Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”

“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”

குடும்பத்தோடு சந்தோஷமாக, ஆரோக்கியமாக என்றென்றும் வாழ ஆசைப்படுகிறீர்களா? வலி, வேதனை, மரணம் இல்லாத காலத்திற்காக ஏங்குகிறீர்களா? நீதியான புதிய உலகில் இதை நிறைவேற்றப்போவதாக நம் கடவுளாகிய யெகோவாவே சொல்லியிருக்கிறார். இது கனவோ வீண் ஆசையோ அல்ல, நிஜமாக நடக்கப்போகும் ஒன்று. சொல்லப்போனால் இதுதான் கடவுளுடைய நோக்கமாக இருக்கிறது. இதை வெளிப்படுத்துதல் 21:3-5-ல் வாசித்துப் பாருங்களேன்!

“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.” (வெளிப்படுத்துதல் 21:4) எப்படிப்பட்டக் கண்ணீரைத் துடைப்பார்? நம் கண்களைச் சுத்தப்படுத்தும் கண்ணீரையோ, சந்தோஷத்தால் பொங்கும் ஆனந்தக் கண்ணீரையோ அல்ல, துன்பத் துயரத்தினால் மக்கள் சிந்தும் சோகக் கண்ணீரைத்தான் கடவுள் துடைக்கப்போகிறார். ஆம், இந்தக் கண்ணீருக்குக் காரணமாக இருக்கும் துன்பத் துயரங்களை நிரந்தரமாக நீக்கப்போகிறார்.

“இனி மரணம் இருக்காது.” (வெளிப்படுத்துதல் 21:4) மரணத்தில் ஒருவரை இழக்கும்போது நம் கண்ணீருக்கு அணைக்கட்டுவது கடினம். ஆனால், தமக்குக் கீழ்ப்படியும் ஜனங்களை மரணத்தின் பிடியிலிருந்து யெகோவா விடுவிக்கப்போவதாக வாக்குகொடுத்திருக்கிறார். எப்படி விடுவிப்பார்? மரணத்திற்கான ஆணிவேரை நீக்குவதன் மூலம், அதாவது ஆதாமிடமிருந்து வழிவழியாக வந்த பாவத்தை நீக்குவதன் மூலம், விடுவிக்கப்போகிறார். (ரோமர் 5:12) இயேசுவின் பலி மூலமாக யெகோவா அவர்களை எந்தக் குறையுமில்லாத பரிபூரண மனிதர்களாகப் படிப்படியாக மாற்றுவார். * அப்போது மரணம் “ஒழிக்கப்படும்.” (1 கொரிந்தியர் 15:26) அதன்பின் கடவுளுடைய நோக்கம் நிறைவேறும். மனிதர்கள் சந்தோஷமாக, ஆரோக்கியமாக என்றென்றும் வாழ்வார்கள்.

“வேதனை இருக்காது.” (வெளிப்படுத்துதல் 21:4) எப்படிப்பட்ட வேதனை இருக்காது? பாவத்தினாலும் அபூரணத்தினாலும் வரும் உடல் ரீதியான, மன ரீதியான, உணர்ச்சி ரீதியான வேதனைகள் இருக்காது; மனிதர்களை ஆட்டிப்படைக்கும் இவை எல்லாவற்றையும் கடவுள் முற்றிலுமாக நீக்கிப்போடுவார்.

கண்ணீர், மரணம், வேதனை இல்லாத வாழ்க்கை விரைவில் நிஜமாகப் போகிறது. ஆனால், இந்த அருமையான வாழ்க்கையை எங்கே அனுபவிப்போம்? பரலோகத்திலா? நிச்சயம் இல்லை. ஏனென்றால், வெளிப்படுத்துதல் 21:3-ல், ‘கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கிறது’ என்று வாசிக்கிறோம். மனிதர்கள் பூமியில்தான் வாழ்கிறார்கள்; பரலோகத்தில் அல்ல. அதோடு, “இனி மரணம் இருக்காது” என்றும் வாசிக்கிறோம். பரலோகத்தில் மரணம் என்ற ஒன்று இருந்ததே இல்லை, பூமியில்தான் காலங்காலமாக இருந்துவருகிறது. எனவே, மனிதர்களுக்கு அருமையான வாழ்க்கையைக் கடவுள் பூமியில்தான் தரப்போகிறார்.

துன்ப துயரங்களினால் நம் கண்களில் பாய்ந்தோடும் வெள்ள ஆற்றிற்கு கடவுள் நிரந்தரமாக அணைக்கட்ட போகிறார்!

இந்த வாக்குறுதியில் நமக்குத் துளியும் சந்தேகம் வேண்டாம். ஏனென்றால், “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் . . . இந்த வார்த்தைகள் உண்மையானவை, சத்தியமானவை” என்று யெகோவாவே உறுதியளிக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:5) இந்த அருமையான வாக்குறுதி நிஜமாவதைக் கடவுளுடைய மக்கள் பார்க்கப்போகிறார்கள், நீங்களும் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இதைப் பற்றி ஏன் நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ளக்கூடாது. ▪ (w13-E 12/01)

ஜனவரி – மார்ச் மாதங்களுக்கான பைபிள் வாசிப்பு

ஆதியாகமம் 1 யாத்திராகமம் 6

^ பாரா. 5 கிறிஸ்துவின் பலி பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 5-ஐ பாருங்கள்.