Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 2

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 2

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 2

பிள்ளைகள் வளர வளர, கீழ்ப்படிவது ரொம்ப முக்கியம் என்று நீங்கள் எப்படிக் கற்றுத்தரலாம்? அன்றாட வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் சில திறமைகளை எப்படிக் கற்றுத்தரலாம்? உலகெங்கும் உள்ள சில பெற்றோர் கொடுக்கும் டிப்ஸைக் கேட்போமா...

வீட்டு வேலையிலும் சமூக உறவிலும்

“தினமும் நாங்க ஒன்னா உட்கார்ந்து சாப்பிடும்போது, அன்னைக்கு நடந்ததைப் பத்தியெல்லாம் பேசுவோம்; அதனால, மத்தவங்க பேசறத காதுகொடுத்து கேட்க பிள்ளைங்க கத்துக்கறாங்க. பிள்ளைங்க பேசறத நாங்க ரெண்டு பேரும் பொறுமையா கேட்கும்போது, அவங்க ஒருத்தர்மேல ஒருத்தர் மரியாதை காட்டக் கத்துக்கறாங்க, அவங்களோட சுயமரியாதையும் அதிகரிக்குது.”—ரிச்சர்ட், பிரிட்டன்.

“எங்க பிள்ளைங்க ஒருத்தரையொருத்தர் மரியாதையா நடத்தறதையும், அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை வந்தா அதை அவங்களே தீர்த்துக்கறதையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெரியவங்ககிட்ட பேசும்போது கூச்சப்படாம தைரியமா பேசுறாங்க.”—ஜான், தென் ஆப்பிரிக்கா.

“என்கிட்டயும் சில குறையிருக்கு. சில நேரத்துல பிள்ளங்க மனசு புண்படற மாதிரி நடந்துக்கிறேன். அந்த நேரத்தில நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறது முக்கியம்னு நினைக்கிறேன்.”—ஜெனல், ஆஸ்திரேலியா.

“சில வீட்டு வேலைகளைச் செய்ய நாங்க பிள்ளைகளுக்குக் கத்துக்கொடுக்கிறோம். மத்தவங்களுக்காக வேலைகளைச் செய்ய கத்துக்கொடுக்கிறதுனால பிள்ளைங்களுக்கும் சாதிச்ச உணர்வு வருது, குடும்பத்தில சண்டை சச்சரவு இல்லாமா வீடே அமைதி பூங்காவா இருக்கு.”—க்ளைவ், ஆஸ்திரேலியா.

“ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்க... மரியாதை கொடுக்க... மன்னிக்க... கத்துக்கொடுக்கிறது ரொம்ப முக்கியம். ஆனா இது சுலபமில்ல.”—யூகோ, ஜப்பான்.

சுத்தமும் சுகாதாரமும்

“சின்ன வயசுலேயே எங்க பிள்ளைங்களுக்கு குளிக்க கத்துக்கொடுத்தோம். அத அவங்க ஜாலியா செய்றதுக்காக கார்ட்டூன் பொம்மை மாதிரி இருக்கிற சோப்புகளையும் ஷாம்பு பாட்டில்களையும் குட்டி குட்டி மிருகங்களோட வடிவத்தில ‘ஸ்பான்ஜ்களையும்’ வாங்கித் தந்தோம்.”—எட்கர், மெக்சிகோ.

“எங்க வீட்டுக்குள்ள தண்ணி வசதியில்லை. வெளியில இருந்துதான் புடிச்சிட்டு வருவோம். அதனால, வீட்டுக்குள்ள நுழையறத்துக்கு முன்னாடி கைய கழுவிட்டு வரதுக்கு வசதியா எப்பவும் ஒரு இடத்துல சோப்பையும் ஒரு பாத்திரத்தில தண்ணியையும் வைச்சிடுவேன்.”—என்டியூரன்ஸ், நைஜீரியா.

“தினமும் எங்க பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவைத்தான் கொடுப்போம். சரிவிகித உணவை சாப்பிடுறது எவ்வளவு முக்கியம்னு சொல்லிக் கொடுப்போம். சாப்பிடும்போது ‘இத எப்படிச் செஞ்சீங்க, அதுல என்ன போட்டீங்க’னு என் பிள்ளைங்க கேட்டுட்டே இருப்பாங்க. அதனால நான் சமைக்கும்போது அவங்களையும் கூடமாட ஏதாவது செய்ய சொல்வேன். இப்படி நாங்க ஒன்னா சேர்ந்து சமைக்கிற நேரத்துல மனசுவிட்டு பேசிட்டிருப்போம்.”—சான்டிரா, பிரிட்டன்.

“உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். இந்த விஷயத்தில பெற்றோரா நாங்க நல்ல முன்மாதிரி வைக்க முயற்சி பண்றோம். நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து ஜாகிங் போனா, நீச்சல் அடிச்சா, டென்னிஸ் ஆடினா, சைக்கிள் ஓட்டினா, கூடைப்பந்து விளையாடினா எங்க பிள்ளைங்க ரொம்ப குஷியாயிடுவாங்க. உடற்பயிற்சி முக்கியம்னு மட்டுமில்ல, அது ரொம்ப ஜாலியாவும் இருக்கும்னு எங்க பிள்ளைங்க தெரிஞ்சிக்கிறாங்க.”—கேரன், ஆஸ்திரேலியா.

“அப்பா அம்மா தங்களோட நேரம் செலவழிக்கனும்னுதான் பிள்ளைங்க ஏங்குவாங்க. பணமோ, பரிசோ, பிக்னிக்கோ எதுவுமே அதுக்கு இணையாகாது. அதனால, என் பசங்களோட நிறைய நேரம் இருக்கிற மாதிரி ஒரு வேலையைத் தேடிக்கிட்டேன்.”—ரோமினா, இத்தாலி.

கண்டிப்பு

“நாங்க எப்பவும் ஒரே மாதிரி தண்டனை கொடுக்கறதில்ல, அந்தந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரிதான் கொடுக்கிறோம். சில நேரங்கள்ல அவங்களோட தவற புரியவைக்கிறதுக்காகக் கண்டிப்போட வெளிப்படையா பேசுவோம், சில நேரங்கள்ல அவங்களுக்குப் பிடிச்சத தராம இருப்போம். இப்படியெல்லாம்தான் நாங்க தண்டனை கொடுக்கிறோம்.”—ஆக்பிட்டி, நைஜீரியா.

“நாங்க பிள்ளைங்ககிட்ட எதையாவது சொன்னா, அதை அவங்க புரிஞ்சுகிட்டாங்களான்னு தெரிஞ்சிக்க, நாங்க சொன்னத திரும்ப சொல்ல சொல்வோம். அப்புறம் நாங்க சொன்னதை மாத்தாம செய்வோம். பிள்ளைங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுப்போம்னு சொல்லியிருந்தா அதை கண்டிப்பா கொடுக்கனும். அப்பதான் அவங்க சொன்ன பேச்சு கேட்டு நடப்பாங்க.”—க்ளைவ், ஆஸ்திரேலியா.

“என் பிள்ளைங்கள கண்டிக்கும்போது நான் குனிஞ்சி முட்டிக்கால் போட்டு அவங்க கண்ணை பார்த்து பேசுவேன். இப்படி செய்யறதால நான் சொல்றத அவங்க கவனம் சிதறாம கேட்கிறாங்க. என்னுடைய முக பாவத்தையும் அவங்களால பார்க்க முடியுது. ஏன்னா நம்ம பேச்சில மட்டும் இல்ல நம்ம முகபாவனையில இருந்தும் நிறைய தெரிஞ்சிக்குவாங்க.”—ஜெனிபர், ஆஸ்திரேலியா.

“‘நீ எப்பவும் சொல்ற பேச்சை கேட்கறதில்ல’னு பிள்ளைங்கள திட்டமாட்டோம். அது உண்மையா இருந்தாக்கூட அப்படிச் சொல்லமாட்டோம். மத்த பிள்ளைங்க முன்னாடி அவங்கள கண்டிக்கவும் மாட்டோம். ஒன்னு அவங்க காதுல மெதுவா சொல்வோம், இல்லன்னா தனியா கூட்டிட்டு போய் அவங்ககிட்ட பேசுவோம்.”—ரூடி, மொசாம்பிக்.

“கள்ளங்கபடமில்லாத இந்த வயசுல பிள்ளைங்க மத்தவங்க செய்றத பார்த்து அப்படியே செய்யனும்னு நினைப்பாங்க. அதனால டி.வி., அக்கம்பக்கத்தில இருக்கிறவங்க, கூடபடிக்கிற பிள்ளைங்க... எல்லாம் அவங்கள தப்பான வழியில கொண்டு போகாம நாமதான் அவங்கள கவனமா பார்த்துக்கனும். நம்ம பிள்ளைங்களுக்கு நல்ல வழிகாட்டியா இருந்து நல்ல நெறிகளை சொல்லிக்கொடுக்கனும். நல்ல ஒழுக்க நெறிகளை அவங்க மனசுல பதிய வைச்சிட்டா கெட்டத அவங்க தானாவே ஒதுக்கிடுவாங்க.”—கிரேக்வார், காங்கோ குடியரசு. (g11-E 10)

“கண்டிக்கிற விஷயத்தில நாம உறுதியா இருக்கனும், நியாயமா இருக்கனும், வார்த்தை மாறாம இருக்கனும். தப்பு செஞ்சா என்ன தண்டனை கிடைக்கும்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கனும். அது கண்டிப்பா கிடைக்கும்னும் தெரிஞ்சிருக்கனும்.” —ஓவன், இங்கிலாந்து.

[பக்கம் 14-ன் சிறுகுறிப்பு]

“உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.”—கொலோசெயர் 3:21

[பக்கம் 15-ன் பெட்டி/படம்]

டைரி

தனிமரமாய் பிள்ளை வளர்ப்பதில் வெற்றி பெற...

லூசிண்டா ஃபார்ஸ்டர்-உடன் ஓர் சந்திப்பு

ஒற்றைப் பெற்றோராக உங்களுக்கு எது ரொம்ப பெரிய சவால்?

அப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து பிள்ளைங்கள வளர்க்குறதே பெரிய சவால்தான். இதுல தனிமரமா இருந்து வளர்க்கிறத சொல்லவே வேண்டாம். முக்கியமா என் நேரத்தையும் சக்தியையும் சரியா செலவிடுறதுதான் எனக்கு ரொம்ப கஷ்டம். ஏன்னா நல்ல நல்ல பழக்கங்கள, ஒழுக்க நெறிகள அவங்க மனசுல பதிய வைக்கவும் நேரம் ஒதுக்கனும், சந்தோஷமா சிரிச்சு பேசவும், பொழுதுபோக்கவும் நேரம் ஒதுக்கனும். அதனால வீட்டு வேலைகளை எனக்கு கிடைக்கிற ஓய்வு நேரத்துலதான் செய்ய வேண்டியிருக்கு.

உங்க மகள்களோட நல்லா பேசி பழக நீங்க என்ன செய்றீங்க?

பொதுவா அப்பா அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டா பிள்ளைங்க கைவிடப்பட்ட மாதிரி உணர்வாங்க, ரொம்ப கோபப்படுவாங்க. அதனால, ஏதாவது பிரச்சினை வந்தா அவங்ககிட்ட சாந்தமா, முகத்தை பார்த்து பேசுறது முக்கியம்னு தெரிஞ்சிகிட்டேன். அதனால நான்கூட, எல்லாரும் டென்ஷனா இருக்கும்போது பேசமாட்டேன், கொஞ்சம் நேரம் ஆனபிறகு நிதானமா என் மனசுல இருக்கிற கவலையைச் சொல்லுவேன். பிரச்சினையை ஊதி பெருசாக்காம பார்த்துக்குவேன். அப்புறம், ‘நீங்க என்ன நினைக்கிறீங்க’னு பிள்ளைங்ககிட்டயே கேட்பேன். அவங்க பதில் சொல்லும்போது கவனமா கேட்பேன். இப்படி, அவங்களுடைய உணர்ச்சிகளை நான் மதிக்கிறேன்னு காட்டுவேன். படிப்பு விஷயத்துல அக்கறை எடுத்துக்குவேன், நல்லா படிச்சா பாராட்டுவேன். நாங்க எப்பவும் ஒன்னா சேர்ந்து ஜாலியா சிரிச்சு பேசிட்டே சாப்பிடுவோம். அதுமட்டும் இல்ல, ‘நான் உங்க மேல உயிரையே வைச்சிருக்கேன்னு’ அடிக்கடி சொல்லுவேன்.

நீங்க எப்படி பிள்ளைங்கள கண்டிப்பீங்க?

பிள்ளைங்களுக்கு சில திட்டவட்டமான கட்டுப்பாடுகளை வைக்கனும். அத அமல்படுத்தனும். என் பிள்ளைங்ககிட்ட கனிவா, அதேசமயம் உறுதியா இருக்க முயற்சி பண்ணுவேன். சில நேரங்கள்ல அவங்க ஏதாவது தப்பு செய்திருந்தா, அது ஏன் தப்பு, ஏன் அப்படி செய்யக்கூடாதுனு எடுத்து சொல்லி விளக்க வேண்டியிருக்கும். சில சமயம் அவங்கள கண்டிக்கிறதுக்கு முன்னாடி, ஏன் அப்படி செஞ்சாங்கன்னு அவங்களையே கேட்பேன். என் மேல ஏதாவது தப்பு இருந்தா, ஒருவேளை அவங்கள நான் தப்பா புரிஞ்சிட்டிருந்தா, உடனே மன்னிப்பு கேட்பேன்.

மத்தவங்களுக்கு மரியாதை கொடுக்க பிள்ளைங்களுக்கு எப்படி சொல்லிக்கொடுப்பீங்க?

இயேசு சொன்னதை நான் அவங்ககிட்ட அடிக்கடி சொல்வேன்—‘மத்தவங்க உங்களை எப்படி நடத்தனும்னு நினைக்கிறீங்களோ அதே மாதிரி நீங்க அவங்கள நடத்துங்க’னு சொல்வேன். (லூக்கா 6:31) என் பொண்ணுங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினை வந்தா முடிஞ்ச வரைக்கும் அவங்களையே தீர்த்துக்க சொல்வேன். கோபமா இருக்கிறப்பக்கூட நாம சாந்தமாவும் கனிவாவும் நடந்துக்கனும்னு அவங்களுக்குச் சொல்லித்தருவேன்.

ஓய்வு நேரத்துல என்ன செய்வீங்க?

அடிக்கடி எங்கேயாவது சுற்றுலா போற அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. குறைஞ்ச செலவுல எங்காவது போகிற மாதிரி இடம் இருக்குதான்னு செய்திதாள்ல பார்ப்பேன். சில சமயம் நாங்க பிக்னிக் போவாம். இல்லன்னா, பக்கத்தில இருக்கிற செடிகொடிகள் வளர்க்கிற நர்சரிகளுக்கு நடந்து போவோம். எங்க தோட்டத்திலயும் சில செடிகளை வளர்க்கிறோம். நாங்க வளர்த்ததை நாங்களே எடுத்து சமைக்கிறதுல ஒரு தனி குஷி. ஆமா, பொழுதுபோக்கு முக்கியம்! அது பக்கத்துல இருக்கிற பூங்காவா இருந்தாகூட போதும்.

உங்களுக்குக் கிடைச்சிருக்கிற சந்தோஷங்களையும் ஆசீர்வாதங்களையும் சொல்ல முடியுமா?

ஒத்தையா இருந்து குடும்பத்த நடத்தறது எனக்கும் கஷ்டம்தான், பிள்ளைங்களுக்கும் கஷ்டம்தான். இருந்தாலும் நாங்க மூனுபேரும் நல்ல நண்பர்களா ஆகியிருக்கோம். நாங்க அனுபவிக்கிற ஆசீர்வாதங்களுக்காக கடவுளுக்கு நன்றியோடு இருக்கோம். என் பிள்ளைங்க ஒவ்வொருத்தரும் அவங்களுக்கே உரிய சுபாவத்தோட வளர்றத பார்த்து நான் பிரமிச்சு போறேன். இப்ப அவங்க என்னோட நேரம் செலவழிக்கத்தான் விரும்புறாங்க. எனக்கும் அவங்களோட இருக்கறதுல அலாதி ஆனந்தம். நான் எப்ப சந்தோஷமா இருக்கேன், எப்ப சோகமா இருக்கேன்னு என் பிள்ளைங்க உடனே கண்டுபிடிச்சிடுவாங்க. சில நேரத்தில எனக்கு ஆறுதல் கொடுக்கறதுக்காக என்னை கட்டி அணைச்சுப்பாங்க. அவங்க காட்டுற அன்புல நான் என்னையே மறந்திடுவேன். அதெல்லாத்தையும்விட, நம்மோட அன்பான படைப்பாளர் எங்கள எப்படி கண்ணுல வைச்சு காப்பாத்துறாருனு பார்க்கும்போது நான் அப்படியே மெய்சிலிர்த்து போறேன். கஷ்டமான சூழ்நிலையைக்கூட சுலபமா சமாளிக்க அவர் உதவியிருக்காரு. அதோட, ஒரு நல்ல அம்மாவா இருக்க அவருடைய புத்தகமான பைபிள் எனக்கு துணையா இருக்கு. —ஏசாயா 41:13.

[படம்]

மகள்கள் ப்ரி, ஷே-யுடன் லூசிண்டா