Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | தேவதூதர்கள்—உண்மையிலேயே இருக்கிறார்களா?

தேவதூதர்களால் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?

தேவதூதர்களால் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?

உண்மையுள்ள தேவதூதர்கள் மனிதர்கள்மீது அதிக அக்கறையாக இருக்கிறார்கள். கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்ற சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் ‘ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகப் பாடினார்கள், கடவுளுடைய தூதர்கள் சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள்.’ (யோபு 38:4, 7) மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே, பூமியில் நடக்கும் சம்பவங்களை “கூர்ந்து கவனிப்பதற்கு” தேவதூதர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்.—1 பேதுரு 1:11, 12.

கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, தேவதூதர்கள் சில சமயங்களில், உண்மையுள்ள ஊழியர்களை ஓரளவு பாதுகாத்திருப்பதாக பைபிள் காட்டுகிறது. (சங்கீதம் 34:7) சில உதாரணங்களைக் கவனியுங்கள்:

  • அக்கிரமம் நிறைந்த சோதோம் கொமோரா நகரங்களை யெகோவா அழித்தபோது, நீதிமானான லோத்துவும் அவருடைய குடும்பமும் அங்கிருந்து தப்பிக்க, தேவதூதர்கள் அவர்களுக்கு உதவினார்கள்.—ஆதியாகமம் 19:1, 15-26.

  • பூர்வகால பாபிலோனில் இருந்த மூன்று எபிரெய இளைஞர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு, அவர்கள் நெருப்புச் சூளையில் போடப்பட்டபோது, கடவுள் ‘தன்னுடைய தூதனை அனுப்பி தன் ஊழியர்களை’ காப்பாற்றினார்.—தானியேல் 3:19-28.

  • நீதிமானான தானியேல், ஒரு ராத்திரி முழுவதும் பசிவெறிபிடித்த சிங்கங்களின் குகையில் இருந்தார். ‘கடவுள் தன்னுடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்ததால்தான்,’ தன்னால் உயிர் தப்ப முடிந்தது என்று தானியேல் சொன்னார்.—தானியேல் 6:16, 22.

உண்மையுள்ளவர்களுக்கு தேவதூதர்கள் உதவியிருக்கிறார்கள் என்பதைச் சரித்திரம் காட்டுகிறது

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு தேவதூதர்கள் உதவினார்கள்

யெகோவாவின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, சில சமயங்களில், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குத் தேவதூதர்கள் உதவி செய்தார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள்:

  • சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்போஸ்தலர்கள் ஆலயத்தில் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு தேவதூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்துவிட்டார்.—அப்போஸ்தலர் 5:17-21.

  • ஒரு எத்தியோப்பியர், கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குப் போய்விட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தார். எருசலேமிலிருந்து காசாவுக்குப் போகும் பாலைவனப் பாதையில் அவரைச் சந்தித்து, அவரிடம் பிரசங்கிக்கும்படி நற்செய்தியாளரான பிலிப்புவிடம் ஒரு தேவதூதர் சொன்னார்.—அப்போஸ்தலர் 8:26-33.

  • யூதராக இல்லாதவர்களும் கிறிஸ்தவர்களாக ஆக வேண்டும் என்று கடவுள் விரும்பியபோது, ஒரு தேவதூதர் ரோம படை அதிகாரியான கொர்நேலியுவின் தரிசனத்தில் தோன்றி, பேதுருவை தன் வீட்டுக்கு அழைக்கும்படி சொன்னார்.—அப்போஸ்தலர் 10:3-5.

  • அப்போஸ்தலன் பேதுரு சிறையில் இருந்தபோது, ஒரு தேவதூதர் அவரை அங்கிருந்து வெளியே கொண்டுவந்தார்.—அப்போஸ்தலர் 12:1-11.

தேவதூதர்களால் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?

பைபிள் சொல்வதுபோல், கடவுள் தன்னுடைய மக்களுக்கு அற்புதமான விதத்தில் உதவுவதற்காக இன்றும் தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருந்தாலும், நம் காலத்தைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14) தேவதூதர்களின் உதவியோடுதான் கிறிஸ்துவின் சீஷர்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நல்ல செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க தேவதூதர்கள் உதவுகிறார்கள்

யெகோவாவைப் பற்றியும் மனிதர்களுக்கான அவருடைய நோக்கத்தைப் பற்றியும் மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவதூதர்கள் உதவுவார்கள் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. இதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “பின்பு, இன்னொரு தேவதூதர் நடுவானத்தில் பறப்பதைப் பார்த்தேன்; பூமியில் குடியிருக்கிற எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும் நித்திய நல்ல செய்தியை அவர் அறிவித்துக்கொண்டிருந்தார். ஆம், ‘கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; அதனால், வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் படைத்தவரை வணங்குங்கள்’ என்று சத்தமாக அறிவித்துக்கொண்டிருந்தார்.” (வெளிப்படுத்துதல் 14:6, 7) உலகம் முழுவதும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்க தேவதூதர்கள் உதவுகிறார்கள். இதற்கு இன்றுள்ள அனுபவங்களே அத்தாட்சி! பாவம் செய்த ஒருவர் மனந்திருந்தி யெகோவாவிடம் திரும்பி வரும்போது, ‘கடவுளுடைய தூதர்கள் எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள்.’—லூக்கா 15:10.

பிரசங்க வேலை முடிவுக்கு வந்த பிறகு என்ன நடக்கும்? அர்மகெதோன் என்று அழைக்கப்படும் “சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காக,” தேவதூதர்கள் அடங்கிய “பரலோகப் படைவீரர்கள்” ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கும் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்துகொள்வார்கள். (வெளிப்படுத்துதல் 16:14-16; 19:14-16) “கடவுளைப் பற்றித் தெரியாதவர்களையும் நம் எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் [இயேசு] பழிவாங்குவார்.” அந்தச் சமயத்தில், அவர்களை அழிப்பதன் மூலம் பலம்படைத்த தேவதூதர்கள் கடவுளுடைய தண்டனை தீர்ப்பை நிறைவேற்றுவார்கள்.—2 தெசலோனிக்கேயர் 1:7, 8

தேவதூதர்கள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் நம்பலாம். கடவுளை வணங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுடைய நலனில் அவர்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. இந்தப் பூமியில் இருக்கும் தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் யெகோவா அவர்களை நிறைய சமயங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.—எபிரெயர் 1:14.

நாம் ஒவ்வொருவரும் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் அந்த நல்ல செய்தியைக் கேட்டு அதன்படி நடப்போமா? பலம்படைத்த தேவதூதர்களின் உதவியிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடையலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்கள் பகுதியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவார்கள்.▪