Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பண்பற்ற உலகில் பிள்ளைகளை வளர்த்தல்

பண்பற்ற உலகில் பிள்ளைகளை வளர்த்தல்

பண்பற்ற உலகில் பிள்ளைகளை வளர்த்தல்

பெற்றோர் வாங்கித்தர மறுக்கும் ஒரு விளையாட்டுச் சாமானைக் கேட்டு அடம்பிடிக்கும் பிள்ளையை எப்பொழுதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது, “ஒரு இடத்தில் நில்” என்று பெற்றோர் சொன்ன பிறகும், அங்குமிங்கும் ஓடுகிற பிள்ளையைப் பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக, பிள்ளையின் நன்மைக்காகவே பெற்றோர் அப்படிச் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். என்றாலும், அநேக சமயங்களில் பிள்ளையின் விருப்பத்திற்கே பெற்றோர் விட்டுவிடுகிறார்கள். ‘முடியாது’ என்று முதலில் மறுத்த பெற்றோர், பிள்ளை அழுது அடம்பிடிக்கையில், ‘சரி’ என்று தலையசைத்துவிடுகிறார்கள்.

பிள்ளைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பதுதான் நல்ல பெற்றோருக்கு அடையாளம் என அநேக பெற்றோர் நினைப்பதுபோல் தெரிகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் 12-க்கும் 17-க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள 750 பிள்ளைகளிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. தங்களுடைய விருப்பத்திற்கு அப்பா அம்மா மறுப்பு தெரிவிக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கப்பட்டது; அதற்கு, ‘நாங்கள் விடாமல் கேட்டுக்கொண்டே இருப்போம்’ என்று கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் பதில் சொன்னார்கள். இந்த உத்தி நன்கு வேலை செய்திருப்பதாக அவர்களில் சுமார் 55 சதவீதத்தினர் சொன்னார்கள். இப்படி அவர்கள் போக்கில் விட்டுவிடுவது அன்பான செயல் என்று பெற்றோர் நினைக்கலாம். ஆனால் அது உண்மையா?

பழங்காலப் பொன்மொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால் [அதாவது, விருப்பப்படி விட்டுவிட்டால்], அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.” (நீதிமொழிகள் 29:21, பொது மொழிபெயர்ப்பு) ஒரு பிள்ளையை யாரும் அடிமை என்று சொல்லமாட்டார்கள்தான். ஆனாலும், இதே நியதி பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்திற்கும் பொருந்துகிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா? பிள்ளைகளுக்குச் செல்லம்கொடுத்து, அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்தால், வளர்ந்த பிறகு அவர்கள் “நன்றிகெட்டவர்களாய்” ஆகிவிடலாம்; அதாவது, கெட்டுக் குட்டிச்சுவராகிவிடலாம், பிடிவாத குணமுள்ளவர்களாய் ஆகிவிடலாம்.

அதற்கு நேர்மாறாக, ‘பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்தும்படி’பெற்றோருக்கு பைபிள் ஆலோசனை கொடுக்கிறது. (நீதிமொழிகள் 22:6) ஞானமுள்ள பெற்றோர், இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கிறார்கள்; தெளிவான, நியாயமான, மாறாத விதிமுறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். பிள்ளைகளின் போக்கிலேயே போகவிடுவது அன்பான செயல் என்று அவர்கள் நினைப்பதில்லை; அதே சமயத்தில், பிள்ளைகள் அடம்பிடித்து அழும்போதோ, நச்சரிக்கும்போதோ, தாங்கள் நினைத்ததைச் சாதிக்கத் துடிக்கும்போதோ, அதற்கு இணங்கிவிடுவதுமில்லை. மாறாக, இயேசு சொன்னபடியே செய்கிறார்கள். “நீங்கள் பேசும்போது, ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 5:37, பொ.மொ.) அப்படியென்றால், பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? அதற்கு, வலிமையான ஓர் உதாரணத்தைச் சிந்திப்போம்.

‘பலவான் கையிலுள்ள அம்புகள்’

பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான பந்தத்தை விளக்க பைபிளில் ஓர் உதாரணம் உள்ளது; பிள்ளைக்குப் பெற்றோரின் வழிகாட்டுதல் தேவை என்பதை அது வலியுறுத்துகிறது. “வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்” என்று சங்கீதம் 127:5, 6 சொல்கிறது. இங்கே, பிள்ளைகள் அம்புகளுக்கும் பெற்றோர் வில்வீரனுக்கும் ஒப்பிடப்படுகிறார்கள். தன்னிடமுள்ள அம்பு தானாகவே இலக்கை அடையுமென்று ஒரு வில்வீரர் எதிர்பார்க்க மாட்டார்; அவ்வாறே, பிள்ளைகளும் தாங்களாகவே நல்லபடியாக வளர்ந்துவிட மாட்டார்கள் என்பது அன்பான பெற்றோருக்குத் தெரியும். தங்கள் பிள்ளைகள் ஓர் “இலக்கை” அடைய வேண்டுமென்று, அதாவது, சந்தோஷமும் பொறுப்பும் உள்ள பிள்ளைகளாய் வளர்ந்து, வாழ்க்கையில் திருப்திகாண வேண்டுமென்று பெற்றோர் விரும்புகிறார்கள். பிள்ளைகள் நல்ல தெரிவுகளைச் செய்யவும், ஞானமாய் நடந்துகொள்ளவும், வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கவும், பயனுள்ள இலட்சியங்களை எட்டவும் வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அப்படி விரும்பினால் மட்டும் போதாது.

ஓர் அம்பு, அதன் இலக்கை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதை நன்கு தயார்படுத்த வேண்டும்; பாதுகாக்க வேண்டும்; குறிபார்த்து, பலமாக எய்ய வேண்டும். அவ்வாறே, பிள்ளைகள் வளர்ந்து வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிபெறுவதற்கு, அவர்களைத் தயார்படுத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும், நன்கு வழிநடத்த வேண்டும். இம்மூன்று அம்சங்களையும் ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.

அம்பை நன்கு தயார்படுத்துதல்

பண்டைய காலங்களில், அம்புகள் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டன. அவை, கனம் குறைந்த மரத்தாலானவை; முடிந்தவரை நேராக இருக்கும்படி அவை கையாலேயே செதுக்கப்பட்டன. அவற்றின் ஒரு முனை கூர்மையாக்கப்பட்டது. காற்றைக் கிழித்துக்கொண்டு நேராகச் செல்வதற்காக அவற்றின் மறு முனையில் இறகுகள் பொருத்தப்பட்டன.

நேராக உள்ள அம்புகளைப் போல, பிள்ளைகள் நேர்மையானவர்களாக, வழிதவறிச் செல்லாதவர்களாக இருக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்புகிறார்கள். ஆகவே, பிள்ளைகள் செய்யும் மோசமான தவறுகளை ஞானமுள்ள பெற்றோர் கண்டும் காணாமல் விட்டுவிடுவதில்லை; மாறாக, அவற்றை மீண்டும் செய்யாமல் தங்களைத் திருத்திக்கொள்ள அவர்களுக்கு அன்போடு உதவுகிறார்கள். எந்தவொரு பிள்ளையை எடுத்துக்கொண்டாலும், பல சந்தர்ப்பங்களில் அதை திருத்த வேண்டியிருக்கும்; ஏனெனில், “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:15) அதன் காரணமாகவே, பிள்ளைகளுக்குச் சிட்சை கொடுக்கும்படி பெற்றோரை பைபிள் அறிவுறுத்துகிறது. (எபேசியர் 6:4) ஆம், ஒரு பிள்ளையின் சிந்தையையும் சுபாவத்தையும் செதுக்கிச் சீராக்குவதற்கு சிட்சை மிகவும் முக்கியம்.

ஆகவே, “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை . . . தண்டிக்கிறான்,” அதாவது சிட்சிக்கிறான், என நீதிமொழிகள் 13:24 சொல்வதில் ஆச்சரியமில்லை. இங்கே, சிட்சை எனப்படும் பிரம்பு, திருத்துவதைக் குறிக்கிறது; அது எந்த விதத்திலும் கொடுக்கப்படலாம். அன்பாகச் சிட்சை கொடுப்பதன் மூலம், பிள்ளை செய்யும் தவறுகளை முளையிலேயே கிள்ளியெறிய பெற்றோர் முயலுகிறார்கள்; அதை அப்படியே வளர விட்டுவிட்டால் பின்னால் அந்தப் பிள்ளை வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென்பதால் அப்படிச் செய்கிறார்கள். சொல்லப்போனால், அவ்வாறு சிட்சை கொடுப்பதே அன்பான செயலாகும், சிட்சை கொடுக்காதிருப்பதோ பிள்ளையைப் பகைப்பதற்குச் சமமாகும்.

ஓர் அன்பான பெற்றோர், ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ என்று சொல்வதோடு, அவ்வாறு கட்டளையிடுவதற்கான காரணங்களையும் பிள்ளைக்குப் புரிய வைக்கிறார். கட்டளைகளைக் கொடுப்பதும், தண்டனைகளை வழங்குவதுமே சிட்சை கொடுப்பதில் உட்படுவதில்லை; ஆனால், அந்தக் கட்டளை கொடுக்கப்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளப் பிள்ளைக்கு உதவுவதே சிட்சையில் முக்கியமாய் உட்படுகிறது. ‘வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்’ என்று பைபிள் சொல்கிறது.​—நீதிமொழிகள் 28:7.

அம்புகளின் ஒரு முனையில் இணைக்கப்படும் இறகுகள், வில்லைவிட்டுப் புறப்படுகிற அம்புகள் நேராகச் செல்வதற்கு உதவுகின்றன. அவ்வாறே, குடும்பத்தை ஆரம்பித்து வைத்தவர் தந்திருக்கும் பைபிள் போதனைகளும், பிள்ளைகள் தங்களுடைய வீட்டை விட்டுச் சென்று, சொந்தக் காலில் நிற்கும் காலமெல்லாம் அவர்களுக்கு உதவுகின்றன. (எபேசியர் 3:14, 15) ஆனால், அந்தப் போதனைகள் உண்மையில் பிள்ளைகளோடு ‘இணைந்திருப்பதற்கு’ பெற்றோர் என்ன செய்யலாம்?

மோசேயின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த பின்வரும் அறிவுரையைக் கவனியுங்கள்: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதிக்க வேண்டும்.’ (உபாகமம் 6:6, 7) இதன்படி, பெற்றோர் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். முதலில் அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் படித்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்; உண்மையில், கடவுளுடைய கட்டளைகளை நேசிக்க வேண்டும். (சங்கீதம் 119:97) அப்போதுதான் வசனத்தின் பிற்பகுதி சொல்கிறபடி அந்தக் கட்டளைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்குக் ‘கருத்தாய்ப் போதிக்க’ முடியும். அதாவது, திறம்பட்ட முறையில் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி, பிள்ளைகளின் இருதயத்தில் அந்தக் கட்டளைகளின் முக்கியத்துவத்தைப் பதிய வைக்க முடியும்.

ஆகவே, மோசமான தவறுகளைத் திருத்துவதற்காக, பைபிள் நியமங்களைக் கற்பிப்பதோ, அன்பான சிட்சை கொடுப்பதோ, இந்தக் காலத்திற்கு ஒத்துவராது என்று நினைக்க முடியாது. மதிப்பு மிக்க அந்த ‘அம்புகள்,’ முதிர்ச்சியை நோக்கி நேர் வழியிலும் தடுமாறாமலும் செல்ல அவற்றைத் தயார்படுத்துவதற்கு இவை முக்கியமான வழிகளாகும்.

அம்பைப் பாதுகாத்தல்

சங்கீதம் 127:5, 6-ல் உள்ள உதாரணத்தை நாம் மீண்டும் எடுத்துக்கொள்வோம். வில்வீரர், அம்புகளால் ‘தன் அம்பறாத்தூணியை நிரப்பியிருந்தார்’ என்பதை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். தயார்படுத்தப்பட்ட அம்புகள் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தன. அவை எளிதில் சேதமடையாமலும், உடைந்துபோகாமலும் பாதுகாப்பாய் இருப்பதற்காக அவற்றை அம்பறாத்தூணியில் அந்த வில்வீரர் எடுத்துச்சென்றார். மேசியாவை, பளப்பளப்பான ஓர் அம்புக்கு ஒப்பிட்டு பைபிள் தீர்க்கதரிசனமாகச் சொல்வது ஆர்வத்திற்குரியது; அவரைப் பிதா, “தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்” என்று அது சொல்கிறது. (ஏசாயா 49:2) அன்பின் சிகரமாகத் திகழும் யெகோவா தேவன், தமது மகனாகிய இயேசுவைப் பாதுகாத்தார் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாகவே சொல்லப்பட்டபடி, மேசியா மரிப்பதற்கான காலம்வரையில் அவரை எல்லா விதத் தீங்கிலிருந்தும் பாதுகாத்தார். அதன்பிறகும்கூட, தம் மகனுக்கு நிரந்தரத் தீங்கு வராதபடி அவரைப் பாதுகாத்தார். அவர் என்றென்றுமாய் வாழும்படி மீண்டும் பத்திரமாகப் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டார்.

அவ்வாறே, இந்தச் சீர்கெட்ட உலகின் ஆபத்துகளிலிருந்து தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு நல்ல பெற்றோர் படுஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஆபத்தான காரியங்களில் தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளாதிருக்க, சில நடவடிக்கைகளில் பிள்ளைகள் ஈடுபடுவதைப் பெற்றோர் தடுக்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, ஞானமான பெற்றோர் பின்வரும் பைபிள் நியமத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள்: “தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்” (1 கொரிந்தியர் 15:33, பொ.மொ.) பைபிள் நெறிகளுக்கு மதிப்புக் கொடுக்காதவர்களுடன் சேராதபடி பிள்ளைகளைப் பாதுகாப்பது, வாழ்க்கையைப் பாழாக்குகிற, உயிரைப் பறிக்கிற பல தவறுகளைச் செய்யாதபடி அவர்களைத் தடுக்கலாம்.

பெற்றோர் தங்களைப் பாதுகாப்பதன் அருமை எப்போதும் பிள்ளைகளுக்குப் புரிவதில்லை; சில சமயங்களில் கோபமும் படுகிறார்கள். பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பெற்றோர் பெரும்பாலும் அவர்களுடைய விருப்பத்திற்கு மறுப்புத் தெரிவிப்பதே இதற்கு காரணமாக இருக்கிறது. பிள்ளை வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களை எழுதுவதில் பிரசித்திபெற்ற ஓர் ஆசிரியர் சொல்வதாவது: “அப்போதைக்கு உங்கள் ‘விதிமுறை’யின் அருமை பிள்ளைகளுக்குத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்; ஆனால் பாதுகாப்பான, திட்டவட்டமான விதிமுறைகள் தங்களுக்குத் தேவைதான் என்றே அவர்கள் விரும்புவார்கள். எனவே, பிள்ளைகளின் நடத்தைக்கு வரம்புகளை வைக்கிற பொறுப்புள்ள பெற்றோராக இருப்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்.”

ஆம், பிள்ளைகளின் மன அமைதியைக் குலைக்கிற, அவர்களுடைய வெள்ளை உள்ளத்தை மாசுபடுத்துகிற, கடவுளோடுள்ள உறவைக் கெடுக்கிற எதிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதே, பிள்ளைகள்மீது பாசம் இருப்பதைக் காட்டும் மிக முக்கியமான வழியாகும். அவர்கள் வளர வளர, நீங்கள் எதற்காக விதிமுறைகளை வைத்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம், நீங்கள் அன்புடன் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததற்கும் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்.

அம்பைக் குறிபார்த்து எய்தல்

சங்கீதம் 127:5, 6 பெற்றோரைப் ‘பலவானுக்கு’ ஒப்பிட்டுப் பேசுவதைக் கவனியுங்கள். அப்பாவால் மட்டுமே பிள்ளையை நன்றாக வளர்க்க முடியும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. சொல்லப்போனால், இந்த உதாரணத்திலுள்ள நியதி, அப்பா அம்மா ஆகிய இருவருக்குமே பொருந்துகிறது; ஏன், தனிமரமாய்ப் பொறுப்பைச் சுமக்கிற பெற்றோருக்கும் பொருந்துகிறது. (நீதிமொழிகள் 1:8) “பலவான்” என்ற வார்த்தை, வில்லை வளைத்து அம்பை எய்ய ஒருவருக்கு அதிகளவு பலம் தேவை என்பதைக் குறிக்கிறது. பூர்வ காலத்து வில்கள் சில சமயங்களில் தாமிரத்தால் மூடப்பட்டிருந்தன. ஆகவே, வில்வீரர் ‘வில்லை நாணேற்றியதாக’ சொன்னபோது, ஒருவேளை அவர் அந்த வில்லைத் தரையில் வைத்துக் காலால் மிதித்து அந்த நாணை, அதாவது, கயிற்றை இழுத்திருப்பார். (எரேமியா 50:14, 29) இவ்வாறு, இறுக்கிக் கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுத்து இலக்கை நோக்கி அம்புகளை எய்வதற்கு, அதிகளவு பலமும் முயற்சியும் தேவைப்பட்டிருக்கும் என்பது தெளிவு!

அவ்வாறே, பிள்ளைகளை வளர்ப்பதற்கும் அதிகளவு முயற்சி தேவைப்படுகிறது. ஓர் அம்பு, அதன் இலக்கை நோக்கித் தானாகவே பாய்ந்துசெல்ல முடியாததைப் போல, பிள்ளைகள் தாங்களாகவே நல்லபடியாக வளர்ந்துவிட முடியாது. வருத்தகரமாக, இன்று அநேக பெற்றோர், பிள்ளைகளைத் தகுந்த முறையில் வளர்ப்பதற்குத் தேவையானளவு முயற்சியெடுக்க விரும்பாததுபோல் தெரிகிறது. இதற்கு அவர்கள் குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். டிவி நிகழ்ச்சிகள், பள்ளிப் பாடங்கள், சமவயது நண்பர்கள் மூலம் தங்களுடைய பிள்ளைகள் சரி-தவறு பற்றியும், நன்னெறிகள் பற்றியும், பாலியல் பற்றியும் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகள் என்ன கேட்டாலும் அவற்றுக்கு அனுமதி அளிக்கிறார்கள். பிள்ளைகளின் வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவிப்பது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கையில், சரியெனத் தலையாட்டிவிடுகிறார்கள்; அவர்களை நோகடித்துவிட விரும்பாததால்தான் அப்படி அனுமதி அளிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில், இப்படி அனுமதிப்பதே அவர்களுடைய பிள்ளைகளுக்குத் தீங்கை, அதுவும் நிரந்தரமான தீங்கை ஏற்படுத்துகிறது.

பிள்ளை வளர்ப்பு என்பது சவால் மிகுந்த ஒரு வேலை. அந்த வேலையை முழு இருதயத்தோடு, கடவுளுடைய வார்த்தையின் அறிவுரைப்படி செய்வதற்கு நிச்சயமாகவே முயற்சி தேவை. அதனால் கிடைக்கிற பலன்களோ மதிப்பு மிக்கவை. “பாசமுள்ள பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் பிள்ளைகள், அதாவது, எப்போதும் உறுதுணையாக இருந்து, திட்டவட்டமான வரம்புகளை வைக்கிற பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகள், எதையும் கண்டுகொள்ளாத அல்லது சதா கண்டிப்பாக இருக்கும் பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகளைவிட கெட்டிக்காரர்களாய்த் திகழ்கிறார்கள். எப்படியென்றால், படிப்பில் புலிகளாக, எல்லாருடனும் நன்கு பழகுகிறவர்களாக, தன்னம்பிக்கை மிக்கவர்களாக, அதிக சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என . . . ஆய்வுகள் காட்டுகின்றன” என்று பெற்றோர் (ஆங்கிலம்) பத்திரிகை சொல்கிறது.

அதைவிடச் சிறந்த பலனும்கூட கிடைக்கிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து” என்று நீதிமொழிகள் 22:6-ல் சொல்லப்பட்டிருந்ததை நாம் ஏற்கெனவே சிந்தித்தோம். “அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்றும் அந்த வசனம் சொல்கிறது. அப்படியானால், இந்த வசனம் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கிறதா? அப்படிச் சொல்ல முடியாது. ஏனெனில், உங்கள் பிள்ளை வளர்ந்த பிறகு சரி-தவறைத் தானாகவே தெரிவு செய்யும் உரிமை அதற்கு இருக்கிறது. ஆனால், இந்த வசனம் பெற்றோருக்கு அன்பான ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறது. அந்த வாக்குறுதி என்ன?

பைபிள் ஆலோசனைப்படி உங்கள் பிள்ளைக்குப் பயிற்சி கொடுத்தால், கைமேல் பலன் கிடைக்கும். அதாவது, உங்கள் பிள்ளைகள் சந்தோஷமும் திருப்தியும் பொறுப்பும் உள்ளவர்களாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற ஓர் அருமையான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். (நீதிமொழிகள் 23:24) ஆகவே, மதிப்பு மிக்க அந்த ‘அம்புகளை’ நன்கு தயார்படுத்துங்கள், பாதுகாத்திடுங்கள், குறிபார்த்து எய்வதற்கு மும்முரமாக முயற்சி எடுங்கள். அதற்காக நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள். (w08 4/1)

[பக்கம் 13-ன் படம்]

பிள்ளைகளின் விருப்பத்திற்கெல்லாம் பெற்றோர் விட்டுக்கொடுப்பதுதான் அவர்கள் மீதுள்ள அன்பிற்கு அடையாளமா?

[பக்கம் 15-ன் படம்]

குடும்ப விதிமுறைகளை வைப்பதற்கான காரணங்களை ஓர் அன்புள்ள பெற்றோர் புரியவைக்கிறார்

[பக்கம் 15-ன் படம்]

நல்ல பெற்றோர், சீர்கெட்ட இந்த உலகின் ஆபத்துகளிலிருந்து தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்கிறார்கள்

[பக்கம் 16-ன் படம்]

பிள்ளை வளர்ப்பு என்பது சவால் மிகுந்த ஒரு வேலை; அதனால் கிடைக்கிற பலன்களோ மதிப்பு மிக்கவை