Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஏன் சிலர் தவறாகப் பேசுகிறார்கள்?

அநேகருக்கு அவர்களைப் பற்றிய உண்மை தெரிவதில்லை. சிலருக்கு அவர்கள் செய்கிற ஊழியம் பிடிப்பதில்லை. சொல்லப்போனால், சகமனிதர் மீதுள்ள அன்பினாலேயே யெகோவாவின் சாட்சிகள் இந்த ஊழியத்தைச் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று பைபிள் சொல்வதாலும் அவ்வாறு செய்கிறார்கள்.—ரோமர் 10:13.

யெகோவாவின் சாட்சிகள் புராட்டஸ்டன்ட் மதத்தினரா, அடிப்படைவாதிகளா அல்லது ஏதோவொரு மதப் பிரிவினரா?

யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கத்தோலிக்கரும் அல்ல, புராட்டஸ்டன்ட்டினரும் அல்ல. இந்த மதங்களின் போதனைகளில் சில பைபிளுக்கு முரணாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, அன்பே உருவான கடவுள், சதா சர்வகாலமும் எரிகிற நெருப்பில் மக்களை வதைக்கிறார் என்று பைபிள் கற்பிப்பதில்லை. மனிதருக்கு அழியாத ஆத்துமா இருப்பதாகவும் அது கற்பிப்பதில்லை. அதோடு, கிறிஸ்தவர்கள் அரசியலில் தலையிடும்படியும் அது சிபாரிசு செய்வதில்லை.—எசேக்கியேல் 18:4; யோவான் 15:19; 17:14; ரோமர் 6:23. *

“அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவிலுள்ள புராட்டஸ்டன்ட் மதத்திற்குள்ளேயே இருக்கிற ஒரு பெரும் பிரிவு” என்கிறது தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா. அடிப்படைவாத மத நிறுவனங்கள் சில, “பைபிள் வசனங்கள் சிலவற்றை நேரடியான கருத்தில் எடுத்துக்கொண்டு சமூக, அரசியல் வட்டாரங்களில் முக்கிய ஸ்தானத்தை வகித்திருக்கின்றன” என்றும் அது சொல்கிறது. இது யெகோவாவின் சாட்சிகளுக்குத் துளியும் பொருந்தாது. ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, சாட்சிகள் அரசியலில் தலையிடுவதில்லை; அதுமட்டுமின்றி, அரசியல் தலைவர்களைத் தூண்டிவிட்டோ வேறு செல்வாக்கைப் பயன்படுத்தியோ தங்கள் கருத்துக்களை மற்றவர்கள்மீது திணிப்பதுமில்லை. மாறாக, மக்களை அவர்கள் நேருக்கு நேர் சந்தித்து, நம்பத்தக்க ஆதாரங்களுடன் நியாயங்காட்டிப் பேசுகிறார்கள்; இந்த விஷயத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றுகிறார்கள்.—அப்போஸ்தலர் 19:8.

மதப் பிரிவு என்பது ஒரு மதத்திலிருந்து பிரிந்து செல்லும் தொகுதி, அல்லது ஒரு புதிய மதமாகச் செயல்பட ஆரம்பிக்கும் தொகுதி. யெகோவாவின் சாட்சிகள் அப்படி எந்த சர்ச்சிலிருந்தும் பிரிந்து வரவில்லை. அதனால் அவர்களை ஒரு மதப் பிரிவினராகச் சொல்லவே முடியாது.

அவர்களுடைய கூட்டங்களின்போது என்ன நடக்கிறது?

அவர்களுடைய கூட்டங்களுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கூட்டங்களில் முக்கியமாய் பைபிளையே படிக்கிறார்கள். பெரும்பாலும் அதில் சபையாரும் பங்குகொள்வார்கள். அவர்களுடைய வாராந்தர கூட்டங்களில் ஒன்று, தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்பதாகும். போதிக்கிற... வாசிக்கிற... ஆராய்ச்சி செய்கிற... திறன்களை வளர்த்துக்கொள்ள அந்தப் பள்ளி சபை அங்கத்தினர்களுக்கு உதவுகிறது. மற்றொன்று, 30 நிமிட பைபிள் பேச்சு. அது குறிப்பாக, பொது மக்களின் ஆர்வத்துக்குரிய ஒரு தலைப்பில் கொடுக்கப்படும். வழக்கமாக அந்தப் பேச்சைத் தொடர்ந்து காவற்கோபுர பத்திரிகை வாயிலாக ஒரு பைபிள் படிப்பு நடத்தப்படும். கூட்டங்கள், பாட்டு-ஜெபத்துடன் தொடங்கி பாட்டு-ஜெபத்துடன் முடிவடைகின்றன. அங்கு யாரிடமும் நன்கொடை வசூலிக்கப்படாது. காணிக்கைத் தட்டும் வலம்வராது.—2 கொரிந்தியர் 8:12.

யெகோவாவின் சாட்சிகளுக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைக்கிறது?

மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளாலேயே அவர்களுடைய வேலை நடைபெறுகிறது. ஞானஸ்நானம்... திருமண வைபவங்கள்... சவஅடக்க நிகழ்ச்சிகள்... இன்னும் சில பல சேவைகள்... என எதற்கும் அவர்கள் பணம் வசூலிப்பதில்லை. மக்களிடமிருந்து தசமபாகமும் வாங்குவதில்லை. யாராவது நன்கொடை கொடுக்க விரும்பினால், ராஜ்ய மன்றத்தில் வசதியான ஓர் இடத்தில் வைக்கப்பட்டுள்ள நன்கொடைப் பெட்டியில் அதை அவர்கள் போடலாம். யெகோவாவின் சாட்சிகளே தங்கள் பிரசுரங்களைத் தயாரிக்கிறார்கள்; இதனால் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு எளிமையாக இருக்கிற அவர்களுடைய ராஜ்ய மன்றங்களும் கிளை அலுவலகக் கட்டிடங்களும் பெரும்பாலும் வாலண்டியர்களாலேயே கட்டப்படுகின்றன.

யெகோவாவின் சாட்சிகள் மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்கிறார்களா?

ஏற்றுக்கொள்கிறார்கள். சொல்லப்போனால், அவர்களுக்கும் சரி அவர்களுடைய குடும்பத்தாருக்கும் சரி, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார்கள். அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் நர்சுகளாக... டாக்டர்களாக... மருத்துவ உதவியாளர்களாக... அறுவை மருத்துவர்களாக... இருக்கிறார்கள். என்றாலும், ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்று பைபிள் சொல்வதால் அவர்கள் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை. (அப்போஸ்தலர் 15:28, 29) சொல்லப்போனால் இன்றைக்கு, நிறைய மருத்துவர்கள் இரத்தமில்லா மருத்துவ சிகிச்சையே மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை என சிபாரிசு செய்கிறார்கள். அபாயகரமான பல்வேறு பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடிவதாலேயே அவ்வாறு சிபாரிசு செய்கிறார்கள். (g10-E 08)

^ இந்தப் போதனைகளைப் பற்றியும் இதுபோன்ற இன்னும் சில போதனைகளைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைக் காண்க. இது, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.