Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமிக்கு முடிவு நெருங்கிவிட்டதா?

பூமிக்கு முடிவு நெருங்கிவிட்டதா?

பூமிக்கு முடிவு நெருங்கிவிட்டதா?

பூமியின் நிலைமை

(அ) முன்னேறுமா?

(ஆ) அப்படியே இருக்குமா?

(இ) இன்னும் மோசமாகுமா?

இதற்கு உங்கள் பதில் என்ன?

எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு நம்பிக்கையான கண்ணோட்டம் இருக்கிறதா? அப்படியிருந்தால் உங்களுக்குப் பல நன்மைகள் காத்திருக்கின்றன. நம்பிக்கையான மனநிலை உடையவர்கள் படிப்பில் படுசுட்டிகளாகவும் ஆரோக்கியத்தில் சிரஞ்சீவிகளாகவும் திகழ்வதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நம்பிக்கையான மனநிலை இல்லாதவர்களைவிட நம்பிக்கையான மனநிலை உள்ளவர்களுக்கு இருதய நோய் வருவது வெகு அரிது என்றும் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு பைபிள் சொன்னதையே இந்த ஆய்வுகள் எதிரொலிக்கின்றன: “மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, நொறுங்குண்ட மனமோ எலும்பை உருக்கிவிடும்.”—நீதிமொழிகள் 17:22, NW.

ஆனால், பூமியின் எதிர்காலத்தைக் குறித்து விஞ்ஞானிகளின் கணிப்புகளைக் கேட்கையில் அநேகர் நம்பிக்கையான மனநிலையை இழந்துவிடுகிறார்கள். இன்று தலைப்புச் செய்திகளில் அடிபடும் அபாய எச்சரிப்புகள் சிலவற்றை இப்போது சிந்திக்கலாம்.

நம் கிரகம் ஆபத்தில்

பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலுக்கு மனிதன் ஏற்படுத்தும் தீங்கை தடுக்காதிருந்தால், “புவியின் சீதோஷ்ணமும் சுற்றுச்சூழலும் படுபயங்கரமாகப் பாதிக்கப்படலாம்” என்று 2002-ல் எச்சரித்தது பிரபல ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் அமைப்பு. உலகெங்கும் அதிகரித்துவரும் பசிபட்டினி, அநீதி, இயற்கை வளங்களின் சீரழிவு ஆகியவற்றால் “சுற்றுச்சூழலும் சமுதாயமும் மோசமடைந்து, பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்” என்று அந்த அறிக்கை மேலும் சொன்னது.

பூமியை நான்கு வருடமாக ஆய்வு செய்து, ஆயிரவருட சூழியல் மதிப்பீடு என்ற நூலை 2005-ல் ஐக்கிய நாட்டு சங்கம் வெளியிட்டது. விரிவான இந்த ஆய்வில் பங்குகொண்ட 95 நாடுகளைச் சேர்ந்த 1,360-க்கும் அதிகமான நிபுணர்கள் கடுமையான இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்கள்: “இயற்கையோடு மனிதன் அளவுக்கதிகமாய் விளையாடுவதால் சுற்றுச்சூழல் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது; இதனால் வருங்கால சந்ததியினர் இந்தப் பூமியில் உயிர்வாழ்வதே கேள்விக்குறியாக இருக்கிறது.” இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு, மனிதன் தன் “கொள்கைகளிலும், அமைப்பு முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும் அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும்; ஆனால், அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அந்த அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய நாட்டின் மனித குடியிருப்பு திட்டத்திற்கான செயற்குழு இயக்குநர், அனா டிபாய்ஜூகா அனைத்து ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்ளும் விஷயத்தை தெரிவிக்கிறார்: “நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தால் பூமிக்குப் பேரழிவு நிச்சயம்.”

நம்பிக்கையான மனநிலைக்கு . . .

இந்தப் பத்திரிகையைப் பிரசுரிக்கும் யெகோவாவின் சாட்சிகளும், சீக்கிரத்தில் பூமியில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்படுமென நம்புகிறார்கள். என்றாலும், இந்த மாற்றங்கள் இருண்ட எதிர்காலத்திற்கு அல்ல, ஒளிமயமான எதிர்காலத்திற்கு, இந்த உலகம் இதுவரை கண்டிராத ஓர் அருமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதில் அவர்கள் நிச்சயமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கு காரணம் என்ன? கடவுளுடைய வார்த்தையான பைபிள் தரும் வாக்குறுதிகளே. இதோ, அந்த வாக்குறுதிகளில் ஒன்று: ‘இன்னும் சிறிது காலம்தான்; தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்; அவன் இருந்த இடத்தை தேடுவாய். ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான். சாந்தமுள்ளோர் இந்தப் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள். அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர்.’—சங்கீதங்கள் 37:10, 11; கத்தோலிக்க பைபிள்.

இதெல்லாம் வெறும் கனவா? இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன் இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: இன்று பூமியையும் மனிதரையும் வாட்டும் பெரும் பிரச்சினைகள் பலவற்றைப் பற்றி ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பைபிள் துல்லியமாக அறிவித்தது. தயவுசெய்து அடுத்த கட்டுரையில் உள்ள வசனங்களை வாசித்து, இந்தப் பூமியில் உங்கள் கண்முன்னே நடக்கும் காரியங்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது, எதிர்காலத்தைப் பற்றி பைபிள் முன்னறிவித்திருக்கும் ஒவ்வொன்றும் நிச்சயம் நிறைவேறும் என்பதில் உங்கள் நம்பிக்கை உறுதிப்படும். (w08 8/1)