Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகிலேயே மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று

உலகிலேயே மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று

உலகிலேயே மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று

ரெங்கும் வலம் வந்திருக்கிறது ஒரு விசேஷித்த “காய்.” அது உணவையும் தருகிறது, பானத்தையும் தருகிறது. இந்தக் காயை சுமக்கும் மரத்தின் தனித்தன்மை வாய்ந்த வடிவமே வெப்பமண்டல தீவுகளின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. எந்தக் காயைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? அதுதான் தேங்காய்​—⁠உலகிலுள்ள மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று.

வேறு சீதோஷண நிலையில் வாழும் நாட்டவருக்கோ, இந்தத் தென்னை மரம் வெப்பமண்டல நாட்டு இன்ப சுற்றுலா சின்னமாக மட்டுமே இருக்கலாம். ஆனால், வெப்பமண்டல பகுதிகளில் வாழ்வோருக்கோ இந்த மரம் பொன் போன்றது. “வருடத்தில் ஏராளமான நாட்கள் இருப்பது போல, தேங்காயின் பலன்களும் ஏராளம்” என இந்தோனேஷியர்கள் கூறுகிறார்கள். “தென்னை மரத்தை நடுகிறவன் பாத்திரம், துணிமணி, சாப்பாடு, பானம், தனக்கென ஒரு குடில், பிள்ளைகளுக்கென சொத்து என அனைத்தையும் நடுகிறான்” என பிலிப்பைன்ஸ் நாட்டவர் சொல்கிறார்கள்.

இவையொன்றும் மிகைப்பட்ட வார்த்தைகள் அல்ல. தென்னை மரம், “உணவு, பானம், சமையல் எண்ணெய் ஆகியவற்றை அளிப்பது மட்டுமல்லாமல், கூரை வேய ஓலையையும், கயிறு பின்னவும் பாய் முடையவும் அத்தியாவசியப் பொருளான நாரையும் தருகிறது; அதன் ஓடுகளை பாத்திரங்களாகவும், அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுத்தலாம்; அதுமட்டுமின்றி, தென்னம்பூவின் மதுரமான சாற்றிலிருந்து சர்க்கரையும் மதுபானமும் தயாரிக்கப்படுகின்றன” என கோக்கநட்​—⁠ட்ரீ ஆஃப் லைஃப் என்ற புத்தகம் சொல்கிறது. “அந்த மரத்தை சரியான முறையில் வெட்டினால் அதையும்கூட பயன்படுத்தலாம்” எனவும் அப்புத்தகம் சொல்கிறது. சொல்லப்போனால், இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத் தீவு வாசிகள் தென்னை மரத்தின் பொருட்களால் படகுகளை கட்டியிருக்கிறார்கள்; அரேபியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அவைகளில் சவாரியும் செய்திருக்கிறார்களாம். ஆனால், பயிரிட்டோரைவிட தேங்காய்தான் கடல் கடந்து அதிக தூரம் பயணித்திருக்கிறது.

கடலில் பயணிக்கும் விதை

வெப்பமண்டல கடற்கரைப் பகுதிகளில் போதுமான மழையும் பெய்தால் அங்கு தென்னை நன்றாக வளருகிறது. பல்வகை பயனுடைய தென்னையை உள்ளூர் மக்கள் பயிரிட்டாலும், இந்தக் கிரகத்தில் கண்ணுக்கெட்டாத ஒதுக்குப்புற இடங்களுக்கு இந்தத் தேங்காய் தானாகவே பயணித்திருக்கிறது. எல்லா வகை விதைகளும் பல வழிகளில் சிதறி பரவுகின்றன; தேங்காயைப் பொறுத்தவரை, அது ஆழ்கடல் மூலமாக பரவுகிறது. அதன் வெற்றிகரமான உலகப் பயணம் இந்தக் கடலில்தான்.

முற்றிய தேங்காய் நிலத்தில் விழுந்து விடுகிறது. சில சந்தர்ப்பங்களில், அது கடற்கரைக்கு உருண்டு வந்து தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. கடல் ஏற்றம், தேங்காயை கடலுக்குள் இழுத்துச் செல்லலாம். நார் பொதிந்த அதன் மட்டைக்குள் காற்று அதிகமாக இருப்பதால் தேங்காய் லாவகமாக நீரில் மிதக்கிறது. பசிபிக்கிலுள்ள பவழத்திட்டில் விழுந்த தேங்காய் அந்தத் தீவின் மறுபக்கத்துக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால், அது கடலை அடைந்து விட்டால் வெகு தூரம் வரை பயணிக்க முடியும்.

பெரும்பாலான மற்ற விதைகளை உப்புநீர் கெடுத்துவிடும்; ஆனால் தேங்காயை அது கெடுத்துவிடுவதில்லை; ஏனெனில் தேங்காயின் உறுதியான மட்டையைத் தாண்டி உப்புநீர் உள்ளே செல்ல ரொம்ப காலம் எடுக்கிறது. மூன்று மாதங்கள் வரை தேங்காய் கெடாமல் கடலில் கிடக்கலாம்; சில சமயங்களில் கடலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு சென்றாலும், பொருத்தமான ஒரு கடற்கரைக்கு அது வந்து சேர்ந்ததும் அங்கு நன்றாக முளைத்துவிடுகிறது. ஒருவேளை இப்படித்தான் உலகின் வெப்பமண்டல கடற்கரை பகுதிகள் பலவற்றில் இந்தத் தேங்காய் குடியேறியிருக்கலாம்.

வெப்ப மண்டல உணவுக்கு ருசியூட்டும் காய்

மிட்டாய்களிலும் குக்கீஸ்களிலும் ருசியூட்டுவதற்கு சேர்க்கும் ஒன்றுதான் தேங்காய் என பிற நாட்டவர் நினைக்கலாம். ஆனால், தென்கிழக்கு ஆசியாவுக்கு செல்வீர்களானால், தேங்காய் உண்மையிலேயே பல்வகை பயனுடைய ஒரு காய் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ஹவாய் முதல் பேங்காக் வரையிலுள்ள எல்லா நாடுகளிலும் பிரதேசங்களிலும் தீவுகளிலும் உணவில் முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு பொருளே தேங்காய்” என பசிஃபிக் அண்ட் சௌத்ஈஸ்ட் ஏஷியன் குக்கிங் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு “தேங்காய் அவர்களுடைய முக்கிய தேவைகளில் ஒன்று, அதிலிருந்து வித்தியாசமான வடிவில் அவர்கள் உணவை . . . பெறுகிறார்கள்; அதிலிருந்துதான் கிட்டத்தட்ட விதவிதமான அருஞ்சுவை உணவு வகைகளையும் தயாரிக்கிறார்கள்” எனவும் அப்புத்தகம் குறிப்பிடுகிறது.

வெப்பமண்டல பிரதேசத்தவரின் சமையலறைகளில் தேங்காய் சிறப்புற்று விளங்குவதற்கு முக்கிய காரணம் அது பானத்தையும், பாலையும், சமையல் எண்ணெயையும் தருகிறது. முற்றாத, பச்சையான தேங்காயில் நிரம்பியிருக்கும் தெளிந்த, மதுரமான நீர் இளநீர் என அழைக்கப்படுகிறது. இது ருசிமிக்க புத்துணர்ச்சியளிக்கும் பானமாக இருப்பதால், வெப்பமண்டல பிரதேசங்களில் தெருவோர கடைகளில் இது வழக்கமாக விற்கப்படுகிறது. தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து பிழிந்தெடுக்கப்படுவதே தேங்காய்ப் பால். சூப், ஸாஸ், பிசைந்த மாவு போன்றவற்றிற்கு ருசியையும் கெட்டித்தன்மையையும் தேங்காய் பால் அளிக்கிறது.

தேங்காயிலிருந்து சமையல் எண்ணெயை பிழிந்தெடுப்பதற்காக, விவசாயி முற்றிய தேங்காயை உடைத்து வெயிலில் காயப் போடுகிறார். காய்ந்ததும், அதன் ஓட்டிலிருந்து தேங்காய் பருப்பு அல்லது கொப்பரை பிரித்தெடுக்கப்படும்; அதன் பிறகு எண்ணெய் பிழிந்தெடுக்கப்படும். வெப்பமண்டல பிரதேசங்களில் சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது தேங்காய் எண்ணெய்தான், மேற்கத்திய நாடுகளிலோ செயற்கை வெண்ணெய், ஐஸ் க்ரீம், குக்கீஸ் போன்றவற்றிற்குதான் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காயை பறிப்பது ஓர் எளிதான வேலை அல்ல. பெரும்பாலும், ஒரு விவசாயி மரத்தில் ஏறி காய்களை வெட்டி கீழே போடுவார். இன்னும் சிலரோ துறட்டியை பயன்படுத்துகிறார்கள். இந்தோனேஷியாவில் தேங்காயை பறித்துப் போடுவதற்கு குரங்குகளை பழக்குகிறார்கள். தேங்காய் பறிப்பதற்கு எளிய வழி, அது தானாக கீழே விழும்வரை காத்திருப்பதுதான். விளைந்த தேங்காய்தானா என உறுதிப்படுத்த விரும்புகிறவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி இதுவே.

தேங்காயை எந்த முறையில் பறித்தாலும், அதன் பல்வகை பயன் அதனை முக்கியமான ஒரு வாணிக பயிராக ஆக்குகிறது; அதோடு அநேகருக்கு முக்கியமான உணவாகவும் இருக்கிறது. ஆகவே, அடுத்த முறை நீங்கள் ஒரு தென்னை மரத்தை படத்திலோ நேரிலோ பார்த்தால், அது வெப்பமண்டல கடற்கரைகளை அலங்கரிக்கும் ஓர் அலங்கார மரம் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பது உலகிலேயே மிகவும் பயனுள்ள ‘காய்களில்’ ஒன்றை விளைவிக்கிற மரம். (g03 3/22)

[பக்கம் 22-ன் பெட்டி/படங்கள்]

தேங்காய் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்

தேங்காய் நண்டு தேங்காயின் மகத்துவத்தை அறிந்திருப்பது மனிதர் மட்டுமல்ல, ஒருவகை நண்டும்கூட. பகல் முழுவதும் தரையில் பொந்துக்குள் வாழும் தேங்காய் நண்டு, இரவில் வெளியே வந்து தேங்காயை உண்கிறது. தேங்காயை இரண்டாக பிளக்க மனிதருக்கு வெட்டுக்கத்தி தேவைப்படுகிறது; ஆனால் சாமர்த்தியமுள்ள இந்த நண்டோ தேங்காயை உடைப்பதற்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செய்கிறது; இரண்டாக பிளக்கும் வரையில் அதை பாறையில் அடிக்கிறது. தேங்காய் உட்பட்ட உணவே இப்பிராணியின் தேவைகளை நிறைவு செய்வதாக தெரிகிறது. இந்த நண்டு 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்கிறது!

அழகு சாதனங்களில் தேங்காய் தோலுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்ததாக இருப்பதால், உற்பத்தியாளர்கள் லிப்ஸ்டிக்கிலும், ஸன்டான் லோஷன்களிலும் அதை சேர்க்கிறார்கள். நீங்கள் உபயோகிக்கும் உயிரியல் முறையில் சிதைவடையக்கூடிய சோப்பிலோ ஷாம்புவிலோ அதிக நுரை வருகிறதென்றால் அதில் சேர்க்கப்பட்டுள்ள முக்கியப் பொருட்களில் தேங்காய் எண்ணெயும் ஒன்றாக இருக்கலாம்.

[படங்கள்]

கடல் பயணங்களிலும் தேங்காய் கெடாமல் இருக்கும்

தேங்காய் நண்டு

தென்னங் கன்று

[படத்திற்கான நன்றி]

Godo-Foto

[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]

Top right inset: Godo-Foto