Skip to content

இயேசு ஏன் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார்?

இயேசு ஏன் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார்?

பைபிள் தரும் பதில்

 இயேசுவைப் பெரும்பாலும் “கடவுளுடைய மகன்” என்றுதான் பைபிள் சொல்கிறது. (யோவான் 1:49) “கடவுளுடைய மகன்” என்ற வார்த்தை, இயேசு உட்பட எல்லா உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்பதைக் காட்டுகிறது. (சங்கீதம் 36:9; வெளிப்படுத்துதல் 4:11) மனிதர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பது போலத்தான் கடவுளுக்கு இயேசு பிறந்ததாக பைபிள் சொல்வதில்லை.

 தேவதூதர்களையும்கூட “உண்மைக் கடவுளின் மகன்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 1:6, அடிக்குறிப்பு) முதல் மனிதன் ஆதாமையும் “கடவுளின் மகன்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 3:38) ஆனாலும், இயேசுதான் கடவுளுடைய மகன்களிலேயே முதன்மையானவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் கடவுளுடைய முதல் படைப்பாகவும், கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார்.

 பூமியில் பிறப்பதற்கு முன்பு இயேசு பரலோகத்தில் இருந்தாரா?

 ஆம். பூமியில் இயேசு ஒரு மனிதராகப் பிறப்பதற்கு முன்பு பரலோகத்தில் ஆவி உடலில் இருந்தார். “பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன்” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.—யோவான் 6:38; 8:23.

 எல்லாவற்றையும் படைப்பதற்கு முன்பு இயேசுவைக் கடவுள் படைத்தார். இயேசுவைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது:

  •   ‘அவர் . . . படைப்புகளிலேயே முதல் படைப்பாக இருக்கிறார்.’—கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14.

  •  ‘எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பிருந்தே, எத்தனையோ காலங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவருகிறவரை’ பற்றிய தீர்க்கதரிசனம் இயேசுவில் நிறைவேறியது.—மீகா 5:2; மத்தேயு 2:4-6.

பூமிக்கு வருவதற்கு முன்பு இயேசு என்ன செய்துகொண்டு இருந்தார்?

  பரலோகத்தில் ஒரு உயர்ந்த நிலையில் இருந்தார். அதைப் பற்றி அவர் ஜெபத்தில் இப்படிச் சொன்னார்: “தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து . . . என்னை மகிமைப்படுத்துங்கள்.”—யோவான் 17:5.

 மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்குத் தன்னுடைய அப்பாவுக்கு உதவினார். இயேசு ஒரு “கைதேர்ந்த கலைஞனாக” கடவுளோடு சேர்ந்து வேலை செய்தார். (நீதிமொழிகள் 8:30) இயேசுவைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை . . . ஆகிய எல்லாம் . . . அவர் மூலம்தான் படைக்கப்பட்டன.”—கொலோசெயர் 1:16.

 மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்கு இயேசுவைக் கடவுள் பயன்படுத்தினார். அந்தப் படைப்புகளில், மற்ற எல்லா தேவதூதர்களும், பிரபஞ்சமும் அடங்கும். (வெளிப்படுத்துதல் 5:11) கடவுளோடு சேர்ந்து இயேசு வேலை செய்தது, ஒருவிதத்தில், கட்டிடம் கட்டுகிறவர் ஒரு என்ஜினியரோடு சேர்ந்து வேலை செய்வதுபோல் இருந்தது. என்ஜினியர் கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தை வரைவார், கட்டிடம் கட்டுகிறவர் அந்த வரைபடத்தைப் பார்த்து அப்படியே கட்டுவார்.

 அவர் வார்த்தையாக சேவை செய்தார். இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு “வார்த்தை” என்று அழைக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது. (யோவான் 1:1) தேவதூதர்களுக்குத் தகவல்களையும் ஆலோசனைகளையும் கொடுப்பதற்குத் தன்னுடைய மகனைக் கடவுள் பயன்படுத்தினார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

 பூமியில் இருக்கிற மனிதர்களிடம்கூட கடவுளின் சார்பாக இயேசு பேசியதாகத் தெரிகிறது. ஏதேன் தோட்டத்தில், ஆதாம் ஏவாளுக்குக் கட்டளைகளைக் கொடுத்தபோது வார்த்தையாகிய இயேசுவைப் பயன்படுத்தி கடவுள் பேசியிருக்கலாம். (ஆதியாகமம் 2:16, 17) பூர்வ காலத்தில் இஸ்ரவேலர்களை வனாந்தரத்தில் வழிநடத்திய தேவதூதர், இயேசுவாக இருந்திருக்கலாம். இஸ்ரவேலர்கள் அவர் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டியிருந்தது.—யாத்திராகமம் 23:20-23. a

a “வார்த்தை” என்ற ஒரேவொரு தேவதூதரை மட்டுமே பயன்படுத்தி கடவுள் பேசவில்லை. உதாரணத்துக்கு, பூர்வ இஸ்ரவேலர்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுப்பதற்குத் தன்னுடைய முதல் மகனுக்குப் பதிலாக மற்ற தேவதூதர்களை அவர் பயன்படுத்தினார்.—அப்போஸ்தலர் 7:53; கலாத்தியர் 3:19; எபிரெயர் 2:2, 3.