Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரின் கேள்வி

கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறா?

கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறா?

நிறைய கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸை ரொம்ப முக்கியமான பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். அன்றுதான் இயேசு பிறந்தார் என்று நம்புகிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகைக்கென்று சில சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வைத்திருக்கிறார்கள். இயேசு பிறந்ததற்கும் இந்த சம்பிரதாயங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

கிறிஸ்மஸ் என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்? புசுபுசுவென வெள்ளை நிற தாடி வைத்துக்கொண்டு, சிகப்பு நிற டிரஸ் போட்ட கிறிஸ்மஸ் தாத்தாதான் ஞாபகத்துக்கு வருவார். இந்தக் கிறிஸ்மஸ் தாத்தா எங்கிருந்து வந்தார்? 1931-ஆம் வருடம், கிறிஸ்மஸ் பண்டிகை நேரத்தில், ஒரு பிரபலமான அமெரிக்க கம்பெனி, அவர்கள் தயாரித்த குளிர்பானத்துக்கு கிறிஸ்மஸ் தாத்தாவை வைத்து விளம்பரம் செய்தார்கள். அப்போதுதான், கிறிஸ்மஸ் தாத்தா பிரபலமடைந்தார். 1950-களில் பிரேசில் நாட்டை சேர்ந்த சிலர் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு போட்டியாக கிரான்பா இன்டியனை (Grandpa Indian) அறிமுகப்படுத்தினார்கள். (கிரான்பா இன்டியன் என்பவர் ஒரு புராணக் கதையில் வருபவர்.) அப்படியென்றால், கிறிஸ்மஸ் தாத்தாவை எல்லாரும் மறந்துவிட்டார்களா? இல்லை. டிசம்பர் 25 என்று சொன்னாலே கிறிஸ்மஸ் தாத்தாதான் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவார்; கிரான்பா இன்டியனை பற்றியோ குழந்தை இயேசுவை பற்றியோகூட நிறைய பேர் யோசித்து பார்ப்பதில்லை என்று பேராசிரியர் கார்லோஸ் இ. பான்ட்டினாட்டி சொல்கிறார். அந்தளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பிரபலமடைந்துவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க, கிறிஸ்மஸ் பண்டிகையின் ஆரம்பமே ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது! என்ன பிரச்சினை? கிறிஸ்மஸ் பண்டிகை எப்படி ஆரம்பித்தது?

“இயேசுவுடைய பிறந்த நாளை . . . கிறிஸ்தவர்கள் கி.பி. 200 வரைக்கும் கொண்டாடவில்லை; அதை அவர்கள் வெறுத்தார்கள்” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. ஏன்? பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் மற்ற மதங்களில் இருந்து வந்தவை, அவற்றை கொண்டாடவே கூடாது என்று கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்று பைபிளில்கூட எங்கேயும் இல்லை!

இருந்தாலும், இயேசு பிறந்து 300 வருடம் கழித்து, கத்தோலிக்கர்கள் கிறிஸ்மஸை கொண்டாட ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில், ரோமர்களுடைய மதம் ரொம்ப பிரபலமாக இருந்தது. குளிர்காலத்தில் அவர்களுக்கு நிறைய பண்டிகைகள் இருந்தன. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 17-ல் இருந்து ஜனவரி 1 வரை “விருந்து, விளையாட்டு, ஊர்வலம் என்று ரோமர்கள் ஒரே குஷியாக இருப்பார்கள்” என்று அமெரிக்காவில் கிறிஸ்மஸ் என்ற ஆங்கில புத்தகத்தில் பென்னி எல். ரெஸ்டாட் எழுதினார். டிசம்பர் 25-ஆம் தேதி அன்று ரோமர்கள் சூரியக் கடவுளுடைய பிறந்த நாளை கொண்டாடினார்கள். அதே நாளில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஆரம்பித்து வைத்தால் ரோமர்களை கிறிஸ்தவ மதத்துக்கு இழுக்கலாம் என்று நினைத்தார்கள். அதேபோல், ரோமர்களும் “சந்தோஷமாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய பழைய பண்டிகையை புது பெயரில் கொண்டாடினார்கள்” என்று சான்டா க்ளாஸின் வரலாறு என்ற ஆங்கில புத்தகத்தில் கெர்ரி போலர் எழுதினார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? “கிறிஸ்தவ பண்டிகை என்ற பெயரில் மற்ற மதத்தின் பண்டிகையைத்தான்” கிறிஸ்மஸ் அன்று மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று தி பேட்டில் ஃபார் கிறிஸ்மஸ் (The Battle for Christmas) என்ற புத்தகத்தில் ஸ்டீவன் நிசன்பாம் எழுதினார். கிறிஸ்மஸை கொண்டாடுவது கடவுளுக்கும் அவருடைய மகன் இயேசுவுக்கும் கொஞ்சம்கூட பிடிக்காது. அப்படியென்றால், உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடலாமா? “நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது; வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 6:14, ஈஸி டு ரீட் வர்ஷன்) கிறிஸ்மஸ் வேறு மதத்திலிருந்து வந்த பண்டிகையாக இருப்பதால் அதைக் கொண்டாடக் கூடாது.—பிரசங்கி 1:15. ▪ (w15-E 12/01)