Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயற்கைப் பேரழிவுகள்—கடவுள் கொடூரமானவர் என்பதற்கு அத்தாட்சியா?

இயற்கைப் பேரழிவுகள்—கடவுள் கொடூரமானவர் என்பதற்கு அத்தாட்சியா?

சிலர் என்ன சொல்கிறார்கள்: “கடவுள் இந்த உலகத்தை ஆளுவதால் அவர்தான் இயற்கைப் பேரழிவுகளை உண்டாக்குகிறார். எனவே, அவர் நிச்சயமாகக் கொடூரக்காரர்தான்.”

பைபிள் என்ன சொல்கிறது: “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) யார் இந்த ‘பொல்லாதவன்’? பைபிள் அவனை சாத்தான் என்று அடையாளம் காட்டுகிறது. (மத்தேயு 13:19; மாற்கு 4:15) நம்ப முடியவில்லையா? சற்று யோசித்துப் பாருங்கள்: இந்த உலகமே சாத்தானின் கைக்குள் கிடக்கிறதென்றால், அவன்தான் மனிதர்கள்மீது செல்வாக்கு செலுத்துகிறான்; அதனால்தான் அவர்கள் சாத்தானைப் போலவே சுயநலக்காரர்களாக, பேராசைக்காரர்களாக, குறுகிய கண்ணோட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பூமியின் சுற்றுச்சூழலை மனிதன் ஏன் இந்தளவு சீரழித்திருக்கிறான் என்பது இப்போது புரிகிறதா? இயற்கைப் பேரழிவுகள் நிகழ்வதற்கும், அவை இன்னும் மோசமாவதற்கும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக இருக்கலாம் என அநேக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், மனிதர்கள்மீது இந்தளவு செல்வாக்கு செலுத்த கடவுள் ஏன் சாத்தானை அனுமதித்திருக்கிறார்? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள மனித சரித்திரத்தின் தொடக்கத்திற்கு நாம் செல்ல வேண்டும்; நம் முதல் பெற்றோர் கடவுளுடைய அரசாட்சிக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அச்சமயத்திலிருந்தே மனிதகுலத்தில் பெரும்பாலானோர் அதே கலகப் போக்கில்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். கடவுளுடைய ஆட்சியை முதல் பெற்றோர் நிராகரித்ததால், இந்த முழு உலகமும் கடவுளுடைய எதிரியான சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனால்தான் சாத்தானை “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்று இயேசு அழைத்தார். (யோவான் 14:30) அப்படியானால், அவனுடைய ஆட்சி என்றென்றும் தொடருமா? இல்லை, தொடராது!

சாத்தான் உண்டாக்குகிற துன்பதுயரங்களையும் அதனால் மக்கள் படுகிற வேதனைகளையும் பார்த்து யெகோவா * பரிதவிக்கிறார், அவர்களுக்காக மனம் உருகுகிறார். உதாரணத்திற்கு, இஸ்ரவேல் தேசத்தார் கஷ்டங்கள் அனுபவித்ததைப் பார்த்தபோது “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 63:9) இரக்கமே உருவான யெகோவா சாத்தானுடைய கொடூர ஆட்சிக்கு... கொடுங்கோல் ஆட்சிக்கு... முடிவுகட்டப்போகிறார், அதுவும் வெகு சீக்கிரத்தில்! நீதி நியாயத்தோடு பூமிமீது என்றென்றும் ஆட்சிசெய்ய தம்முடைய மகனான இயேசு கிறிஸ்துவை ராஜாவாக அவர் நியமித்திருக்கிறார்.

நீங்கள் எப்படி உட்பட்டிருக்கிறீர்கள்: சாத்தானுடைய ஆட்சி இயற்கைப் பேரழிவுகளிலிருந்து மக்களை இதுவரை பாதுகாக்கவில்லை, ஆனால் இயேசுவின் ஆட்சி பாதுகாக்கப்போகிறது. அவர் பூமியிலிருந்தபோது ஒருசமயம், பயங்கரமான புயல்காற்றிலிருந்து தம் சீடர்களைப் பாதுகாத்தார். அச்சமயத்தில் “காற்றை அதட்டினார்; கடலை நோக்கி, ‘உஷ்! அமைதியாக இரு!’ என்றார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது.” அதைக் கண்ட சீடர்கள், “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும் இவருக்கு அடங்கிவிடுகின்றனவே” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். (மாற்கு 4:37-41) இந்தச் சம்பவம், கீழ்ப்படிதலுள்ள முழு மனிதகுலத்தையும் இயேசு தம் ஆட்சியின்கீழ் கண்டிப்பாகப் பாதுகாப்பார் என்ற உறுதியை நமக்கு அளிக்கிறது.—தானியேல் 7:13, 14. (w13-E 05/01)

^ பைபிளின்படி, யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.