அப்போஸ்தலரின் செயல்கள் 15:1-41

15  யூதேயாவிலிருந்து சில ஆட்கள் வந்து, “மோசேயின் சட்டத்தின்படி விருத்தசேதனம்+ செய்யாவிட்டால் மீட்புப் பெற முடியாது” என்று சகோதரர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.  அதனால் அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்கும் இடையே பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் ஏற்பட்டது. இந்த விஷயத்தை* பற்றிப் பேசுவதற்காக பவுலையும் பர்னபாவையும் வேறு சிலரையும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.+  சபையில் இருந்தவர்கள் கொஞ்சத் தூரத்துக்கு அவர்கள் கூடவே போய் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் பெனிக்கே மற்றும் சமாரியா வழியாகப் போய், மற்ற தேசத்து மக்களும் கடவுளிடம் திரும்பியதைப் பற்றிச் சகோதரர்களுக்கு விவரமாகச் சொன்னார்கள், இதைக் கேட்டு அவர்கள் எல்லாரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.  அவர்கள் எருசலேமுக்கு வந்துசேர்ந்தபோது, சபையில் இருந்தவர்களும் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அவர்களை அன்பாக வரவேற்றார்கள். அப்போது, தங்கள் மூலம் கடவுள் செய்த பல காரியங்களைப் பற்றி அவர்கள் விவரித்துச் சொன்னார்கள்.  ஆனால், பரிசேய மதப்பிரிவிலிருந்து விலகி இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த சிலர் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து, “மற்ற தேசத்து மக்களுக்குக் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும், மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி கட்டளையிடவும் வேண்டும்”+ என்று சொன்னார்கள்.  இந்த விஷயத்தைப் பற்றிக் கலந்துபேச அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒன்றுகூடினார்கள்.  வெகு நேரம் தீவிரமாகக் கலந்துபேசிய* பிறகு பேதுரு எழுந்து, “சகோதரர்களே, மற்ற தேசத்து மக்கள்* என் மூலம் நல்ல செய்தியைக் கேட்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காக உங்களில் ஒருவனான என்னைப் பல நாட்களுக்கு முன்பே கடவுள் தேர்ந்தெடுத்தார். இது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.+  இதயத்தில் இருப்பதைத் தெரிந்திருக்கிற கடவுள்+ தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுத்தது+ போலவே அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டதற்குச் சாட்சி கொடுத்தார்.  அவர்களுக்கும் நமக்கும் இடையே அவர் எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை,+ அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக அவர்களுடைய இதயங்களைச் சுத்தமாக்கினார்.+ 10  இப்படியிருக்கும்போது, நம்முடைய முன்னோர்களாலும் நம்மாலும் சுமக்க முடியாமலிருந்த+ நுகத்தடியைச் சீஷர்களுடைய கழுத்தில் சுமத்தி+ கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? 11  எஜமானாகிய இயேசுவின் அளவற்ற கருணையால்+ மீட்புப் பெறுவோமென்று நாம் நம்புவதைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள்” என்று சொன்னார்.+ 12  அப்போது, அங்கே கூடியிருந்த எல்லாரும் அமைதியாகி, பர்னபா சொல்வதையும் பவுல் சொல்வதையும் கவனமாகக் கேட்க ஆரம்பித்தார்கள். மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பல அடையாளங்களையும் அற்புதங்களையும் கடவுள் தங்கள் மூலம் செய்ததை அவர்கள் இரண்டு பேரும் விவரித்துச் சொன்னார்கள். 13  அவர்கள் பேசி முடித்த பின்பு, யாக்கோபு அங்கே கூடியிருந்தவர்களிடம், “சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். 14  கடவுள் முதல் தடவையாக மற்ற தேசத்து மக்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்த விதத்தைப் பற்றி சிமியோன்*+ நமக்கு நன்றாக விவரித்துச் சொன்னார்.+ 15  தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலுள்ள வார்த்தைகள் அதை ஆமோதிக்கின்றன. 16  எப்படியென்றால், ‘இவற்றுக்குப் பின்பு நான் திரும்பி வந்து, விழுந்துபோயிருக்கும் தாவீதின் கூடாரத்தை* மறுபடியும் எடுத்து நிறுத்துவேன். சேதமானவற்றைத் திரும்பக் கட்டி, அதைச் சரிசெய்வேன். 17  இவர்களில் மிச்சம் இருக்கிற ஆட்கள் எல்லா தேசத்து மக்களோடும் சேர்ந்து, அதாவது என் பெயரால் அழைக்கப்படுகிற மக்களோடு சேர்ந்து, யெகோவாவாகிய* என்னை ஊக்கமாகத் தேடுவதற்காக அந்தக் கூடாரத்தை எடுத்து நிறுத்துவேன் என்று யெகோவா* சொல்கிறார்.+ இவற்றைச் செய்கிறவர் அவர்தான். 18  இதையெல்லாம் பூர்வ காலத்திலிருந்து தெரிந்து வைத்திருப்பவரும் அவர்தான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 19  அதனால், என் கருத்து இதுதான்: கடவுளிடம் திரும்புகிற மற்ற தேசத்து மக்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது.+ 20  அதற்குப் பதிலாக, உருவச் சிலைகளால் தீட்டுப்பட்டதற்கும்+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்* இரத்தத்துக்கும் விலகியிருக்க வேண்டும்+ என்று அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். 21  ஏனென்றால், இந்தக் கட்டளைகள் அடங்கிய மோசேயின் புத்தகங்கள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் ஜெபக்கூடங்களில் சத்தமாக வாசிக்கப்பட்டு வந்திருக்கின்றன.+ அதனால், அவற்றைப் பிரசங்கிப்பவர்கள் பூர்வ காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருந்திருக்கிறார்கள்” என்று சொன்னார். 22  பின்பு அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சபையிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதன்படி, சகோதரர்களை வழிநடத்திய பர்சபா என்ற யூதாசையும் சீலாவையும்+ தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். 23  அவர்கள் மூலம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்: “அந்தியோகியாவிலும்+ சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு அப்போஸ்தலர்களும் மூப்பர்களுமான உங்கள் சகோதரர்கள் எழுதுவதாவது: உங்களுக்கு வாழ்த்துக்கள்! 24  எங்களில் சிலர் உங்களிடம் வந்து தங்களுடைய வார்த்தைகளால் உங்கள் மனதைக் குழப்பி, உங்களுடைய நம்பிக்கையைக் குலைத்துப்போட முயற்சி செய்திருப்பதாகக் கேள்விப்பட்டோம்.+ ஆனால், நாங்கள் அவர்களுக்கு எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. 25  அதனால், நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயருக்காகத் தங்கள் உயிரையே பணயம் வைத்த+ எங்களுடைய அன்பான பர்னபாவோடும் பவுலோடும் சேர்த்து, 26  நாங்கள் தேர்ந்தெடுத்த நபர்களை உங்களிடம் அனுப்ப வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானித்தோம். 27  அதன்படி, யூதாசையும் சீலாவையும் அனுப்புகிறோம்; இந்த விஷயங்களை அவர்கள் நேரில் வந்து உங்களிடம் சொல்வார்கள்.+ 28  ஏனென்றால், முக்கியமான இந்த விஷயங்களைத் தவிர வேறு எதையும் உங்கள்மேல் சுமத்தக் கூடாதென்று கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால்+ நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்: 29  உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும்+ இரத்தத்துக்கும்+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்*+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ தொடர்ந்து விலகியிருங்கள். இவற்றை அடியோடு தவிர்த்தால், சிறப்புடன் வாழ்வீர்கள். நலமாயிருங்கள்!” 30  அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தியோகியாவுக்குப் போய்ச் சேர்ந்த பின்பு, சபையிலிருந்த எல்லாரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள். 31  சபையில் இருந்தவர்கள் அதை வாசித்த பின்பு, உற்சாகமும் சந்தோஷமும் அடைந்தார்கள். 32  யூதாசும் சீலாவும் தீர்க்கதரிசிகளாக இருந்ததால், நிறைய பேச்சுகளைக் கொடுத்து அந்தச் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார்கள், பலப்படுத்தினார்கள்.+ 33  இவர்கள் அங்கே சில காலம் தங்கியிருந்த பின்பு, அந்தச் சகோதரர்களிடமிருந்து விடைபெற்று தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பிப் போனார்கள். 34  *—— 35  ஆனால், பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலேயே தங்கி, இன்னும் நிறைய பேரோடு சேர்ந்து யெகோவாவின்* வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியைக் கற்பித்துக்கொண்டும் அறிவித்துக்கொண்டும் இருந்தார்கள். 36  சில நாட்களுக்குப் பின்பு பவுல் பர்னபாவிடம், “யெகோவாவின்* வார்த்தையைப் பற்றி நாம் அறிவித்த ஒவ்வொரு நகரத்துக்கும் இப்போது* திரும்பிப் போய், அங்கிருக்கிற சகோதரர்களைச் சந்தித்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்” என்று சொன்னார்.+ 37  மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்பதில் பர்னபா உறுதியாக இருந்தார்.+ 38  ஆனால், மாற்கு முன்பு பம்பிலியாவில் அவர்களைவிட்டுப் பிரிந்து ஊழியம் செய்ய வராமல் இருந்ததால், அவரைக் கூட்டிக்கொண்டு போக பவுல் விரும்பவில்லை.+ 39  இதனால், பவுலுக்கும் பர்னபாவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது; அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோனார்கள்; பர்னபா,+ மாற்குவைக் கூட்டிக்கொண்டு சீப்புருவுக்குக் கப்பல் ஏறினார். 40  பவுல், சீலாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். சகோதரர்கள் பவுலை யெகோவாவின்* கையில் ஒப்படைத்து, அவருடைய அளவற்ற கருணை+ பவுல்மேல் இருக்கும்படி ஜெபம் செய்தார்கள். அதன் பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு, 41  சீரியா, சிலிசியா வழியாகப் போய், அங்கிருந்த சபைகளைப் பலப்படுத்தினார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “விவாதத்தை.”
வே.வா., “விவாதித்த.”
அதாவது, “யூதரல்லாதவர்கள்.”
அதாவது, “பேதுரு.”
வே.வா., “வீட்டை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “இரத்தம் வடிக்காமல் கொல்லப்பட்டதற்கும்.”
வே.வா., “இரத்தம் வடிக்காமல் கொல்லப்பட்டதற்கும்.”
இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அல்லது, “எப்படியாவது.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா