Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பல் ஈறு நோய்—ஜாக்கிரதை!

பல் ஈறு நோய்—ஜாக்கிரதை!

பற்களைத் தாக்கும் நோய்களில், பல் ஈறு நோய் இன்று உலகத்தில் சர்வ சாதாரணமாகி வருகிறது. இந்த நோயில் ஒளிந்திருக்கும் ஆபத்து என்னவென்று தெரியுமா? ஆரம்ப கட்டத்தில் நமக்கு எந்த அறிகுறியும் தெரியாது! வாயில் ஏற்படும் நோய்களில் பல் ஈறு நோய் ஒரு பெரிய பிரச்சினையாகி வருவதாக சர்வதேச பல் பத்திரிகை (International Dental Journal) சொல்கிறது. அதிக வலி, வேதனை மட்டுமல்லாமல் சாப்பிடக்கூட முடியாதளவுக்கு ஒருவரை இது பாதிக்கிறது. பல் ஈறு நோயைத் தடுக்க, அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

அறிகுறிகள்

இந்த நோயில் பல கட்டங்கள் இருக்கின்றன. முதலாவது, ஈறுகள் வீங்கும். இதற்கு ஜின்ஜிவிட்டிஸ் என்று பெயர். ஈறுகளிலிருந்து இரத்தம் கசிவது இதற்கு ஒரு அறிகுறி. இது பல் தேய்க்கும்போது, ஃப்ளாஸிங் செய்யும்போது (flossing), டாக்டர் ஈறுகளை சோதிக்கும்போது, அல்லது காரணமே இல்லாமல்கூட ஏற்படலாம்.

இதைக் கவனிக்காவிட்டால் பிரியோடான்டிஸ் (periodontitis) என்ற அடுத்த கட்ட ஈறு நோய் உண்டாகும். இந்தக் கட்டத்தில், பல்லைத் தாங்கிப் பிடித்திருக்கும் எலும்புகளும் ஈறு திசுக்களும் (tissues) அழிய ஆரம்பிக்கும். பெரும்பாலும், இந்த நோய் முற்றிப்போகும்வரை அதற்கான அறிகுறிகள் தெரியாது. பல்லுக்கும் ஈறுக்கும் இடையே இடைவெளி, பற்கள் ஆடுவது, பற்களுக்கு இடையே இடைவெளி, வாய் துர்நாற்றம், ஈறுகள் குறைந்து பற்கள் மட்டும் பெரிதாக தோன்றுவது, ஈறுகளில் இரத்தம் கசிவது போன்றவை பிரியோடான்டிசின் அறிகுறிகள்.

காரணங்கள், விளைவுகள்

பல் ஈறு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பிளேக் (plaque). பற்கள்மீது பாக்டீரியா படர்ந்து இருப்பதுதான் பிளேக். இந்த பாக்டீரியாவை நீக்கவில்லை என்றால் ஈறுகள் வீங்கிவிடும். இதைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பற்களிலிருந்து ஈறுகள் விலகி, ஈறுகள் ஓரம் பாக்டீரியா  வளர ஆரம்பித்துவிடும். பிறகு, ஈறுகள் வீங்க வீங்க எலும்பு திசுக்களும் ஈறு திசுக்களும் அழிய ஆரம்பித்துவிடும். பிளேக் அதிகமாகப் படியப் படிய, அது கடினமாகிவிடுகிறது. இதற்கு பெயர்தான் கால்குலஸ் (calculus) அல்லது டார்டர் (tartar). பிளேக்கை போல இதை எளிதில் நீக்க முடியாது. அதனால், இது ஈறுகளை மிக மோசமாகப் பாதித்துவிடுகிறது.

சரியாகப் பராமரிக்கப்படாத பற்கள், எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள், வைரஸ் கிருமி தொற்று, மன அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், அளவுக்கு மிஞ்சிய குடி, புகையிலை, பிரசவ காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை பல் ஈறு நோய் வருவதற்கு மற்ற காரணங்களாக இருக்கின்றன.

ஈறு நோய் பல விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் பல் வலி ஏற்படலாம், பல்லை பிடுங்க வேண்டியிருக்கலாம், உணவை மென்று சாப்பிடுவதும் பேசுவதும் கஷ்டமாகிவிடலாம். முக அழகும் பாதிக்கப்படலாம். பல் நோய் பல நோய்களுக்குக் காரணமாவதால், பற்களை நன்றாகப் பராமரியுங்கள்.

சிகிச்சைகள்

பல் ஈறு நோய் இருப்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இங்கு சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால், நல்ல பல் மருத்துவரை உடனே பாருங்கள்.

பல் ஈறு நோயைக் குணப்படுத்த முடியுமா? ஆரம்ப கட்டமாக இருந்தால், அதைக் குணப்படுத்துவது சுலபம். பிரியோடான்டிஸ் நோயாக இருந்தால் அது இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பல் மருத்துவர்கள், பிளேக்கையும் டார்டரையும் பற்களிலிருந்து நீக்குவார்கள்.

பற்களை நன்கு பராமரிப்பதற்கு நல்ல பல் மருத்துவமனைகள் அருகில் இல்லையென்றால், கவலைப்படாதீர்கள். வரும்முன் காப்பதே சிறந்தது. அதை நீங்களே செய்யலாம்; பற்களை ஒழுங்காக, சரியாக பராமரித்தால் முத்து பற்களுக்கு நீங்கள் சொந்தக்காரர்கள் ஆகலாம்! ▪ (g14-E 06)