Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 குடும்ப மகிழ்ச்சிக்கு

உங்கள் டீனேஜ் பிள்ளையிடம் வாதாடாதீர்கள், பேசுங்கள்

உங்கள் டீனேஜ் பிள்ளையிடம் வாதாடாதீர்கள், பேசுங்கள்

“14 வயசுலயிருந்து என் பொண்ணு என்னை எதிர்த்து பேச ஆரம்பிச்சா. சாப்பிடவானு கூப்பிட்டா, ‘எனக்கு இப்போ பசிக்கல எப்ப தோனுதோ அப்ப சாப்பிடுவேன்’-னு சொல்லுவா. சொன்ன வேலைய முடிச்சிட்டியானு கேட்டா, ‘சும்மா தொனதொனனு ஏதாவது சொல்லிட்டே இருக்காதீங்க!’-னு சொல்லுவா. நிறைய சமயம் ரெண்டு பேரும் கோபத்தில மாத்தி மாத்தி கத்த ஆரம்பிச்சிடுவோம்.” —மாகீ, ஜப்பான். *

உங்களுக்கும் டீனேஜ் பிள்ளைகள் இருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்களை வளர்ப்பது உங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கலாம். உங்கள் பொறுமையை ரொம்பவே சோதிக்கலாம். “என் பொண்ணு எதிர்த்து பேசும்போது எனக்கு கோபம் தலைக்கு ஏறும்” என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த 14 வயது மகளின் தாய், மரியா. இத்தாலியைச் சேர்ந்த கார்மெலாவுக்கும் இதே போராட்டம்தான். “கோபத்தில நானும் என் பையனும் சரமாரியா கத்திக்குவோம்! கடைசியா அவன் ரூம்க்குபோய் கதவ சாத்திக்கிட்டு வெளியவே வரமாட்டான்” என்கிறார் அவர்.

சில டீனேஜ் பிள்ளைகள் ஏன் எதிர்த்துப் பேசுகிறார்கள்? காரணம் அவர்கள் நண்பர்களா? ஒருவேளை அதுகூட காரணமாக இருக்கலாம்! நாம் யாருடன் நெருங்கிப் பழகுகிறோமோ அவர்களைப் போலவே ஆகிவிடுவோம் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33) இளைய தலைமுறையைக் குறிவைக்கும் இன்றைய பொழுதுபோக்குகளும் அதற்கு மற்றொரு காரணம். எப்படியென்றால், எதிர்த்துப் பேசுவது, மரியாதையில்லாமல் பேசுவது ஒன்றும் தவறில்லை என்பதுபோல் அவைச் சித்தரிக்கின்றன.

உங்கள் டீனேஜ் பிள்ளை இப்படி இருப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. அவற்றை நீங்கள் தெரிந்துகொள்வது உங்கள் டீனேஜ் பிள்ளையைப் புரிந்துகொள்ள உதவும், வாக்குவாதத்தைத் தவிர்க்கவும் உதவும். அதில் சில காரணங்களைக் கவனியுங்கள்.

“சிந்திக்கும் திறனை” வளர்க்கும் டீன்கள்

“நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப் போல் பேசினேன், குழந்தையைப் போல் சிந்தித்தேன், குழந்தையைப் போல் யோசித்தேன்; இப்போது நான் பெரியவனாகிவிட்டதால் குழந்தைத்தனமானவற்றை ஒழித்துவிட்டேன்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:11) பிள்ளைகளும் பெரியவர்களும் வித்தியாசமாக யோசிப்பார்கள்  என்பது பவுலின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. எப்படி?

பொதுவாக, சிறுபிள்ளைகள் ஒரு விஷயத்தைச் சரியா, தவறா என்று மேலோட்டமாக மட்டுமே பார்ப்பார்கள். பெரியவர்களோ ஏன், எதற்கு என்றெல்லாம் ஆழமாக யோசிப்பார்கள். தீர்மானம் எடுப்பதற்குமுன் அதில் இருக்கும் நல்லது, கெட்டதைப் பகுத்தாராய்வார்கள், அது மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்றெல்லாம் யோசிப்பார்கள். இப்படி யோசிப்பது அவர்களுக்குப் பழக்கமாகியிருக்கலாம். ஆனால், டீனேஜ் பிள்ளைகள் இப்படி யோசிக்க இப்போதுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

இளம் பிள்ளைகள் ‘விவேகமாக’ யோசிக்க வேண்டும் என்று பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 1:4) சொல்லப்போனால், எல்லோருமே “சிந்திக்கும் திறனை” வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:1, 2; எபிரெயர் 5:14) உங்கள் டீனேஜ் பிள்ளை இப்போதுதான் தன் சிந்திக்கும் திறனைப் பயிற்றுவிக்க ஆரம்பித்திருப்பதால் சில சமயங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட உங்களோடு வாக்குவாதம் பண்ணலாம். * அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவிக்கலாம். (நீதிமொழிகள் 14:12) இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனோடு வாக்குவாதம் செய்வீர்களா அல்லது அவனிடம் பேசி புரியவைப்பீர்களா?

இப்படிச் செய்து பாருங்கள்: உங்கள் டீனேஜ் பிள்ளை இப்போதுதான் தன் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான். அதனால் அவன் சொன்ன கருத்தில் இன்னும் உறுதியாக இல்லாதிருக்கலாம். அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க இப்படிக் செய்யுங்கள்: முதலில், அவன் யோசித்த விதத்திற்காகப் பாராட்டுங்கள். (“நீ நல்லா யோசிச்சிருக்க, ஆனா அதுல ஒருசில விஷயங்கல மாத்துனா நல்லா இருக்கும்.”) அதிலுள்ள குறைகளை அவனே கண்டுபிடிக்க உதவுங்கள். (“நீ சொன்ன விஷயம், எல்லா சூழ்நிலைக்கும் ஒத்து வரும்னு நினைக்கிறியா?”) இப்படிச் செய்யும்போது உங்கள் பிள்ளை தன் கருத்தைத் திரும்ப யோசித்துப் பார்க்கவும் அதில் மாற்றங்கள் செய்யவும் கற்றுக்கொள்வான். அதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

ஓர் எச்சரிக்கை: இப்படிப் பேசும்போது நீங்கள் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்க முயலாதீர்கள். நீங்கள் அவனிடம் சொல்வது ஒருவேளை செவிடன் காதில் ஊதிய சங்குபோல் தோன்றலாம்; ஆனால், நிச்சயம் அவன் அதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பான். கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு உங்கள் கருத்துக்களை அவன் ஏற்றுக்கொள்ளலாம், ஏன் அதைத் தன்னுடையது என்றுகூட சொல்லலாம்.

“சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட நானும் என் பையனும் வாக்குவாதம் பண்ணுவோம்; ‘எதையும் வீணாக்காத’னு சொன்னாலோ ‘தங்கச்சிகிட்ட சண்டப்போடாத’னு சொன்னாலோ எதிர்த்து பேசுவான். அந்த மாதிரி சமயத்தில, ‘நீ ஏன் அப்படி செஞ்ச’னு நான் கேட்கணும்னு எதிர்ப்பார்தான். அவன புரிஞ்சிக்கிட்டு, ‘இதனாலதான் நீ இப்படி செஞ்சியா’னு நான் சொல்லணும்னு விரும்பினான். நான் அப்படி செஞ்சிருந்தா எத்தனையோ வாக்குவாதங்களை தவிர்த்திருக்கலாம்.”—கென்ஜி, ஜப்பான்.

தனித்துவத்தை உருவாக்கும் டீன்கள்

டீனேஜ் பிள்ளைகள் தங்கள் மனதில் இருப்பதைச் சொல்ல ஞானமுள்ள பெற்றோர் உதவுவார்கள்

டீனேஜ் பிள்ளைகள் சொந்த காலில் நிற்க உதவுவதும் அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக ஆக்குவதும்தான் பெற்றோரின் முக்கியப் பொறுப்பு. (ஆதியாகமம் 2:24) பிள்ளைகளுக்கென்று ஒரு தனித்துவத்தை அதாவது நல்ல குணங்களை, கொள்கைகளை, நம்பிக்கைகளை, ஒழுக்க நெறிகளை வளர்க்க உதவுவதும் அதில் உட்பட்டிருக்கிறது. இப்படித் தனித்துவத்தைக் கொண்டிருக்கும் டீனேஜ் பிள்ளைக்குத் தவறு செய்ய எண்ணம் வந்தால் பின்விளைவுகளை மட்டுமல்ல இன்னும் அதிகத்தை யோசிப்பான். தன்னையே இப்படிக் கேட்டுக்கொள்வான்: ‘நான் எப்படிப்பட்டவன்? எப்படிப்பட்ட நெறிகளைக் கடைப்பிடிக்கிறேன்? இதுபோன்ற நெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள் என் சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்வார்கள்?’—2 பேதுரு 3:11.

தனக்கெனத் தனித்துவத்தைக் கொண்டிருந்த ஒரு வாலிபரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர் பெயர் யோசேப்பு. போத்திபாரின் மனைவி தன் ஆசைக்கு இணங்கும்படி அவரை வற்புறுத்தியபோது, “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று சொன்னார். (ஆதியாகமம் 39:9) பாலியல் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது என்ற பைபிள் சட்டம் அந்தச் சமயத்தில் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் இந்த விஷயத்தைப் பற்றி கடவுள் எப்படி உணர்வார் என்பதை யோசேப்பு புரிந்துவைத்திருந்தார். ‘நான் எப்படி’ என்று அவர் சொன்னதிலிருந்து தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது, ஆம், கடவுளுடைய நோக்குநிலையில் விஷயங்களைப் பார்ப்பதையே தன் தனித்துவமாகக் கொண்டிருந்தார்.—எபேசியர் 5:1.

உங்கள் டீனேஜ் பிள்ளையும் தனக்கென ஒரு தனித்துவத்தை, கொள்கைகளை உருவாக்கும் பருவத்தில் இருக்கிறான். இது அவனுக்குப் பிரயோஜனமானது. ஏனென்றால், தன் கொள்கைகளில் உறுதியாக இருப்பது நண்பர்களிடமிருந்து வரும் சவால்களைச் சமாளிக்கவும், எதிர்த்து நிற்கவும் அவனுக்கு உதவும். (நீதிமொழிகள் 1:10-15) மறுபட்சத்தில், அதே உணர்வு உங்களை எதிர்க்கவும் அவனைத் தூண்டலாம். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்?

இப்படிச் செய்து பாருங்கள்: அவனோடு வாக்குவாதம் செய்யாதீர்கள்; அவன் சொல்ல வரும் விஷயத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதைத் தெரியப்படுத்த அவன் சொன்ன விஷயத்தையே திரும்ப சொல்லுங்கள். (“இத தானே நீ சொல்லவற . . .”) பின்பு அவனை யோசிக்க வைக்க சில கேள்விகளைக் கேளுங்கள். (“நீ ஏன் அப்படி நினைக்கிற?” அல்லது “ஏன் இந்த முடிவுக்கு வந்த?”) அவன் ஆழ் மனதில் இருப்பதை தெரிந்துகொள்ள  முயற்சி செய்யுங்கள். தன் மனதில் இருப்பதை உங்களிடம் சொல்ல அனுமதியுங்கள். அவன் சொல்லும் விஷயத்தில் எந்தத் தவறும் இல்லாவிட்டால், அவனுடைய விருப்பத்திற்கு விட்டுக்கொடுங்கள்.

ஒருவர் தனக்கென ஒரு தனித்துவத்தை, நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்வது இயல்பானது மட்டுமல்ல நல்லதும்கூட. நாம் சிறு பிள்ளைகள்போல் ஏமாந்து போகக்கூடாது என்பதைப் பின்வரும் பைபிள் வசனம் சொல்கிறது: ‘மனிதர்களுடைய ஏமாற்று வழிகளை நம்பி, அலைகளினால் அலைக்கழிக்கப்படவோ அவர்களுடைய போதனைகளாகிய பலவித காற்றினால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படவோ கூடாது.’ (எபேசியர் 4:14) எனவே, உறுதியான நம்பிக்கையோடு தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டிருக்க உங்கள் டீனேஜ் பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள்.

“என் பொண்ணுங்க சொல்றத நான் காதுகொடுத்து கேட்கும்போது நான் என்ன சொல்லவறேனு புரிஞ்சிக்க அவங்களும் முயற்சி எடுப்பாங்க, அது ஒருவேள அவங்களுக்கு புடிக்கலன்னாகூட கேட்பாங்க. நான் சொல்றததான் கேட்டாகணும்னு வற்புறுத்த மாட்டேன். சொந்தமா தீர்மானம் எடுக்க விட்டுடுவேன்.”—இவானா, செக் குடியரசு.

உறுதியாக இருங்கள், அதேசமயம் வளைந்துகொடுங்கள்

சின்ன பிள்ளைகள் அடம் பிடித்தே காரியத்தைச் சாதித்துவிடுவதுபோல் சில டீனேஜ் பிள்ளைகளும் வாக்குவாதம் செய்தே காரியத்தைச் சாதித்துவிட நினைப்பார்கள். உங்கள் டீனேஜ் பிள்ளையும் அப்படித்தானா? ஒருமுறை நீங்கள் இணங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் வாக்குவாதம் செய்தே காரியத்தைச் சாதிக்கலாம் என்று நினைப்பார்கள். எனவே, உறுதியாக இருங்கள். “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்” என்று இயேசு சொன்ன அறிவுரையைப் பின்பற்றுங்கள். (மத்தேயு 5:37) நீங்கள் சொன்ன விஷயத்தில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால் பெரும்பாலும் வாக்குவாதம் செய்யமாட்டார்கள்.

அதேசமயம், நியாயமாகவும் நடந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, என்றாவது ஒருநாள் வீட்டுக்குத் தாமதமாக வர பிள்ளை அனுமதி கேட்டால் அதற்கான காரணத்தைச் சொல்ல அனுமதியுங்கள். அப்படிச் செய்யும்போது நீங்கள் கெடுபிடியான பெற்றோர் அல்ல, பைபிள் சொல்வதுபோல் “நியாயமானவர்” என்பதைக் காட்டுவீர்கள்.—பிலிப்பியர் 4:5.

இப்படிச் செய்து பாருங்கள்: கட்டுப்பாடுகளை விதிப்பதற்குமுன் குடும்பமாகக் கலந்துபேசுங்கள். பிள்ளையிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், எத்தனை மணிக்குள் வீட்டுக்கு வரவேண்டும் போன்ற விஷயங்களைப் பற்றி பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். எல்லோருடைய கருத்தையும் சீர்தூக்கி பார்த்த பிறகு தீர்மானம் எடுங்கள். “பைபிள் நியமத்துக்கு விரோதமா இல்லாதவரை பெற்றோர் வளைந்துகொடுப்பாங்கனு டீனேஜ் பிள்ளைங்க புரிஞ்சிக்கணும்” என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த ராபெர்டோ என்கிற அப்பா.

தவறே செய்யாத பெற்றோரென யாரும் கிடையாது. “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2) வாக்குவாதத்திற்கு நீங்கள் எந்த விதத்திலாவது காரணமாக இருந்தால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் மனத்தாழ்மையுள்ளவர் என்பதைக் காட்டுவீர்கள். உங்கள் பிள்ளைக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பீர்கள்.

“ஒருதடவை நானும் என் பையனும் சரமாரியா வாக்குவாதம் பண்ணோம். என் கோபம் தணிஞ்சதும் நான் அவன்கிட்ட மன்னிப்பு கேட்டேன். அப்படி செஞ்சதுனால அவனுடைய கோபம் தணிஞ்சது, நான் சொன்னதையும் காதுகொடுத்து கேட்டான்.”—கென்ஜி, ஜப்பான். ▪ (w13-E 11/01)

^ பாரா. 3 இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 10 இந்தக் கட்டுரையில் டீனேஜ் பிள்ளைகளை ஆண் பிள்ளைகளாகக் குறிப்பிட்டிருந்தாலும் இந்த விஷயங்கள் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

உங்களையே இப்படிக் கேட்டுக் கொள்ளுங்கள்

  • வாக்குவாதத்திற்கு நானும் காரணமாக இருக்கிறேனா?

  • என் டீனேஜ் பிள்ளையை நன்கு புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எப்படி உதவியாக இருக்கும்?

  • டீனேஜ் பிள்ளையிடம் வாக்குவாதம் செய்யாமல் பேச நான் என்ன செய்யலாம்?