Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உணவுப் போட்டியில் எலிகளும் மனிதரும்

ஆஸ்திரேலிய பொதுவுடமை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் (CSIRO) கூறுவதன்படி, உலகில் ஒவ்வொரு குழந்தை பிறக்கையிலும் பத்து எலிக்குஞ்சுகள் பிறக்கின்றன. புதிதாய் பிறக்கும் சுமார் 3,60,000 மனித வயிற்றை ஒவ்வொரு நாளும் நிரப்ப வேண்டியிருக்கிறது; அதே சமயத்தில் புதிதாய் பிறக்கும் 36,00,000 எலிக்குஞ்சுகளுக்கும் உணவு தேவைப்படுகிறது. உதாரணமாக, இந்தோனேஷியாவின் மக்கள் தொகை சுமார் 23 கோடி; அவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் தங்கள் அன்றாட போஷாக்கிற்கு அரிசியை சார்ந்துள்ளனர். இருந்தாலும், அந்நாட்டில் சாகுபடியாகும் நெல்லில் சுமார் 15 சதவீதத்தை எலிகள் தின்று தீர்க்கின்றன. “அப்படியானால், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இந்தோனேஷியர்கள் ஒரு வருடம் முழுவதிலும் உண்ணும் அரிசியை இந்த எலிகள் தின்னுகின்றன” என CSIRO விஞ்ஞானியான டாக்டர் கிராண்ட் சிங்கல்டன் கூறுகிறார். (g02 6/22)

சிக்கன் சூப்​—ஜலதோஷத்திற்கு இயற்கை நிவாரணி

ஜலதோஷம் போன்ற மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு பாரம்பரிய நிவாரணியாக சிக்கன் சூப் நெடுங்காலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உணவு​உங்களுக்கு அற்புத மருந்து என்ற ஆங்கில புத்தகத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ளபடி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுரையீரல் நிபுணரான டாக்டர் அர்வன் ஸைமன்ட் அது எப்படி செயல்படுகிறதென்று விளக்குகிறார்: “பெரும்பாலான புரோட்டீன் சத்துள்ள உணவைப் போலவே சிக்கனிலும் சிஸ்டீன் எனப்படும் இயற்கை அமினோ அமிலம் உள்ளது. சூப் தயாரிக்கையில் இது வெளியாகிறது. மார்புச் சளி, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றுடன் வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் அசிட்டைல்சிஸ்டீன் எனப்படும் மருந்துக்கும் இந்த சிஸ்டீனுக்கும் இடையே வேதியியல் ரீதியில் ஓர் அற்புதமான ஒற்றுமை உள்ளது.” இந்த மருந்து, ஆரம்பத்தில் கோழியின் இறகிலிருந்தும் தோலில் இருந்தும் தயாரிக்கப்பட்டது; இது சளியைக் கரைக்கும் இயல்புடையது; அதாவது மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய உறுப்புகளிலுள்ள கெட்டிச் சளியை கரைத்து, நீர்மமாக்கி வெளிவர செய்கிறது. சிக்கன் சூப்பும் கிட்டத்தட்ட அதே விதத்தில் வேலை செய்கிறது. கெட்டிச் சளியை கரைப்பதில் வீரியத்துடன் செயலாற்ற, சிக்கன் சூப்புடன் வெள்ளைப் பூண்டு, வெங்காயம், மிளகாய் போன்ற காட்டமான மசாலாக்களை சேர்த்துக் கொள்ளுமாறு டாக்டர் ஸைமன்ட் பரிந்துரைக்கிறார். (g02 6/22)

மிகப் பழைய அச்சு விளம்பரம்

காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட, உலகிலேயே மிகப் பழமையான விளம்பரத்தை சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர் என்பதாக சைனாஸ் பீப்பில்ஸ் டெய்லி ஆன்லைன் அறிக்கை செய்கிறது. பொருட்கள் சுற்றப்படும் காகிதத்தின் இரு துண்டுகள் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஒரு கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டன; இவை சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தியவை; இவை ஆயில் பெயின்ட் பேக்கிங்குக்கு சுற்றப்பட்ட காகிதம் போல் தெரிகின்றன. “இந்த காகிதத்தின் வலது புற மேல் பகுதியில் 70 சீன எழுத்துக்கள் உள்ளன; இவை அந்த பெயின்டின் வகை, தரம், சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை விவரிக்கின்றன; கடை விலாசமும் இந்தக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது” என அந்த அறிக்கை கூறுகிறது. இந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்த மொழி நடை, ஓரளவிற்கு தற்கால விளம்பரங்களின் மொழி நடையைப் போலவே இருப்பது நம்மை ஆச்சரியமடையச் செய்கிறது. அதில் ஒரு பகுதி வாசிப்பதாவது: “பிற ஆயில் பெயின்ட்டுகளுடன் ஒப்பிட, எங்கள் தயாரிப்பின் நிறம் இணையற்றது.” ஐரோப்பாவில் காகிதம் புழக்கத்திற்கு வந்தது 12-வது நூற்றாண்டு என்பதையும், கூட்டன்பர்க் 15-வது நூற்றாண்டில்தான் அச்சுக்கலையில் மேம்பட்ட பாணியை கண்டுபிடித்தார் என்பதையும் அறிகையில், அந்த அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “சீனாவில், காகித தயாரிப்பு கி.பி. 105-லிருந்தே ஆரம்பமானது தெரிகிறது; அப்போது ச்சை ல்வன் முதன்முதலில் காகித தாள் ஒன்றை தயாரித்தார்; அச்சுத் தொழிலைப் பொறுத்ததில், 9-வது நூற்றாண்டில் சீனா ஏற்கெனவே மரக்கட்டை அச்சை பயன்படுத்தி வந்தது.” (g02 6/22)

சர்ச்சில் வியாபார மயம்

சர்ச்சுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதாலும், நன்கொடை குறைந்து வருவதாலும், செலவை ஈடுகட்ட ஐக்கிய மாகாணமெங்குமுள்ள சர்ச்சுகளில் மதம் சாராத வியாபாரங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. “துணிந்து செயல்படும் எந்த சர்ச்சுக்கும் எதிர்காலம் இதுவே” என இண்டியானாவைச் சேர்ந்த மன்ஸ்டரிலுள்ள ஃபாமிலி கிறிஸ்டியன் சென்டரின் மூத்த பாதிரியான ஸ்டீவன் மன்ஸீ கூறுகிறார். த உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுவதன்படி, சர்ச்சுகளின் வரவேற்பு வளாகத்தில் டோனட்டுகளும் காபியும் விற்பதிலிருந்து சர்ச்சின் மாடியில் முழுநேர ரெஸ்ட்டாரண்டுகள் நடத்துவது வரை பல வியாபாரங்கள் நடைபெறுகின்றன. ஃப்ளாரிடாவைச் சேர்ந்த ஜாக்ஸன்வில்லில், சர்ச்சுக்கு அருகிலேயே ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸை ஒரு சர்ச் திறந்து வைத்துள்ளது. அந்த காம்ப்ளக்ஸில், ஒரு டிராவல் ஏஜன்ஸி, ஒரு பியூட்டி பார்லர், ஓர் உணவகம் ஆகியவையும் உள்ளன. சர்ச்சின் ஸ்தாபகரும் பிஷப்புமான வான் மக்லாஃப்லன் இவ்வாறு கூறுகிறார்: “இயேசு கொடுக்கும் பரிசை நாங்கள் வாங்கிக்கொள்ளவும் அதிலிருந்து வட்டியை பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்பினார்.” 2000-⁠ல், வியாபாரம் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை சர்ச்சுக்கு அள்ளித் தந்தது என்று அவர் மேலும் கூறுகிறார். (g02 6/22)

அச்சிடப்படும் சவக்கடல் சுருள்கள்

“யூதேய பாலைவனத்திலுள்ள குகைகளில் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆன பிறகு, 2,000 வருட பழமையான மத எழுத்துக்களின் கடைசியானது பிரசுரிக்கப்பட்டதை அறிஞர்கள் கொண்டாடுகின்றனர்” என யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் கூறுகிறது. வரிசையாக 37 தொகுதிகளில் வெளியிட்டதை பேராசிரியர் இமான்வல் டோவ் அறிவித்தார்; இவர் அந்த சுருள்களை அலசி ஆராய்ந்த அறிஞர்கள் குழுவின் தலைவராவார். டிஜிட்டல் போட்டோகிராஃபியும் மங்கிவிட்ட எழுத்துக்களை மீண்டும் கண்டுபிடிக்க அறிஞர்களுக்கு உதவின மல்ட்டி ஸ்பெக்ட்ரல் இமேஜிங்கும் உட்பட்ட நவீன தொழில்நுட்பத்தின் உதவியால்தான் இந்த வெளியீடு நிறைவு பெற்றது. எபிரெயு, அரமிக், கிரேக்கு, லத்தீன் ஆகிய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தக தொகுதிகள், பொ.ச.மு. 250 முதல் பொ.ச. 70 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை. (g02 6/8)

எதிர்பாரா சம்பவங்களை சமாளித்தல்

கனடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ புத்தக வியாபாரிகள் கழக உறுப்பினர்களால் விற்கப்பட்ட பைபிள்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது; ஐக்கிய மாகாணங்களில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு அது இவ்வாறு அதிகரித்திருப்பதாக கனடாவின் குளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “மக்கள் விடைகளைக் கண்டறிய வகை தேடுகின்றனர். இதில் உட்பட்டுள்ள ஓர் அம்சம் கவலையுணர்வு ஆகும். மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் விடை கிடைக்காத கேள்விகள் எக்கச்சக்கமாய் உள்ளன” என அந்தக் கழகத்தின் நிர்வாக இயக்குநரான மார்லீன் லாக்லன் கூறுகிறார். சிறு சிறு கடைகளிலும்கூட, “சோக சம்பவங்களுக்கான காரணத்தை புரிந்துகொள்ள மக்களுக்கு உதவும் மத சம்பந்தப்பட்ட எந்தப் புத்தகத்தின் விற்பனையும் அதிகரித்து வருகிறது” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. டோரான்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இறையியல் பேராசிரியர் ஒருவர் கூறுவதைப் பார்த்தால், இவ்வாறு மக்கள் செய்வது சகஜமானதுதான். “என்ன ஏது என்று எதுவும் புரியாதபோது, அடிப்படை மத கேள்விகளை மக்கள் கேட்க ஆரம்பிக்கிறார்கள்”; மேலும், “பைபிளில் விடை தேடுவது பயனளிக்கலாம்” என்று அவர் கூறினார். (g02 6/8)

எய்ட்ஸ்தென் ஆப்பிரிக்காவில் முக்கிய கொலையாளி

தென் ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வைப் பற்றி குறிப்பு தெரிவிக்கையில், “தென் ஆப்பிரிக்காவில் ஏற்படும் மரணங்களுக்கு எய்ட்ஸ் முக்கிய காரணமாகி வருகிறது; அது இளம் ஆட்களையே தீவிரமாக பாதிக்கிறது” என்று த நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், தென் ஆப்பிரிக்காவில் 50 முதல் 70 லட்சம் மக்கள் எய்ட்ஸால் இறப்பார்கள் என்பதாக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். 20-லிருந்து 30 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் 60-லிருந்து 70 வயதுக்குட்பட்ட பெண்களைவிட அதிகமாக இறக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில்தான், “வேறெந்த நாட்டையும்விட அதிக மக்களுக்கு எச்.ஐ.வி. வைரஸ் இருப்பதாக அறிய வந்துள்ளது; இந்த வைரஸ்தான் எய்ட்ஸுக்கு காரணமானது” என அந்த கட்டுரை மேலும் சொல்கிறது. “தென் ஆப்பிரிக்கர்களில் ஒன்பது பேரில் ஒருவர் என்ற வீதத்திலும், பெரியவர்களில் [30-34 வயதுள்ளவர்களில்] நாலில் ஒருவர் என்ற வீதத்திலும் எச்.ஐ.வி. வைரஸ் தாக்கியிருப்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றும் அது தெரிவிக்கிறது. (g02 6/8)

நகர வாழ்க்கை

“லண்டன், நியூ யார்க், பாரிஸ், பெர்லின், சிகாகோ ஆகிய நகரங்களே 1900-⁠ல் மிகப் பெரிய நகரங்களாய் இருந்தவை” என லண்டனின் த சன்டே டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஆனால், புதிய மதிப்பீட்டின்படி, “2015-⁠ல் மேற்கத்திய நகரங்கள் விஞ்சப்பட்டிருக்கும். டோக்கியோ, மும்பை, லாகோஸ், வங்காள தேசத்தின் டாக்கா, பிரேஸிலின் சாவோ பாலோ ஆகிய நகரங்களே மிகப் பெரியவையாகி விடும்.” இவற்றிலும் இன்னும் 25 நகரங்கள் ஒவ்வொன்றிலும் 2 கோடிக்கும் அதிக மக்கள் வசிப்பர். என்றாலும், “2015-⁠ல், அதிக ஜனத்தொகை உள்ள முதல் 30 நகரங்களில் ஒன்று என்ற அதன் இடத்தை லண்டன் இழந்துவிடும்; ஜனத்தொகை குறைந்துபோன நகரங்களில் ஒரே நகரமாகவும் அது ஆகிவிடும் என்பதாக கணக்கெடுப்புகள் காட்டுகின்றன” என்கிறது டைம்ஸ் செய்தித்தாள். திடீர் ஜனத்தொகை வெடிப்பு அநேக பிரச்சினைகளை உருவாக்குகிறது. “ஏழைகள் ஒரே பகுதிகளிலேயே அதிகமதிகமாக பெருகுவார்கள்; இப்படிப்பட்ட பகுதிகளில் அதிகளவான குற்றச்செயல், வன்முறை, சமூக சீர்குலைவு ஆகியவை தலைவிரித்தாடும்” என்று அ.ஐ.மா., பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியரான டக்லஸ் மாஸி கூறினார். டோக்கியோவில் 2.6 கோடியாய் இருந்த எண்ணிக்கை விரைவில் 3 கோடியை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது; இந்த அதிகரிப்பை அந்நகரால் சமாளிக்க முடிந்திருக்கிறது; ஏனெனில் அதன் ஜனத்தொகை சீராக அதிகரித்து வருகிறது; அதுமட்டுமின்றி, அந்நகரில் சகல அடிப்படை வசதிகளும் உள்ளன. மாஸி கூறுவதன்படி, ரோமர்களின் காலத்திலிருந்து விக்டோரியா மகாராணியாரின் காலம் வரையாக உலக ஜனத்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவான மக்களே நகரங்களில் வசித்து வந்தனர்; ஆனால் வருடம் 2015-⁠ற்குள் 53 சதவீதத்தினர் நகர வாழ்க்கைக்கு மாறிவிடுவர் என்று அவர் கணக்கிடுகிறார். (g02 6/8)

புகைப்பதை நிறுத்துவீர்​—நிரந்தரமாக!

“புகைப்பவர்கள் அனைவருமே அப்பழக்கத்தை நிறுத்த முயல வேண்டும். அதில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், மறுபடியும் புகைக்காமலிருக்க உறுதியாய் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் போ லுயன்பாக்; இவர் ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமிலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் வொர்க்கிங் லைஃப்பைச் சேர்ந்தவர். ஏன் அப்படி சொல்கிறார்? ஏனெனில் முன்பு புகைப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் புகைக்க ஆரம்பிப்பவர்களின் நுரையீரல் மிக வேகமாக சேதமடையலாம்; புகைப்பதை நிறுத்தாதவர்களைவிட அதிவேகமாக பாதிக்கப்படலாம். 35 முதல் 68 வயதுடைய 1,116 ஆண்களையும் பெண்களையும் வைத்து நடத்தப்பட்ட பத்தாண்டு கால ஆய்வு காட்டியது என்னவெனில்: ஆய்வு காலம் முழுவதும் புகைத்தவர்கள் நுரையீரல் செயல்பாட்டில் 3 சதவீத பாதிப்புக்கு உள்ளாயினர்; அதே சமயத்தில் ஒரு வருடத்திற்கும் மேல் புகைப்பதை நிறுத்திவிட்டு பிறகு மீண்டும் புகைக்க ஆரம்பித்தவர்களோ 5 சதவீத பாதிப்புக்கு உள்ளாயினர். “புகைப்பதை நிறுத்தி மீண்டும் புகைக்க ஆரம்பிக்கையில், நுரையீரல் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்பு, முதல் இரண்டு ஆண்டுகளில் மிக அதிகமாய் உள்ளது” என பேராசிரியர் லுயன்பாக் எச்சரிக்கிறார். “அத்துடன், நுரையீரல் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்பு மீண்டும் சரியாவதில்லை.” புகைப்பதை நிறுத்துவதில் வெற்றி கண்டவர்கள் அந்த ஆய்வு நடத்தப்பட்ட பத்தாண்டுகளின்போது ஒரேவொரு சதவீத பாதிப்பையே அனுபவித்தனர் என்பதாக லண்டனின் த டைம்ஸ் அறிக்கை செய்கிறது. (g02 6/8)