ன விதமான அன்பைக் காட்டுகிறார்கள்? (ஆரம்பப் படம்)

2 நம் காலத்தில் வாழும் தேவபக்தியற்ற மக்கள் தவறான விதத்தில், அதாவது சுயநலமான விதத்தில், அன்பு காட்டுவார்கள் என்றும் பைபிள் சொன்னது. கடைசி நாட்களில், மக்கள் “சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக,” “கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள், அதாவது தங்களையும் பணத்தையும் சுகபோகத்தையும் நேசிப்பவர்களாக இருப்பார்கள், என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீ. 3:1-4) இப்படிப்பட்ட சுயநலமான அன்பு, கடவுள் மீதுள்ள அன்புக்கு நேர்மாறானது. சுயநலமான லட்சியங்களை அடைய முயற்சி செய்வது சந்தோஷத்தைத் தரும் என்று ஒருவர் நினைக்கலாம்; ஆனால், அது உண்மை அல்ல. சொல்லப்போனால், அது சுயநலம் நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கி, எல்லாருடைய வாழ்க்கையையும் சிக்கலாக்குகிறது.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்? ஏன்?

3 இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் சுயநலமான அன்புதான் இருக்கும் என்பதும், அப்படிப்பட்ட அன்பு கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தானது என்பதும் பவுலுக்குத் தெரிந்திருந்தது. அதனால், அப்படிப்பட்ட அன்பைக் காட்டுகிறவர்களை ‘விட்டுவிலக’ வேண்டுமென்று, அதாவது அவர்களைத் தவிர்க்க வேண்டுமென்று, கிறிஸ்தவர்களை எச்சரித்தார். (2 தீ. 3:5) ஆனால், அவர்களை நாம் ஒரேயடியாகத் தவிர்க்க முடியாது. அப்படியென்றால், அவர்களுடைய மனப்பான்மை நம்மைப் பாதிக்காமல் இருக்கவும், அன்பான கடவுளாகிய யெகோவாவைப் பிரியப்படுத்தவும் நாம் என்ன செய்யலாம்? இந்தக் கட்டுரையில், கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிற அன்புக்கும் 2 தீமோத்தேயு 3:2-4-ல் சொல்லப்பட்டிருக்கும் அன்புக்கும் இருக்கிற வித்தியாசத்தை நாம் பார்க்கலாம். பிறகு, நம்மையே எடைபோட்டுப் பார்த்து, உண்மையான திருப்தியையும் சந்தோஷத்தையும் தரும் அன்பை நாம் எப்படிக் காட்டலாம் என்று பார்க்கலாம்.

யாரை நேசிக்க வேண்டும் —கடவுளையா, நம்மையா?

4. நம்மை நாமே ஓரளவு நேசிப்பதில் ஏன் தவறு இல்லை?

4 “மனிதர்கள் சுயநலக்காரர்களாக” இருப்பார்கள் என்று பவுல் எழுதினார். அப்படியென்றால், நம்மை நாமே நேசிப்பது தவறா? இல்லை, நம்மை நாமே ஓரளவு நேசிப்பது இயல்பானதுதான், அது அவசியமும்கூட! யெகோவா நம்மை அந்த விதத்தில்தான் படைத்திருக்கிறார். அதனால்தான், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மாற். 12:31) சொல்லப்போனால், நம்மை நாமே நேசிக்காவிட்டால் மற்றவர்களை நம்மால் நேசிக்க முடியாது. “கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன்மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (எபே. 5:28, 29) அதனால், நம்மை நாமே ஓரளவு நேசிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

5. தங்களையே அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்களை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?

5 இரண்டு தீமோத்தேயு 3:2-ல் சொல்லப்பட்டிருக்கும் சுயநலம் இயல்பானது கிடையாது; அது எந்தப் பிரயோஜனமும் தராது. ஒருவர் தன்னையே அளவுக்கு அதிகமாக நேசித்தால், தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைப்பார். (ரோமர் 12:3-ஐ வாசியுங்கள்.) மற்றவர்கள்மேல் அக்கறை காட்டுவதைவிட தன்மீதே அதிக அக்கறை காட்டுவார். ஏதாவது பிரச்சினை வந்தால், தான்தான் அதற்குக் காரணம் என்று நினைக்காமல் மற்றவர்கள்மேல் பழிபோடுவார். அப்படிப்பட்டவர், முள்ளெலி (hedgehog) என்ற சின்ன விலங்கைப் போல இருப்பதாக ஒரு பைபிள் விமர்சகர் சொல்கிறார். அது ஒரு பந்துபோல் சுருண்டுகொண்டு, அதன் உட்புறத்திலுள்ள மென்மையான மயிருக்குள் கதகதப்பாக இருக்கும், ஆனால் வெளிப்புறத்தில் கூர்மையான முட்களை மற்றவர்களுக்கு நேராக நீட்டிக்கொண்டிருக்கும். முள்ளெலி போன்ற ஆட்கள் உண்மையில் சந்தோஷமாக இருப்பதில்லை.

6. கடவுள் எதிர்பார்க்கும் அன்பை நாம் காட்டும்போது என்ன பலன்கள் கிடைக்கின்றன?

6 பவுல் சுயநலத்தை முதலில் குறிப்பிட்டுவிட்டு, மற்ற கெட்ட குணங்களை வரிசையாகக் குறிப்பிட்டார். சுயநலம், அதாவது நம்மையே அளவுக்கு அதிகமாக நேசிக்கும் குணம், மற்ற கெட்ட குணங்களை வளர்க்கும் என்பதால்தான் அவர் அதை முதலில் குறிப்பிட்டதாகச் சில பைபிள் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால், கடவுள் எதிர்பார்க்கும் அன்பைக் காட்டுகிறவர்கள் சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகிய நல்ல குணங்களைக் காட்டுகிறார்கள். (கலா. 5:22, 23) “யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!” என்று சங்கீதக்காரர் எழுதினார். (சங். 144:15) யெகோவா சந்தோஷமுள்ளவராக இருப்பதால் அவருடைய மக்களும் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதாலும் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள்; இப்படி, தங்களையே அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்களைப் போலவோ, மற்றவர்களிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருப்பவர்களைப் போலவோ அவர்கள் இல்லை.—அப். 20:35.

நம்மை அளவுக்கு அதிகமாக நேசிப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? (பாரா 7)

7. நாம் கடவுளை எந்தளவு நேசிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள எந்தக் கேள்விகள் உதவும்?

7 நம்மைவிட கடவுளை நாம் அதிகமாக நேசிக்கிறோமா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? “எதையும் பகையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள். உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்” என்ற ஞானமான அறிவுரையைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். (பிலி. 2:3, 4) பிறகு, ‘இந்த அறிவுரைப்படி நான் நடக்கறேனா? கடவுள் எதிர்பார்க்கற மாதிரி நடக்க நான் முயற்சி செய்றேனா? சபையில இருக்கறவங்களுக்கும் ஊழியத்துல பார்க்கறவங்களுக்கும் உதவ முயற்சி எடுக்கறேனா?’ என்றெல்லாம் நம்மையே கேட்டுக்கொள்ளலாம். நம் நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களுக்காகச் செலவிடுவது சுலபம் இல்லைதான். அதற்காக நாம் கடினமாக உழைக்கவோ, நமக்குப் பிடித்த சில விஷயங்களைத் தியாகம் செய்யவோ வேண்டியிருக்கலாம். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசரைப் பிரியப்படுத்துகிறோம் என்பதை நினைக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது!

8. கடவுளை நேசிப்பதால் சில கிறிஸ்தவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

8 சில கிறிஸ்தவர்கள் கடவுளை நேசிப்பதாலும் அவருக்கு அதிகமாகச் சேவை செய்ய விரும்புவதாலும், தங்கள் வேலையை அல்லது தொழிலை விட்டிருக்கிறார்கள்; அது தங்களைப் பெரிய பணக்காரர்களாக்கும் என்று தெரிந்தும் அதை விட்டிருக்கிறார்கள். எரிக்கா என்ற சகோதரி, தன்னுடைய டாக்டர் தொழிலுக்கே முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக பயனியர் சேவை செய்ய முடிவெடுத்தார். அதனால், அவராலும் அவருடைய கணவராலும் நிறைய நாடுகளில் சேவை செய்ய முடிந்திருக்கிறது. “வேற பாஷை பேசுற நிறைய பேருக்கு எங்களால உதவ முடிஞ்சிருக்கு, நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க, அதனால எங்க வாழ்க்கை ரொம்பவே முன்னேறியிருக்கு” என்று அவர் சொல்கிறார். எரிக்கா இன்னும் டாக்டராக வேலை செய்கிறார்; ஆனாலும், யெகோவாவைப் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும், மற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யவுமே தன்னுடைய பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் செலவு செய்கிறார். “அதனால ரொம்ப சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கு” என்றும் அவர் சொல்கிறார்.

எங்கே சொத்து சேர்க்க வேண்டும்—பரலோகத்திலா பூமியிலா?

9. பணத்தை நேசிக்கிறவர்கள் ஏன் சந்தோஷமாக இருப்பதில்லை?

9 மக்கள் “பண ஆசைபிடித்தவர்களாக” இருப்பார்கள் என்று பவுல் எழுதினார். சில வருஷங்களுக்கு முன்பு, அயர்லாந்தில் இருந்த ஒரு பயனியர், கடவுளைப் பற்றி ஒருவரிடம் பேசினார். அந்த நபர் தன் பர்ஸைத் திறந்து, சில நோட்டுகளை எடுத்துக் காட்டி, “இதுதான் என் கடவுள்!” என்றார். நிறையப் பேர் இப்படித்தான் நினைக்கிறார்கள், அதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ! பணத்தையும் பணத்தால் வாங்க முடிந்த பொருள்களையும் அவர்கள் நேசிக்கிறார்கள். ஆனால், “வெள்ளியை நேசிக்கிறவன் எவ்வளவு வெள்ளி கிடைத்தாலும் திருப்தியடைய மாட்டான். சொத்துகளை விரும்புகிறவன் எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தியடைய மாட்டான்” என்று பைபிள் எச்சரிக்கிறது. (பிர. 5:10) பணத்தை நேசிக்கிறவர்கள் திருப்தி அடைவதே இல்லை. இன்னும் இன்னும் சம்பாதிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; தங்கள் வாழ்க்கையையே அதற்காகச் செலவழிக்கிறார்கள். இதனால், ‘பலவிதமான வேதனைகளை’ அனுபவிக்கிறார்கள்.—1 தீ. 6:9, 10.

10. வறுமையையும் செல்வத்தையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

10 நம் எல்லாருக்குமே பணம் தேவை என்பது உண்மைதான். அது ஓரளவு நம்மைப் பாதுகாக்கும். (பிர. 7:12) ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும்தான் நம்மிடம் பணம் இருக்கிறதென்றாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியும்! (பிரசங்கி 5:12-ஐ வாசியுங்கள்.) “எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல், தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்” என்று யாக்கே என்பவரின் மகன் ஆகூர் எழுதினார். அவர் ஏன் வறுமையை விரும்பவில்லை என்று நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. திருடனாக மாறி, கடவுளுக்குக் கெட்ட பெயர் கொண்டுவந்துவிடக் கூடாது என்று அவர் நினைத்தார். ஆனால், ஏன் அதிக செல்வத்தையும் அவர் விரும்பவில்லை? “ஏனென்றால், எல்லா வசதிகளும் கிடைத்த திருப்தியில், ‘யார் அந்த யெகோவா?’ என்று நான் கேட்டுவிடக் கூடாது” என்று அவர் எழுதினார். (நீதி. 30:8, 9) கடவுள்மேல் நம்பிக்கை வைக்காமல் செல்வத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் ஆட்களை நீங்கள்கூட பார்த்திருக்கலாம்.

11. பணத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?

11 பணத்தை நேசிக்கிறவர்களால் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது. “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு சொன்னார். அதோடு, “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால், இங்கே பூச்சியும் துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். அதனால், பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அவற்றை அழிக்காது; திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள்” என்றும் அவர் சொன்னார்.—மத். 6:19, 20, 24.

12. எளிமையான வாழ்க்கை வாழ்வது கடவுளுக்கு அதிகமாகச் சேவை செய்ய எப்படி உதவும்? உதாரணம் கொடுங்கள்.

12 யெகோவாவின் ஊழியர்களில் நிறையப் பேர் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சி செய்கிறார்கள். அதனால் யெகோவாவுக்கு அதிக நேரம் சேவை செய்யவும், அதிக சந்தோஷமாக இருக்கவும் அவர்களால் முடிகிறது. அமெரிக்காவில் வாழும் ஜாக் என்ற சகோதரர், தன் மனைவியோடு சேர்ந்து பயனியர் சேவை செய்வதற்காகத் தன் தொழிலையும் பெரிய வீட்டையும் விற்றுவிட்டார். “எங்க ஊருல இருந்த எங்களோட நிலத்தயும் அழகான வீட்டையும் விக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஆனால், தொழிலில் அவருக்குப் பிரச்சினைகள் இருந்ததால், பல வருஷங்களாக விரக்தியோடுதான் வீடு திரும்புவார். “என்னோட மனைவி ஒழுங்கான பயனியரா இருந்ததால எப்பவுமே ரொம்ப சந்தோஷமா இருந்தா. ‘பெஸ்ட் முதலாளி எனக்கு கிடைச்சிருக்காரு!’ன்னு அடிக்கடி சொல்லுவா. இப்போ நானும் பயனியர் செய்றதுனால, ரெண்டு பேருமே ஒரே முதலாளிக்கு அதாவது யெகோவாவுக்கு வேல செய்றோம்” என்று அவர் சொல்கிறார்.

பணத்தை அளவுக்கு அதிகமாக நேசிப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? (பாரா 13)

13. பணத்தை நாம் எப்படிக் கருதுகிறோம் என்று தெரிந்துகொள்ள எது நமக்கு உதவும்?

13 பணத்தை நாம் எப்படிக் கருதுகிறோம் என்று தெரிந்துகொள்ள, நேர்மையோடு நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘பணத்த பத்தி பைபிள் சொல்றத நான் நிஜமாவே நம்புறேங்கறத என்னோட வாழ்க்கை காட்டுதா? பணம் சம்பாதிக்கறதுதான் எனக்கு ரொம்ப முக்கியமா இருக்கா? யெகோவாகிட்டயும் மத்தவங்ககிட்டயும் இருக்கற நட்பவிட பணம் பொருளத்தான் பெருசா நினைக்கிறேனா? எனக்கு தேவையானத யெகோவா தருவார்னு மனசார நம்பறேனா?’ யெகோவா, தன்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பது நிச்சயம்!—மத். 6:33.

யெகோவாவை நேசிக்கிறோமா, சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறோமா?

14. வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பதைப் பற்றி என்ன சொல்லலாம்?

14 கடைசி நாட்களில், மக்கள் “சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள் என்றும் பைபிள் சொன்னது. பணத்துக்கும் நமக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுப்பதில் தவறு இல்லை என்பது நமக்குத் தெரியும்; நம் வாழ்க்கையை ஓரளவு சந்தோஷமாக அனுபவிப்பதில் தவறு இல்லை என்பதும் நமக்குத் தெரியும். சிலர், எந்த விதமான சந்தோஷத்தையும் தாங்கள் அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்; ஆனால், யெகோவா அப்படி நினைப்பதில்லை. “நீ போய் சந்தோஷமாகச் சாப்பிட்டு, ஆனந்தமாகத் திராட்சமது குடி” என்று அவருடைய உண்மை ஊழியர்களுக்கு பைபிள் சொல்கிறது.—பிர. 9:7.

15. ‘சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களை’ எப்படி விவரிக்கலாம்?

15 சுகபோக வாழ்க்கையை நேசிப்பதால் கடவுளுக்கு முக்கியத்துவமே கொடுக்காத ஆட்களைப் பற்றி 2 தீமோத்தேயு 3:4 சொல்கிறது. அவர்கள் கடவுளைவிட சுகபோகத்தை நேசிப்பார்கள் என்று அந்த வசனம் சொல்வதில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், அவர்கள் கடவுளை ஓரளவு நேசிக்கிறார்கள் என்று அர்த்தமாகியிருக்கும். அதனால்தான், “கடவுளை நேசிக்காமல்” சுகபோக வாழ்க்கையை நேசிப்பார்கள் என்று அது சொல்கிறது. “அவர்கள் ஓரளவு கடவுளையும் நேசிக்கிறார்கள் என்று [இந்த வசனம்] சொல்வதே இல்லை. அவர்கள் கடவுளைக் கொஞ்சம்கூட நேசிப்பதில்லை என்றுதான் சொல்கிறது” என்று ஒரு அறிஞர் எழுதினார். சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களுக்கு இது எப்பேர்ப்பட்ட எச்சரிப்பு! சுகபோகங்கள் அவர்களை ‘திசைதிருப்புவதாக’ பைபிள் சொல்கிறது.—லூக். 8:14.

16, 17. சந்தோஷத்தை அனுபவிக்கும் விஷயத்தில் இயேசு எப்படி நல்ல முன்மாதிரி வைத்தார்?

16 வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கும் விஷயத்தில் எப்படி சமநிலையோடு இருக்கலாம் என்பதை இயேசு காட்டினார். அவர் ஒரு ‘கல்யாண விருந்துக்கும்,’ ‘ஒரு பெரிய விருந்துக்கும்’ போனார். (யோவா. 2:1-10; லூக். 5:29) கல்யாண விருந்தில் திராட்சமது தீர்ந்துவிட்டதால், இயேசு அற்புதமான விதத்தில் தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றினார். இன்னொரு சந்தர்ப்பத்தில், சாப்பிடுவதற்காகவும் குடிப்பதற்காகவும் தன்னைக் குறைசொன்ன ஆட்களுக்குச் சமநிலையான கண்ணோட்டம் இல்லாததை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.—லூக். 7:33-36.

17 அதேசமயத்தில், சந்தோஷத்தை அனுபவிப்பதுதான் தன் வாழ்க்கையிலேயே முக்கியமான காரியம் என்பதுபோல் அவர் நடந்துகொள்ளவில்லை. யெகோவாவுக்குத்தான் அவர் முதலிடம் தந்தார்; அதோடு, சளைக்காமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தார். மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக மரக் கம்பத்தில் வேதனைப்பட்டு இறப்பதற்கும்கூட அவர் தயாராக இருந்தார். தன்னைப் பின்பற்ற விரும்பியவர்களிடம், “நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும், உங்களைத் துன்புறுத்தும்போதும் சந்தோஷப்படுங்கள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்; உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்” என்று சொன்னார்.—மத். 5:11, 12.

சுகபோகத்தை அளவுக்கு அதிகமாக நேசிப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? (பாரா 18)

18. சுகபோக வாழ்க்கையை நாம் எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள எந்தக் கேள்விகள் உதவும்?

18 சுகபோக வாழ்க்கையை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘கூட்டங்களயும் ஊழியத்தயும்விட பொழுதுபோக்குதான் எனக்கு முக்கியமா இருக்கா? கடவுளுக்கு சேவை செய்றதுக்காக எனக்கு பிடிச்ச சில விஷயங்களகூட தியாகம் செய்ய தயாரா இருக்கேனா? ஏதாவது பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கறப்போ, யெகோவா அத பத்தி என்ன நினைக்கிறாருன்னு யோசிக்கிறேனா?’ நாம் கடவுளை நேசிக்கிறோம்; அவரைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறோம். அதனால், அவருக்குப் பிடிக்காது என்று நமக்கு நன்றாகத் தெரிந்த காரியங்களை மட்டும் தவிர்க்காமல், அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாமோ என்று நாம் நினைக்கும் காரியங்களையும் தவிர்க்கிறோம்.மத்தேயு 22:37, 38-ஐ வாசியுங்கள்.

சந்தோஷமாக இருப்பது எப்படி?

19. யாரால் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியாது?

19 சாத்தானுடைய உலகத்தில் கிட்டத்தட்ட 6,000 வருஷங்களாக மனிதர்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்தக் கடைசி நாட்களில், தங்களையும் பணத்தையும் சுகபோகத்தையும் முக்கியமாக நினைப்பவர்கள்தான் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றித்தான் அவர்கள் யோசிக்கிறார்கள். தங்களுடைய ஆசைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்களால் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியாது! அதற்குப் பதிலாக, “யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன். தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்” என்று பைபிள் சொல்கிறது.—சங். 146:5.

20. கடவுளை நேசிப்பதால் உங்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைத்திருக்கிறது?

20 யெகோவாவின் ஊழியர்கள் உண்மையிலேயே அவரை நேசிக்கிறார்கள். அதோடு, ஒவ்வொரு வருஷமும் நிறையப் பேர் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை நேசிக்க ஆரம்பிக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது என்பதையும், நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத ஆசீர்வாதங்களை அது சீக்கிரத்தில் கொண்டுவரும் என்பதையும் காட்டுகிறது. யெகோவாவுக்கு விருப்பமானதைச் செய்து அவரை சந்தோஷப்படுத்தும்போது, நமக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும். யெகோவாவை நேசிக்கிறவர்கள் என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்! அடுத்த கட்டுரையில், சுயநலமான அன்பு என்னென்ன கெட்ட குணங்களை வளர்க்கும் என்பதையும், அவை யெகோவாவின் ஊழியர்கள் காட்டும் குணங்களுக்கு எப்படி நேர்மாறாக இருக்கின்றன என்பதையும் பார்ப்போம்.