யாத்திராகமம் 9:1-35

9  அதனால் யெகோவா மோசேயிடம், “நீ பார்வோனிடம் போய் இப்படிச் சொல்: ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.+  நீ அவர்களை அனுப்பாமல் பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருந்தால்,  யெகோவாவாகிய நான் உன் கால்நடைகளைத் தாக்குவேன்.+ குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுமாடுகள் எல்லாவற்றையும் கொடிய கொள்ளைநோயால் தண்டிப்பேன்.+  ஆனால், யெகோவாவாகிய நான் எகிப்தியர்களின் கால்நடைகளுக்குச் செய்வது போல இஸ்ரவேலர்களின் கால்நடைகளுக்குச் செய்ய மாட்டேன். இஸ்ரவேலர்களின் கால்நடைகள் எதுவுமே செத்துப்போகாது”’”+ என்றார்.  யெகோவா அதற்கு ஒரு நாளையும் குறித்து, “யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் நாளைக்கு இதைச் செய்வேன்” என்றார்.  யெகோவா அடுத்த நாளே அதைச் செய்தார். எகிப்திலிருந்த எல்லா கால்நடைகளும் செத்துப்போயின.+ ஆனால், இஸ்ரவேலர்களுடைய கால்நடைகளில் ஒன்றுகூட சாகவில்லை.  பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பி விசாரித்தான். இஸ்ரவேலர்களின் கால்நடைகளில் எதுவுமே சாகவில்லை என்று தெரிந்த பின்பும், பிடிவாதமாகவே இருந்தான். ஜனங்களை அவன் அனுப்பவில்லை.+  பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “சூளையிலுள்ள சாம்பலை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டு போங்கள். பார்வோனுடைய கண் முன்னால் மோசே அதைக் காற்றில் வீச வேண்டும்.  எகிப்து தேசமெங்கும் அது தூசியாகப் பரவி, மனுஷர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயங்கரமான கொப்புளங்களாக ஆகும்” என்றார். 10  அதனால், சூளையிலிருந்த சாம்பலை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் பார்வோனின் முன்னால் நின்றார்கள். மோசே அதைக் காற்றில் வீசியபோது, அது மனிதர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயங்கரமான கொப்புளங்களாக ஆனது. 11  மந்திரவாதிகள்மேலும் கொப்புளங்கள் வந்துவிட்டதால் மோசேக்குமுன் வந்து நிற்க அவர்களால் முடியவில்லை. எகிப்தியர்கள் எல்லார்மேலும் கொப்புளங்கள் வந்தன.+ 12  ஆனால், பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். யெகோவா சொல்லியிருந்தபடியே அவர்கள் பேச்சை அவன் கேட்கவில்லை.+ 13  பின்பு யெகோவா மோசேயிடம், “நீ விடியற்காலையில் எழுந்து, பார்வோனின் முன்னால் போய் நில். அவனிடம் இப்படிச் சொல்: ‘எபிரெயர்களின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: “என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு. 14  இல்லாவிட்டால், உனக்கும்* உன் ஊழியர்களுக்கும் உன் ஜனங்களுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன். அப்போது, இந்த முழு பூமியிலும் என்னைப் போல் யாருமில்லை என்பதை நீ தெரிந்துகொள்வாய்.+ 15  நான் உன்னையும் உன் ஜனங்களையும் கொடிய கொள்ளைநோயால் எப்போதோ தாக்கியிருப்பேன். நீயும் இந்தப் பூமியிலிருந்தே ஒழிந்துபோயிருப்பாய். 16  ஆனால், என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்.+ 17  இன்னும் உன் அகம்பாவம் அடங்கவில்லை, என் ஜனங்களை அனுப்பாமல் வைத்திருக்கிறாய். 18  அதனால் நாளைக்கு இந்நேரத்தில், எகிப்தின் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மாபெரும் ஆலங்கட்டி* மழையைப் பெய்ய வைப்பேன். 19  நீ ஆள் அனுப்பி, வெளியில் இருக்கிற கால்நடைகளையும் ஆட்களையும் மற்ற எல்லாவற்றையும் கூரைக்குள் கூட்டிக்கொண்டு வரச் சொல். கூரைக்குள் இல்லாமல் வெளியில் இருக்கும் எல்லா மனுஷர்களும் மிருகங்களும் ஆலங்கட்டி மழைக்குப் பலியாகப்போவது உறுதி”’” என்றார். 20  அப்போது, பார்வோனின் ஊழியர்களில் யாரெல்லாம் யெகோவாவுக்குப் பயந்தார்களோ அவர்கள் எல்லாரும் தங்களுடைய ஆட்களையும் கால்நடைகளையும் வேகவேகமாகக் கூரைக்குள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 21  ஆனால், யெகோவாவின் வார்த்தையைக் காதில் போட்டுக்கொள்ளாத எல்லாரும் தங்களுடைய ஆட்களையும் கால்நடைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டார்கள். 22  பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசமெங்கும் ஆலங்கட்டி மழை பெய்யும்.+ எகிப்து தேசத்திலுள்ள மனுஷர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயிர்பச்சைகள்மேலும் ஆலங்கட்டிகள் விழும்”+ என்றார். 23  அப்படியே, மோசே வானத்துக்கு நேராகத் தன்னுடைய கோலை நீட்டினார். உடனே யெகோவா இடி இடிக்கும்படியும், ஆலங்கட்டிகள் விழும்படியும், தீப்பிழம்புகள்* தாக்கும்படியும் செய்தார். எகிப்து தேசத்தின் மேல் ஆலங்கட்டிகள் விழுந்துகொண்டே இருக்கும்படி யெகோவா செய்தார். 24  ஆலங்கட்டி மழை பெய்தபோது இடையிடையே தீப்பிழம்புகள் பளிச்சிட்டன. அந்த மழை மிகவும் பலமாகக் கொட்டியது. எகிப்தின் சரித்திரத்தில் அப்படிப்பட்ட மழை பெய்ததே இல்லை.+ 25  எகிப்து தேசத்தில், மனிதர்கள்முதல் மிருகங்கள்வரை வெளியில் இருந்த அத்தனை உயிர்களுமே ஆலங்கட்டி மழைக்குப் பலியாகிவிட்டன. பயிர்பச்சைகள் நாசமாயின, எல்லா மரங்களும் முறிந்து விழுந்தன.+ 26  இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவே இல்லை.+ 27  அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, “இந்தத் தடவை நான் பாவம் செய்துவிட்டேன். யெகோவா நீதியுள்ளவர், நானும் என்னுடைய ஜனங்களும்தான் தப்பு செய்துவிட்டோம். 28  இடிமுழக்கத்தையும் ஆலங்கட்டி மழையையும் நிறுத்தச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள். அதன்பின் நான் உங்களை அனுப்பிவிடுவேன், நீங்கள் இங்கே இருக்க வேண்டியதில்லை” என்றான். 29  அதற்கு மோசே, “நான் இந்த நகரத்தைவிட்டு வெளியே போனவுடன் என் கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். அதன்பின் இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிடும். அப்போது, இந்தப் பூமி யெகோவாவுக்குச் சொந்தம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 30  ஆனால், நீங்களும் உங்களுடைய ஊழியர்களும் அப்போதுகூட யெகோவாவுக்குப் பயப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். 31  அறுவடைக்குத் தயாராக இருந்த பார்லி பயிரும் அரும்புவிட்டிருந்த ஆளிவிதைச் செடியும்* ஆலங்கட்டி மழையில் நாசமாயின. 32  கோதுமையும் மாக்கோதுமையும்* கொஞ்சக் காலம் கழித்துதான் கதிர்விடும் என்பதால், அவை இரண்டும் சேதமாகவில்லை. 33  மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்துக்கு வெளியே போய்த் தன்னுடைய கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது, இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிட்டன. அதன்பின் மழை பெய்யவில்லை.+ 34  மழையும் ஆலங்கட்டியும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் பார்த்தபோது, அவனும் அவனுடைய ஊழியர்களும் மறுபடியும் பாவம் செய்தார்கள். அவர்களுடைய இதயம் இறுகிப்போனது.+ 35  யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்தபடி, பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. இஸ்ரவேலர்களை அவன் அனுப்பவில்லை.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உன் இதயத்துக்கும்.”
அதாவது, “பனிக்கட்டி.”
இவை ஒருவேளை பயங்கர மின்னல்களாக இருந்திருக்கலாம்.
இந்தச் செடியின் நாரிலிருந்துதான் லினன் என்ற நாரிழைத் துணி தயாரிக்கப்பட்டது.
பூர்வ எகிப்தில் பயிரிடப்பட்ட ஒருவகையான தரம்குறைந்த கோதுமை.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா