Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 41

கடவுளை சந்தோஷப்படுத்தும் பிள்ளைகள்

கடவுளை சந்தோஷப்படுத்தும் பிள்ளைகள்

யெகோவாவை மிகவும் சந்தோஷப்படுத்திய பிள்ளை யார் என்று நினைக்கிறாய்?— அவருடைய மகன் இயேசுதான். தன் பரலோகத் தகப்பனை சந்தோஷப்படுத்த இயேசு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் பார்க்கலாம்.

யெகோவாவின் அழகான ஆலயம் எருசலேமில் இருந்தது. அங்கு செல்ல இயேசுவின் குடும்பத்தார் மூன்று நாள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ‘என் அப்பாவின் வீடு’ என்று அந்த ஆலயத்தை இயேசு அழைத்தார். பஸ்கா பண்டிகைக்காக அவரும் அவரது குடும்பத்தாரும் ஒவ்வொரு வருடமும் அங்கு சென்றனர்.

இயேசு 12 வயதாக இருந்தபோது, ஒருநாள் அவரது குடும்பத்தார் பஸ்கா பண்டிகை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ராத்திரி தங்குவதற்காக ஒரு இடத்தில் நின்றபோதுதான் இயேசு அங்கு இல்லாததை கவனித்தார்கள். அவர் உறவினர்களோடும் இல்லை, நண்பர்களோடும் இல்லை. ஆகவே அவரைத் தேடிக் கண்டுபிடிக்க மரியாளும் யோசேப்பும் உடனடியாக எருசலேமிற்கு திரும்பிப் போனார்கள். இயேசு எங்கே இருந்திருப்பார் என்று நினைக்கிறாய்?—

இயேசு ஆலயத்தில் இருந்தார். அங்கிருந்த போதகர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களிடம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய பதில்களைக் கேட்டு அந்த போதகர்களே அசந்துபோனார்கள். கடவுள் ஏன் தன் மகனைப் பார்த்து சந்தோஷப்பட்டார் என இப்போது உனக்குப் புரிகிறதா?—

மரியாளும் யோசேப்பும் இயேசுவை ஒருவழியாகக் கண்டுபிடித்தபோது நிம்மதியடைந்தார்கள். ஆனால் இயேசு கவலைப்படவே இல்லை. ஆலயத்தில் இருப்பது பாதுகாப்பானது என்று அவருக்குத் தெரியும். ஆகவே, ‘என் அப்பாவின் வீட்டில்தான் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா?’ என கேட்டார். அந்த ஆலயம் கடவுளுடைய வீடு என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அங்கிருக்க ரொம்ப ஆசைப்பட்டார்.

பிற்பாடு, 12 வயது இயேசுவை மரியாளும் யோசேப்பும் மறுபடியும் நாசரேத்துக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். இயேசு தன் அப்பா அம்மாவிடம் எப்படி நடந்துகொண்டார் என்று நினைக்கிறாய்?— ‘அவர் தொடர்ந்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. இதன் அர்த்தம் என்ன?— அவர்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடந்தார் என்று அர்த்தம். ஆமாம், அவர்கள் சொன்னபடியெல்லாம் செய்தார். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவது போன்ற வீட்டு வேலைகளைக்கூட தட்டாமல் செய்தார்.—லூக்கா 2:41-52.

இயேசு சிறு பிள்ளையாக இருந்தபோது கடவுளை எப்படி சந்தோஷப்படுத்தினார்?

ஆகவே இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: இயேசு பரிபூரணமாக இருந்தாலும் அபூரண பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தார். இது கடவுளை சந்தோஷப்படுத்தியதா?— நிச்சயமாக சந்தோஷப்படுத்தியது. ஏனென்றால் ‘பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்’ என்று கடவுளுடைய வார்த்தை பிள்ளைகளுக்கு சொல்கிறது. (எபேசியர் 6:1) இயேசுவைப் போலவே நீயும் பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடந்தால் கடவுளை சந்தோஷப்படுத்துவாய்.

கடவுளை சந்தோஷப்படுத்துவதற்கு இன்னொரு வழி, அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதாகும். சிறு பிள்ளைகளெல்லாம் இதை செய்யக் கூடாது என்று சிலர் சொல்லலாம். ஆனால் சிறுவர் இப்படிச் செய்ததை தடுக்க மக்கள் முயன்றபோது இயேசு என்ன சொன்னார் தெரியுமா? ‘“சிறு பிள்ளைகளுடைய வாயினால் கடவுள் தனக்கு புகழ் உண்டாகும்படி செய்வார்” என்பதை நீங்கள் வேதத்தில் வாசித்ததே இல்லையா?’ என்று கேட்டார். (மத்தேயு 21:16) ஆகவே நம் எல்லாருக்கும் உண்மையிலேயே விருப்பம் இருந்தால், யெகோவாவைப் பற்றியும் அவர் எவ்வளவு அருமையான கடவுள் என்பதைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்லலாம். அப்படி செய்தால் கடவுளை சந்தோஷப்படுத்துவோம்.

கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை நாம் எங்கிருந்து கற்றுக்கொள்ளலாம்?— வீட்டில் பைபிளை படிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். அதேசமயத்தில் கடவுளுடைய மக்கள் ஒன்றுகூடி படிக்கும் இடங்களுக்கு செல்வதன் மூலம் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் அவருடைய மக்கள் யார் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?—

வணக்கத்திற்காக ஒன்றுகூடுபவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் பைபிளில் இருப்பதை உண்மையில் கற்பிக்கிறார்களா? பைபிளை வாசித்து அதைப் பற்றி கலந்தாலோசிக்கிறார்களா? அப்படி செய்தால்தானே கடவுளுக்கு செவிகொடுக்க முடியும்?— கிறிஸ்தவ கூட்டங்களில், கடவுள் சொல்வதைக் கேட்கத்தானே நாம் விரும்புவோம்?— ஆனால் பைபிள் சொல்கிறபடியெல்லாம் வாழ வேண்டியதில்லை என்று சிலர் சொன்னால்? அவர்கள் கடவுளுடைய மக்களாக இருக்க முடியுமா?—

இன்னொரு விஷயத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடவுளுடைய மக்கள் ‘அவருடைய பெயருக்கான மக்களாக’ இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 15:14) கடவுளுடைய பெயர் யெகோவா என்பதால், யெகோவாவை கடவுளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா என்று மக்களிடம் நாம் கேட்கலாம். இல்லை என்று அவர்கள் சொன்னால், அவர்கள் கடவுளுடைய மக்கள் இல்லை என்று நமக்குத் தெரிந்துவிடும். கடவுளுடைய மக்கள் அவருடைய ராஜ்யத்தைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்வார்கள். கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர் மீது அன்பு காட்டுவார்கள்.—1 யோவான் 5:3.

இந்த எல்லா காரியங்களையும் செய்யும் மக்களை உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களோடு கூடி கடவுளை வணங்க வேண்டும். அவர்களது கூட்டங்களில் சொல்லப்படுவதை கவனமாக கேட்க வேண்டும். ஏதேனும் கேள்விகள் கேட்கப்பட்டால் நீ பதில்கள் சொல்ல வேண்டும். இயேசு கடவுளுடைய வீட்டில் இருந்தபோது இதைத்தான் செய்தார். நீயும் இதை செய்தால் இயேசுவைப் போலவே கடவுளை சந்தோஷப்படுத்துவாய்.

கடவுளை சந்தோஷப்படுத்திய மற்ற பிள்ளைகளைப் பற்றி பைபிளில் படித்தது ஞாபகம் இருக்கிறதா?— இதற்கு தீமோத்தேயு சிறந்த உதாரணம். அவருடைய அப்பா யெகோவாவை நம்பவில்லை. ஆனால் அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும் யெகோவாவை வணங்கி வந்தார்கள். தீமோத்தேயு அவர்களிடமிருந்து யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டார்.

தீமோத்தேயுவின் அப்பா யெகோவாவை நம்பாதபோதிலும் தீமோத்தேயு என்ன செய்ய விரும்பினார்?

தீமோத்தேயு வளர்ந்து பெரியவரானபோது, அவர் இருந்த பட்டணத்திற்கு அப்போஸ்தலன் பவுல் சென்றார். யெகோவாவை சேவிக்க தீமோத்தேயு எந்தளவு விரும்பினார் என்பதை பவுல் கவனித்தார். ஆகவே இன்னும் பெரிய அளவில் கடவுளை சேவிப்பதற்காக தன்னோடு வரும்படி தீமோத்தேயுவை அழைத்தார். அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் மக்களிடம் சொன்னார்கள்.—அப்போஸ்தலர் 16:1-5; 2 தீமோத்தேயு 1:5; 3:14, 15.

ஆனால் சிறு பையன்கள் மட்டும்தான் கடவுளை சந்தோஷப்படுத்தியதாக பைபிள் சொல்கிறதா?— இல்லவே இல்லை. உதாரணத்திற்கு, இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு சிறுமியைப் பற்றி இப்போது பார்க்கலாம். அந்தச் சமயத்தில் சீரியா தேசமும் இஸ்ரவேல் தேசமும் எதிரிகளாக இருந்தன. ஒருமுறை சீரியர்கள் இஸ்ரவேலர்களோடு சண்டைபோட்டு, அந்தச் சிறுமியை அடிமையாக கொண்டு சென்றார்கள். படைத்தலைவனாகிய நாகமானின் வீட்டிற்கு அவள் அனுப்பப்பட்டாள். அங்கே அவள் நாகமானின் மனைவிக்கு வேலை செய்து வந்தாள்.

நாகமானுக்கு குஷ்டரோகம் இருந்தது. எந்த டாக்டர்களாலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. ஆனால் ஒரு தீர்க்கதரிசியால் அவரை குணப்படுத்த முடியும் என்று அந்த சிறுமி நம்பினாள். அந்தத் தீர்க்கதரிசி கடவுளுடைய விசேஷ ஊழியர்களில் ஒருவர். நாகமானும் அவருடைய மனைவியும் யெகோவாவை வணங்கவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் அந்தச் சிறுமி தனக்குத் தெரிந்ததை அவர்களிடம் சொல்ல வேண்டியிருந்ததா? நீ என்ன செய்திருப்பாய்?—

இஸ்ரவேலைச் சேர்ந்த இந்த சிறுமி எப்படி கடவுளை சந்தோஷப்படுத்தினாள்?

‘இஸ்ரவேலிலுள்ள யெகோவாவின் தீர்க்கதரிசியிடம் நாகமான் போனால் அவருடைய குஷ்டரோகம் குணமாகிவிடும்’ என்று அந்தச் சிறுமி சொன்னாள். நாகமான் அந்தச் சிறுமி சொன்னதைக் கேட்டு யெகோவாவின் தீர்க்கதரிசியைப் பார்க்க சென்றார். தீர்க்கதரிசி சொன்னபடியே செய்தபோது நாகமான் குணமானார். இதனால் அவர் உண்மைக் கடவுளை வணங்குபவராக ஆனார்.—2 இராஜாக்கள் 5:1-15.

அந்தச் சிறுமியைப் போலவே நீயும், யெகோவாவைப் பற்றியும் அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றியும் யாருக்காவது கற்றுக்கொடுக்க விரும்புகிறாயா?— யாருக்கு உதவி செய்ய முடியும் என்று நீ நினைக்கிறாய்?— தங்களுக்கு உதவி தேவை என்பதை எல்லாரும் முதலில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் யெகோவா செய்யும் நல்ல காரியங்களைப் பற்றி நீ அவர்களிடம் பேசலாம். அப்போது நீ சொல்வதை அவர்கள் கேட்கலாம். இது கடவுளை சந்தோஷப்படுத்தும் என்பது நிச்சயம்.

கடவுளை சந்தோஷமாக சேவிப்பதற்கு சில வசனங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துகின்றன. அவற்றை இப்போது வாசிக்கலாமா? சங்கீதம் 122:1; 148:12, 13; பிரசங்கி 12:1; 1 தீமோத்தேயு 4:12; எபிரெயர் 10:23-25.