Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | இளைஞர்களுக்காக...

நல்ல நண்பர்களாக இருக்க...

நல்ல நண்பர்களாக இருக்க...

இது ஏன் கஷ்டம்...

டெக்னாலஜி இன்று படுவேகமாக வளர்ந்திருப்பதால், நம்மால் நிறைய ஆட்களுடன் சுலபமாக பழக முடிகிறது. இருந்தாலும், என்றும் பிரியாத உயிர் நண்பர்கள் கிடைப்பது இன்று ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. 24 வயது இளைஞர் ஒருவர் இப்படி சொல்லி வருத்தப்பட்டார்: “என்னோட அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு வருஷம் ஆனாலும் பிரியாம... ஒண்ணா இருக்காங்க. ஆனா, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், கொஞ்ச நாள்ல ஆள் அட்ரஸே இல்லாம போயிடறாங்க.”

என்றும் பிரியாத நண்பர்கள் கிடைப்பது இந்த காலத்தில் ஏன் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது?

தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...

டெக்னாலஜி நம்மை ஏமாற்றிவிடலாம். மெசேஜ் அனுப்புவது, சோஷியல் நெட்வொர்கிங் மூலம் சாட் (chat) செய்வது போன்ற வசதிகள் இன்று இருக்கிறது. அதனால், நேரில் பார்க்காமலேயே நட்பு வைத்துக்கொள்ள முடியும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சொல்லப்போனால், சரமாரியாக மெசேஜ் அனுப்புவதும் ட்விட்டரில் ட்வீட் செய்வதும்தான் இன்றைய ஃபேஷன் ஆகிவிட்டது. நண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது! ஆர்டிஃபிஷியல் மெச்சூரிட்டி (Artificial Maturity) என்ற புத்தகம் இப்படி சொல்கிறது: “மக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசுவதே குறைந்துவிட்டது. இன்றைய மாணவர்கள் அவர்களுடன் படிக்கும் பிள்ளைகளோடு பேசுவதைவிட, கையிலிருக்கும் மொபைல் ஃபோன் அல்லது கம்ப்யூட்டர் முன்னாடியே தங்கள் காலத்தை கழித்துவிடுகிறார்கள்.”

நம் நண்பர்களுக்கு வெறும் மெசேஜ் அனுப்புவதால் மட்டும் அவருடன் நெருங்கிய நட்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. 22 வயது மனோஜ் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இப்படி சொல்கிறார்: “நான் எப்போ பாத்தாலும் என்னோட ஃப்ரெண்ட்ஸுக்கு மெசேஜ் அனுப்பிட்டே இருப்பேன். என் நேரம் எல்லாம் அதுக்கே போயிடுச்சு. ஒருநாள், என் ஃப்ரெண்ட்ஸ் எத்தனை பேருக்கு என்மேல அக்கறை இருக்குனு தெரிஞ்சுக்க நினைச்சேன். அதனால, அவங்களுக்கு நான் மெசேஜ் அனுப்புறத நிறுத்திட்டு, எத்தனை பேரு எனக்கு மெசேஜ் அனுப்புறாங்கனு பார்த்தேன். உண்மைய சொல்லணும்னா, கொஞ்சம் பேர்தான் எனக்கு அவங்களாவே மெசேஜ் பண்ணாங்க. யாரெல்லாம் என்னோட நெருங்கிய நண்பர்கள்னு நினைச்சேனோ அவங்கெல்லாம் எனக்கு மெசேஜே பண்ணல.”

மெசேஜ் அனுப்புவதால் அல்லது சோஷியல் நெட்வொர்க்கிங்கில் சாட் செய்வதால் மட்டும் ஒருவரோடு நெருங்கிய நண்பராக ஆகிவிட முடியுமா? முடியாது. நாம் அவரோடு நேரிலும் பேசிப் பழக வேண்டும். ஒருவரோடு பழகுவதற்கு டெக்னாலஜி நமக்கு பாலமாக இருந்தாலும், அவரோடு நல்ல நட்பு வைத்துக்கொள்ள உதவாது!

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உண்மையான நட்பு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். “ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:24, ஈஸி டு ரீட் வர்ஷன்) அந்த மாதிரி ஒரு நண்பர் கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிறீர்களா? அந்த மாதிரி நல்ல நண்பனாக நீங்கள் இருப்பீர்களா? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள ஒரு நண்பனிடம் நீங்கள் எதிர்பார்க்கும் 3 குணங்களை முதலில் எழுதுங்கள். உங்கள் நண்பனிடம் நீங்கள் காட்ட விரும்பும் 3 குணங்களையும் எழுதுங்கள். பிறகு, இதை யோசியுங்கள்: “என்னோட ஆன்லைன் நண்பர்களில் எத்தனை பேர் இந்த குணங்களை காட்டுகிறார்கள்? இந்த குணங்கள் என்னிடமும் இருக்கிறது என்று எத்தனை பேர் சொல்கிறார்கள்?”—பைபிள் தரும் ஆலோசனை: பிலிப்பியர் 2:4.

எது முக்கியம் என்று முடிவு செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த ஒரு விஷயம், நீங்கள் ஆன்லைனில் பழகும் நபருக்கும் பிடித்திருக்கலாம். அதனால் நீங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், இரண்டு பேருக்கும் பொதுவாக என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இரண்டு பேரும் எதை உயர்வாக நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். “எனக்கு நிறைய நண்பர்கள் இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கிருக்கிற கொஞ்சம் நண்பர்களும் நான் நல்ல பொண்ணா இருக்குறதுக்கு உதவி செய்றாங்க” என்று 21 வயது லீனா சொல்கிறார்.—பைபிள் தரும் ஆலோசனை: நீதிமொழிகள் 13:20.

நண்பர்களிடம் நேரில் பேச முயற்சி எடுங்கள். நல்ல நட்பு அமைய, ஒருவரோடு நேரில் பேசுவதைவிட சிறந்த வழி வேறு எதுவுமே இல்லை. ஏனென்றால், நேரில் ஒருவருடன் பேசும்போது, அவர் எப்படி பேசுகிறார், அவர் என்ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார், அவருடைய சைகைகள் எப்படி இருக்கிறது என எல்லா விஷயத்தையும் நாம் கவனிக்க முடியும்.—பைபிள் தரும் ஆலோசனை: 1 தெசலோனிக்கேயர் 2:17.

கடிதம் எழுதுங்கள். “கடிதம் எழுதறதா? அய்யய்யோ! அதெல்லாம் அந்தக் காலம்!” என்று சட்டென்று சொல்லிவிடாதீர்கள். உங்கள் நண்பர்களிடம், “நீ எனக்கு ரொம்ப முக்கியம்” என்ற ‘மெசேஜை’ சொல்ல இதுதான் சூப்பரான வழி! ஒரே நேரத்தில் ஓராயிரம் வேலை செய்யும் இந்த உலகத்தில், ஒருத்தர்மேல் மட்டும் அக்கறை காட்டுவது ரொம்ப அபூர்வம்தான். ஷெர்ரி டர்க்கல் என்ற எழுத்தாளர் அலோன் டுகெதர் (Alone Together) என்ற அவருடைய புத்தகத்தில் ஒரு இளைஞனை பற்றி சொல்கிறார். அந்த இளைஞனுடைய வாழ்நாளில் எந்த ஒரு கடிதமும் வந்ததாக அவனுக்கு ஞாபகமே இல்லை. அவன் இப்படி புலம்புகிறான்: “கடிதம் எழுதும் பழக்கம் இருந்த காலத்தில் நான் உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.” நீங்கள் ஏன் இந்த ‘பழைய டெக்னாலஜியை’ முயற்சி செய்து பார்க்கக்கூடாது?

என்ன முடிவுக்கு வரலாம்: ஆன்லைனில் ‘டச்’சில் இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்துவிடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும், ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும், மன்னிக்க வேண்டும். அப்போதுதான், உங்கள் நட்பு உயிருள்ளவரை நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும் இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா? யோசித்துப் பாருங்கள். ▪ (g16-E No. 1)

^ பாரா. 8 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.