Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள்

உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள்

பிரச்சினைக்கு ஆணிவேர்

நமக்கு எப்படிப்பட்ட ஆட்கள்மேல் தப்பான அபிப்பிராயம் இருக்கிறதோ அப்படிப்பட்ட ஆட்களோடு ஒட்டாமலேயே இருந்தால் நம் மனதில் பாகுபாடு இன்னும் ஆழமாக வேர்விடும். நம்மைப் போன்ற ஆட்களிடம் மட்டும் நட்பு வைத்துக்கொண்டால், நம்முடைய யோசனைகள், உணர்வுகள், செயல்கள்தான் சரியானவை என்று நினைக்க ஆரம்பித்துவிடலாம்.

பைபிள் ஆலோசனை

“உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்.”—2 கொரிந்தியர் 6:13.

இதன் அர்த்தம் என்ன? ‘இதயம்’ என்பது நம்முடைய உணர்ச்சிகளைக் குறிக்கிறது. நம்மைப் போன்ற ஆட்களிடம் மட்டுமே அன்பு காட்டினால் நம் இதயக் கதவு மூடியே இருக்கும். மற்ற ஆட்களிடமும் நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால், நம் இதயக் கதவைத் திறக்க முடியும்.

நம் நட்பு வட்டத்தை ஏன் விரிவாக்க வேண்டும்?

மற்றவர்களோடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் ஏன் சில விஷயங்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் என்பது நமக்குப் புரியவரும். அவர்கள்மேல் இருக்கிற அன்பு வளர வளர, அவர்களைப் பற்றி நமக்கு இருந்த தப்பான அபிப்பிராயம் மனதிலிருந்து மறைந்துவிடும். அவர்கள்மேல் நமக்கு இருக்கிற மதிப்பு அதிகமாகும்; அவர்களுடைய சந்தோஷத்திலும் சோகத்திலும் நாம் பங்குகொள்வோம்.

நஸரே என்ற பெண்ணின் அனுபவத்தைப் பார்க்கலாம். தன்னுடைய நாட்டுக்குக் குடிமாறி வந்திருந்த ஆட்களைப் பற்றி அவருக்குத் தப்பான எண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தைத் தவிர்க்க எது உதவியது என்று அவரே சொல்கிறார்: “நான் அவங்ககிட்ட நல்லா பழகுனேன், அவங்களோட வேல செஞ்சேன். எங்க சமுதாயத்துல இருக்குறவங்க எந்த மாதிரி ஆட்கள தப்பா நெனச்சாங்களோ அந்த மாதிரி ஆட்களோட பேசிப் பழகுனேன். வித்தியாசமான கலாச்சாரத்த சேந்தவங்ககிட்ட நாம ஃபிரெண்டாகுறப்போ, மத்தவங்க நெனக்கிற மாதிரி அவங்க மோசமானவங்க இல்லனு புரிஞ்சுப்போம். அவங்ககிட்ட அன்பா நடந்துப்போம், அவங்கள உயர்வா மதிப்போம்.”

நீங்கள் என்ன செய்யலாம்?

வேறொரு நாட்டையோ, இனத்தையோ, மொழியையோ சேர்ந்த மக்களிடம் பேசுவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். இப்படிச் செய்துபாருங்கள்:

  • தங்களைப் பற்றிய சில விஷயங்களைச் சொல்லும்படி அவர்களிடம் கேளுங்கள்.

  • உங்களோடு சாப்பிட அவர்களைக் கூப்பிடுங்கள்.

  • அவர்கள் சொல்கிற அனுபவத்தைக் கவனமாகக் கேட்டு, அவர்கள் எதை முக்கியமானதாக நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சில விஷயங்களை சொல்லும்போது, அவர்கள் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அப்போது, அவர்கள்மீதும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மற்றவர்கள்மீதும் நமக்கு நல்ல அபிப்பிராயம் வரும்.