Skip to content

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

2023 அறிக்கை

உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை

88,16,562

சபைகள்

1,18,177

யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிற நாடுகள்

239

2023 மொத்த எண்ணிக்கை

2023 நாடு மற்றும் பிராந்திய அறிக்கைகள்

எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை எப்படிக் கணக்கிடுகிறீர்கள்?

 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை ஒவ்வொரு மாதமும் பிரசங்கிக்கிறவர்களை மட்டும்தான் நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று கணக்கிடுகிறோம். (மத்தேயு 24:14) யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் இதில் அடங்குவர். அதோடு, ஞானஸ்நானம் எடுக்காவிட்டாலும் பிரசங்க வேலை செய்ய தகுதியுள்ளவர்களும் இதில் அடங்குவர்.

சாட்சிகளில் ஒருவராக ஆவதற்குப் பணம் கொடுக்க வேண்டுமா?

 இல்லை. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பதற்கும், எங்கள் அமைப்பில் எந்தவொரு வேலையைச் செய்வதற்கும் பணம் கொடுக்க தேவையில்லை. (அப்போஸ்தலர் 8:18-20) சொல்லப்போனால், நன்கொடை கொடுப்பவர்கள் யார் என்றே பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி, தங்களுடைய நேரம், சக்தி, பொருள் ஆகியவற்றை உலகம் முழுவதும் நடக்கிற எங்களுடைய வேலைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.—2 கொரிந்தியர் 9:7.

எத்தனை பேர் பிரசங்கிக்கிறார்கள் என்பதை எப்படித் தெரிந்துகொள்கிறீர்கள்?

 ஒவ்வொரு மாதமும், தாங்கள் செய்த பிரசங்க வேலைக்கான அறிக்கையை யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சபையில் கொடுக்கிறார்கள். இதையும் மனப்பூர்வமாகத்தான் கொடுக்கிறார்கள்.

 சபைகள் இந்த அறிக்கைகளைச் சேகரித்து, மொத்த எண்ணிக்கையை அந்த நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றன. ஒவ்வொரு கிளை அலுவலகமும் அந்தந்த நாட்டுக்கான மொத்த எண்ணிக்கையை எங்களுடைய உலகத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறது.

 ஒவ்வொரு ஊழிய ஆண்டு a முடியும்போதும், அந்தந்த நாட்டிலுள்ள சாட்சிகளின் உச்ச எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எல்லா நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்டும்போது உலகம் முழுவதும் எத்தனை சாட்சிகள் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கான அறிக்கையை, எங்களுடைய வெப்சைட்டில் உள்ள “உலகெங்கும்” என்ற பகுதியில் பார்க்கலாம். இப்படிப்பட்ட அறிக்கைகள், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியது போலவே, எங்களையும் உற்சாகப்படுத்துகின்றன.—அப்போஸ்தலர் 2:41; 4:4; 15:3.

பிரசங்க வேலையில் ஈடுபடாவிட்டாலும், உங்களுடைய கூட்டங்களில் கலந்துகொள்கிறவர்களையும் யெகோவாவின் சாட்சிகளாகக் கணக்கிடுகிறீர்களா?

 அவர்களை யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள் கணக்கிடுவதில்லை. ஆனாலும், எங்களுடைய சபை கூட்டங்களுக்கு அவர்களை வரவேற்கிறோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு வருஷமும் நடக்கிற கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கையைக் கழித்தால், ஏறக்குறைய அவர்களுடைய எண்ணிக்கை தெரியும். 2023-ல், 2,04,61,767 பேர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

 எங்களுடைய கூட்டங்களுக்கு வராத நிறைய பேருக்கு, நாங்கள் இலவசமாக வீட்டு பைபிள் படிப்பை நடத்துகிறோம். 2023-ல் நாங்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 72,81,212 பைபிள் படிப்புகளை நடத்தினோம். சில பைபிள் படிப்புகளில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அரசாங்கம் வெளியிடுகிற அறிக்கையில், யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை, நீங்கள் குறிப்பிடுகிற எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பது ஏன்?

 நிறைய நாடுகளில், அரசாங்க கணக்கெடுப்பு வாரியங்கள் மக்களிடம் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு, அதன் அடிப்படையில் தங்களுடைய புள்ளிவிவரங்களைத் தயாரிக்கிறார்கள். உதாரணமாக, ஐ.மா. கணக்கெடுப்பு வாரியம் தன்னுடைய கணக்கெடுப்பை நடத்தும்போது, “ஒரு குறிப்பிட்ட மதத்தை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கேட்டு” அதன் அடிப்படையில் தன்னுடைய அறிக்கையைத் தயாரித்ததாகச் சொல்கிறது. இந்த அறிக்கை, “தனிப்பட்ட ஆட்களுடைய கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது, உண்மையான தகவலின் அடிப்படையில் அல்ல” என்றும் சொல்கிறது. நாங்கள் இப்படிக் கணக்கிடுவதில்லை. மற்றவர்களிடம் பிரசங்கித்து, அதற்கான அறிக்கையைக் கொடுக்கிறவர்களைத்தான் யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள் கணக்கிடுகிறோம். இவற்றைச் செய்யாமல், வெறுமனே தங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்களை நாங்கள் கணக்கில் சேர்ப்பதில்லை.

a ஓர் ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1-ல் ஆரம்பித்து, அடுத்த வருஷம் ஆகஸ்ட் 31-ல் முடிவடையும். உதாரணத்துக்கு, 2015-க்கான ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1, 2014-ல் ஆரம்பித்து, ஆகஸ்ட் 31, 2015-ல் முடிவடைந்தது.