Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து உங்கள் ஆன்மீகப் பசியைப் போக்க முடியும்

பைபிளின் கருத்து உங்கள் ஆன்மீகப் பசியைப் போக்க முடியும்

பைபிளின் கருத்து உங்கள் ஆன்மீகப் பசியைப் போக்க முடியும்

மனிதருக்கு ஆன்மீகத் தேவை இருக்கிறது; இது உணவைப் போல் அத்தியாவசியமானது. என்றாலும், உணவைப் பொறுத்தவரை நாம் தேர்ந்தெடுப்பதற்கு ஏராளமான வகைகள் இருக்கின்றன. ஆனால், ஆன்மீகத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? எக்கச்சக்கமான மதச் சம்பிரதாயங்களும் பழக்கவழக்கங்களும் திருப்தி அளிப்பதாகச் சொல்லப்படுகின்றன.

ஒருவர் எதை நம்பினாலும் சரி எப்படிப்பட்ட வழிபாட்டில் ஈடுபட்டாலும் சரி, அவர் ஏதாவது ஆன்மீகக் காரியத்தைச் செய்தால் போதும் என அநேகர் நினைக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய ஆன்மீகத் தேவையை நீங்கள் எப்படித் திருப்தி செய்துகொள்கிறீர்கள் என்பது முக்கியமா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

உண்மையான ஆன்மீகத்தின் அர்த்தம்

நமக்கு ஆன்மீக உணர்வு இருப்பதற்கான காரணத்தை ஆதியாகமம் 1:27-ல் பைபிள் தெரிவிக்கிறது. “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” என்று அது சொல்கிறது. யெகோவா தேவன் காணமுடியாத உருவில் இருக்கிறார். ஆகவே, மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான் என்பது பார்ப்பதற்கு அவரைப் போல் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்துவதில்லை; மாறாக, கடவுளுடைய பண்புகளை வெளிக்காட்டும் திறன் மனிதனுக்கு இருக்கிறது என்றே அர்த்தப்படுத்துகிறது. ஆதாம் என்ற முதல் மனிதனால் தன்னுடைய படைப்பாளரைப் போல் சுயநலமற்ற அன்பு, கருணை, கரிசனை, நீதி, சுயக்கட்டுப்பாடு போன்ற பண்புகளை உயர்வாய்க் கருதவும் அவற்றை வெளிக்காட்டவும் முடிந்தது. அதோடு, சுதந்திரமாய்த் தீர்மானிக்கும் திறமையைக் கடவுளுடைய சட்டங்களுக்கு இசைவாகப் பயன்படுத்துவதற்காக அவனுக்கு மனசாட்சி கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் காரணங்களால் மனிதன் மிருகங்களிலிருந்து வித்தியாசமாக இருந்தான்; அதோடு, படைப்பாளரின் சித்தத்தைச் செய்ய விசேஷ தகுதி பெற்றவனாக இருந்தான்.—ஆதியாகமம் 1:28; ரோமர் 2:14.

மனிதன் தன்னுடைய ஆன்மீகத் தேவையைத் திருப்தி செய்வதற்கு அவசியமான ஓர் அம்சத்தை பைபிள் விளக்குகிறது. ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதன் கடவுளுடைய சக்தியைப் பெற்றிருக்கிறான் என 1 கொரிந்தியர் 2:12-15 விவரிக்கிறது. ஆகவே, ஆன்மீக விஷயங்களை அறிந்துகொள்வதற்குக் கடவுளுடைய சக்தியைப் பெற்றிருப்பது அவசியம். அதன் மூலம், ஒருவரால் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் விஷயங்களை ஆராயவும் புரிந்துகொள்ளவும் முடியும். கடவுளுடைய சக்தியைப் பெறாதவனோ உலகச் சிந்தையுள்ள மனிதன் என்றழைக்கப்படுகிறான்; அவன் ஆன்மீகக் காரியங்களை முட்டாள்தனமாகக் கருதுகிறான். அதனால், அவனுடைய தீர்மானங்கள் மனித ஞானத்திற்கு உட்பட்டதாக மட்டுமே இருக்கின்றன.

நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதாலேயே ஆன்மீக உணர்வைப் பெற்றிருக்கிறோம் என்பது நிஜம்தான்; என்றாலும், சுய விழிப்புணர்வு, மனித ஞானம், அல்லது தனிப்பட்ட சாதனையால் உண்மையான ஆன்மீகத்தை வளர்த்துக்கொள்ள முடியாது. அதற்கு, கடவுளுடைய சக்தியின் உதவி நமக்குத் தேவை. சொல்லப்போனால், அந்தச் சக்தியின் உதவியைப் பெற விரும்பாமல், தங்களுடைய சொந்த விருப்பங்களையும் தேவபக்தியற்ற காரியங்களையும் நாடுகிறவர்கள் ஆன்மீகச் சிந்தை இல்லாதவர்கள் என விவரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களுடைய இச்சைகளுக்கும் மனச்சாய்வுகளுக்கும் அடிபணிகிறார்கள்.—1 கொரிந்தியர் 2:14; யூதா 18, 19.

தேவையைத் திருப்தி செய்தல்

நாம் ஆன்மீகத் தேவையைத் திருப்தி செய்வதற்கு, முதலில் யெகோவாவைப் படைப்பாளரென ஏற்றுக்கொள்வதும் நாம் உயிரோடிருப்பதற்கு அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதும் அவசியம். (வெளிப்படுத்துதல் 4:11) அப்போது, அவருடைய சித்தத்தை நாம் எந்தளவுக்குச் செய்கிறோமோ அந்தளவுக்கு மட்டுமே நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் இருக்கும் என்பதை உணர்ந்துகொள்வோம். (சங்கீதம் 115:1) அவருடைய சித்தத்தைச் செய்யும்போது நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கும்; இது, நம் ஆன்மீகத் தேவையின் ஓர் அம்சமாகும். நம் சரீரத் தேவையான உணவைப் போன்று இது அத்தியாவசியமானது. அதனால்தான், ஆன்மீகச் சிந்தையுடையவர் என எல்லாராலும் அறியப்பட்ட இயேசுவால் இவ்வாறு சொல்ல முடிந்தது: ‘என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்வதே . . . என்னுடைய உணவு.’ (யோவான் 4:34) கடவுளுடைய சித்தத்தைச் செய்வது அவருக்கு ஊக்கத்தையும் புத்துணர்ச்சியையும் திருப்தியையும் அளித்தது.

நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், உண்மையான ஆன்மீகத் திருப்தியை அடைவதற்கு நம்முடைய சுபாவத்தைக் கடவுளுடைய சுபாவத்திற்கு இசைவாக மாற்றுவதும் அவசியம். (கொலோசெயர் 3:10) அப்படிச் செய்யும்போது, நமக்கே அவமதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ மற்றவர்களுடன் உள்ள நம் பந்தத்திற்குப் பங்கம் விளைவிக்கும் விதமாகவோ நடந்துகொள்ள மாட்டோம். (எபேசியர் 4:24-32) யெகோவாவின் நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழத் தீர்மானிப்பது, நம் வாழ்க்கையை மேம்படுத்துகிறது, உண்மையான மன நிம்மதிக்கு வழிசெய்கிறது; ஏனென்றால், குற்றவுணர்வு நம்மை வாட்டி வதைக்காது.—ரோமர் 2:15.

நம் ஆன்மீகத் தேவையைத் திருப்தி செய்வது சம்பந்தமாக இயேசு இன்னொரு முக்கியமான உண்மையைச் சொன்னார்; அதாவது, “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்” என்றார். (மத்தேயு 4:4) ஆன்மீகச் சிந்தைக்கு நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையைக் குறித்து மனிதர்கள் பொதுவாகக் கேட்கிற கேள்விகளுக்கு யெகோவா பைபிளில் பதில்களைத் தந்திருக்கிறார்.—2 தீமோத்தேயு 3:16, 17.

உண்மையான சந்தோஷத்திற்கு வழி

ஒருவர் நொறுக்குத் தீனியைச் சாப்பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக்கொள்ள முடியும். அதே விதமாக, சில செயல்களாலோ தத்துவங்களாலோ நம் ஆன்மீகப் பசியைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதுபோல் தோன்றலாம். ஆனால், உணவைச் சரிவர உட்கொள்ளாதிருப்பது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும், வியாதிக்கும், அதைவிட மோசமான பாதிப்புகளுக்கும் வழிவகுப்பது எப்படியோ அப்படியே நம்முடைய ஆன்மீகத் தேவையைச் சரிவர திருப்தி செய்யாதிருப்பது முடிவில் தீய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

என்றாலும், நாம் யெகோவா தேவனோடு ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்து, அவர் காட்டும் வழியைப் பின்பற்றினால், பைபிளிலுள்ள பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்துகொள்வோம்: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3. (g09-E 12)

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

◼ உங்களுக்கு ஆன்மீக உணர்வு இருப்பதற்கான காரணம் என்ன?—ஆதியாகமம் 1:27.

◼ நாமாகவே நம்முடைய ஆன்மீகத் தேவையைத் திருப்திசெய்ய முடியுமா?—1 கொரிந்தியர் 2:12-15.

◼ நம்முடைய ஆன்மீகத் தேவையைத் திருப்தி செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?—மத்தேயு 4:4; யோவான் 4:34; கொலோசெயர் 3:10.

[பக்கம் 21-ன் சிறுகுறிப்பு]

ஆன்மீகத் தேவையைச் சரிவர திருப்தி செய்யாதிருப்பது முடிவில் தீய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்