Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எட்டாம் அதிகாரம்

ஏமாற்றங்கள் மத்தியிலும் சகித்திருந்தார்

ஏமாற்றங்கள் மத்தியிலும் சகித்திருந்தார்

1. சீலோ நகரம் ஏன் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கியிருந்தது?

சீலோ நகரமே ‘சாவு வீடாய்’ காட்சியளிப்பதை சாமுவேல் காண்கிறான். அந்நகரம் கண்ணீர்க் கடலில் மூழ்கியதுபோல் காட்சியளிக்கிறது. தந்தையை... கணவனை... அண்ணனை... தம்பியை... மகனை... பறிகொடுத்த பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் கதறுகிற கதறல் நெஞ்சைப் பிளக்கிறது. எத்தனை வீடுகளில் இந்த மரண ஓலம் கேட்கிறது? நமக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: இஸ்ரவேலர் பெலிஸ்தரிடம் படுதோல்வி அடைந்ததால் சுமார் 30,000 வீரர்கள் உயிரிழந்திருந்தார்கள்; அதற்குச் சற்று முன்பு இன்னொரு போரில் 4,000 வீரர்கள் இறந்திருந்தார்கள்.​—1 சா. 4:​1, 2, 10.

2, 3. என்ன துயரங்கள் சீலோவை அடுத்தடுத்து தாக்கின?

2 அடுத்தடுத்து தாக்கிய துயரங்களில் ஒன்றுதான் இது. தலைமைக் குரு ஏலியின் பொல்லாத மகன்கள் ஓப்னியும் பினெகாஸும் புனித ஒப்பந்தப் பெட்டியை சீலோவிலிருந்து எடுத்துக்கொண்டு அணிவகுத்துப் போயிருந்தார்கள். பொதுவாக வழிபாட்டுக் கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில்தான் அது வைக்கப்பட்டிருக்கும்; மதிப்புமிக்க அந்தப் பெட்டி கடவுளின் பிரசன்னத்திற்கு அடையாளமாக விளங்கியது. மக்களோ அதை ஒரு மந்திரப் பொருள்போல் பாவித்து, போர்க்களத்திற்குக் கொண்டுபோனார்கள்; அந்தப் பெட்டி இருந்தால் வெற்றி தங்களைத் தேடி வருமென முட்டாள்தனமாக நம்பினார்கள். ஆனால், பெலிஸ்தர் அதைக் கைப்பற்றி, ஓப்னியையும் பினெகாஸையும் கொன்றுபோட்டார்கள்.​—1 சா. 4:​3-11.

3 சீலோவிலிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்திற்குப் பல நூற்றாண்டுகளாகப் பெருமை சேர்த்து வந்த அந்த ஒப்பந்தப் பெட்டி கைவிட்டுப்போகிறது. இந்தச் செய்தியைக் கேட்டதும் 98 வயதான ஏலி தனது இருக்கையிலிருந்து மல்லாக்காக விழுந்து உயிர்விடுகிறார். அன்று விதவையான அவருடைய மருமகளும் பிரசவத்தின்போது இறந்துபோகிறாள். “மகிமை இஸ்ரவேலைவிட்டு விலகிப்போயிற்று” என்று சொல்லி உயிர்விடுகிறாள். சீலோவின் சிறப்பு என்றென்றும் போய்விடுகிறது!​—1 சா. 4:​12-22.

4. இந்த அதிகாரத்தில் எதைப் பார்ப்போம்?

4 இந்தப் பெருத்த ஏமாற்றங்களை சாமுவேல் எப்படித் தாங்கிக்கொள்வான்? யெகோவாவின் ஆதரவையும் அரவணைப்பையும் இழந்திருந்த மக்களுக்கு உதவிசெய்யும் அளவுக்கு அவனது விசுவாசம் உறுதியாக இருக்கிறதா? விசுவாசத்திற்குச் சவாலாக இருக்கும் சோதனைகளும் ஏமாற்றங்களும் நம் அனைவருக்குமே வரலாம்; அதனால், சாமுவேலின் வாழ்க்கையிலிருந்து நாம் இன்னும் என்னென்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் எனப் பார்ப்போம்.

“நீதியை நிலைநாட்டினார்”

5, 6. அந்த 20 வருட காலப்பகுதியைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, அப்போது சாமுவேல் என்ன செய்திருப்பார்?

5 இந்தக் கட்டத்திலிருந்து சாமுவேலைப் பற்றிக் குறிப்பிடாமல் புனித ஒப்பந்தப் பெட்டியைப் பற்றி பைபிள் பதிவு குறிப்பிடுகிறது; அதை எடுத்துச் சென்றதற்காக பெலிஸ்தர் தண்டிக்கப்பட்டதையும் அதைத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதையும் பற்றி விவரிக்கிறது. பைபிள் பதிவு மீண்டும் சாமுவேலைப் பற்றிக் குறிப்பிடும்போது சுமார் 20 வருடங்கள் உருண்டோடியிருந்தன. (1 சா. 7:2) அவ்வளவு காலம் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இதற்கு பைபிளே பதில் அளிக்கிறது.

பெரும் இழப்பையும் ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ள மக்களுக்கு சாமுவேல் எப்படி உதவினார்?

6 அந்த 20 வருடக் காலப்பகுதிக்கு முன்பு, “கடவுளுடைய வார்த்தையை இஸ்ரவேலர் அனைவருக்கும் சாமுவேல் தொடர்ந்து அறிவித்துவந்தார்.” (1 சா. 4:​1, NW) அந்தக் காலப்பகுதிக்குப் பின்பு, ஒவ்வொரு வருடமும் இஸ்ரவேலில் உள்ள மூன்று நகரங்களுக்கும் சுற்றுமுறையில் பயணம் செய்து வழக்குகளை விசாரித்து தீர்ப்புகள் வழங்கிவருகிறார். அதன்பின், தன் சொந்த ஊரான ராமாவுக்குத் திரும்புகிறார். (1 சா. 7:​15-17) கடவுளுடைய சேவையில் எப்போதும் சாமுவேல் சுறுசுறுப்பாய் ஈடுபட்டு வருகிறார்; அப்படியென்றால், இடைப்பட்ட அந்த 20 வருட காலப்பகுதியிலும் கடவுளுடைய பணியில் மூழ்கியிருந்திருப்பார்.

சாமுவேலுடைய வாழ்நாளில் ஒரு 20 வருட காலப்பகுதியைப் பற்றி பைபிளில் எந்தப் பதிவும் இல்லை, என்றாலும் அந்தச் சமயத்திலும் யெகோவாவின் சேவையில் மும்முரமாகவே ஈடுபட்டிருப்பார்

7, 8. (அ) 20 வருடங்களாகக் கடுமையாய் உழைத்திருந்த சாமுவேல், மக்களிடம் என்ன செய்தியைச் சொன்னார்? (ஆ) சாமுவேல் சொன்னதைக் கேட்டு மக்கள் என்ன செய்தார்கள்?

7 ஏலியின் மகன்களுடைய ஒழுக்கக்கேடும் அக்கிரமமும் மக்களுடைய விசுவாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துப்போட்டிருந்தன. அதனால், அநேகர் சிலை வழிபாட்டில் விழுந்துவிட்டதாகத் தெரிகிறது. 20 வருடங்களாகக் கடவுளுடைய வேலையில் கடுமையாய் உழைத்திருந்த சாமுவேல் இந்தச் செய்தியை மக்களிடம் சொல்கிறார்: ‘நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் திரும்பினால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்குங்கள்; உங்கள் இருதயத்தை யெகோவாவுக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார்.’​—1 சா. 7:3.

8 “பெலிஸ்தருடைய கை” இஸ்ரவேலர்மீது ஓங்கியிருந்தது. இஸ்ரவேலருடைய படையை அடியோடு வீழ்த்திவிட்டதால் கடவுளுடைய மக்களை இஷ்டம்போல் அடக்கியொடுக்கலாம் என நினைத்தார்கள். ஆனால், மக்கள் மறுபடியும் யெகோவாவிடம் திரும்பினால்தான் நிலைமை மாறுமென சாமுவேல் சொல்கிறார். அவர்கள் அப்படிச் செய்கிறார்களா? ஆம், உருவச் சிலைகளைத் தூக்கியெறிந்துவிட்டு ‘யெகோவா ஒருவருக்கே ஆராதனை செய்ய’ ஆரம்பிக்கிறார்கள்; இதைக் கண்டு சாமுவேல் மிகவும் சந்தோஷப்படுகிறார். பின்பு, எருசலேமுக்கு வடக்கே மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கிற மிஸ்பாவில் ஒன்றுகூடி வரும்படி அனைவரையும் அழைக்கிறார். அதன்படியே மக்கள் ஒன்றுகூடி வந்து விரதம் இருக்கிறார்கள்; சிலை வழிபாட்டுடன் தொடர்புடைய பாவங்களைவிட்டு மனந்திரும்புகிறார்கள்.​—1 சாமுவேல் 7:​4-6-ஐ வாசியுங்கள்.

மனந்திரும்பிய இஸ்ரவேலர் எல்லோரும் ஒன்றுகூடிவந்ததைக் கேள்விப்பட்ட பெலிஸ்தர் தங்கள் கைவரிசையைக் காட்டத் தயாரானார்கள்

9. பெலிஸ்தர் என்ன செய்யத் திட்டமிட்டார்கள், அந்தச் செய்தியைக் கேட்ட இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்?

9 ஆனால், இஸ்ரவேலர் எல்லோரும் ஒன்றுகூடிவந்த விஷயத்தை பெலிஸ்தர் கேள்விப்பட்டு தங்கள் கைவரிசையைக் காட்ட தயாராகிறார்கள். யெகோவாவின் வணக்கத்தாரை ஒழித்துக்கட்ட தங்கள் படையை மிஸ்பாவுக்கு அனுப்புகிறார்கள். அந்தச் செய்தியைக் கேட்டு இஸ்ரவேலர் நடுநடுங்கிப்போகிறார்கள்; தங்களுக்காக ஜெபம் செய்யும்படி சாமுவேலைக் கேட்டுக்கொள்கிறார்கள். அவர் ஜெபம் செய்வதோடு, யெகோவாவுக்குப் பலியும் செலுத்துகிறார். பரிசுத்த வழிபாடு நடந்துகொண்டிருக்கும் அந்தச் சமயத்தில் பெலிஸ்தரின் படை மிஸ்பாவை நெருங்குகிறது. அப்போது சாமுவேலின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளிக்கிறார். அவர் ஆக்ரோஷமாக முழங்குகிறார் என்றே சொல்லலாம்; ஆம், யெகோவா ‘மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணுகிறார்.’​—1 சா. 7:​7-10.

10, 11. (அ) பெலிஸ்தரின் படைக்கு எதிராக யெகோவா முழங்கச் செய்த இடி முழக்கம் ஏன் அசாதாரணமாக இருந்திருக்க வேண்டும்? (ஆ) மிஸ்பாவில் துவங்கிய போரின் விளைவு என்ன?

10 இடி முழக்கத்தைக் கேட்டதும் ஓடிப்போய் அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் சிறு பிள்ளைகள் போல் அந்தப் பெலிஸ்தரை நாம் கற்பனை செய்ய வேண்டுமா? இல்லை. ஏனென்றால் அவர்கள் பல போர்க்களங்களைக் கண்ட துணிச்சல்மிக்க வீரர்கள். என்றாலும், இப்படியொரு இடி முழக்கத்தை அவர்கள் வாழ்க்கையில் கேட்டிருக்கவே மாட்டார்கள். ஏன்? அது “மகா பெரிய” சத்தத்துடன் கேட்பதாலா? மேகமூட்டமில்லாத வானத்திலிருந்து வருவதாலா? அல்லது, மலைச்சரிவுகளிலிருந்து எதிரொலிப்பதாலா? எதுவாக இருந்தாலும் சரி, அந்த இடி முழக்கத்தைக் கேட்டு அவர்கள் அப்படியே ஆடிப்போகிறார்கள். பயங்கரமான குழப்பத்தில், புலிபோல் பாய வந்தவர்கள் சட்டெனப் பூனைபோல் பயந்தோடுகிறார்கள். இஸ்ரவேல் ஆண்கள் மிஸ்பாவிலிருந்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தோற்கடிக்கிறார்கள்; எருசலேமுக்குத் தென்மேற்கே பல மைல் தூரத்துக்கு அவர்களைத் துரத்திக்கொண்டு போகிறார்கள்.​—1 சா. 7:11.

11 அந்தப் போர் யெகோவாவின் மக்களுக்கு ஒரு திருப்புக்கட்டமாக அமைகிறது. சாமுவேல் நீதிபதியாகப் பணியாற்றுகிற காலமெல்லாம் பெலிஸ்தர் புறமுதுகு காட்டி ஓடுகிறார்கள். அடுத்தடுத்து பல நகரங்கள் கடவுளுடைய மக்களின் கைக்கே திரும்புகின்றன.​—1 சா. 7:​13, 14.

12. சாமுவேல் ‘நீதியை நிலைநாட்டினார்’ என்பதன் அர்த்தமென்ன, தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட எந்தக் குணங்கள் அவருக்கு உதவின?

12 பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘நீதியை நிலைநாட்டிய’ உண்மையுள்ள நீதிபதிகளையும் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலன் பவுல் பட்டியலிட்டபோது சாமுவேலின் பெயரையும் குறிப்பிட்டார். (எபி. 11:​32, 33) சாமுவேல் உண்மையிலேயே கடவுளுடைய பார்வையில் சரியானதையும் நீதியானதையும் செய்தார்; மற்றவர்களையும் அப்படிச் செய்ய உற்சாகப்படுத்தினார். அவரால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட முடிந்தது; ஏனென்றால், யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார்... ஏமாற்றங்கள் மத்தியிலும் உண்மையுடன் உழைத்தார்... நன்றியுள்ளவராகவும் இருந்தார். இஸ்ரவேலருக்கு மிஸ்பாவில் வெற்றி கிடைத்த பிறகு, யெகோவா செய்த உதவியை நினைவுகூர ஒரு கல்லை நிறுத்துகிறார்.​—1 சா. 7:12.

13. (அ) நாம் சாமுவேலைப் பின்பற்ற விரும்பினால் என்ன குணங்களை வளர்த்துக்கொள்வது அவசியம்? (ஆ) அப்படிப்பட்ட குணங்களை நாம் எப்போது வளர்த்துக்கொள்வது சிறந்ததென நினைக்கிறீர்கள்?

13 சாமுவேலைப் போல் நீங்களும் ‘நீதியை நிலைநாட்ட’ விரும்புகிறீர்களா? அப்படியானால், சாமுவேல் காட்டிய பொறுமை, மனத்தாழ்மை, நன்றியுணர்வு ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். (1 பேதுரு 5:​6-ஐ வாசியுங்கள்.) இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாருக்குத்தான் இல்லை? இளவயதிலேயே இந்தக் குணங்களை சாமுவேல் வளர்த்துக்கொண்டதால்தான் பிற்காலத்தில் பெருத்த ஏமாற்றங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடிந்தது.

‘உங்களுடைய குமாரர் உங்களுடைய வழிகளில் நடக்கிறதில்லை’

14, 15. (அ) ‘முதிர்வயதில்’ சாமுவேலுக்கு ஏற்பட்ட பெருத்த ஏமாற்றம் என்ன? (ஆ) சாமுவேல் ஏலியைப் போல் பொறுப்பில்லாத தகப்பனாக இருந்தாரா? விளக்குங்கள்.

14 அடுத்ததாக சாமுவேலைப் பற்றி பைபிள் குறிப்பிடும்போது அவர் ‘முதிர்வயதானவராக’ இருக்கிறார். வளர்ந்த மகன்கள் இரண்டு பேர் அவருக்கு இருக்கிறார்கள்; தான் செய்துவருகிற நியாயந்தீர்க்கும் வேலையைத் தன்னுடைய மகன்கள் யோவேலுக்கும் அபியாவுக்கும்கூட கொடுக்கிறார். ஆனால், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக அவர்கள் இருப்பதில்லை. சாமுவேல் நேர்மையோடும் நீதியோடும் நடந்துகொண்டாலும், அவருடைய மகன்கள் அப்படி நடந்துகொள்வதில்லை; தங்கள் பொறுப்பைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு நீதியைப் புரட்டுகிறார்கள், லஞ்சம் வாங்குகிறார்கள்.​—1 சா. 8:​1-3.

15 ஒருநாள், இஸ்ரவேலின் மூப்பர்கள் இந்த வயதான தீர்க்கதரிசியிடம் வந்து முறையிடுகிறார்கள். ‘உங்களுடைய குமாரர் உங்களுடைய வழிகளில் நடக்கிறதில்லை’ என்று சொல்கிறார்கள். (1 சா. 8:​4, 5) இந்த விஷயம் சாமுவேலுக்கு ஏற்கெனவே தெரியுமா? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. என்றாலும், சாமுவேல் ஏலியைப் போல் பொறுப்பில்லாத தகப்பனாக நிச்சயம் இருந்திருக்க மாட்டார். ஏலி தன் மகன்கள் செய்த அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்காமல் கடவுளுக்கும் மேலாக அவர்களை மதித்ததால், யெகோவா அவரைக் கண்டித்தார், தண்டித்தார். (1 சா. 2:​27-29) ஆனால், சாமுவேலிடம் யெகோவா அப்படிப்பட்ட எந்தக் குற்றத்தையும் காணவில்லை.

கெட்டவர்களாய் மாறிய தன் மகன்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தை சாமுவேல் எப்படித் தாங்கிக்கொண்டார்?

16. பிள்ளைகள் அடங்காதபோது பெற்றோர் எப்படி உணருகிறார்கள், சாமுவேலின் உதாரணம் அவர்களுக்கு எப்படி ஆறுதலையும் வழிகாட்டுதலையும் தருகிறது?

16 சாமுவேல் தன் மகன்களுடைய மோசமான நடத்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் எந்தளவு கூனிக்குறுகியிருப்பார், துடிதுடித்திருப்பார், அல்லது ஏமாற்றம் அடைந்திருப்பார் என்றெல்லாம் பதிவு சொல்வதில்லை. ஆனால், இன்றுள்ள பெற்றோர் பலருக்கு அவருடைய உணர்ச்சிகள் நன்றாகப் புரியும். இந்தக் கொடிய காலத்தில், பெற்றோருடைய அதிகாரத்தையும் கண்டிப்பையும் மீறி நடக்கிற பிள்ளைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. (2 தீமோத்தேயு 3:​1-5-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட கசப்பான அனுபவத்தைச் சுமக்கும் பெற்றோருக்கு, சாமுவேலின் உதாரணம் ஆறுதலைத் தரும், வழிகாட்டியாகவும் இருக்கும். சாமுவேலின் மகன்கள் பயபக்தியில்லாமல் நடந்துகொண்டாலும் அவர் தன் பக்திவைராக்கியத்தை இம்மியளவுகூட விட்டுக்கொடுப்பதில்லை. ஒன்றை மறந்துவிடாதீர்கள்... அன்பான வார்த்தைகளுக்கோ கண்டிப்புகளுக்கோ பிள்ளைகள் பணியாவிட்டாலும்கூட பெற்றோரின் முன்மாதிரி அவர்களுக்கு வலிமைமிக்க ஆசானாக இருக்கும். அதுமட்டுமல்ல, சாமுவேலைப் போலவே பெற்றோரும் தங்களுடைய தகப்பனான யெகோவா தேவனை எப்போதும் பெருமிதப்படுத்த முடியும்.

“எங்களுக்கும் ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும்”

17. இஸ்ரவேலின் மூப்பர்கள் சாமுவேலிடம் என்ன கேட்டார்கள், சாமுவேல் எப்படி உணர்ந்தார்?

17 தங்களுடைய பேராசையும் சுயநலமும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சாமுவேலின் மகன்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இஸ்ரவேலின் மூப்பர் எல்லோரும் சாமுவேலிடம் சென்று, “மற்றெல்லா தேசங்களிலும் இருப்பது போல் எங்களுக்கும் ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும், அவர் எங்களுக்கு நீதி வழங்கட்டும்” என்று சொல்கிறார்கள். அதனால், அவர்கள் தன்னை ஒதுக்கிவிட்டதாக சாமுவேல் நினைக்கிறாரா? அவர் எத்தனையோ ஆண்டுகளாக யெகோவாவின் சார்பில் மக்களுக்கு நீதி வழங்கி வந்திருக்கிறாரே! இப்போது நீதி வழங்க சாமுவேலைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஆனால் ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்கிறார்கள். சுற்றியிருந்த தேசங்களுக்கு ராஜாக்கள் இருந்ததால் தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென இஸ்ரவேலர் நினைக்கிறார்கள். அப்போது சாமுவேல் எப்படி உணருகிறார்? அது “சாமுவேலுடைய பார்வையில் கெட்டதாய்த் தோன்றியது” என்று பைபிள் சொல்கிறது.​—1 சா. 8:​5, 6, NW.

18. யெகோவா எவ்வாறு சாமுவேலை ஆறுதல்படுத்தினார், அதேசமயத்தில் இஸ்ரவேலின் பாவத்தை எப்படிச் சுட்டிக்காட்டினார்?

18 இதைக் குறித்து சாமுவேல் முறையிட்டபோது யெகோவா என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: ‘ஜனங்கள் சொன்னதைப்போல் செய்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, என்னைத்தான் தள்ளினார்கள்; என்னை அவர்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.’ (ERV) இந்த வார்த்தைகள் சாமுவேலுக்கு ஆறுதல் அளிக்கின்றன; ஆனாலும், சர்வவல்லமை படைத்த கடவுளை அந்த மக்கள் எந்தளவு அவமதித்திருக்கிறார்கள்! ஒரு ராஜா ஆட்சி செய்தால் அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதைக் குறித்து எச்சரிக்கும்படி சாமுவேலிடம் யெகோவா சொல்கிறார். சாமுவேல் எச்சரித்த பிறகும், “அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்” என்று அவர்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். சாமுவேல் எப்போதும்போல் இப்போதும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறார், அவர் தேர்ந்தெடுக்கிற ஒருவரை ராஜாவாக நியமிக்கிறார்.​—1 சா. 8:​7-19.

19, 20. (அ) சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக நியமிக்கும் விஷயத்தில், யெகோவாவின் அறிவுரைக்கு சாமுவேல் எப்படியெல்லாம் கீழ்ப்படிதலைக் காட்டினார்? (ஆ) சாமுவேல் எவ்வாறு யெகோவாவின் மக்களுக்குத் தொடர்ந்து உதவினார்?

19 சாமுவேல் எப்படிக் கீழ்ப்படிதலைக் காட்டுகிறார்? எரிச்சலோடும் வேண்டாவெறுப்போடும் காட்டுகிறாரா? ஏமாற்றத்தால் மனக்கசப்பை வளர்த்துக்கொள்கிறாரா, அது தன் நெஞ்சுக்குள் நஞ்சாக இறங்க அனுமதிக்கிறாரா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பாலோர் அப்படித்தான் செய்வார்கள்; ஆனால், சாமுவேல் அப்படிச் செய்வதில்லை. சவுலை ராஜாவாக நியமிக்கிறார், யெகோவாவே அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார். பின்பு சவுலை முத்தம் செய்கிறார்; அந்தப் புதிய ராஜாவை வரவேற்பதற்கும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்புவதற்கும் இது ஓர் அடையாளம். அவர் மக்களிடம், ‘யெகோவா தேர்ந்தெடுத்தவரைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல் வேறெவரும் உண்டோ?’ என்று கேட்கிறார்.​—1 சா. 10:​1, 24, பொ.மொ.

20 யெகோவா தேர்ந்தெடுத்த மனிதரிடம் குறைகளை அல்ல, நிறைகளையே சாமுவேல் பார்க்கிறார். தன்னைப் பொறுத்தவரை, யெகோவாவுக்கு உத்தமமாய் நடப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார், சலன புத்தியுள்ள இஸ்ரவேலரைப் பிரியப்படுத்துவதற்கு அல்ல. (1 சா. 12:​1-4) தன்னுடைய வேலையையும் அவர் பொறுப்பாகச் செய்து வருகிறார்; அதாவது, ஆன்மீக ஆபத்துகளைக் குறித்து கடவுளுடைய மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார், யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருக்க அவர்களை உந்துவிக்கிறார். அவருடைய அறிவுரை அவர்களுடைய இதயத்தைத் தொடுகிறது, தங்கள் சார்பாக யெகோவாவிடம் ஜெபிக்கச் சொல்லி அவரிடம் கெஞ்சிக் கேட்கிறார்கள். அவர்களுக்கு அவர் இவ்வாறு அருமையாகப் பதிலளிக்கிறார்: ‘என்னைப் பொறுத்தவரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்த மாட்டேன். நிறுத்தினால், யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன்.’​—1 சா. 12:​21-24, ERV.

பொறாமையோ கசப்புணர்ச்சியோ நம் மனதில் வேர்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை சாமுவேலின் உதாரணம் காட்டுகிறது

21. விசேஷப் பொறுப்போ நியமிப்போ வேறு யாருக்காவது கிடைக்கும்போது நீங்கள் ஏமாற்றமடைந்தால், சாமுவேலின் உதாரணம் எவ்வாறு கைகொடுக்கும்?

21 விசேஷப் பொறுப்போ நியமிப்போ வேறு யாருக்காவது கிடைத்தபோது நீங்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்களா? பொறாமையோ கசப்புணர்ச்சியோ நம் மனதில் வேர்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை சாமுவேலின் உதாரணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (நீதிமொழிகள் 14:​30-ஐ வாசியுங்கள்.) பயனளிக்கிற வேலைகளை... திருப்தியளிக்கிற வேலைகளை... கடவுள் தம்முடைய உண்மை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஏராளமாய்த் தருகிறார்.

‘நீ எவ்வளவு காலம் துக்கித்துக்கொண்டிருப்பாய்?’

22. சாமுவேல் ஆரம்பத்தில் சவுலுடைய நிறைகளைப் பார்த்தது ஏன் நியாயமானதாய் இருந்தது?

22 சாமுவேல் சவுலுடைய நிறைகளைப் பார்த்தது நியாயம்தான்; ஏனென்றால், சவுல் தனித்தன்மைமிக்கவராய் விளங்குகிறார். வாட்டசாட்டமாக... தைரியசாலியாக... திறமைசாலியாக... இருக்கிறார். அதேசமயம், ஆரம்பத்தில் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்கிறார். (1 சா. 10:​22, 23, 27) அதுமட்டுமல்ல, கடவுள் கொடுத்த மற்றொரு அருமையான அன்பளிப்பும் அவர் வசம் இருக்கிறது; அதுதான், வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கிற... சுயமாய்த் தீர்மானம் எடுக்கிற... உரிமை. (உபா. 30:19) அதை அவர் சரியாகப் பயன்படுத்துகிறாரா?

23. என்ன அருமையான குணத்தை சவுல் முதலில் தொலைத்துவிட்டார், அவர் எப்படி மேன்மேலும் அகங்காரத்தைக் காட்டினார்?

23 பொதுவாக, ஒருவருக்குப் பதவி வந்ததும் முதலில் பணிவு பறந்துவிடும். அதேபோல் சவுலும் சீக்கிரத்திலேயே அகங்காரம் பிடித்தவராய் மாறுகிறார். சாமுவேல் மூலம் யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளை மீறுகிறார். ஒருசமயம் சவுல் பொறுமையிழந்து, சாமுவேல் செலுத்த நினைத்த பலியை அவரே செலுத்திவிடுகிறார். அதற்காக சாமுவேல் அவரைக் கடுமையாய்க் கண்டிக்கிறார்; ஆட்சி செய்யும் உரிமை இனி அவரது பரம்பரைக்கு இருக்காது என்று முன்னுரைக்கிறார். கண்டிப்பை ஏற்றுக்கொண்டு திருந்துவதற்குப் பதிலாக இன்னும் பயங்கரமான தவறுகளை சவுல் செய்கிறார்.​—1 சா. 13:​8, 9, 13, 14.

24. (அ) அமலேக்கியரோடு போரிட்ட சமயத்தில் சவுல் எவ்வாறு யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்? (ஆ) கண்டிக்கப்பட்டபோது சவுல் எவ்வாறு நடந்துகொண்டார், யெகோவாவின் தீர்ப்பு என்ன?

24 அமலேக்கியர்மீது போர் தொடுக்கும்படி சாமுவேல் மூலம் சவுலிடம் யெகோவா தெரிவிக்கிறார். அமலேக்கியரின் பொல்லாத அரசன் ஆகாகைக் கொல்லும்படியும் யெகோவா கட்டளையிடுகிறார். ஆனால், சவுல் அவனைக் கொல்லவில்லை; அதோடு, அழிக்கப்பட வேண்டிய கொள்ளைப் பொருள்களில் சிறந்தவற்றை அழிக்கவுமில்லை. சவுலுக்கு சாமுவேல் புத்திசொல்ல வரும்போது, சவுல் ரொம்பவே மாறியிருப்பது பளிச்செனத் தெரிகிறது. செய்த தவறைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அதை நியாயப்படுத்துகிறார், சாக்குப்போக்கு சொல்கிறார், தான் செய்தது சரியெனச் சாதிக்கிறார், விஷயத்தைத் திசைதிருப்புகிறார், பழியை மக்கள்மீது போடப் பார்க்கிறார். யெகோவாவுக்குப் பலிசெலுத்தவே கொள்ளைப் பொருள்கள் சிலவற்றைக் கொண்டுவந்ததாக சவுல் நியாயப்படுத்தியபோது, ‘பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்’ என்று சாமுவேல் சொல்கிறார். சாமுவேல் தைரியமாக அவரைக் கண்டித்து, யெகோவாவின் தீர்ப்பை அறிவிக்கிறார்; அரசாட்சி சவுலிடமிருந்து பறிக்கப்பட்டு அவரைவிடச் சிறந்த ஒருவரிடம் கொடுக்கப்படும் என்று சொல்கிறார். * ​—1 சா. 15:​1-33.

25, 26. (அ) சவுலுக்காக சாமுவேல் ஏன் துக்கப்பட்டார், யெகோவா எவ்வாறு அவரை மென்மையாகக் கண்டித்தார்? (ஆ) ஈசாயின் வீட்டுக்குப் போனபோது சாமுவேல் என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டார்?

25 சவுல் செய்த தவறுகளைப் பார்த்து சாமுவேல் மனமொடிந்துபோகிறார். அதைப் பற்றி அன்றிரவு முழுக்க யெகோவாவிடம் புலம்புகிறார். சொல்லப்போனால், சவுலுக்காக மிகவும் துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். சவுலிடம் புதைந்திருந்த திறமைகளையும் நல்ல குணங்களையும் சாமுவேல் பார்த்திருந்ததால் அவர்மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்; ஆனால், இப்போது அந்த நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டது. சவுல் அடியோடு மாறிவிட்டார்; அருமையான குணங்களையெல்லாம் தொலைத்துவிட்டு, யெகோவாவுக்கு விரோதியாக ஆகிவிட்டார். அதன்பின் சாமுவேல் ஒருபோதும் சவுலைப் பார்க்க விரும்பவில்லை. பிற்பாடு, சாமுவேலை யெகோவா இவ்வாறு மென்மையாய்க் கண்டிக்கிறார்: “இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன்.”​—1 சா. 15:​34, 35; 16:1.

26 அபூரண மனிதர்கள் இன்று உத்தமமாய் இருக்கலாம், நாளை மாறிவிடலாம்; ஆனால், அவர்களுக்கு ஏற்ப யெகோவா தமது நோக்கத்தை மாற்றிக்கொள்வதில்லை. ஒருவர் உத்தமத்தைவிட்டு விலகினால், யெகோவா தமது சித்தத்தை நிறைவேற்ற வேறொருவரைப் பயன்படுத்துவார். எனவே, சவுலுக்காகத் துக்கப்படுவதை வயதான சாமுவேல் விட்டுவிடுகிறார். யெகோவா சொன்னபடி, பெத்லகேமிலுள்ள ஈசாயின் வீட்டுக்குப் போகிறார்; அவருடைய அழகிய மகன்களை அங்கு பார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு மகனைப் பார்த்தபோதும் யெகோவா அவரிடம், அவர்களுடைய வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எடைபோட வேண்டாமெனக் கூறுகிறார். (1 சாமுவேல் 16:​7-ஐ வாசியுங்கள்.) இறுதியில், ஈசாயின் கடைசி மகன் தாவீதை சாமுவேல் பார்க்கிறார்; அவரே யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்கிறார்.

எப்பேர்ப்பட்ட ஏமாற்றத்தையும் யெகோவாவால் போக்க முடியும்... அதிலிருந்து மீண்டுவர உதவ முடியும்... ஏன் அதை ஆசீர்வாதமாகக்கூட மாற்ற முடியும்... என்பதை சாமுவேல் அனுபவப்பூர்வமாய் அறிந்துகொள்கிறார்

27. (அ) விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள சாமுவேலுக்கு எது உதவியது? (ஆ) சாமுவேலின் முன்மாதிரியைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

27 சவுலுக்குப் பதிலாக தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தது சரிதான் என்பதை சாமுவேல் தன் அந்திம காலத்தில் இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்கிறார். சவுல் பொறாமையால் கொலைவெறி பிடித்தவராக... விசுவாசதுரோகியாக... மாறுவதைப் பார்க்கிறார். ஆனால், தாவீது அருமையான குணங்களை... தைரியம், உத்தமம், விசுவாசம், உண்மைத்தன்மை போன்ற குணங்களை... வெளிக்காட்டுவதைப் பார்க்கிறார். சாமுவேல் தன்னுடைய வாழ்வின் விளிம்பை நெருங்க நெருங்க... அவருடைய விசுவாசம் பலமாகிக்கொண்டே போகிறது. எப்பேர்ப்பட்ட ஏமாற்றத்தையும் யெகோவாவால் போக்க முடியும்... அதிலிருந்து மீண்டுவர உதவ முடியும்... ஏன் அதை ஆசீர்வாதமாகக்கூட மாற்ற முடியும்... என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்கிறார். கிட்டத்தட்ட நூறாண்டுகள் வாழ்ந்த சாமுவேல், உத்தமர் என்ற நற்பெயருடன் கடைசியில் காலமாகிறார். விசுவாசமிக்க சாமுவேலுக்காக இஸ்ரவேலர் அனைவரும் துக்கம் அனுசரித்ததில் ஆச்சரியமில்லை! இன்றும் யெகோவாவின் ஊழியர்கள், ‘நான் சாமுவேலைப் போல விசுவாசத்தைக் காட்டுவேனா?’ எனக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

^ பாரா. 24 சாமுவேல் தன் கையாலேயே ஆகாகைக் கொன்றுபோட்டார். அந்தப் பொல்லாத அரசனோ அவன் குடும்பத்தாரோ இரக்கம்பெற கொஞ்சம்கூட அருகதையற்றவர்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, கடவுளுடைய மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் போட்ட ‘ஆமானும்’ இந்த ஆகாகின் வம்சத்தில் வந்தவன்தான்.​—எஸ்தர் 8:3; இந்தப் புத்தகத்தில் 15, 16 அதிகாரங்களைக் காண்க.