பேதுருவின் முதலாம் கடிதம் 4:1-19

4  கிறிஸ்து ஒரு மனிதராக இருந்தபோது பாடுகளை அனுபவித்தார்;+ அதனால், அவர் காட்டிய அதே மனப்பான்மையை* நீங்களும் காட்டுங்கள்.* ஏனென்றால், பாடுகளை அனுபவிக்கிறவன் பாவம் செய்வதிலிருந்து விலகியிருக்கிறான்.+  இப்படி, உயிரோடு வாழ்கிற காலமெல்லாம் மனிதர்களுடைய ஆசைகளின்படி வாழாமல்+ கடவுளுடைய விருப்பத்தின்படி* வாழ்கிறான்.+  முன்பு நீங்கள் உலக மக்களுடைய விருப்பத்தின்படி+ வெட்கங்கெட்ட நடத்தையில்* ஈடுபடுவதிலும், கட்டுக்கடங்காத ஆசைகளுக்கு இடம்கொடுப்பதிலும், குடித்து வெறிப்பதிலும், குடித்துக் கும்மாளம் போடுவதிலும், போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதிலும், கண்டனத்துக்குரிய சிலை வழிபாடுகளில் கலந்துகொள்வதிலும் ஏற்கெனவே நிறைய காலத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.+  அதே மோசமான சகதியில் நீங்கள் அவர்களோடு தொடர்ந்து புரளாததால், அவர்கள் உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, எப்போதும் பழித்துப் பேசுகிறார்கள்.+  ஆனால், உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கத்+ தயாராக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டும்.  சொல்லப்போனால், இதற்காகத்தான் இறந்தவர்களுக்கும்* நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது.+ மனிதர்கள் நியாயந்தீர்க்கப்படுவதுபோல் அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டாலும், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலின்படி அவர்களால் வாழ முடியும்.  ஆனால், எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது; அதனால் தெளிந்த புத்தியோடு இருங்கள்,+ ஜெபம் செய்ய விழிப்போடு இருங்கள்.+  எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்;+ ஏனென்றால், அன்பு ஏராளமான பாவங்களை மூடும்.+  முணுமுணுக்காமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்.+ 10  பல விதங்களில் வெளிக்காட்டப்படுகிற கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்ற நீங்கள் அதன் சிறந்த நிர்வாகிகளாக இருக்கிறீர்கள்; அதனால், அவரவருக்குக் கிடைத்த வரத்துக்கு ஏற்றபடி, அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்துங்கள்.+ 11  ஒருவன் பேசினால், கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளின்படி பேச வேண்டும். ஒருவன் சேவை செய்தால், கடவுள் கொடுக்கிற பலத்தில் சார்ந்திருந்து சேவை செய்ய வேண்டும்.+ இப்படி, இயேசு கிறிஸ்து மூலம் கடவுள் மகிமைப்படும்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.+ அவருக்கே என்றென்றும் மகிமையும் வல்லமையும் இருக்கிறது. ஆமென்.* 12  அன்பானவர்களே, துன்பம் என்ற தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது,+ விசித்திரமான ஏதோவொன்று நடப்பதாக நினைத்து ஆச்சரியப்படாதீர்கள். 13  அதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் பாடுகளில் உங்களுக்குப் பங்கு கிடைத்திருப்பதை+ நினைத்து எப்போதும் சந்தோஷப்படுங்கள்.+ அப்போது, அவருடைய மகிமை வெளிப்படுகிற வேளையிலும் நீங்கள் சந்தோஷப்பட்டு, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள்.+ 14  கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் கேவலமாகப் பேசப்படுகிறீர்கள்* என்றால், நீங்கள் சந்தோஷமானவர்கள்.+ ஏனென்றால், கடவுளுடைய சக்தியாகிய மகிமையான சக்தி உங்கள்மேல் தங்கியிருக்கிறது. 15  ஆனாலும் உங்களுக்கு வருகிற கஷ்டங்கள், நீங்கள் கொலைகாரராகவோ திருடராகவோ கெட்டது செய்கிறவராகவோ மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவராகவோ இருப்பதால் வந்தவையாக இருக்கக் கூடாது.+ 16  ஒரு கிறிஸ்தவராக நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தால், அதற்காக வெட்கப்படாதீர்கள்.+ ஒரு கிறிஸ்தவராக வாழ்ந்து எப்போதும் கடவுளை மகிமைப்படுத்துங்கள். 17  ஏனென்றால், நியாயத்தீர்ப்பு கடவுளுடைய வீட்டில்+ ஆரம்பிக்கிற நேரம் வந்துவிட்டது; அது முதலில் நம்மிடம் ஆரம்பிக்கிறது+ என்றால், கடவுளுடைய நல்ல செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுடைய முடிவு என்னவாக இருக்கும்?+ 18  “நீதிமான் காப்பாற்றப்படுவதே கஷ்டம் என்றால், கடவுள்பக்தி இல்லாதவனுக்கும் பாவிக்கும் என்ன ஆகும்?”+ 19  அதனால், கடவுளுடைய விருப்பத்தின்படி* நடப்பதால் கஷ்டங்களை அனுபவிக்கிறவர்கள் தொடர்ந்து நல்லது செய்து, நம்பகமான படைப்பாளராகிய அவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “போர்க்கவசமாக அணிந்துகொள்ளுங்கள்.”
வே.வா., “அவருக்கு இருந்த அதே உறுதியை.”
வே.வா., “சித்தத்தின்படி.”
ஆன்மீக ரீதியில் இறந்தவர்களைக் குறிக்கிறது. எபேசியர் 2:1-ஐப் பாருங்கள்.
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
வே.வா., “அவமானப்படுத்தப்படுகிறீர்கள்.”
வே.வா., “சித்தத்தின்படி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா