Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை

பைபிள் ஒரு நல்ல புத்தகம் மட்டும்தானா?

பைபிள் ஒரு நல்ல புத்தகம் மட்டும்தானா?

பைபிள் எழுதி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2,000 வருஷங்கள் உருண்டோடி விட்டது. அன்று முதல் இன்று வரை எத்தனையோ புத்தகங்கள் இந்த உலகத்தில் வந்து போய்விட்டன. ஆனால், பைபிள் மட்டும்தான் இன்றும் நிலைத்து நிற்கிறது! பைபிளைப் பற்றிய சில உண்மைகளை கவனியுங்கள்.

  • மக்கள் கையில் பைபிள் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக செல்வாக்கு உள்ள நிறைய பேர் முயற்சி செய்தார்கள். உதாரணத்துக்கு, 13-லிருந்து 15-ம் நூற்றாண்டு வரைக்கும், சில “கிறிஸ்தவ” நாடுகளில் இருந்த நிலைமையை பற்றி ஆன் இன்ட்ரொடக்ஷன் டு த மிடிவல் பைபிள் என்ற ஆங்கில புத்தகம் இப்படி சொல்கிறது: “ஒருவருடைய தாய்மொழியில் பைபிளை வைத்திருந்தாலோ அதை வாசித்தாலோ அது மத விரோத செயல் என்று சொன்னார்கள். அதோடு, அப்படி செய்பவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தினார்கள்.” பைபிளை யாராவது மொழிபெயர்த்தாலோ அல்லது அதை படிக்கும்படி சொன்னாலோ அவர்களுடைய உயிரே போய்விடும் சூழ்நிலை அன்று இருந்தது. தங்கள் உயிரை பணயம் வைத்து மொழிபெயர்ப்பு வேலை செய்த சிலரை கொலையும் செய்தார்கள்.

  • இத்தனை தடைகள் இருந்தாலும், அன்றும் சரி இன்றும் சரி, பைபிள் மட்டும்தான் உலகத்திலேயே அதிகமாக அச்சடித்து கொடுக்கப்பட்ட புத்தகம். இதுவரைக்கும், 500 கோடி பைபிள்கள், அதாவது முழு பைபிளாகவோ அல்லது பகுதியாகவோ, 2,800 மொழிகளில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தத்துவம், அறிவியல் சம்பந்தப்பட்ட வேறு எந்த புத்தகமும் இந்தளவுக்கு அச்சடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவையெல்லாம் சீக்கிரத்தில் மக்களுக்கு பிரயோஜனம் இல்லாமலும் போய்விடுகிறது.

  • சில மொழிகள் அழியாமல் இருப்பதற்கும், வளருவதற்கும் பைபிள் மொழிபெயர்ப்பு உதவியாக இருந்திருக்கிறது. ஜெர்மன் மொழியில், மார்டின் லூதர் மொழிபெயர்த்த பைபிள், அந்த மொழியை வளர்ப்பதற்கு உதவி செய்திருக்கிறது. கிங் ஜேம்ஸ் வர்ஷனின் முதல் பதிப்பு, ஆங்கில மொழியில் “இதுவரைக்கும் வெளிவந்த புத்தகங்களிலேயே மிக சிறந்த புத்தகமாக இருக்கும்” என்று சொல்லப்படுகிறது.

  • பைபிள், “மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. மத நம்பிக்கைகளில் மட்டும் அல்ல, அவர்களுடைய கலை, இலக்கியம், சட்டம், அரசியல் போன்ற இன்னும் நிறைய விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.”—தி ஆக்ஸ்ஃபோர்டு என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் தி புக்ஸ் ஆஃப் தி பைபிள்.

பைபிள் ஒரு சிறந்த புத்தகம் என்பதற்கான சில அத்தாட்சிகளை இதுவரை பார்த்தோம். பைபிள் இந்தளவு பிரபலமானதற்கு என்ன காரணம்? பைபிளுக்காக ஏன் நிறைய பேர் அவர்களுடைய உயிரையே தியாகம் செய்தார்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. உதாரணமாக, நாம் எப்படி வாழ வேண்டும், கடவுளோடு எப்படி நல்ல நண்பராக முடியும் என்பதை பற்றி பைபிள் சொல்கிறது. மனிதர்களுடைய பிரச்சினைகள் எங்கே ஆரம்பமானது, அதுக்கு யார் காரணம் என்றும் சொல்கிறது. அதுமட்டுமல்ல, இந்த எல்லா பிரச்சினைகளும் எப்படி முடிவுக்கு வரும் என்ற சந்தோஷமான செய்தியையும் பைபிள் சொல்கிறது.

பைபிளில் உள்ள முத்துக்கள்...

நம் எல்லாருக்கும் படிப்பு ரொம்ப முக்கியம்தான். ஆனால், “பேருக்கு பின்னாடி நிறைய பட்டங்கள் இருந்தால் மட்டும் . . . ஒழுக்கமாக வாழ முடியும் என்று சொல்லிவிட முடியாது” என்பதாக கனடாவில் உள்ள ஒட்டாவா சிட்டிஸன் என்ற செய்தித்தாள் சொன்னது. சொல்லப்போனால், இன்று பெரிய பெரிய படிப்பு படித்திருக்கும் நிறைய தொழில் அதிபர்களும் அரசியல் தலைவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள், சுரண்டிப் பிழைக்கிறார்கள். அதனால், மக்களுக்கு “இவர்கள் மேல் உள்ள நம்பிக்கையே போய்விடுகிறது” என்று எடில்மேன் என்ற கம்பெனி வெளியிட்ட ஒரு கட்டுரை சொன்னது.

கடவுளைப் பற்றியும், நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் பைபிள் நிறைய விஷயங்களை சொல்லித் தருகிறது. பைபிளை படித்தால், “நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்” கற்றுக்கொள்ள முடியும். (நீதிமொழிகள் 2:9) உதாரணத்துக்கு, போலாந்தில் உள்ள ஸ்டீஃபன் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற 23 வயது இளைஞர், சிறையில் இருந்த சமயத்தில் பைபிளை படித்தார். அதில் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டார். ‘‘‘தகப்பனுக்கும் தாய்க்கும் மதிப்புக் கொடுக்கிறது’ எவ்வளவு முக்கியம்னு இப்ப நான் தெரிஞ்சுகிட்டேன். அதோட, எனக்கு வர்ற பயங்கரமான கோபத்தை எப்படி கட்டுப்படுத்துறதுன்னும் பைபிள்ல இருந்து கத்துக்கிட்டேன்” என்று அவர் சொன்னார்.—எபேசியர் 4:31; 6:2.

‘மனுஷனுடைய அறிவு அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு அழகு’ என்று நீதிமொழிகள் 19:11 சொல்கிறது. பைபிளில் இருக்கும் இந்த முக்கியமான உண்மையை ஸ்டீஃபன் புரிந்துகொண்டார். ஸ்டீஃபனுக்கு இப்போது ஏதாவது பிரச்சினை வந்தால், அமைதியாக உட்கார்ந்து, பைபிளில் இருக்கும் ஆலோசனைகளை வைத்து அதை சரிசெய்ய முயற்சி செய்கிறார். “பைபிள்தான் நம்ம வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டுது” என்று ஸ்டீஃபன் சொல்கிறார்.

மரியா என்ற பெண்ணின் உதாரணத்தை கவனியுங்கள். இவர் ஒரு யெகோவாவின் சாட்சி. ஒரு சமயம், யெகோவாவின் சாட்சிகளை பிடிக்காத ஒரு பெண், எல்லாருக்கும் முன்பாக இவரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டார். ஆனால், மரியா பதிலுக்கு திட்டாமல், அமைதியாக போய்விட்டார். அதை பார்த்த அந்த பெண், தான் நடந்துகொண்டது தவறு என்று வருத்தப்பட்டார். பிறகு, யெகோவாவின் சாட்சிகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். கடைசியில், ஒரு மாதத்துக்கு பிறகு மரியாவை பார்த்தார். உடனே அவரிடம் போய், தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு அவரை கட்டிப்பிடித்துக்கொண்டார். பைபிளைப் படித்து அதன்படி நடப்பதால்தான் மரியா அவ்வளவு அமைதியாக, சாந்தமாக இருந்தார் என்று அந்தப் பெண் புரிந்துகொண்டார். இப்போது, அவரும் அவருடைய குடும்பத்தில் இருக்கிற ஐந்து பேரும் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்கிறார்கள்!

“ஒருவருடைய நீதியான செயல்கள் அவரை ஞானமுள்ளவர் என்று நிரூபிக்கும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (லூக்கா 7:35) பைபிளில் இருக்கும் ஆலோசனைகளின்படி வாழ்ந்தால் நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்; அது நம்மை ஒரு நல்ல மனிதனாக மாற்றும். அவை, ‘அனுபவம் இல்லாதவர்களுக்கு ஞானத்தைத் தருகிறது,’ ‘மனதுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது,’ ‘அறிவொளி’ கொடுக்கிறது.—சங்கீதம் 19:7, 8, NW.

மனிதர்களின் கஷ்டங்களுக்கு பைபிளின் பதில்

ஒரு வியாதியினால் ஊரே பாதிக்கப்படும்போது, அது எப்படி வந்தது என்று கண்டுபிடிக்க முயற்சி எடுப்பார்கள். அதே போல, இன்று உலகத்தில் எங்கு பார்த்தாலும் கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருக்கிறது. அப்படியென்றால், அது எப்படி வந்தது என்று நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பைபிள் உதவும். ஏனென்றால், அதில்தான் மனிதன் தோன்றிய காலத்தில் என்ன நடந்தது என்ற தகவல் இருக்கிறது. பிரச்சினைகளும் கஷ்டங்களும் எப்படி, எங்கே ஆரம்பமானது என்றும் பைபிள் நமக்கு சொல்கிறது.

உலகின் முதல் தம்பதியான ஆதாம்-ஏவாள் கடவுளுக்கு எதிராக தவறு செய்தபோதுதான் மனிதர்களுடைய பிரச்சினை ஆரம்பமானது என்று பைபிள் சொல்கிறது. எது நல்லது எது கெட்டது என்று முடிவு செய்யும் அதிகாரம் கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆனால், ஆதாமும் ஏவாளும் அந்த அதிகாரத்தை மதிக்கவில்லை. ‘நல்லது கெட்டதை’ அவர்களாகவே முடிவு செய்துகொண்டார்கள்; கடவுளை ஒதுக்கிவிட்டார்கள். (ஆதியாகமம் 3:1-7) ஆதாம் ஏவாளைப் போலவே, இன்றும் நிறைய பேர் யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டு நடப்பதில்லை, கடவுள் சொல்கிறபடியும் வாழ்வதில்லை. அதனால்தான், உலகம் முழுவதும் பிரச்சினைகளும், கஷ்டங்களும், ஒழுக்கங்கெட்ட விஷயங்களும் பரவி இருக்கிறது. (பிரசங்கி 8:9) பைபிள் இதைப் பற்றி தெளிவாக சொல்கிறது: “மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை.” (எரேமியா 10:23, பொது மொழிபெயர்ப்பு) ஆனால், இந்த நிலைமைகள் எல்லாம் சீக்கிரமாக மாறப்போகிறது!

நம்பிக்கையை தரும் பைபிள்

கடவுள், அவர் சொல்கிறபடி வாழும் மக்களை, அவருடைய சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் மக்களை, நேசிக்கிறார். அதனால், அநியாயத்தையும் அக்கிரமத்தையும் ரொம்ப நாளைக்கு விட்டுவைக்க மாட்டார். கெட்டவர்கள், தாங்கள் செய்த தவறுகளின் “பலனை” அனுபவிப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 1:30, 31) அப்படியென்றால், நல்லவர்களுக்கு என்ன நடக்கும்? “சாந்தகுணமுள்ளவர்கள்” அதாவது, தாழ்மையுள்ள ஜனங்கள், “பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.

“பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய [கடவுளுடைய] சித்தம்.”—1 தீமோத்தேயு 2:3, 4.

இந்த முழு பூமியையும் ஒரு அமைதிப் பூங்காவாக கடவுள் மாற்றப்போகிறார். அதை அவர் எப்படி செய்வார்? அவருடைய அரசாங்கத்தின் மூலமாகத்தான்! (லூக்கா 4:43) உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களை ஒரே ஒரு அரசாங்கம், அதாவது, கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யும். இதைப் பற்றி இயேசுவும் சொல்லியிருக்கிறார். அவர் ஜெபம் செய்ய சொல்லித் தந்தபோது, ‘உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் [அதாவது, விருப்பம்] . . . பூமியில் செய்யப்பட வேண்டும்’ என்று சொன்னார்.—மத்தேயு 6:10.

கடவுள் ஒருவருக்குத்தான் மனிதர்களை ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது. அதனால், கடவுளுடைய அரசாங்கத்தில் வாழும் மக்கள், மனிதர்களை அல்ல, கடவுளை மட்டும்தான் அரசராக ஏற்றுக்கொள்வார்கள். கடவுளுடைய ஆட்சியில் போர் இருக்காது. ஊழல் இருக்காது. ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்காது. சாதி-மத-இன வேறுபாடு இருக்காது. உலகம் முழுவதும் ஒரே ஆட்சிதான் இருக்கும். அவரவர் இஷ்டப்படி வாழாமல், எல்லாரும் கடவுள் கொடுத்திருக்கும் சட்டத்தின்படி வாழ்வார்கள்.—வெளிப்படுத்துதல் 11:15.

கடவுளுடைய ஆட்சியில் வாழவேண்டும் என்றால், கடவுளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய [அதாவது, கடவுளுடைய] சித்தம்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:3, 4) ஒவ்வொரு நாட்டுக்கும், அதற்கென்று அரசியல் அமைப்பும் சட்டங்களும் இருக்கும். அதன் அடிப்படையில்தான் ஆட்சி செய்வார்கள். அதேபோல், கடவுளுடைய அரசாங்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் சட்டதிட்டங்கள் பைபிளில் இருக்கிறது. அதில் இருக்கும் ஒருசில சட்டதிட்டங்களை இயேசு பூமியில் இருந்தபோது எடுத்துச் சொன்னார். இதை பைபிளில் இருக்கிற மத்தேயு என்ற புத்தகத்தில் 5 முதல் 7 அதிகாரங்களில் நாம் பார்க்கலாம். அந்த அறிவுரைகளின்படி எல்லாரும் வாழ்ந்தால் பூமி எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

பைபிள், கடவுள் தந்த புத்தகம்தான் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும்! மக்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, என்ன மொழி பேசினாலும் சரி, எல்லாரும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்... அவருடைய ஆட்சியில் வாழ வேண்டும்... என்றுதான் கடவுள் ஆசைப்படுகிறார். அதனால்தான், பைபிள் இன்று எல்லாருடைய கையிலும் கிடைக்கும்படி கடவுள் ஏற்பாடு செய்தார். (அப்போஸ்தலர் 10:34, 35) இப்போது சொல்லுங்கள், பைபிள்தான் உலகத்திலேயே அதிகமாய் அச்சடிக்கப்பட்ட புத்தகம் என்று சொன்னால், அதில் ஆச்சரியம் ஏதாவது இருக்கிறதா? ▪ (g16-E No. 2)

^ பாரா. 11 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.