Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானம்

இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானம்

இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானம்

‘மிருகங்களைப் பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப் பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கினீர்.’​—⁠யோபு 35:10.

பறவைகளிடம் அபாரத் திறமைகள் உள்ளன. அவை ஆகாயத்தில் செய்யும் சாகசங்களை விமான வடிவமைப்பாளர்கள் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சில பறவையினங்கள், பரந்து விரிந்திருக்கும் பெருங்கடல்மீது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறந்து சென்று எங்கிருந்து கிளம்பியதோ அந்த இடத்திற்கே மீண்டும் திரும்புகின்றன.

பறவைகள், ஒலிகள் எழுப்பியும் பாடல்கள் பாடியும் ஒன்றோடொன்று பேசிக் கொள்கின்றன. அவற்றுக்கு உள்ள இந்த ஒப்பற்றத் திறன் படைப்பாளரின் ஞானத்திற்கு மகுடம் சூட்டுகிறது. அதற்குச் சில உதாரணங்கள் இதோ:

பறவைகளின் பேச்சு

சில இனப் பறவைகளின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருவதற்கு முன்பே ஒன்றோடொன்று ‘பேசிக்’ கொள்கின்றன. உதாரணமாக, பெண் காடை ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ற கணக்கில் கிட்டத்தட்ட எட்டு முட்டைகள் இடுகிறது. ஒருவேளை, எல்லா முட்டைக்கருவும் ஒரே வேகத்தில் வளர்ச்சியடைந்தால் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் எட்டு நாளைக்குள் எல்லா குஞ்சுகளும் வெளியே வந்துவிடும். இப்படி நடந்தால் தாய் பறவை திண்டாடிவிடும். ஏனென்றால், வெளியே வந்து சுமார் ஒரு வாரமே ஆன குஞ்சுகளைக் கவனிப்பதோடு இன்னும் குஞ்சு பொரியாமல் இருக்கும் ஒரு முட்டையை அடைகாக்க வேண்டுமென்றால் அது திணறிவிடும். ஆனால், அப்படி நடப்பதற்குப் பதிலாக எட்டுக் குஞ்சுகளும் ஆறு மணி நேரத்திற்குள் ஒன்றொன்றாக முட்டைகளை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றன. அது எப்படி? காடை குஞ்சுகள் முட்டைக்குள்ளிருந்தே ஒன்றுக்கொன்று எப்படியோ ‘பேசிக்’ கொண்டு, ஒரே சமயத்தில் வெளியே வருவதற்கு திட்டம் போடுவதே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பறவைகள் வளர்ச்சி அடைந்த பிறகு, அவற்றில் பொதுவாக ஆண் பறவைதான் பாட்டு பாடும். விசேஷமாக, இனப்பெருக்க காலத்தில், ‘இது என்னுடைய இடம்’ என்று சொல்லாமல் சொல்வதற்கும் தன் துணையைக் கவருவதற்கும் இப்படிப் பாடும். பறவைகளில் ஆயிரக்கணக்கான இனங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தங்களுக்கே உரிய ‘மொழியில்’ பேசுகின்றன. இதனால் பெண் பறவை தன் இனத்தைச் சேர்ந்த துணையைக் கண்டுபிடிக்க முடிகிறது.

பறவைகள் அதிகாலையிலும் அந்திசாயும் வேளையிலும்தான் அதிகமாய்ப் பாடுகின்றன. அதற்குக் காரணம் என்னவென்றால், அச்சமயங்களில் காற்றும் அதிகமாக அடிக்காது, இரைச்சலும் இருக்காது. நண்பகலைவிட காலையிலும் மாலையிலும்தான் அவற்றின் பாட்டு சுமார் 20 மடங்கு அதிகமாகக் கேட்கிறது.

பெரும்பாலும் ஆண் பறவைகளே பாடினாலும் ஆண் பறவையும் சரி பெண் பறவையும் சரி இரண்டுமே வெவ்வேறு அர்த்தமுள்ள வித்தியாசமான ஒலிகளை எழுப்பும். உதாரணமாக, சாஃபின்ச் பறவைகள் ஒன்பது வித்தியாசமான ஒலிகளை எழுப்புகின்றன. ஆகாயத்தில் எதிரி பறவையின் நடமாட்டம் தெரிந்தால் அவை ஒரு விதமான அபாய ஒலியை எழுப்பும். கீழே இருக்கும் எதிரிகளிடமிருந்து வரும் ஆபத்தை அறிவிப்பதற்கு வேறு விதமான அபாய ஒலியை எழுப்பும்.

ஒப்பற்ற பரிசு

படைப்பாளர் பறவைகளுக்குக் கொடுத்திருக்கும் ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், மனிதர்களுக்கு இருக்கும் பேச்சுத் திறனோ அதைவிட பல மடங்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. “ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும்” மனிதர்களை கடவுள் ‘ஞானவான்களாக’ படைத்திருக்கிறார் என்று யோபு 35:10 சொல்கிறது. தொண்டையில் உள்ள நாளங்களின் அதிர்வால் வருகிற ஒலியின் மூலமாகவும் சைகையின் மூலமாகவும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத, சிக்கலான எண்ணங்களையும் கருத்துகளையும் தெரிவிக்கும் திறன் மனிதருக்கு மட்டுமே உள்ளது.

எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத அபாரத் திறன் மனிதர்களுக்கு இருக்கிறது. சிக்கலான மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு இயல்பாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஆன்லைன் பத்திரிகையான அமெரிக்கன் சைன்டிஸ்ட் சொல்வதாவது: “பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் நேரடியாகப் பேசாவிட்டாலும்கூட அந்தக் குழந்தைகள் அவர்களுடைய மொழியை கற்றுக்கொள்கிறார்கள். கேட்கும் திறனற்ற பிள்ளைகளோ இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்கள்; அதாவது, வீட்டில் சைகை மொழி கற்றுக் கொடுக்கப்படாவிட்டாலும்கூட, அவர்களாகவே ஒரு சைகை மொழியை உருவாக்குகிறார்கள்.”

மனதிலுள்ள எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வார்த்தைகளில் அல்லது சைகைகளில் தெரிவிக்கும் திறமை நமக்கு இருக்கிறது. இது கடவுள் நமக்குத் தந்திருக்கும் ஓர் அற்புதமான பரிசு. என்றாலும், கடவுளிடம் ஜெபிப்பது அதைவிட மிகப் பெரிய பரிசாக இருக்கிறது. சொல்லப்போனால், கடவுளாகிய யெகோவா தம்முடன் பேசும்படி நம்மை ஊக்குவிக்கிறார். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று அவருடைய புத்தகமாகிய பைபிள் சொல்கிறது.​—பிலிப்பியர் 4:6.

நாம் எப்படிப்பட்ட பிரச்சினையை சந்தித்தாலும் சரி எந்தவிதமான சூழ்நிலையில் சிக்கித் தவித்தாலும் சரி, பைபிளில் பொதிந்துள்ள ஞானமான அறிவுரைகள் நமக்கு உதவும். எனவே, நாம் தீர்மானம் செய்ய முடியாமல் தவிக்கும் சமயத்தில் பைபிளைப் படித்து பயனடைய வேண்டுமென யெகோவா விரும்புகிறார். அதிலுள்ள அறிவுரைகளை எப்படிக் கடைப்பிடிப்பது என்பதையும் அவர் நமக்குச் சொல்லித் தருவார். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” என்று பைபிள் எழுத்தாளரான யாக்கோபு சொன்னார்.​—யாக்கோபு 1:5.

நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

பறவையின் இனிய கீதத்தைக் கேட்கும்போது அல்லது ஒரு மழலை முதன்முதலாக சொல்லும் வார்த்தையைக் கேட்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? கடவுளுடைய ஞானம் அவருடைய படைப்புகளில் பளிச்சிடுவது உங்களுக்குத் தெரிகிறதா?

சங்கீதக்காரனாகிய தாவீது, தான் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பிறகு மிகவும் நெகிழ்ந்து போய் கடவுளிடம் இவ்வாறு சொன்னார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (சங்கீதம் 139:14) இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானத்தை கவனமாய்ச் சிந்தித்துப் பாருங்கள். அவரால் உங்களுக்கு ஞானமான வழிநடத்துதலை நிச்சயம் தர முடியும் என்ற நம்பிக்கை அப்போது பெருகும். (w08 5/1)

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

பேசும் திறன் கடவுள் நமக்குத் தந்த பரிசு

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

© Dayton Wild/Visuals Unlimited