Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக...

மனதார பாராட்டுங்கள்

மனதார பாராட்டுங்கள்

சவால்

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பாராட்டுவது ரொம்ப முக்கியம். இருந்தாலும், நிறைய குடும்பங்களில் கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனிக்காமல் இருந்துவிடுகிறார்கள். அதனால், அவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டுவதே இல்லை. ஒரு ஆலோசகர் தன்னிடம் வரும் தம்பதிகள் பலரைப் பற்றி எமோஷனல் இன்ஃபிடிலிட்டி என்ற ஆங்கில புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார்: “தம்பதிகள் [தங்களுடைய கல்யாண வாழ்க்கையில்] என்ன இல்லை என்பதைப் பற்றித்தான் யோசிக்கிறார்கள், என்ன இருக்கிறது என்பதைப் பற்றி யோசிப்பதில்லை. எதுவெல்லாம் மாற வேண்டும் என்றுதான் என்னிடம் சொல்கிறார்களே தவிர, எதுவெல்லாம் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்வதில்லை. ஒருவரை ஒருவர் மனதார பாராட்டாமல் இருப்பதுதான் அவர்கள் செய்யும் தவறு.”

நீங்களும் உங்கள் மணத்துணையும் இந்தத் தவறை எப்படித் தவிர்க்கலாம்?

சில உண்மைகள்

பாராட்டினால் பிரச்சினைகள் குறையும். கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனித்து அதைப் பாராட்டினால் அவர்களிடையில் இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். அதனால், பெரிய பெரிய பிரச்சினைகளைக்கூட தவிர்க்கலாம்.

மனைவிகளுக்கு: “குடும்பத்துக்குத் தேவையானதைக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பினால் ஆண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. இதைப் பற்றி நிறைய பெண்கள் யோசிப்பதில்லை” என்று எமோஷனல் இன்ஃபிடிலிட்டி என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. கணவன் மனைவி இரண்டு பேரும் சம்பாதிக்கும் குடும்பங்களில்கூட ஆண்களுக்கு இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.

கணவர்களுக்கு: பெண்கள் வேலைக்குப் போகிறார்கள், குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள், வீட்டைப் பராமரிக்கிறார்கள். இப்படி, அவர்களும் குடும்பத்துக்காக உழைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இதைப் பெரிதாக நினைப்பதில்லை. கல்யாணமாகி மூன்று வருஷங்களான கீத்தா * இப்படிச் சொல்கிறார்: “நாம எல்லாருமே அடிக்கடி தப்பு செய்றோம். நான் ஏதாவது தப்பு செஞ்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். நான் வீட்டில செஞ்சிருக்குற ஏதாவது ஒரு வேலைய பத்தி என் கணவர் என்ன பாராட்டும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்கிட்ட குறைகள் இருந்தாலும் அவரு இன்னும் என்ன நேசிக்கிறாருன்னும் எனக்கு ஆதரவா இருக்காருன்னும் என்னால புரிஞ்சிக்க முடியுது. என் சுயமரியாதைய இழக்காம இருக்க முடியுது.”

மணத்துணை மதிப்பு காட்டவில்லையென்றால் அவருக்கு உண்மையாக இருப்பது கஷ்டமாகிவிடலாம். திருமணமான திவ்யா இப்படிச் சொல்கிறார்: “உங்க கணவர் உங்கள பாராட்டலன்னா உங்கள பாராட்டுற வேற ஒருத்தர தேடிப்போக தோணலாம்.”

நீங்கள் என்ன செய்யலாம்

நன்றாகக் கவனியுங்கள். வருகிற வாரத்தில், உங்களுடைய துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனியுங்கள். அதோடு, குடும்பத்துக்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதையும் கவனியுங்கள். இதையெல்லாம் இதுவரை நீங்கள் பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கலாம். அந்த வாரத்தின் முடிவில், உங்கள் துணையிடம் உங்களுக்குப் பிடித்த குணங்களை எழுதுங்கள். அதோடு, குடும்பத்துக்காக அவர் செய்த நல்ல விஷயங்களையும் எழுதுங்கள்.—பைபிள் அறிவுரை: பிலிப்பியர் 4:8.

நன்றாகக் கவனிப்பது ஏன் முக்கியம்? திருமணமான ஜெயா இப்படிச் சொல்கிறார்: “கல்யாணமான புதுசுல உங்க கணவர் செய்ற விஷயங்கள உங்களுக்கு பாராட்ட தோணும். ஆனா, போகப் போக அதெல்லாம் உங்களுக்கு பெரிய விஷயமாவே தெரியாது. அவர் செய்ற நல்ல விஷயங்களெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது, அவர் செய்யாத விஷயங்கள்தான் பெரிய குறையா தெரியும்.”

உங்கள் துணையுடைய கடின உழைப்பை நீங்கள் கண்டும்காணாமல் இருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, வீட்டில் உங்கள் கணவர் ஏதாவது ரிப்பேர் வேலை செய்தால் அவர் தன்னுடைய கடமையைத்தான் செய்திருக்கிறார் என்று நினைத்து அவருக்கு நன்றி சொல்லாமல் இருந்துவிடுகிறீர்களா? நீங்கள் ஒரு கணவராக இருந்தால், குழந்தைகளை உங்கள் மனைவி கவனித்துக்கொள்வதைப் பார்க்கும்போது, அவள் செய்ய வேண்டியதைத்தான் செய்கிறாள் என்று நினைத்து பாராட்டாமல் இருந்துவிடுகிறீர்களா? குடும்பத்துக்காக உங்கள் துணை செய்யும் ஒவ்வொரு வேலையையும், அது சின்னதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி, கவனித்துப் பாராட்டுங்கள்.—பைபிள் அறிவுரை: ரோமர் 12:10.

தாராளமாகப் பாராட்டுங்கள். மனதளவில் மட்டும் நன்றியோடு இருந்தால் போதாது; “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:15) அதனால், உங்கள் துணையிடம் நன்றி சொல்வதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினேஷ் என்ற கணவர் இப்படிச் சொல்கிறார்: “நான் செய்ற ஒவ்வொன்னையும் என் மனைவி பாராட்டும்போது ஒரு நல்ல கணவனா இருக்க இன்னும் நிறைய முயற்சி எடுக்கணும்னு தோணுது.”—பைபிள் அறிவுரை: கொலோசெயர் 4:6.

ஒருவரை ஒருவர் மனதார பாராட்டும்போது கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பந்தம் இன்னும் பலப்படும். குமார் என்ற கணவர் இப்படிச் சொல்கிறார்: “மணத்துணைகிட்ட உங்களுக்கு பிடிச்சிருக்குற விஷயங்கள மட்டுமே யோசிச்சீங்கன்னா, உங்களுக்கு இடையில எந்த விரிசலும் வராது. பிரச்சினை வந்தாலும் அவங்களவிட்டு பிரிஞ்சுபோகணும்னு நினைக்க மாட்டீங்க. உங்களுக்கு எவ்ளோ நல்ல வாழ்க்க கிடச்சிருக்குனுதான் நினைப்பீங்க.” ◼

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.