Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

கடல் நீர்நாயின் ரோமம்

கடல் நீர்நாயின் ரோமம்

குளிர்ந்த நீரில் வாழும் நிறைய கடல்வாழ் பாலூட்டிகளுக்கு அவற்றின் தோலுக்குக் கீழ் தடிமனான கொழுப்பு இருக்கும். அவற்றின் உடலை எப்போதும் கதகதப்பாக வைத்துக்கொள்ள இது உதவும். ஆனால், கடல் நீர்நாயின் உடல் கதகதப்பாக இருக்க வேறொன்று உதவுகிறது. அதுதான் அதனுடைய அடர்த்தியான ரோமத் தோல்.

யோசித்துப் பாருங்கள்: கடல் நீர்நாயின் தோலில் இருக்கும் ரோமம், மற்ற பாலூட்டிகளின் ரோமத்தைவிட அடர்த்தியானது. ஒரு சதுர சென்டிமீட்டருக்கு கிட்டத்தட்ட 1,55,000 ரோமங்கள் இருக்கின்றன. தண்ணீரில் நீந்தும்போது, அதன் ரோமம் காற்றைப் பிடித்து வைத்துக்கொள்கிறது. அதனால், குளிர்ந்த நீர் அதன் தோலில் படுவதில்லை; அதன் உடலின் வெப்பமும் குறைவதில்லை.

கடல் நீர்நாயின் ரோமத்திலிருந்து ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். செயற்கையான ரோமத் தோல் உடைகளைத் தயாரித்து சில ஆராய்ச்சிகளைச் செய்தார்கள். அந்தத் தோல் உடைகளில் இருக்கும் ரோமங்களின் நீளமும் அடர்த்தியும் வித்தியாசமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். எந்தளவுக்கு ரோமங்கள் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருந்ததோ, அந்தளவுக்கு அவை தண்ணீரை உறிஞ்சவில்லை என்பதை அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார்கள். இந்தச் சிறப்பம்சம் கடல் நீர்நாயின் ரோமத் தோலில் இருக்கிறது.

தண்ணீர் உறிஞ்சாத உடையை வடிவமைப்பதற்கும் தயாரிப்பதற்கும் உதவுகிற தொழில்நுட்பத்தை முன்னேற்றுவிக்க இந்த ஆராய்ச்சிகள் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கடல் நீர்நாயின் ரோமத் தோல் போன்ற ஒரு நீச்சல் உடையைப் போட்டுக்கொண்டு, ஜில்லென்ற தண்ணீரில் நீச்சல் அடித்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும் என்று சிலர் யோசிக்க ஆரம்பிக்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடல் நீர்நாயின் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் ரோமத் தோல் பரிணாமத்தால் தோன்றியிருக்குமா? அல்லது வடிவமைக்கப்பட்டிருக்குமா?