Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படகு திசைமாறாமல் சரியான வழியில் போக சுக்கான் எப்படி உதவுகிறதோ அப்படியே ஒரு பிள்ளை நல்ல வழியில் போவதற்குக் கண்டிப்பு உதவுகிறது

பெற்றோர்களுக்கு

6: கண்டிப்பு

6: கண்டிப்பு

இதன் அர்த்தம் என்ன?

கண்டிப்பு என்ற வார்த்தை வழிநடத்துவதை அல்லது சொல்லிக்கொடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. சில சமயங்களில், தவறு செய்த பிள்ளையைத் திருத்துவதைக்கூட அர்த்தப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலும், பிள்ளைக்கு ஒழுக்கநெறிகளைச் சொல்லித்தருவதை இது குறிக்கிறது; இதனால், பிள்ளைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நல்ல தீர்மானங்களை எடுக்கக் கற்றுக்கொள்வார்கள்.

இது ஏன் முக்கியம்?

கடந்த சில வருஷங்களாக, சில குடும்பங்களில் கண்டிப்பு என்ற ஒன்று இல்லாமலேயே போய்விட்டது; கண்டித்தால், பிள்ளைகளுக்குத் தன்மானம் குறைந்துவிடும் என்று பெற்றோர்கள் பயப்படுவதுதான் அதற்குக் காரணம். ஆனால், ஞானமுள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நியாயமான சில சட்டங்களைக் கொடுத்து, அவற்றுக்குக் கீழ்ப்படிய பயிற்சியும் கொடுக்கிறார்கள்.

“பிள்ளைங்க பொறுப்புள்ளவங்களா வளரணும்னா இப்பவே அவங்களுக்கு சில கட்டுப்பாடுகள வைக்குறது முக்கியம். கட்டுப்பாடு இல்லாத பிள்ளைங்க சுக்கான் இல்லாத கப்பல் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா திசைமாறிபோயிடுவாங்க, இல்லன்னா அப்படியே கவிழ்ந்துடுவாங்க.”—பாமலா.

நீங்கள் என்ன செய்யலாம்?

சொன்னபடி நடந்துகொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உங்கள் பிள்ளை கீழ்ப்படியவில்லை என்றால், நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன தண்டனையைக் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். அதேசமயத்தில், கீழ்ப்படியும்போது தாராளமாகப் பாராட்டுங்கள்.

“கீழ்ப்படிதல்ங்கறது அபூர்வமா இருக்குற இந்த உலகத்துல, என் பிள்ளைங்க கீழ்ப்படியும்போது அவங்கள தாராளமா பாராட்டுவேன். இப்படி பாராட்டுறதுனால, கண்டிப்பு கொடுக்கும்போது அதை அவங்களால ஏத்துக்க முடியுது.”—க்ரிஸ்டீன்.

பைபிள் நியமம்: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.

நியாயமானவர்களாக இருங்கள். கண்டிப்பு கொடுக்கும்போது, பிள்ளையின் வயது, திறன், அவன்/ள் செய்தது சின்ன தவறா, பெரிய தவறா என்பதையெல்லாம் யோசித்து அதற்கேற்ப கண்டியுங்கள். செய்த தப்புக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பது பொதுவாக நல்ல பலன்களைத் தரும். உதாரணத்துக்கு, ஃபோனைப் பயன்படுத்தும் விஷயத்தில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அதை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது அதைப் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது என்பதற்காக, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள்.

“என் பையன் வேணும்னே கீழ்ப்படியலயா, இல்லன்னா, தெரியாம தப்பு செஞ்சுட்டானானு கண்டுபிடிக்க முயற்சி செய்வேன். ஏன்னா, வேரோட பிடுங்கி எறிய வேண்டிய ஒரு கெட்ட குணத்துக்கும், வெறுமனே சொல்லித் திருத்த வேண்டிய ஒரு தப்புக்கும் வித்தியாசம் இருக்கு.”—வென்டெல்.

பைபிள் நியமம்: “உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் உண்டாக்காதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.”—கொலோசெயர் 3:21.

அன்பாக நடந்துகொள்ளுங்கள். பெற்றோர்களுக்குத் தங்கள்மேல் அன்பு இருப்பதால்தான் கண்டிக்கிறார்கள் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ளும்போது, கண்டிப்பைச் சுலபமாக ஏற்றுக்கொண்டு தங்களைத் திருத்திக்கொள்வார்கள்.

“எங்க பையன் ஏதாவது தப்பு செய்யும்போது, இதுக்கு முன்னாடி அவன் எடுத்த நல்ல தீர்மானங்களுக்காக நாங்க எவ்ளோ சந்தோஷப்பட்டோங்கறத அவனுக்கு ஞாபகப்படுத்துவோம். செஞ்ச தப்ப திருத்திக்கிட்டா அவனோட பேர் கெட்டுப்போகாதுங்கறதையும், உதவி செய்றதுக்கு நாங்க தயாரா இருக்கோங்கறதையும் அவனுக்கு புரிய வைப்போம்.”—டேனியல்.

பைபிள் நியமம்: “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது.”—1 கொரிந்தியர் 13:4.