Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி

‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி

தாவீது ராஜா பல கவலைகளால் மிகுந்த ‘சஞ்சலம்’ அடைந்த ஒருவர். இருந்தாலும், கடவுள் மனிதர்களை முற்றும் முழுமையாகப் புரிந்துகொள்கிறார் என்பதில் அவருக்கு எவ்விதச் சந்தேகமும் இருக்கவில்லை. “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்” என்று அவர் எழுதினார்.—சங்கீதம் 139:1, 2, 4, 23, NW.

கடவுள் நம்மைப் புரிந்துகொள்கிறார் என்பதில் நாமும் நம்பிக்கையோடு இருக்கலாம்; அதுமட்டுமல்ல, மனச்சோர்வினால் நம் அபூரண உள்ளமும் உடலும் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகின்றன என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். மனச்சோர்வுக்கு என்ன காரணம் என்பதையும், தற்போதைய சூழ்நிலையில் அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அதோடு, மனச்சோர்வை எப்படி ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்போகிறார் என சொல்லியிருக்கிறார். நமக்கு உதவ அவரைவிடச் சிறந்தவர் வேறு யாரேனும் இருக்க முடியுமா? ஏனென்றால், கரிசனைமிக்க நம் “கடவுள், மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதலும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் குதூகலமும் அளிக்கிறார்.”—2 கொரிந்தியர் 7:6, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்.

ஆனால், வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும்போது கடவுள் எப்படித் தங்களுக்கு உதவ முடியுமென மனச்சோர்வடைந்தவர்கள் யோசிக்கலாம்.

கடவுள் மனச்சோர்வடைந்தோருக்குத் துணையாக இருப்பாரா?

மனச்சோர்வினால் தவிக்கிற தம் மக்களிடம் கடவுள் மிக நெருக்கமாக இருக்கிறார்; சொல்லப்போனால், ‘நொறுங்கிய நலிந்த நெஞ்சினரோடு நான் வாழ்கிறேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்’ என அவர் சொல்கிறார். (ஏசாயா 57:15, பொது மொழிபெயர்ப்பு) ‘உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்’ என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது!—சங்கீதம் [திருப்பாடல்கள்] 34:18, பொ.மொ.

மனச்சோர்வடைந்தோர் எவ்வாறு கடவுளிடமிருந்து ஆறுதல் பெற முடியும்?

கடவுளை வணங்குகிறவர்கள், ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ அவரை எந்நேரத்திலும் அணுக முடியும்; வேதனையான உணர்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் சமாளிக்க அவரால் உதவி செய்ய முடியும். (சங்கீதம் 65:2) மனதிலிருப்பதை அவரிடம் கொட்டிவிடும்படி நம்மை ஊக்கப்படுத்தி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.

நமக்கு அருகதையே இல்லாததால் நம் பிரார்த்தனைகளைக் கடவுள் கேட்பதில்லையென நினைக்கையில் என்ன செய்வது?

மனச்சோர்வின் காரணமாக, நாம் கடவுளைப் பிரியப்படுத்த எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது முழுமுயற்சி அல்லவென நாம் நினைக்கலாம். இருந்தாலும், நம் பரலோகத் தகப்பன் ‘நாம் மண்ணென்று நினைவுகூர்ந்து,’ நம்முடைய மென்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார். (சங்கீதம் 103:14) ‘நம்முடைய இருதயம் நம்மைக் கண்டனம் செய்தாலும்,’ “கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இருதயத்திற்கு உறுதியளித்துக்கொள்ளலாம்; ஏனென்றால், கடவுள் நம் இருதயத்தைவிட உயர்ந்தவராகவும், எல்லாவற்றையும் அறிந்தவராகவும் இருக்கிறார்.” (1 யோவான் 3:19, 20) ஆகவே, சங்கீதம் 9:9, 10; 10:12, 14, 17; 25:17 போன்ற பைபிள் வசனங்களிலுள்ள வார்த்தைகளை உங்கள் பிரார்த்தனைகளில் நீங்கள் பயன்படுத்தலாம்.

என்ன சொல்லி பிரார்த்தனை செய்வதென்றே தெரியாதளவுக்கு நாம் கவலையில் மூழ்கிப்போயிருந்தால் என்ன செய்வது?

சிலசமயங்களில் மனம் வலியில் துடிப்பதால் வாயிலிருந்து வார்த்தைகள்கூட வராமல் போகலாம்; ஆனாலும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனாகவும், எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகவும்’ இருப்பவர் உங்கள் உணர்ச்சிகளையும் தேவைகளையும் புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். (2 கொரிந்தியர் 1:3) இந்தத் தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மாரியா இவ்வாறு சொல்கிறார்: “சிலசமயங்களில், எனக்கு ஒரே குழப்பமாக இருக்கும், என்ன சொல்லி ஜெபம் செய்வதென்றே தெரியாது. ஆனாலும், கடவுள் என்னைப் புரிந்துகொள்கிறார் என்றும் எனக்கு உதவுகிறார் என்றும் எனக்குத் தெரியும்.”

கடவுள் நமக்கு எப்படிப் பதிலளிக்கிறார்?

கடவுள் இப்போதே நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்துவிடுவாரென பைபிள் சொல்வதில்லை. என்றாலும், மனச்சோர்வு உட்பட “எல்லாவற்றையும்” சமாளிக்க அவர் நமக்குப் பலம் அளிப்பார். (பிலிப்பியர் 4:13) மார்ட்டினா இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பத்தில் நான் மனச்சோர்வடைந்தபோது, உடனடியாக என்னைக் குணப்படுத்தும்படி யெகோவாவிடம் கேட்டேன்; அதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாதென நினைத்து அப்படிச் செய்தேன். ஆனால் இப்போது, பலம் தரும்படி மட்டுமே தினமும் கடவுளிடம் கேட்கிறேன்.”

முக்கியமாக பைபிள் வசனங்கள், மனச்சோர்வைச் சமாளிக்கத் தேவையான ஆன்மீகப் பலத்தை அளிக்கின்றன. தினமும் பைபிளை வாசிப்பது கைமேல் பலன் தருவதை, 35 வருடகாலமாக மனச்சோர்வோடு போராடிக்கொண்டிருக்கும் சாரா தன் அனுபவத்தில் கண்டிருக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “மருத்துவர்களின் உதவியை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுடைய புத்தகத்தை வாசிப்பதுதான் ஆன்மீகப் பயனையும் நடைமுறைப் பயனையும் அளிக்கிறதெனச் சொல்வேன். அதைத் தவறாமல் வாசிப்பதைப் பழக்கமாக்கியிருக்கிறேன்.”

மனச்சோர்வுக்கு நிரந்தர முடிவு!

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, கடவுள் தந்த சக்தியால் கொடிய வியாதிகளைக் குணப்படுத்திக் காட்டினார். தீராத நோய்களையும்கூடத் தீர்த்து மக்களுக்கு நிம்மதியளிக்க அவர் விரும்பினார். அதுமட்டுமல்ல, மனக்குமுறலின் வலியை அவரே அனுபவித்திருந்தார். துடிதுடித்துச் சாவதற்கு முந்தைய இரவின்போது, “கிறிஸ்து . . . தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கிக் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்.” (எபிரெயர் 5:7) அச்சமயத்தில் இயேசு நெஞ்சைப் பிழியும் வேதனையில் இருந்தார்; ஆனால், அவர் பட்ட பாட்டினால் நாம் இன்று பயனடைகிறோம்; ஏனென்றால், இப்போது அவர் “சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார்.”—எபிரெயர் 2:18; 1 யோவான் 2:1, 2.

மனச்சோர்வுக்குக் காரணமான துயரங்கள் அனைத்தையும் கடவுள் துடைக்கப்போவதாக பைபிள் சொல்கிறது. அவர் இவ்வாறு சத்தியம் செய்கிறார்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” (ஏசாயா 65:17, 18) ‘புதிய வானம்’ என்பது கடவுளுடைய அரசாங்கம்; அது, ‘புதிய பூமிக்கு,’ அதாவது நீதியுள்ள மக்கள் சமுதாயத்திற்கு, பரிபூரணமான உடல்நலத்தையும் மனநலத்தையும் ஆன்மீகநலத்தையும் அளிக்கும். அப்போது எல்லாவித நோய்நொடிகளும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்படும். (g 7/09)

“ஆழக்குழியினின்று, யெகோவாவே, உமது திருநாமத்திற்கு அபயமிட்டேன்; என் சத்தம் கேட்டீர், எனது பெருமூச்சுக்கும் அபயக்குரலுக்கும் உமது செவியை அடையாதிரும். உமக்கு அபயமிட்ட நாளிலே கிட்டி வந்து பயப்படாதே என்றுரைத்தீரே.”—புலம்பல் 3:55-57, திருத்திய மொழிபெயர்ப்பு