Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ஆட்சியில் நீதி கோலோச்சும்

கடவுளுடைய ஆட்சியில் நீதி கோலோச்சும்

கடவுளுடைய ஆட்சியில் நீதி கோலோச்சும்

இ ந்த உலகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது, ஆம், கடவுள் இதைப் புதிய உலகமாக மாற்றப்போகிறார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அதுமட்டுமா, அந்தப் புதிய உலகில் ஒரேயொரு அரசாங்கம்தான் இருக்கும், அதில் இயேசு கிறிஸ்துவே ராஜா! (வெளிப்படுத்துதல் 11:15) அந்த அரசாங்கம் எப்படி அநீதியை ஒழித்துக்கட்டும்? இரண்டு வழிகளில்:

1. அநீதிக்கு உரம்போடும் மனித அரசாங்கங்களை கடவுளுடைய அரசாங்கம் அழிக்கும். தானியேல் 2:44 சொல்கிறது: “அந்த ராஜாக்களின் [அதாவது, மனித அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் . . . ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”

2. கடவுளுடைய அரசாங்கம் கெட்ட ஜனங்களை அழித்து நீதியை நிலைநாட்டும். சங்கீதம் 37:10 சொல்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்.” 28-ஆம் வசனம் சொல்கிறது: “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களை (அதாவது, தமக்கு உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பவர்களை, NW) கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்.”

இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில், “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்” என்பதன் நிறைவேற்றத்தை ‘உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பவர்கள்’ அனுபவிப்பார்கள். (மத்தேயு 6:10) பூமிக்கான கடவுளுடைய சித்தம் என்ன?

கடவுளுடைய அரசாங்கம் பூமியை ஆளும்போது...

ஊழலும் ஒடுக்குமுறையும் ஒழிந்துவிடும். இயேசுவைப் பற்றி எபிரெயர் 1:9 இப்படிச் சொல்கிறது: “நீ நீதியை நேசித்தாய், அக்கிரமத்தை வெறுத்தாய்.” நீதியுள்ள ராஜாவான இயேசு, ‘கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பார். . . . அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.’​—⁠சங்கீதம் 72:​12-14.

எல்லாருக்கும் அளவில்லாத ஆகாரம் இருக்கும். “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 67:⁠6) “பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்.” (சங்கீதம் 72:16) இயேசு பூமியிலிருந்தபோது ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவளித்தார். கடவுளுடைய அரசாங்கத்தில் செய்யப்போவதை இப்படி முன்பே செய்து காட்டினார்.​—⁠மத்தேயு 14:​15-21; 15:​32-38.

மனிதர்களால் நீதிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. “எந்தப் படைப்பும் அவருடைய [கடவுளுடைய] பார்வைக்கு மறைவாக இல்லை; எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது; அவருக்கே நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.” (எபிரெயர் 4:13) இயேசு, “தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து” ஆளுவார் என்று பைபிள் சொல்கிறது.​—⁠ஏசாயா 11:​3, 4.

அரசாங்கம் வெகு விரைவில்!

இன்று உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டு போவதைப் பார்க்கும்போது அதற்கு முடிவு நெருங்கிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. “துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்” என்று சங்கீதம் 92:7 சொல்கிறது. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, அவர் கொண்டுவரும் அழிவிலிருந்து தப்பிப்பதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இயேசு இதற்கு பதில் சொல்கிறார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.”​—⁠யோவான் 17:⁠3.

இப்படி அறிந்துகொண்டே இருப்பதற்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? முந்தின கட்டுரையில் பார்த்த ஹைடி, டாரத்தி, ஃபிரோதீனைப் போல நீங்களும் யெகோவாவின் சாட்சிகளோடு பேசிப் பார்க்கலாமே? உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள், அதுவும் இலவசமாக, எந்த நிபந்தனையுமின்றி. (g12-E 05)

[பக்கம் 15-ன் பெட்டி/படம்]

என்னே கொடுமை!

எமிலி அமெரிக்காவில் வாழ்கிறாள். ஏழு வயதாகும்போது லூகீமியா இருப்பது தெரியவந்தது. அவளுடைய நண்பர்களுக்கெல்லாம் எப்போதாவது சளி, ஜுரம் என்று சின்னதாக வரும், அவ்வளவுதான். ஆனால், எமிலிக்கு வந்த கஷ்டங்களுக்கு அளவே இல்லை. பல வருடங்களாக தீவிர சிகிச்சை, கீமோதெரபி என்று வாழ்க்கையை ஓட்டினாள். “லூகீமியா ரொம்ப பயங்கரமானது!” என்கிறாள் அவள்.

கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் அவள் வாழ்க்கையில் சூராவளியாகத் தாக்கினாலும், அவள் துவண்டுபோகவில்லை. கடவுளுடைய அரசாங்கத்திற்காக காத்திருக்கிறாள். “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று அங்கு யாருமே சொல்ல மாட்டார்கள். (ஏசாயா 33:24) “எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம் மாற்கு 12:30. ‘உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்’-னு அதுல இருக்கு. கடவுள்கிட்ட ஜெபம் செய்யும்போது, நோய தாங்குற சக்திய எனக்கு கொடுக்குறாரு. அழகான குடும்பம், அருமையான கிறிஸ்தவ நண்பர்கள், பூஞ்சோலை பூமியில சாகாம வாழ்ற நம்பிக்கை இதெல்லாம் கொடுத்ததுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்றேன். இந்த நம்பிக்கைதான் என் வாழ்க்கைக்கு தூணாக இருந்திருக்கு.”

[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]

கடவுளுடைய அரசாங்கத்தில் உணவிற்கு பஞ்சமே இருக்காது, எங்கும் நிலையான நீதி இருக்கும், பாரபட்சம் பறந்துவிடும்