Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்க்கரை வியாதி—கட்டுப்படுத்த முடியுமா?

சர்க்கரை வியாதி—கட்டுப்படுத்த முடியுமா?

சர்க்கரை வியாதி இன்று உலகம் முழுவதும் அதிகமாகி வருகிறது. இதில் முக்கியமாக இரண்டு வகைகள் இருக்கின்றன. முதல் வகை, பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும்; இதை எப்படித் தடுப்பதென்று இன்றுவரை மருத்துவர்களுக்கே தெரியவில்லை. இரண்டாவது வகை, பொதுவாக எல்லோருக்குமே வரும்; இது கிட்டத்தட்ட 90% மக்களைப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரையில் இரண்டாம் வகை சர்க்கரை வியாதியைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்.

பெரியவர்களை மட்டுமே பாதிக்கும் இரண்டாம் வகை சர்க்கரை நோய், இன்று பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் சொல்வது நமக்கு ஆறுதலைத் தருகிறது. இந்த நோய் வருவதும், நம் உடலில் பரவுவதும் நமக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. ஆனால், இதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும். *

சர்க்கரை வியாதி என்றால் என்ன?

இரத்தத்தில் உள்ள சர்க்கரை, சில சமயம் செல்களுக்குள் செல்ல முடியாமல் இரத்தத்திலேயே தங்கி விடுகிறது; இதனால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதைத்தான் சர்க்கரை வியாதி என்று சொல்கிறோம். இது உடலிலுள்ள பல முக்கியமான உறுப்புகளைப் பாதிக்கிறது; சீரான இரத்த ஓட்டத்தையும் தடைசெய்கிறது. இதனால் சிலர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகிறார்கள், பார்வையையும் இழந்துவிடுகிறார்கள். சில சமயங்களில், கால் விரல்களை அல்லது கால்களைக்கூட துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சர்க்கரை வியாதியால் அவதிப்படும் பலர் மாரடைப்பாலோ பக்கவாதத்தாலோ இறந்துவிடுகிறார்கள்.

உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புதான் இரண்டாம் வகை சர்க்கரை வியாதிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வயிற்றுப் பகுதியிலும் இடுப்புப் பகுதியிலும் அதிகமாகக் கொழுப்பு சேரும்போது சர்க்கரை வியாதி வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறதென நிபுணர்கள் சொல்கிறார்கள். அதிலும் முக்கியமாக, கணையம் (pancreas) மற்றும் கல்லீரலில் (liver) உள்ள கொழுப்பு உடலின் சீரான இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. இதை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்!

 கட்டுப்படுத்துவதற்கான மூன்று வழிகள்...

1. சர்க்கரை வியாதி இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். இரண்டாம் வகை சர்க்கரை வியாதி வருவதற்கு முன்பு பெரும்பாலும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருப்பதைவிட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதை ப்ரிடையாபெட்டீஸ் (prediabetes) என்று சொல்கிறார்கள். ப்ரிடையாபெட்டீசும் சரி இரண்டாம் வகை சர்க்கரை வியாதியும் சரி, இரண்டுமே உடலுக்கு ஆபத்தானது. ஆனால் இந்த இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இரண்டாம் வகை சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடிந்தாலும் அதைக் குணப்படுத்த முடியாது, ஆனால், ப்ரிடையாபெட்டீசைக் குணப்படுத்த முடியும். ப்ரிடையாபெட்டீஸ் உள்ளவர்களுக்கு எந்த அறிகுறியும் பளிச்செனத் தெரியாததால் அந்த நோய் இருப்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. உலகில், கிட்டத்தட்ட 31.6 கோடி மக்களுக்கு ப்ரிடையாபெட்டீஸ் இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன; ஆனால், அநேகருக்கு அது இருப்பதே தெரிவதில்லை. உதாரணத்திற்கு, ஐக்கிய மாகாணத்தில் மட்டும் ப்ரிடையாபெட்டீசால் பாதிக்கப்பட்டவர்களில் 90% மக்களுக்கு அது இருப்பதே தெரியாது.

ப்ரிடையாபெட்டீசை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், டிமென்ஷியா என்ற மனவியாதி ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்கள் எடை அதிகமாக இருந்தால், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால், குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை வியாதி இருந்தால் உங்களுக்கு ப்ரிடையாபெட்டீஸ் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, இரத்தப் பரிசோதனை செய்வது ரொம்ப முக்கியம்.

2. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். எப்போதும் சாப்பிடுவதைவிட கொஞ்சம் குறைவாக சாப்பிடுவது சரியாக இருக்கும். சர்க்கரை அதிகமுள்ள பழ ஜூஸ்கள் மற்றும் குளிர்பானங்களுக்குப் பதிலாக தண்ணீர், டீ, காபி போன்றவற்றைக் குடிப்பது நல்லது. பாலீஷ் செய்யப்படாத அரிசி வகைகள் மற்றும் பாலீஷ் செய்யப்படாத தானியங்களில் தயாரிக்கப்பட்ட பிரட், பாஸ்தா போன்றவற்றை அளவாகச் சாப்பிடுங்கள். அதிக கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பயிர் வகைகள், பாதாம்-பிஸ்தா போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடுங்கள்.

3. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் சரியான உடல் எடையைக் காத்துக்கொள்ளவும் உதவும். டிவி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று ஒரு நிபுணர் சொல்கிறார்.

பரம்பரை வியாதிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது; ஆனால், நம் வாழ்க்கை முறையை நிச்சயம் மாற்றிக்கொள்ள முடியும். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்காக நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் வீண்போகாது. ▪ (g14-E 09)

^ பாரா. 3 ஒரு குறிப்பிட்ட உணவு வகையை சாப்பிடும்படியோ குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்யும்படியோ விழித்தெழு! பத்திரிகை சொல்வதில்லை. மருத்துவம் சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு, ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலையை அலசிப்பார்த்து, மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது முக்கியம்.