Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

டீனேஜ் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது எப்படி

டீனேஜ் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது எப்படி

சவால்

நீங்கள் ரொம்ப கறாரானவர் என்று உங்கள் டீனேஜ் மகன் சொல்கிறான். உங்கள் மனமோ அதற்கு நேர்மாறாக, ‘அவனுக்குக் கட்டுப்பாடு விதிக்காவிட்டால் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விடுவான்’ என்று சொல்கிறது.

டீனேஜ் பிள்ளைகளுக்கு நியாயமான கட்டுப்பாடுகளை நீங்கள் தாராளமாக விதிக்கலாம். ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு ஏன் எரிச்சலூட்டுகின்றன என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். a

எரிச்சல் ஏன்?

தவறான கருத்து: டீனேஜ் பிள்ளைகள் எல்லோருமே கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள். அந்த வயதில் அப்படித்தான் நடந்துகொள்வார்கள்.

உண்மை: பெற்றோர் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து அதற்கான காரணத்தை டீனேஜர்களிடம் சொன்னால் அவர்கள் கீழ்ப்படிவார்கள்.

பிள்ளைகள் கீழ்ப்படியாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சிலசமயம், பெற்றோரும் தங்களை அறியாமலேயே அதற்குக் காரணமாகிவிடலாம். ஆம், கறாரான கட்டுப்பாடுகளை அல்லது வயதிற்குப் பொருந்தாத கட்டுப்பாடுகளை விதித்துவிடலாம். எப்படி?

  • கறாரான கட்டுப்பாடுகள். பெற்றோர் ஒரு சட்டத்தை விதித்து அதற்கான காரணங்களைப் பிள்ளையிடம் சொல்லாவிட்டால், பிள்ளைகள் எப்படி உணர்வார்கள்? அதைக் கட்டிப்போடும் கைவிலங்காகத்தான் பார்ப்பார்களே தவிர பாதுகாப்பளிக்கும் சீட் பெல்ட்டாகப் பார்க்க மாட்டார்கள். விளைவு? பெற்றோர் போடுகிற சட்டங்களை ரகசியமாக மீறுவார்கள்.

  • வயதிற்குப் பொருந்தாத கட்டுப்பாடுகள். உங்கள் சிறுவயது பிள்ளையிடம், “நான் சொன்னா செய்யணும், அவ்வளவுதான்!” என்றாலே போதும். ஆனால் டீனேஜ் பிள்ளையிடம் அப்படிச் சொன்னால் போதாது, காரணங்களையும் சொல்ல வேண்டும். அவர்கள் சீக்கிரம் சொந்தக் காலில் நிற்கப்போகிறார்கள், வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கப்போகிறார்கள். உங்கள் நிழலில் இருக்கும்போதே அவர்கள் நன்கு யோசித்து நல்ல தீர்மானங்களை எடுக்கக் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் பிரயோஜனமாக இருக்கும் அல்லவா?

ஆனால், நீங்கள் எந்தக் கட்டுப்பாடு விதித்தாலும் உங்கள் பிள்ளை எரிச்சல் அடைந்தால் என்ன செய்வது?

நீங்கள் என்ன செய்யலாம்?

டீனேஜ் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது அவசியம் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள்; வெளியே சொல்லாவிட்டாலும் பிள்ளைகள் அதை விரும்புவார்கள்! எனவே, கட்டுப்பாடுகளை விதியுங்கள், அதை விதித்ததற்கான காரணத்தையும் புரியவையுங்கள். “பெற்றோர்கள் தங்களுடைய டீனேஜ் பிள்ளைகளுக்குத் திட்டவட்டமான சில கட்டுப்பாடுகளை விதித்தால்... ஓரளவு தங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொண்டால்... அவர்கள் தடம்புரண்டு போக மாட்டார்கள்” என்கிறது ஒரு புத்தகம் (லெட்டிங் கோ வித் லவ் அண்ட் காண்பிடண்ஸ்). ஆனால், பிள்ளைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காவிட்டால் தங்கள்மீது பெற்றோருக்கு அக்கறையே இல்லை என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். கீழ்ப்படியாமல்போக அது அவர்களுக்கு ஒரு காரணமாகிவிடும்.—பைபிள் நியதி: நீதிமொழிகள் 29:15.

இந்த விஷயத்தில் எப்படிச் சமநிலை காட்டலாம்? நீங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி டீனேஜ் பிள்ளைகளின் கருத்துகளை அவர்களிடமிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று நீங்கள் போடும் சட்டத்தில் கொஞ்சம் மாற்றம் செய்யும்படி உங்கள் டீனேஜ் பிள்ளை கேட்கும்போது, அவன் சொல்லும் காரணத்தைக் காதுகொடுத்துக் கேளுங்கள். தான் சொல்வதைக் கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதை அவன் உணரும்போது நீங்கள் விதித்த கட்டுப்பாட்டை மதிப்பான். அது அவனுக்குப் பிடிக்காவிட்டால்கூட அதற்குக் கீழ்ப்படியத் தூண்டப்படுவான்.—பைபிள் நியதி: யாக்கோபு 1:19.

எந்தவொரு தீர்மானம் எடுப்பதற்குமுன் இதை நினைவில் வையுங்கள்: பொதுவாக, டீனேஜ் பிள்ளைகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டியதைவிட அதிக சுதந்திரம் வேண்டுமெனக் கேட்பார்கள், பெற்றோரோ கொடுக்க வேண்டியதைவிட குறைவான சுதந்திரத்தைக் கொடுக்க நினைப்பார்கள். எனவே, உங்கள் பிள்ளையின் கோரிக்கையைக் கவனமாக யோசித்துப் பாருங்கள். அவன் பொறுப்பானவன் என்பதைக் காட்டியிருக்கிறானா, சூழ்நிலை பொறுத்து கொஞ்சம் வளைந்துகொடுக்கலாமா என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். தேவைப்படும்போது வளைந்துகொடுக்க மனமுள்ளவர்களாய் இருங்கள்.—பைபிள் நியதி: ஆதியாகமம் 19:17-22.

உங்கள் டீனேஜ் பிள்ளை மனம்விட்டுப் பேசுவதைக் கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவனுடைய நலனில் உங்களுக்கு இருக்கும் அக்கறையைத் தெரியப்படுத்துங்கள். அப்படிச் செய்தால், தன்னுடைய உணர்ச்சிகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுக்க அவன் கற்றுக்கொள்வான்.—பைபிள் நியதி: 1 கொரிந்தியர் 10:24.

கடைசியாக, என்ன கட்டுப்பாடு விதிப்பதெனத் தீர்மானித்து, அதற்கான காரணங்களை விளக்குங்கள். அந்தக் கட்டுப்பாடு உங்கள் பிள்ளைக்கு அவ்வளவாகப் பிடிக்காவிட்டால்கூட தன் கருத்துகளைப் பெற்றோர் கேட்டதற்காகச் சந்தோஷப்படுவான். முதிர்ச்சி நோக்கிச் செல்கிற பாதையில் இது அவனுக்கு ஒரு பயிற்சி என்பதை மறந்துவிடாதீர்கள். ஆக, நியாயமான கட்டுப்பாடுகளை விதியுங்கள், அதைப் பற்றி அவனிடம் கலந்துபேசுங்கள், அப்போது அவன் பொறுப்புள்ள பிள்ளையாக வளருவான்.—பைபிள் நியதி: நீதிமொழிகள் 22:6. ◼ (g13-E 03)

a இந்தக் கட்டுரையில் டீனேஜ் பிள்ளைகளை நாம் ஆண்பாலில் குறிப்பிட்டாலும் இதிலுள்ள ஆலோசனைகள் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.