Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கட்டுக்கதையா உண்மையா?

கட்டுக்கதையா உண்மையா?

கட்டுக்கதையா உண்மையா?

உண்மைக் கடவுளை வழிபட விரும்பியவர்கள் ‘வேற்றுமையான உபதேசங்களுக்கும்’ ‘கட்டுக்கதைகளுக்கும்’ செவிகொடாதிருக்கும்படி கிறிஸ்தவ மூப்பரான தீமோத்தேயு அறிவுறுத்தினார். (1 தீமோத்தேயு 1:3, 4) அப்படிப்பட்ட எச்சரிக்கை இன்று அவசியம்தானா? அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், பைபிளைக் குறித்தும் அதன் போதனைகளைக் குறித்தும் நிலவுகிற தவறான கருத்துக்கள் மெய் வணக்கத்திலிருந்து மக்களைத் திசைதிருப்பிவிடுகின்றன. இப்படி பைபிளின் பேரில் மக்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் கருத்துக்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு பைபிளே பதிலளிப்பதைக் கவனியுங்கள். எது உண்மை எது கட்டுக்கதை என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

கட்டுக்கதை: பைபிளிலுள்ள அற்புதங்கள் நடந்திருக்க சாத்தியமில்லை.

உண்மை: படைப்பில் கடவுளின் கைவண்ணத்தை மனிதன் கற்று மாளாது. விஞ்ஞானிகளால் புவியீர்ப்பு சக்தியைச் சரிவர சொல்லித்தரமுடியுமா? அல்லது ஓர் அணுவில் உள்ள மூலக்கூறுகளை முழுமையாக விளக்க முடியுமா? அல்லது காலத்தின் இயல்பைத்தான் இம்மி பிசகாமல் விவரிக்க முடியுமா? “தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?” (யோபு 11:7) படைப்பை பூரணமாகப் புரிந்துகொள்வது நம் புத்திக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் திறம்பட்ட விஞ்ஞானிகள், எந்த ஒரு காரியமும் சாத்தியமில்லை என்று சொல்வதற்கு முன் இப்போதெல்லாம் ஆயிரம் முறை யோசிக்கிறார்கள்.

கட்டுக்கதை: எல்லா மதங்களும் கடவுளிடம் வழிநடத்துகின்றன.

உண்மை: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு கூறினார். (யோவான் 8:31, 32) எல்லா மதங்களும் கடவுளிடம் வழிநடத்துகிறது என்றால் அதன் அங்கத்தினர்கள் ஏன் விடுதலையாக வேண்டும்? இயேசு கற்பித்தபடி, உண்மை என்னவெனில், வெகு சிலரே ‘ஜீவனுக்குப் போகிற வழியில்’ செல்கிறார்கள்.​—மத்தேயு 7:13, 14.

கட்டுக்கதை: நல்லவர்கள் அனைவரும் இறந்த பின் பரலோகத்திற்குச் செல்கிறார்கள்.

உண்மை: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்.” (சங்கீதம் 37:11, 29, 34) மனிதர்களில், உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் 1,44,000 பேர் மட்டுமே பரலோகத்திற்குச் செல்வார்கள். கடவுள் அவர்களுக்குக் கொடுத்த நியமனத்தின்படி, “பூமியின் மீது அரசாளுவார்கள்.”​—வெளிப்படுத்துதல் 5:9, 10, NW; 14:1, 4.

கட்டுக்கதை: கிறிஸ்தவர்களுக்குப் “பழைய ஏற்பாடு” இனி பிரயோஜனமில்லை.

உண்மை: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்ள “பழைய ஏற்பாடு,” அதாவது எபிரெய வேதாகமம் மிகப் பிரயோஜனமாக இருக்கிறது. அதோடு, “புதிய ஏற்பாடை,” அதாவது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை நம்புவதற்கு இது ஆதாரமாகவும் இருக்கிறது.

கட்டுக்கதை: ஆதாம் ஏவாளின் பதிவு உட்பட ஆதியாகம புத்தகத்தின் பெரும்பாலான பகுதி கற்பனை கதையாக இருக்கிறது.

உண்மை: ஆதாமிலிருந்து ஆரம்பித்து இயேசு வரையிலான வம்சவரலாற்றை சுவிசேஷக எழுத்தாளரான லூக்கா பதிவு செய்திருக்கிறார். (லூக்கா 3:23-38) ஆதியாகம புத்தகம் கட்டுக்கதை என்று சொன்னால் வம்சவரலாற்றில் யாருடைய பெயர்களை உண்மையென்றும் யாருடைய பெயர்களைப் பொய்யென்றும் சொல்வது? பூமிக்கு வரும் முன் பரலோகத்தில் வாழ்ந்த இயேசு ஆதியாகம புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை நம்பினார். அதிலுள்ள ஆதாம் ஏவாளின் பதிவையும் நம்பினார். (மத்தேயு 19:4-6) எனவே, ஆதியாகம பதிவைச் சந்தேகிப்பது இயேசுவையே சந்தேகிப்பதற்குச் சமமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பைபிளின் மற்ற எழுத்தாளர்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.​—1 நாளாகமம் 1:1; 1 கொரிந்தியர் 15:22; யூதா 14.