Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 4

குற்ற உணர்வு​—என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள்’

குற்ற உணர்வு​—என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள்’

“எனக்கு ஒரு புது வேலை கிடைச்சுது. அதுக்கு அப்புறம், நாங்க வசதியா வாழ ஆரம்பிச்சோம். ஆனா, அந்த வேலைக்கு போனதுக்கு அப்புறம் யெகோவாவுக்கு பிடிக்காத விஷயங்கள செய்ய ஆரம்பிச்சேன். சில பண்டிகைகள கொண்டாட ஆரம்பிச்சேன். அரசியல் நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டேன். சர்ச்சுக்கு கூட போனேன். இப்படியே 40 வருஷம் சபையை விட்டு பிரிஞ்சே இருந்தேன். ‘இவ்ளோ வருஷம் ஆயிடுச்சே, இதுக்கு மேலயா யெகோவா என்னை மன்னிக்க போறார்’னு நினைச்சேன். சத்தியத்த பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் தப்பான வழியில போயிட்டேன். அதனால, என்னையே என்னால மன்னிக்க முடியல. குற்ற உணர்வு என்னை வாட்டியெடுத்துச்சு.”​—மார்த்தா.

குற்ற உணர்வு, தாங்க முடியாத ஒரு சுமை போன்றது! “என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் குவிந்திருக்கின்றன. பாரமான சுமைபோல் என்னை அழுத்துகின்றன. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை” என்று தாவீது ராஜா எழுதினார். (சங்கீதம் 38:4) யெகோவா என்னை மன்னிக்கவே மாட்டார் என்று நினைத்து சிலர் ரொம்பவே நொந்துபோயிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 2:7) ஆனால், அப்படி நினைப்பது சரியா? படுமோசமான ஒரு தவறை நீங்கள் செய்திருந்தால்கூட யெகோவாவால் உங்களை மன்னிக்க முடியும்!

“நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்”

மனம் திருந்துகிறவர்களை யெகோவா கண்டிப்பாக மன்னிப்பார். அவர்களுக்கு உதவியும் செய்வார். இதைப் புரிய வைக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார். அதில், ஒரு ஊதாரி மகன் தன் வீட்டை விட்டு போய்விடுகிறான். பிறகு, கெட்ட வழியில் போய் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் வீட்டுக்கு வருகிறான். அவன் “ரொம்பத் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார். உடனே அவருடைய மனம் உருகியது, ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.” இந்த உவமையில் வரும் அன்பான அப்பாவைப் போல்தான் யெகோவா இருக்கிறார் என்று இயேசு சொன்னார். (லூக்கா 15:11-20) நீங்களும் யெகோவாவிடம் திரும்பி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆனால், அவரைவிட்டு ‘ரொம்ப தூரம்’ போய்விட்டதாக நினைக்கிறீர்களா? இந்த உவமையில் பார்த்த அப்பாவைப் போல், யெகோவாவும் உங்கள்மேல் கரிசனை காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். உங்களை மறுபடியும் வரவேற்பதற்காகக் காத்திருக்கிறார்.

“நான் பெரிய பெரிய தப்பு செஞ்சிருக்கேன். கொஞ்சநஞ்சம் இல்ல, ஏகப்பட்ட தப்பு செஞ்சிருக்கேன். யெகோவா என்னை கண்டிப்பா மன்னிக்க மாட்டார்” என்று நினைக்கிறீர்களா? ஏசாயா 1:18-ல் யெகோவா சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்: “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம். உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்.” ஒரு வெள்ளைத் துணியில் செக்கச்செவேல் என்ற கறையைப் போல உங்கள் பாவங்கள் இருந்தாலும் யெகோவாவால் அந்தக் கறையை நீக்க முடியும்.

குறுகுறுக்கும் மனசாட்சியோடு நீங்கள் ரொம்ப நாளைக்கு அவதிப்பட வேண்டும் என்பது யெகோவாவுடைய ஆசை கிடையாது. அப்படியென்றால், அவருடைய மன்னிப்பையும் சுத்தமான மனசாட்சியையும் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம்? தாவீது ராஜா என்ன செய்தார் என்று கவனியுங்கள். முதலாவதாக, “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்” என்று அவர் சொன்னார். (சங்கீதம் 32:5) “நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்” என்று யெகோவாவே உங்களை அழைக்கிறார்! அதனால், நீங்கள் செய்த தவறுகளைப் பற்றி அவரிடம் மனம் திறந்து சொல்லுங்கள்; உங்கள் உணர்ச்சிகளை கொட்டுங்கள். கடவுள் தனக்குத் துணையாக இருந்ததை தாவீதும் உணர்ந்திருக்கிறார். அவர் இப்படிச் சொன்னார்: “என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள். . . . கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும் நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்.”​—சங்கீதம் 51:2, 17.

இரண்டாவதாக, தாவீதுக்கு உதவ நாத்தான் தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். (2 சாமுவேல் 12:13) இன்றும் உங்களுக்கு உதவ மூப்பர்களை கொடுத்திருக்கிறார். மனம் திருந்துபவர்களுக்கு உதவ, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். அவர்கள் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு ஆறுதலான வசனங்களைக் காட்டுவார்கள்; உங்களுக்காக ஜெபம் செய்வார்கள். உங்கள் மனபாரத்தைக் குறைக்க அல்லது அதை முழுமையாகத் தூக்கி எறிய உதவுவார்கள். அதோடு, யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் உதவுவார்கள்.​—யாக்கோபு 5:14-16.

சுத்தமான மனசாட்சியோடு நீங்கள் இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்

‘யாருடைய குற்றம் மன்னிக்கப்படுகிறதோ, அவர் சந்தோஷமானவர்’

“நான் செஞ்ச தப்பை யெகோவாகிட்டயும் மூப்பர்கள்கிட்டயும் சொல்ற அளவுக்கு தைரியம் இல்ல” என்று நினைக்கிறீர்களா? தாவீதும் அப்படித்தான் நினைத்தார். அவர் செய்திருந்த பாவங்களைப் பற்றிக் கொஞ்ச நாட்களுக்கு ‘வெளியே சொல்லாமல்’ இருந்தார். (சங்கீதம் 32:3) ஆனால் பிற்பாடு, பாவங்களை ஒத்துக்கொண்டு தன்னுடைய தவறுகளை சரி செய்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்தார். அதற்காக, அவர் நன்றியோடு இருந்தார்.

இழந்த சந்தோஷத்தை அவர் பெற்றுக்கொண்டார். இதுதான் அவருக்குக் கிடைத்த பெரிய நன்மை! “யாருடைய குற்றம் மன்னிக்கப்படுகிறதோ, யாருடைய பாவம் மன்னிக்கப்படுகிறதோ, அவர் சந்தோஷமானவர்” என்று அவர் எழுதினார். (சங்கீதம் 32:1, அடிக்குறிப்பு) குற்றமுள்ள மனசாட்சி தாவீதைவிட்டுப் போனது. அதனால், நன்றி பொங்கும் இதயத்தோடு யெகோவாவைப் பற்றிச் சொன்னார். “யெகோவாவே, என் உதடுகளைத் திறந்திடுங்கள். அப்போது, என் வாய் உங்களைப் புகழும்” என்று ஜெபம் செய்தார்.—சங்கீதம் 51:15.

சுத்தமான மனசாட்சியோடு நீங்கள் இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். அவரைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்லும்போது, உங்கள் மனதில் குற்ற உணர்வு இருக்கக் கூடாது என்றும், சந்தோஷம் நிறைந்த இதயத்தோடு நீங்கள் சொல்ல வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். (சங்கீதம் 65:1-4) “உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும், யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்” என்று அவர் சொல்லியிருக்கிறார்!​—அப்போஸ்தலர் 3:19.

ஆரம்பத்தில் பார்த்த மார்த்தாவுக்கு என்ன ஆனது? “என் பையன் எப்பவும் எனக்கு காவற்கோபுரத்தையும் விழித்தெழுவையும் அனுப்புவான். நான் கொஞ்ச கொஞ்சமா யெகோவாவோட ஃப்ரெண்டாக ஆரம்பிச்சேன். நான் செஞ்ச தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேட்குறதுதான் எனக்கு கஷ்டமா இருந்துச்சு. ஆனாலும், யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன், என் மனசுல இருக்கிறதையெல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டேன். எப்படியோ, இப்போ 40 வருஷத்துக்கு அப்புறம் யெகோவாகிட்ட திரும்பி வந்துட்டேன். எத்தனை வருஷம் ஆனாலும் யெகோவா உங்களை ஏத்துக்குவார். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் என்னையே யெகோவா ஏத்துக்கிட்டாரே!”