Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அவங்க காட்டின அன்பை பாத்து அசந்து போயிட்டோம்”

“அவங்க காட்டின அன்பை பாத்து அசந்து போயிட்டோம்”

ஏப்ரல் 25, 2015 சனிக்கிழமை அன்று, படுபயங்கரமான நிலநடுக்கம் மலைப்பிரதேசமான நேபாளத்தை உலுக்கியது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. தலைநகரமான காட்மாண்டுவில் இருந்து வடமேற்கு திசையில் கிட்டத்தட்ட 80 கி.மீ. வரை அதன் பாதிப்புகள் இருந்தது. வருத்தகரமாக, 8,500-க்கும் அதிகமான மக்கள் இதில் இறந்துபோனார்கள். 5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் நாசமானது. இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் நேபாளத்தின் சரித்திரத்திலேயே இதுதான் பயங்கரமான இயற்கை பேரழிவு. இங்கு வாழும் 2,200 யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலானோர் நிலநடுக்கம் வந்த பகுதிகளில்தான் வாழ்ந்தார்கள். இந்தக் கோர சம்பவத்தில் சிக்கி, யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒரு பெண்ணும் அவருடைய இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்தார்கள்.

“நிலநடுக்கம் வந்த பகுதிகள்ல, அந்த சமயத்துல கிறிஸ்தவ கூட்டங்கள் நடந்துகொண்டிருந்துச்சு” என்று யெகோவாவின் சாட்சியான மிஷெல் சொன்னார். “பூமியதிர்ச்சி ஏற்பட்ட அந்த நேரத்தில எல்லாரும் வீட்ல இருந்திருந்தா, கண்டிப்பா ஏகப்பட்ட பேர் செத்துப்போயிருப்போம்” என்று சொல்கிறார். சபைக் கூட்டங்களுக்கு போனவர்கள் மட்டும் எப்படி தப்பித்தார்கள்? அதற்கு காரணம், கூட்டங்கள் நடந்த ராஜ்ய மன்றங்களுடைய வடிவமைப்பு!

“அதோட அருமை இப்பதான் தெரியுது!”

கொஞ்ச காலமாகவே நேபாளத்தில் கட்டப்படும் ராஜ்ய மன்றங்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத விதத்தில் கட்டப்படுகின்றன. ராஜ்ய மன்றம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மான் பகதூர் என்பவர் சொல்கிறார், “இந்த மாதிரி சின்ன சின்ன கட்டிடங்களுக்கு எதுக்கு இவ்ளோ பலமான அஸ்திவாரம் போடுறீங்கனு மத்தவங்க அடிக்கடி கேப்பாங்க. ஆனா, அதோட அருமை இப்பதான் தெரியுது!” நிலநடுக்கத்துக்கு பின்பு, இந்த ராஜ்ய மன்றங்களில் மக்கள் தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. நிலநடுக்கத்துக்கு பிறகும் தொடர்ந்து அதிர்வுகள் இருந்தது. ஆனாலும், ராஜ்ய மன்றங்களில் தங்கியிருந்த யெகோவாவின் சாட்சிகளும் பொதுமக்களும் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.

நிலநடுக்கத்துக்கு பிறகு யெகோவாவின் சாட்சிகளும் மற்றவர்களும் ராஜ்ய மன்றத்தில் தங்கியிருக்கிறார்கள்

யெகோவாவின் சாட்சிகளுடைய சபை மூப்பர்கள், தொடர்புகொள்ள முடியாத யெகோவாவின் சாட்சிகளை கண்டுபிடிக்கும் வேலையில் உடனடியாக இறங்கினார்கள். “அவங்களோட உயிரைவிட சபையில இருக்கிறவங்கள பாத்துக்கிறததான் மூப்பர்கள் முக்கியமா நினைச்சாங்க. அவங்க காட்டின அன்பை பாத்து அசந்து போயிட்டோம்” என்று யெகோவாவின் சாட்சியாக இருக்கும் பபித்தா சொல்கிறார். நேபாளத்தில் சாட்சிகளுடைய வேலையை கவனித்துக்கொள்ளும் குழுவில் இருந்த மூன்று பேர், நிலநடுக்கம் வந்த அடுத்த நாளே சபைகளை சந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடன் பயணக் கண்காணிகளும் வந்தார்கள். சபையில் இருப்பவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் உள்ளூரில் இருந்த மூப்பர்களுக்கு உதவி செய்வதற்காகவும் அவர்கள் வந்திருந்தார்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த கேரி ப்ரோ பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்

ஆறு நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து கேரி ப்ரோவும், அவருடைய மனைவி ரூபியும் நேபாளத்துக்கு வந்தார்கள். “காட்மாண்டுவில நாங்க இருந்த இடத்துக்கு அவங்களால வந்துசேர முடியுமானு நாங்க யோசிச்சோம். ஏன்னா, நிலநடுக்கத்துக்கு அப்புறம்கூட தொடர்ந்து அதிர்வுகள் இருந்துச்சு. அதோட, அங்க ஒரே கூச்சலும் குழப்பமுமா இருந்துச்சு. ஆனா, வந்தே ஆகணுங்கிற உறுதியோட அவர் இருந்தார். அதே மாதிரி வந்து சேர்ந்திட்டார்! அவர் அப்படி வந்தது அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு,” என்று அந்தக் குழுவில் இருந்த ஒருவர் சொன்னார்.

“நாங்க எல்லாரும் ஒரே குடும்பம் போல இன்னும் நெருக்கமா உணர்ந்தோம்”

“டெலிஃபோன் லைன் எல்லாம் சரியானதும், எங்களுக்கு ஃபோன் மேல ஃபோன் வந்திட்டே இருந்துச்சு. எங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு உலகம் முழுசும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் கவலப்பட்டதுனால எங்களுக்கு ஃபோன் பண்ணிட்டே இருந்தாங்க. சிலர் பேசுன மொழி எங்களுக்கு புரியலனாலும், அவங்க எங்கமேல வெச்சிருக்கிற அன்பையும் எங்களுக்கு எப்படியாவது உதவணுங்கிற அக்கறையையும் புரிஞ்சுக்க முடிஞ்சுது” என்கிறார் ஷீலஸ். இவர் நேபாளத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்தில் சேவை செய்கிறார்.

ஐரோப்பாவில் இருந்து வந்த மருத்துவக் குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள்

ராஜ்ய மன்றத்தில் தங்கியிருந்தவர்களுக்கு, உள்ளூரில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் பல நாட்கள் சாப்பாடு கொடுத்து உதவினார்கள். உடனடியாக, பேரழிவு நிவாரணக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சீக்கிரத்திலேயே, அத்தியாவசியமான பொருள்கள் பல இடங்களில் இருந்து வந்தது. முக்கியமாக, வங்காள தேசம், இந்தியா மற்றும் ஜப்பானில் இருந்து தேவையான பொருள்கள் வந்து குவிந்தது. சில நாட்களுக்குள், யெகோவாவின் சாட்சிகள் அடங்கிய மருத்துவக் குழு ஒன்று ஐரோப்பாவில் இருந்து வந்து இறங்கியது. மருத்துவ உதவிகளை அளிக்க அவர்கள் ஒரு ராஜ்ய மன்றத்தை பயன்படுத்தினார்கள். உடலில் ஏற்பட்ட காயங்களில் இருந்து மட்டுமல்ல, மனதில் ஏற்பட்ட காயங்களில் இருந்தும் மீண்டு வர அவர்கள் உதவி செய்தார்கள்.

உட்ரா என்ற பெண் சொல்கிறார், “பயங்கரமான இந்த நிலநடுக்கம் எங்கள குலைநடுங்க வச்சிடுச்சு. நிலநடுக்கத்துக்கு அப்புறம், யெகோவாவின் சாட்சிகளா நாங்க எல்லாரும் ஒரே குடும்பம் போல இன்னும் நெருக்கமா உணர்ந்தோம்.” உட்ராவைப் போலதான் நிறைய பேர் உணர்ந்தார்கள். இந்த நிலநடுக்கத்தால், சாட்சிகளுக்கு யெகோவாமீது இருந்த அன்பும், ஒருவர்மேல் ஒருவருக்கு இருந்த அன்பும் குறையவே இல்லை! இன்னும் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது! ◼