Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெனோபாஸ் சவாலை சமாளித்தல்

மெனோபாஸ் சவாலை சமாளித்தல்

“காரணமே இல்லாம நான் ரொம்ப சோகமா இருப்பேன். எனக்கு என்ன ஆச்சு, பைத்தியம் புடுச்சிடுச்சோனு நினைச்சு அழுவேன்.”—எஸ்தர்,* வயது 50.

“நீங்க காலையில எழுந்து பார்க்குறீங்க, உங்க வீடு அலங்கோலமா இருக்கு. உங்க பொருளகூட உங்களால கண்டுபிடிக்க முடியல. இத்தனை வருஷமா எந்த சிரமமும் இல்லாம செய்த வேலைங்க எல்லாம் இப்போ மலைய முறிக்கிற மாதிரி அவ்வளோ கஷ்டமா இருக்கு. ஏன் அப்படி இருக்குனுகூட தெரியல.”—லதா, வயது 55.

இந்தப் பெண்கள் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, மெனோபாஸ் என்றழைக்கப்படும் மாதவிடாய் முடிவடையும், அதாவது பெண்ணின் கருவுறும் திறன் முடிவடையும், பருவத்தில் இருக்கிறார்கள். இது எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் நடக்கும் இயல்பான நிகழ்வு. இந்தப் பருவத்தை நெருங்கும் பெண்களில் நீங்களும் ஒருவரா? அல்லது, இந்தப் பருவத்தை இப்போது எதிர்ப்படுகிறீர்களா? எப்படி இருந்தாலும் சரி, நீங்களும் உங்கள் அன்பானவர்களும் இந்தப் பருவ மாற்றத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது இதை நன்கு சமாளிக்க உதவும்.

மெனோபாஸ் பருவம்

மெனோபாஸ் பல பெண்களுக்கு 40 வயதைத் தாண்டும்போது தொடங்குகிறது. சிலருக்குத்தான் 60-களில் தொடங்குகிறது. பெரும்பாலானோருக்கு மாதவிடாய் படிப்படியாக நின்றுவிடுகிறது. அந்தச் சமயத்தில் ஹார்மோன்களின் உற்பத்தியளவு சீராக இல்லாததால் சில மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கலாம், எதிர்பாராத சமயங்களில் திடீரென்று வரலாம் அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படலாம். * ஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் சட்டென நின்று விடலாம்.

“ஒவ்வொரு பெண்னின் மெனோபாஸ் அனுபவமும் வித்தியாசமாக இருக்கும்” என்கிறது மெனோபாஸ் கைடுபுக். அந்தச் சமயத்தில், “பெண்கள் பொதுவாக எதிர்ப்படும் அசௌகரியங்களில் ஒன்றுதான் ஹாட் ஃப்ளாஷ் (உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுவதும் வெப்பம் பரவுவதுபோன்ற ஒரு உணர்வு) . . . அதைத் தொடர்ந்து க்கோல்டு சில் (வெப்பம் குறைந்த பிறகு உண்டாகும் குளிரும் நடுக்கமும்) ஏற்படலாம்” என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. இப்படி வெப்பம் கூடுவதாலும் குறைவதாலும்  தூக்கம் கெடும், உடல் மிகவும் சோர்வடையும். இது எவ்வளவு நாள் நீடிக்கும்? “மெனோபாஸ் பருவத்தின்போது, சில பெண்களுக்கு ஓரிரு வருடங்களில் சிலமுறை ஹாட் ஃப்ளாஷ் வருகிறது. சிலருக்கு இது பல வருடங்கள் நீடிக்கிறது. வெகு சிலரே வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது இதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்கிறது த மெனோபாஸ் புக். *

ஹார்மோன்களின் உற்பத்தி சீராக இல்லாததால் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்; கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி தாக்கும். கவனச்சிதறலும் ஞாபக மறதியும்கூட ஏற்படும். “இந்த எல்லா அறிகுறியும் ஒருவருக்கே வரும் என்று சொல்ல முடியாது” என்கிறது த மெனோபாஸ் புக். சிலருக்கு இவற்றில் ஓரிரு அசௌகரியங்கள் வரலாம், இன்னும் சிலருக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் போகலாம்.

எப்படிச் சமாளிப்பது?

வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்தால் இந்த அசௌகரியத்தைச் சமாளிக்க முடியும். உதாரணத்திற்கு, புகைப்பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டால் ஹாட் ஃப்ளாஷ் வருவதைக் குறைக்கலாம். உணவு பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வதாலும் பயனடையலாம். மதுபானம், காஃபின் (caffeine), அதிக காரமான மற்றும் இனிப்பான உணவுகளைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம். அதேசமயம் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் மிக முக்கியம்.

மெனோபாஸினால் வரும் அசௌகரியங்களைச் சமாளிக்க உடற்பயிற்சி செய்வதும் உதவும். அது தூக்கமின்மையையும் அடிக்கடி ‘மூட்’ மாறுவதையும் தவிர்க்கும், மேலும் எலும்புகளை வலுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். *

மனம்விட்டு பேசுங்கள்

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எஸ்தர் சொல்கிறார்: “உங்க வேதனையை யாருக்கிட்டையும் சொல்லாம தனியா தவிக்க வேண்டிய அவசியமில்ல. உங்க குடும்பத்தார்கிட்ட மனம்விட்டு பேசுங்க, நீங்க ஏன் இப்படி நடந்துக்கிறீங்கனு அவங்க புரிஞ்சிக்கிட்டாங்கன்னா அதிகமா கவலைபட மாட்டாங்க.” இப்படிச் செய்யும்போது உங்கள் குடும்பத்தார் பொறுமையோடும் கரிசனையோடும் நடந்துகொள்வார்கள். “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 13:4.

மெனோபாஸ் பருவத்தைக் கடக்கும் பெண்களுக்கு, முக்கியமாகக் கருவுறும் பாக்கியத்தை இழக்கிறோம் என்று எண்ணி வருந்தும் பெண்களுக்கு, ஜெபம் பேருதவியாக இருக்கும். ‘எல்லா உபத்திரவங்களிலும் கடவுள் நமக்கு ஆறுதல் அளிக்கிறார்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது. (2 கொரிந்தியர் 1:4) மெனோபாஸ் பருவம் தற்காலிகமானது என்பதைத் தெரிந்திருப்பதும் மனதிற்கு தெம்பளிக்கிறது. மெனோபாஸைக் கடந்த பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல கவனம் செலுத்தினால் புது தெம்போடு இன்னும் அநேக ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம்.

^ பாரா. 6 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 7 ஒரு வருடம்வரை மாதவிடாய் வராமலேயே இருந்தால் அதை மெனோபாஸ் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

^ பாரா. 11 தைராய்டு அல்லது சில மருத்துவ சிகிச்சைகளினாலும் ஹாட் ஃப்ளாஷ் வரலாம். ஹாட் ஃப்ளாஷ் வந்தவுடனே அது மெனோபாஸினால்தான் என்று முடிவுகட்டிவிடாதீர்கள், அதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள்.

மெனோபாஸ் பருவத்தைச் சமாளிக்க மருத்துவர்கள், ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் மன உளைச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளையும் பரிந்துரை செய்யலாம். விழுத்தெழு! பத்திரிகை எந்த மருத்துவ சிகிச்சையையும் சிபாரிசு செய்வதில்லை.