Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புல்—பாதங்களை ஸ்பரிசிக்கும் பச்சைக் கம்பளம் மட்டுமல்ல

புல்—பாதங்களை ஸ்பரிசிக்கும் பச்சைக் கம்பளம் மட்டுமல்ல

புல்​—பாதங்களை ஸ்பரிசிக்கும் பச்சைக் கம்பளம் மட்டுமல்ல

சிலரைப் பொறுத்தமட்டில், அது தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள, வெட்டி அழகுபடுத்த வேண்டிய ஏதோ பச்சையான ஒரு வஸ்து மட்டுமே. மறுபட்சத்தில், விவசாயிகளையும் கால்பந்தாட்ட வீரர்களையும் பொறுத்த வரை அது அவர்களுடைய பணியுடன் சம்பந்தப்பட்டது. சிறுவர்களுக்கோ, அது மெத்தென்ற சுகமான விளையாட்டு மைதானம். ஆனால் புல் என்ற வார்த்தை, புல் தரைகளையும் வயல்களையும் விளையாட்டு மைதானங்களையும் மட்டுமே குறிக்குமா?

நகர்ப்புறத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கிறீர்கள் என்றால், புல்லுக்கும் உங்களுக்கும் அதிக சம்பந்தம் இல்லாததாக நீங்கள் நினைக்கலாம். என்றாலும், கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே ஏதோ ஒருவித புல்லுடனும் புல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களுடனும் அன்றாட தொடர்பு இருக்கிறது. புல் என்பது உண்மையில் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

புல் என்பது என்ன?

இந்த எளிய தாவரத்தை கொஞ்சம் குளோசப்பில் பார்ப்போம். பொதுவாக, தாழ்வான பச்சை தாவர வகைகள் அனைத்தும் புல் என்றே அழைக்கப்படுகின்றன. விஞ்ஞான ரீதியில் புல் குடும்பத்தை (கிராமினெயே, அல்லது போயசியே) சேர்ந்ததாக வகைப்படுத்தப்படும் தாவரங்களுடன், கோரைப் புற்களையும் நாணல் புற்களையும் சேர்க்கிறார்கள். ஆனால் புல் குடும்பத்தில் உள்ளவை மட்டுமே உண்மையான புல் என்று சொல்லப்படுகிறது. இக்குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களுக்கு சில பொதுவான விசேஷ அம்சங்கள் இருக்கின்றன. புல் தண்டு என உங்களுக்குத் தோன்றுவதை உற்றுப் பாருங்கள்.

இந்தத் தண்டு உருண்டையாகவும், உள்ளீடற்றதாகவும் இருக்கிறதா, இதில் கணுக்கள் உள்ளனவா? இதன் இலை நீண்டு, குறுகி, தட்டையாக உள்ளதா, இணை நரம்புகள் காணப்படுகின்றனவா, தண்டைச் சுற்றியுள்ள உறைகளிலிருந்து தளிர் வெளிவருகிறதா? அடுத்தடுத்த இலைகள் தண்டிலிருந்து எதிரெதிர் திசைகளில் வளர்ந்து, செங்குத்தான இரு வரிசைகளை உண்டாக்குகின்றனவா? இவற்றின் வேர்கள் ஆணிவேரிலிருந்து கிளை கிளையாகப் பிரிந்து செல்லாமல், ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் நுண்ணிய இழைகளாக காணப்படுகின்றனவா? இதன் பூக்கள்​—ஒருவேளை நீங்கள் பார்க்க நேர்ந்தால்—​பளிச்சென்று தெரியாமல், சிறியவையாக, ஸ்பைக்காகவோ, ரெஸீமாகவோ, பனேக்கிளாகவோ இருக்கின்றனவா? ஆம் என்றால், அந்தத் தாவரம் ஒருவேளை புல் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

புல் குடும்பத்தைச் சேர்ந்தவை பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றினாலும் இதில் எண்ணற்ற வகைகள் உள்ளன; 8,000 முதல் 10,000 வரை வெவ்வேறு இனங்கள் உள்ளன. இத்தாவரத்தின் உயரம் சுமார் 2 சென்டிமீட்டர் முதல் சில மூங்கில் வகைகளில் 40 மீட்டர் வரை வேறுபடுகிறது. பூமியிலுள்ள செடி கொடி மரங்களில் பெரும் பகுதி புல் குடும்பத்தை சேர்ந்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில், பூமியிலுள்ள தாவரங்களில் எந்த தட்பவெப்பத்திலும் வளரும் தன்மை படைத்தவற்றில் இது முன்னிலையில் இருக்கும் ஒன்று; எனவே துருவப் பிரதேசங்களிலும், பாலைவனங்களிலும், வெப்ப மண்டல மழைக்காடுகளிலும், பலத்த காற்று வீசும் மலைச்சரிவுகளிலும் இது வளருகிறது. ஸ்டெப், லானோ, பாம்பா, பிரைரீ, சவன்னா போன்ற விளைநிலப் பகுதிகளிலும் பெரும்பாலும் காணப்படுவது புல்லே ஆகும்.

புல்லின் பல்வேறு வகைகள் செழித்து வளருவதற்கு காரணம் அவற்றின் உறுதியே. பிற தாவரங்களைப் போல் நுனிப்பகுதியில் வளராமல் அடிப்பகுதியில் உள்ள கணுக்களிலிருந்து புல் வளருகிறது. புதிய தளிர்கள் நிலத்தின்மீது கிடை மட்டமாகவோ, நிலத்துக்கு கீழேயோ தண்டுகளிலிருந்து வளரலாம். ஆகவே புல் அறுக்கும் இயந்திரமோ பசுவின் பற்களோ நுனிப்பகுதியை துண்டித்துவிட்டாலும் இவை தொடர்ந்து வளருகின்றன; பிற தாவரங்களில் பல அவ்வாறு தொடர்ந்து வளருவதில்லை. எனவேதான் அடிக்கடி புல்லை வெட்டிவிடுவது பிற தாவரங்களை வளரவிடாமல் புல் செழித்து வளருவதற்கு வழிசெய்து, உங்கள் வீட்டுப் புல்தரை பச்சைப் பசேலென்று அடர்த்தியாகவும் அழகாகவும் காட்சியளிப்பதற்கு காரணமாகிறது.

மேலும், பலத்த காற்றினால் புல்லின் தண்டு வளைந்து விட்டாலோ, அது காலில் மிதிபட்டுவிட்டாலோ, பக்கவாட்டில் கிடைமட்டமாக வேகமாய் வளருவதன் மூலம், பெரும்பாலான வகை புற்கள் மறுபடியும் நேராக நிமிர்ந்து நின்றுவிடும். எனவே, பொதுவாக புல் சேதமடைந்தாலும், மளமளவென மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறது; இவ்வாறு சூரிய ஒளியைப் பெறும் போட்டியில் இது பிற தாவரங்களை வென்றுவிடுகிறது. புல் இவ்வளவு உறுதி படைத்ததாக இருப்பதற்கு நாம் சந்தோஷப்படலாம். ஏனெனில் நாம் அதைச் சார்ந்தே வாழுகிறோம்.

பல்பயனுள்ள தாவரம்

புல் எங்கும் சர்வசாதாரணமாக காணப்படுவது மட்டுமின்றி, பூமியிலுள்ள பூக்கும் தாவர குடும்பத்தில் அது மிக முக்கியமானதும்கூட. நம் உணவிற்கு அடிப்படையாக புல் விளங்குவதாக தாவரவியலர் ஒருவர் கூறினார். அது, “மனிதகுலத்தை பஞ்சத்திலிருந்து காக்கும் அணையைப் போன்றது.” இன்று காலை நீங்கள் சாப்பிட்ட உணவை கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். கம்பு, அரிசி, ஓட்ஸ், கேழ்வரகு இவற்றில் ஏதாவது ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்ட சீரியலை கிண்ணம் நிறைய சாப்பிட்டீர்களா? அப்படியானால், நீங்கள் புல்லின் விதைகளை சாப்பிட்டீர்கள் என்றே அர்த்தம். ஒருவேளை ஒரு பன் அல்லது ஏதாவது ஒரு வகை ரொட்டி சாப்பிட்டிருப்பீர்கள். அது தயாரிக்கப்பட்ட மாவு ஒரு வகை புல்லிலிருந்து பெறப்பட்ட தானியமே; கோதுமை, ரை, பார்லி, இன்னும் பிற தானியங்கள் அனைத்தும் புல்லின் வகைகளே. கார்ன்ஃபிளேக்ஸ், கார்ன் புட்டிங், மக்காச்சோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட டொர்டில்லாக்கள் இவையும் விதிவிலக்கல்ல. மக்காச்சோளமும்​—இதற்குள் முடிவு செய்திருப்பீர்கள்​—புல் வகையே. நீங்கள் குடித்த டீ அல்லது காபியில் சீனி சேர்த்தீர்களா? சர்க்கரை வகைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன; அதுவும் ஒரு வகை புல்தான். பாலும் சீஸும்கூட ஒருவிதத்தில் புல்லில் இருந்து தயாரானதுதான்; ஏனெனில் பசுக்களும் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் பொதுவாக புல்லைத்தான் மேய்கின்றன.

உங்கள் மதிய உணவைப் பற்றி என்ன சொல்லலாம்? சப்பாத்தி கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது; அரிசியும் புல்லில் இருந்து பெறப்பட்ட மணியே. கோழிகளும் பிற பறவைகளும் தானியங்களையே உட்கொள்கின்றன. கால்நடைகள் எல்லா வகையான புற்களையும் மேய்கின்றன. ஆகவே பெரும்பாலும் நாம் உண்ணும் முட்டைகள், கோழியிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவை விலங்கின் வளர்சிதை மாற்றத்தால் கிடைக்கும் புல்லின் விளைபொருட்களே ஆகும். நீங்கள் புல்லை குடிக்கவும் செய்கிறீர்கள். பால் தவிர, பிரபல மதுபான வகைகளான பீர், விஸ்கி, ரம், சேக், கவாஸ், பெரும்பாலான வாட்கா ஆகியவை புல்லில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

உங்களுக்கு விருப்பமான உணவு பற்றி இங்கு கூறப்படவில்லையே என்று கவலைப்படாதீர்கள். புல்லில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் பட்டியலிடவே முடியாது. சில கணிப்பின்படி, உலகளவில் உட்கொள்ளப்படும் கலோரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை புற்களிலிருந்தே பெறப்படுகின்றன. ஆகவே அனைத்து விளைநிலங்களிலும் 70 சதவீதம் வரையான பரப்பை மூடியிருப்பது புற்களே என்பதில் ஆச்சரியமில்லை!

என்றாலும் உணவுக்கு மட்டுமே புல் பயன்படுவதல்ல. உங்கள் வீட்டு சுவர் களிமண்ணும் வைக்கோலும் சேர்த்து கட்டப்பட்டிருந்தால், அவற்றுக்கு உறுதியைத் தந்திருப்பது புல்தான். உலகின் பல பகுதிகளில், கூரைகள் புல்லால் வேயப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் சாரங்களுக்கும், குழாய்களுக்கும், மேஜை, நாற்காலி போன்ற ஃபர்னிச்சர்களுக்கும், சுவர்களுக்கும், இன்னும் பிறவற்றுக்கும் மூங்கில் பயன்படுகிறது. பாய்களும் கூடைகளும் புல்லால் முடையப்படுகின்றன; பசையும் காகிதமும் தயாரிப்பதற்கு உதவும் கச்சாப் பொருளாக புல் பயன்படுகிறது. உங்கள் துணிமணிகளை மறந்துவிடாதீர்கள். நமக்கு கம்பளியையும், தோலையும் தரும் பெரும்பாலான விலங்குகள் உட்கொள்வது புல்தான். அருண்டோ டோனாக்ஸ் எனப்படும் புல் இனம், க்லாரினெட் போன்ற ஊது இசைக்கருவிகள் செய்ய பயன்படும் நாணலாகும். இது தயாரிப்பதற்கு வேறெந்தப் பொருளும் இயற்கையில் கிடைக்கும் நாணலுக்கு நிகராவதில்லை.

புல், பூமியின் பெரும்பகுதியை பச்சை ஆடை அணிவித்து அழகுபடுத்துகிறது. பச்சைப் பசேலென்ற சமவெளியாய் இருக்கட்டும், நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்திலுள்ள புல்தரையாய் இருக்கட்டும், கொட்டிக் கிடக்கும் அதன் அழகென்ன, கண்ணுக்கு குளுமை தரும் அதன் ரம்மியமென்ன! பெருமளவு பச்சைத் தாவரங்களை விளையச் செய்யும் புல் குடும்பம், ஆக்சிஜனை தாராளமாக அள்ளி வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. அதன் நூலிழை போன்ற வேர்களும் மண் அரிப்பை தடுக்கின்றன. அதன் பல்பயனை கருத்தில் கொள்கையில், அதன் விளைச்சலுக்கும் உபயோகங்களுக்கும் நீண்ட வரலாற்று பின்னணி இருப்பது நமக்கு ஆச்சரியம் அளிப்பதில்லை.

புல்லின் கதை

படைப்பு சம்பந்தப்பட்ட பைபிள் பதிவில்தான் புல்லைப் பற்றி முதலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. படைப்பின் மூன்றாம் நாளில், “பூமியானது புல்லை . . . முளைப்பிக்கக்கடவது” என்றார் கடவுள். (ஆதியாகமம் 1:11) a முக்கிய நாகரிகங்கள் அனைத்தும் ஏதாவது ஒருவித புல்லைச் சார்ந்தே இருந்திருக்கின்றன. உதாரணமாக, எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோரின் முக்கிய உணவு கோதுமை, பார்லி; சீனர்களின் முக்கிய உணவு கம்பு, அரிசி; சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு கோதுமை, பார்லி, கம்பு; மாயா, அஸ்தெக்குகள், இன்காக்கள் ஆகியோரின் முக்கிய உணவு மக்காச்சோளம். மங்கோலிய வீரர்களின் குதிரைகளுக்குத் தீனி போட்டது ஏராளமான ஸ்டெப் வகை விளைநிலங்களில் வளர்ந்த புல்லே ஆகும். எனவே, மனிதகுலத்திற்கு புல் மிக அத்தியாவசியமான தாவரமாக இருந்திருக்கிறது.

அடுத்த தடவை காற்றில் அசைந்தாடும் நெல் வயலையோ, கண்ணுக்கு குளுமை அளிக்கும் பச்சைப் பசேலென்ற சமவெளியையோ, அல்லது நடைபாதையில் கற்களுக்கு இடையே வளர்ந்திருக்கும் சாதாரண புல்லின் இலைகளையோ நீங்கள் கண்டால், பல்பயன்மிக்க இந்த வியப்பூட்டும் தாவரக் குடும்பத்தைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்பீர்கள். அதை உருவாக்கின சிறந்த வடிவமைப்பாளரான யெகோவா தேவனை துதித்து சங்கீதக்காரன் பின்வருமாறு பாடியதைப் போன்றே நீங்கள் நன்றி உணர்வை வெளிக்காட்ட தூண்டப்படுவீர்கள்: ‘என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; . . . பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் பசும்புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். . . . ஜனங்களே, யெகோவாவை துதியுங்கள்!’​—சங்கீதம் 104:1, 14, 31-35, NW. (g02 6/8)

[அடிக்குறிப்பு]

a இந்த வசனத்தை அந்தக் காலத்தில் எழுதியவர், புற்களைப் போன்ற தாவரங்களையும் உண்மையான புற்கள் என இன்று கருதப்படுபவற்றையும் வித்தியாசப்படுத்திக் காட்டாததுபோல் தோன்றுகிறது.

[பக்கம் 22, 23-ன் அட்டவணை/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

புல்லின் அமைப்பு

புல்லின் முக்கிய பூ வகைகள்

ஸ்பைக்

ரெஸீம்

பனேக்கிள்

சிம்பு வேர்கள்

உறை

இலை

தண்டு

கணு

[பக்கம் 24-ன் படங்கள்]

நீங்கள் இன்று புல்லை சாப்பிட்டீர்களா?

[பக்கம் 24-ன் படம்]

அல்லது அதைக் குடித்தீர்களா?

[பக்கம் 24-ன் படம்]

இவையும் புல்லையே சாப்பிடுகின்றன

[பக்கம் 24-ன் படம்]

அதிலிருந்து செய்யப்பட்டவற்றில் நீங்கள் வசிக்கவும் செய்யலாம்