Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டுமா?

கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டுமா?

பைபிளின் கருத்து

கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டுமா?

நீங்கள் வளர்ந்து வந்த சூழல் அல்லது கலாச்சாரத்தின்படி, குடும்பத்துக்கு அல்லது சர்ச்சுக்கு வெளியே மதத்தைப் பற்றி பேச அனுமதி இல்லாதிருக்கலாம். அதனால் திடுதிப்பென பைபிளும் கையுமாய் யாராவது உங்கள் வீட்டுக்கு வந்து நின்றால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். மனிதருக்கு இரட்சிப்பைக் கொண்டு வரும் பெயரில் மத சரித்திரத்தில் பதிவாகியுள்ள வன்முறை சம்பவங்களே இப்படிப்பட்ட எண்ணத்தை சிலருடைய மனதில் உருவாக்கி உள்ளன.

கிறிஸ்துவிடமுள்ள அன்பினால் அல்ல ஆனால் கத்தி முனையில் பெரும் திரளானோர் ஒட்டுமொத்தமாக மதம் மாற்றப்பட்டதைப் பற்றி பல நாடுகளின் சரித்திரம் சொல்கிறது. தங்களைத் துன்புறுத்துவோரின் மதத்திற்கு மாறுவதற்குப் பதிலாக அநேகர் ஓடி ஒளிந்திருக்கிறார்கள், வீட்டையும் நாட்டையும் விட்டே ஓடியிருக்கிறார்கள், சிலர் கழுமரத்தில் எரிக்கப்பட்டு தங்கள் உயிரையேகூட இழந்திருக்கிறார்கள்.

இப்படி வற்புறுத்தி மதம் மாற்றும் செயலை ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் ஆதரிப்பதில்லை. அப்படியானால் மற்றவர்களிடம் மத நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்வதை அது தடை செய்கிறதா? பைபிளே பதிலளிக்கிறது.

அதிகாரத்துடன் போதித்தல்

முதலாவதாக, இயேசு கிறிஸ்து வைத்த முன்மாதிரியைக் கவனியுங்கள். தமக்குச் செவிசாய்த்துக் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையை மாற்றிய திறம்பட்ட போதகராக அவர் திகழ்ந்தார். (யோவான் 13:13, 15) மலைப்பிரசங்கத்தில் அவர் அளித்த போதனைகள் எளிமையானவையாக அதே சமயத்தில் வலிமையானவையாக இருந்தன. இவை செவிசாய்த்தவர்கள்மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின; “அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், . . . அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:28, 29) சுமார் 2,000 வருடங்களுக்குப் பின்பு, இன்று அவருடைய போதனைகளை ஆராய்ந்து பார்ப்பவர்களின் வாழ்க்கையிலும் அவை செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தக் கருத்தை உறுதிப்படுத்துபவராய் ஹான்ஸ் டீட்டர் பெட்ஸ் குறிப்பிட்டதாவது: “பொதுவாக, மக்கள்மீது மலைப்பிரசங்கம் செலுத்திய செல்வாக்கு யூத மதத்தின், கிறிஸ்தவ மதத்தின், ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் எல்லையையே தாண்டிச் சென்றுவிட்டது.”

இயேசு பரலோகத்துக்கு செல்வதற்கு சற்று முன்பு ஒரு கட்டளை கொடுத்தார்; அது அவர் ஆரம்பித்து வைத்த கற்பிக்கும் வேலை அவருடைய மரணத்துக்குப் பின்பு தொடரும் என்றும் விரிவடையும் என்றும் உறுதிப்படுத்தியது. (யோவான் 14:12) எல்லா தேசத்தாரிடமும் சென்று தாம் கட்டளையிட்ட ‘யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுமாறு’ தம்முடைய சீஷர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சீஷராக்குங்கள்’ என்றும் அதே கட்டளையில் இயேசு குறிப்பிட்ட போது இந்த ஊழியத்தின் பிரதான நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டது.​—மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.

அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தையும் சிந்தியுங்கள். அவர் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய பிறகு, புதிதாக கண்டடைந்த விசுவாசத்தைக் குறித்து மற்றவர்களிடம் பேச வெட்கப்படவில்லை. (அப்போஸ்தலர் 9:17-19, 22) ஜெபாலயத்தில் பேசுவதும் “கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்று” ‘காண்பிப்பதும்’ பவுலின் வழக்கமாக இருந்தது. ‘யூதரையும் கிரேக்கரையும் இணங்க வைப்பதற்காக’ (NW) அவர் திறமையாக “வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்”தார். ஒரு புத்தகத்தின்படி, “இணங்க வைத்தல்” என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை “பகுத்தறிவை பயன்படுத்தி ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் அல்லது தார்மீக ரீதியில் சிந்திப்பதன் மூலம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதை” அர்த்தப்படுத்துகிறது. இணங்க வைக்கும் விதத்தில் பவுல் நியாயம் காட்டி பேசியதால் அவர் ‘அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டார்.’​—அப்போஸ்தலர் 15:3; 17:1-4, 17; 18:4; 19:26.

வற்புறுத்துதலா இணங்க வைத்தலா?

இன்று, “மதம் மாற்றுவது” என்ற சொற்றொடர் ஏதோவொரு விதத்தில் வற்புறுத்தி மதம் மாற வைப்பதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பழக்கத்தை பைபிள் ஆதரிப்பதில்லை. மாறாக, தாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை விரும்புகிறார்களோ அதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் பொறுப்பையும் பெற்றவர்களாக மனிதர்கள் சுயாதீனத்துடன் படைக்கப்பட்டிருப்பதாக அது சொல்கிறது. இது, கடவுளை எப்படி வணங்குவது என்ற தீர்மானத்தையும் உட்படுத்துகிறது.​—உபாகமம் 30:19, 20; யோசுவா 24:15.

தம்மிடமிருந்த ஏராளமான சக்தியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தம்முடைய அறிவுரைகளை பின்பற்றும்படி யாரையும் இயேசு கட்டாயப்படுத்தவுமில்லை வற்புறுத்தவுமில்லை; இவ்வாறு அவர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த இந்த சுயாதீன உரிமைக்கு அவர் மரியாதை காட்டினார். (யோவான் 6:66-69) புரிந்துகொள்ளத்தக்க விவாதங்கள், உவமைகள், நோக்குநிலை கேள்விகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமக்குச் செவிசாய்த்தவர்களை அவர் தூண்டுவித்தார்; இவை அனைத்தையும் அவர்களுடைய இருதயத்தை எட்டுவதற்காக உபயோகித்தார். (மத்தேயு 13:34; 22:41-46; லூக்கா 10:36) இதே விதமாக மற்றவர்களை மரியாதையுடன் நடத்தும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார்.​—மத்தேயு 10:14.

பவுல் தன்னுடைய ஊழியத்திற்கு இயேசுவின் முன்மாதிரியைப் பயன்படுத்திக் கொண்டார் என்பது தெளிவாக தெரிகிறது. புரிந்துகொள்ளத்தக்க வேதப்பூர்வ விவாதங்களைப் பயன்படுத்தி தனக்குச் செவிசாய்த்தவர்களை பவுல் இணங்க வைத்த போதிலும், அவர்களின் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் அவர் மதித்தார். (அப்போஸ்தலர் 17:22, 23, 32) கடவுளிடமும் கிறிஸ்துவிடமும் உள்ள அன்பே படைப்பாளருக்கு ஆர்வத்துடன் சேவை செய்ய நம்மைத் தூண்டுவிக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். (யோவான் 3:16; 21:15-17) எனவே நாம் எடுக்கும் தீர்மானம் நம்முடைய தனிப்பட்ட விஷயம்.

தனிப்பட்ட தீர்மானம்

என்ன விதமான வீட்டை வாங்குவது, எங்கு வேலை செய்வது, எப்படி பிள்ளைகளை வளர்ப்பது போன்ற முக்கிய தீர்மானங்களை வாழ்க்கையில் எடுக்க வேண்டிய கட்டத்தில், ஆழ்ந்து சிந்திக்கும் ஆட்கள் ஏதோ உத்வேக தூண்டுதலால் செயல்பட மாட்டார்கள். அவர்கள் வித்தியாசமான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தாங்கள் கண்டறிந்தவற்றை தியானித்து, ஒருவேளை அறிவுரை கேட்கவும் செய்யலாம். இவற்றையெல்லாம் அலசியாராய்ந்த பின்பே அவர்கள் தீர்மானத்தை எடுப்பார்கள்.

வாழ்க்கையில் நாம் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும்விட, கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கே நாம் அதிக நேரத்தை செலவிடவும் முயற்சியை எடுக்கவும் வேண்டும். இப்போது எப்படி வாழ்கிறோம் என்பதையும், அதைவிட முக்கியமாக எதிர்காலத்தில் நித்திய வாழ்க்கைக்கான நம் எதிர்பார்ப்பையும் அது பாதிக்கும். இதை பெரோயாவில் வாழ்ந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தெளிவாக புரிந்துகொண்டிருந்தார்கள். அப்போஸ்தலன் பவுலே தனிப்பட்ட விதத்தில் நற்செய்தியை அவர்களுக்கு விளக்கி சொல்லியிருந்த போதிலும் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட விஷயங்கள் உண்மைதானா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் தினந்தோறும் வேதவாக்கியங்களை கவனமாய் ஆராய்ந்து பார்த்தார்கள். இதனால், ‘அவர்களில் அநேகம் பேர் விசுவாசிகளானார்கள்.’​—அப்போஸ்தலர் 17:11, 12.

இயேசு ஏற்பாடு செய்த கற்பிக்கும் வேலையையும், சீஷராக்கும் ஊழியத்தையும் இன்று யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். (மத்தேயு 24:14) மற்றவர்கள் தங்களுக்கென சொந்த மதத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமையை அவர்கள் மதிக்கிறார்கள். மற்றவர்களுடன் தங்கள் மத நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளும் விஷயத்தில் பைபிளிலுள்ள மாதிரியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆம், பைபிளிலிருந்து நியாயமான விளக்கங்களை அவர்கள் பயன்படுத்தி, உயிர் காக்கும் வேலையாக தாங்கள் கருதும் ஊழியத்தை செய்து வருகிறார்கள்.​—யோவான் 17:3; 1 தீமோத்தேயு 4:⁠16. (g02 6/8)