பிலேமோனுக்குக் கடிதம் 1:1-25

 கிறிஸ்து இயேசுவுக்காகக் கைதியாய் இருக்கிற பவுல்,+ சகோதரர் தீமோத்தேயுவோடு+ சேர்ந்து, எங்கள் அன்பான சக வேலையாளாகிய பிலேமோனுக்கும்,  எங்கள் சகோதரி அப்பியாளுக்கும், சக வீரன் அர்க்கிப்புவுக்கும்,+ உங்களுடைய வீட்டில் கூடுகிற சபைக்கும்+ எழுதுவது:  நம் பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.  உங்களுக்காக ஜெபம் செய்யும்போதெல்லாம் நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.+  ஏனென்றால், நீங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தையும், நம் எஜமானாகிய இயேசுமீதும் பரிசுத்தவான்கள் எல்லார்மீதும் நீங்கள் காட்டுகிற அன்பையும் பற்றி நான் கேள்விப்பட்டு வருகிறேன்.  கிறிஸ்துவின் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்திருப்பதை நீங்கள் உணர்ந்து, உங்களுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்வதில் மும்முரமாக இருக்க வேண்டுமென்று ஜெபம் செய்கிறேன்.  சகோதரரே, நீங்கள் காட்டுகிற அன்பைப் பற்றிக் கேள்விப்பட்டு நான் மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்தேன். ஏனென்றால், பரிசுத்தவான்களின் இதயங்கள் உங்களால் புத்துணர்ச்சி அடைந்திருக்கின்றன.  அதனால், நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டுமென்று கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்ற முறையில் என்னால் எந்தத் தயக்கமும் இல்லாமல் உத்தரவிட முடியுமென்றாலும்,  அன்பின் அடிப்படையில் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். வயதானவனாக, அதுவும் கிறிஸ்து இயேசுவுக்காக இப்போது கைதியாய் இருக்கிற பவுலாகிய நான், 10  சிறையில் இருந்தபோது எனக்குப் பிள்ளை போலான+ ஒநேசிமுவுக்காக+ உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 11  முன்பு அவன் உங்களுக்குப் பிரயோஜனம் இல்லாதவனாக இருந்தான், இப்போதோ உங்களுக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவனாக இருக்கிறான். 12  அவனை, என் உயிருக்கு உயிரான அவனை,* உங்களிடமே திரும்ப அனுப்புகிறேன். 13  நல்ல செய்திக்காகக்+ கைதியாய் இருக்கிற எனக்குத் தொடர்ந்து பணிவிடைகள் செய்ய உங்களுக்குப் பதிலாக அவனை என்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்புகிறேன். 14  ஆனாலும், உங்களுடைய சம்மதம் இல்லாமல் நான் எதையும் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் இந்த உதவியைக் கட்டாயத்தால் செய்யாமல் மனப்பூர்வமாகச்+ செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். 15  அவன் என்றென்றும் உங்களோடு இருக்கத்தான் கொஞ்சக் காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தான் போலிருக்கிறது. 16  இனி அவன் வெறும் அடிமையாக இல்லாமல்,+ அடிமையைவிட மேலான அன்புச் சகோதரனாக இருப்பான்.+ எனக்கே அன்பானவன் என்றால், உங்களுக்கு இன்னும் எந்தளவு அன்பானவனாக இருப்பான்! அவன் உங்களுக்கு அடிமையாகவும் அன்பான கிறிஸ்தவ சகோதரனாகவும் இருப்பான். 17  அதனால், நீங்கள் என்னை உங்களுடைய நண்பனாக நினைத்தால், என்னை அன்புடன் ஏற்றுக்கொள்வது போலவே அவனையும் ஏற்றுக்கொள்ளுங்கள். 18  அதேசமயத்தில், அவன் உங்களுக்கு ஏதாவது நஷ்டம் உண்டாக்கியிருந்தால் அல்லது உங்களுக்குக் கடன்பட்டிருந்தால், அதை என் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள். 19  அதைக் கொடுத்துவிடுவதாக பவுலாகிய நானே என் கைப்பட எழுதுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களுடைய உயிருக்காக நீங்களே எனக்குக் கடன்பட்டிருக்கிறீர்கள், இல்லையா? 20  சகோதரரே, நம் எஜமானுக்காக எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். கிறிஸ்துவுக்காக என் இதயத்துக்கு புத்துணர்ச்சி கொடுங்கள். 21  நீங்கள் என் சொல்லுக்குக் கட்டுப்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்; நான் கேட்டுக்கொள்வதற்கும் அதிகமாகவே நீங்கள் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். 22  நீங்கள் எல்லாரும் செய்கிற ஜெபத்தின் காரணமாக, நான் விடுதலையாகி உங்களை வந்து பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,+ அதனால், நான் வந்து தங்குவதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்யுங்கள். 23  கிறிஸ்து இயேசுவுக்காக என் சக கைதியாக இருக்கும் எப்பாப்பிராவும்,+ 24  என் சக வேலையாட்களான மாற்கு, அரிஸ்தர்க்கு,+ தேமா,+ லூக்கா+ ஆகியோரும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 25  நல்ல மனப்பான்மையைக் காட்டுகிற உங்கள்மீது நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “என் இதயத்தை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா