சகரியா 5:1-11

5  நான் மறுபடியும் நிமிர்ந்து பார்த்தபோது, பறக்கும் சுருள் ஒன்று தெரிந்தது.  அவர் என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “பறக்கும் சுருள் ஒன்றைப் பார்க்கிறேன்; அதன் நீளம் 30 அடி,* அகலம் 15 அடி”* என்றேன்.  அப்போது அவர், “இது பூமியெங்கும் வரப்போகிற சாபத்தைக் குறிக்கிறது. ஏனென்றால், இந்தச் சுருளின் ஒருபக்கத்தில் எழுதப்பட்டுள்ளபடி, திருடுகிற யாருமே+ தண்டிக்கப்படவில்லை. இதன் மறுபக்கத்தில் எழுதப்பட்டுள்ளபடி, பொய் சத்தியம் செய்யும் யாருமே+ தண்டிக்கப்படவில்லை.  அதனால் பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் இந்தச் சாபத்தை அனுப்பியிருக்கிறேன். இது, திருடனுடைய வீட்டுக்குள்ளும் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்பவனுடைய வீட்டுக்குள்ளும் போய்த் தங்கும். மரச்சட்டங்கள், கற்கள் என எதையும் விட்டுவைக்காமல் அந்த வீட்டையே எரித்துவிடும்’” என்று சொன்னார்.  பின்பு, என்னுடன் பேசிக்கொண்டிருந்த தேவதூதர் கொஞ்சம் முன்னால் வந்து, “தயவுசெய்து நிமிர்ந்து பார், வெளியே வருவது என்னவென்று தெரிகிறதா?” என்றார்.  அப்போது நான், “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அளப்பதற்கான ஒரு பாத்திரம்* வெளியே வருகிறது” என்று சொன்னார். அதோடு, “பூமியெங்கும் உள்ள கெட்டவர்கள் இப்படித்தான் தெரிகிறார்கள்” என்றார்.  அப்போது, ஈயத்தால் செய்யப்பட்ட வட்டமான மூடி திறக்கப்படுவதைப் பார்த்தேன். அந்தப் பாத்திரத்துக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.  அப்போது அவர் என்னிடம், “இவள்தான் அக்கிரமக்காரி!” என்றார். பின்பு, அவளைப் பாத்திரத்துக்குள்ளே தள்ளி, கனமான அந்த மூடியால் மூடினார்.  அதன்பின் நான் நிமிர்ந்து பார்த்தபோது, இரண்டு பெண்கள் காற்றில் பறந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிறகுகள் நாரையின் சிறகுகள் போல இருந்தன. அவர்கள் அந்தப் பாத்திரத்தை வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தூக்கிக்கொண்டு போனார்கள். 10  என்னிடம் பேசிக்கொண்டிருந்த தேவதூதரிடம், “அந்தப் பாத்திரத்தை அவர்கள் எங்கே கொண்டுபோகிறார்கள்?” என்று கேட்டேன். 11  அதற்கு அவர், “அவளுக்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்காக சினேயார்* தேசத்துக்குக்+ கொண்டுபோகிறார்கள். கட்டி முடித்ததும், அங்கேயே அவளைக் குடிவைப்பார்கள்; அதுதான் அவள் இருக்க வேண்டிய இடம்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “20 முழம்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “10 முழம்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “எப்பா.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “பாபிலோனியா.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா