Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ரூம் மேட்டுடன் ஒத்துப்போவது எப்படி?

ரூம் மேட்டுடன் ஒத்துப்போவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ரூம் மேட்டுடன் ஒத்துப்போவது எப்படி?

“எனக்கு சமையலறைன்னா சுத்தமா பளிச்சுன்னு இருக்கனும். ஆனா என் ரூம் மேட்டுகளுக்கோ பாத்திரங்கள் கண்டபடி கிடந்தாலும் சரி ஸ்டவ் மீதே கிடந்தாலும் சரி கொஞ்சமும் கவலையே கிடையாது. அதையெல்லாம் துளியும் சட்டை பண்ண மாட்டார்கள்.”​—லின். a

ரூம் மேட்டுகள். “அவர்கள் ஆருயிர் நண்பர்களாகவும் இருக்கலாம், பரம விரோதிகளாகவும் இருக்கலாம்” என்கிறார் எழுத்தாளரான கெவன் ஸ்கோலெர்ரீ. ஒருவேளை அப்படி நீங்கள் நினைக்காவிட்டாலும் வேறொருவருடன் ரூமைப் பகிர்ந்துகொள்வது உண்மையிலேயே சவால் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. b யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் சொல்கிறபடி, பல்கலைக்கழக மாணவர்கள் ரூமைப் பகிர்ந்துகொள்கையில் சண்டை சச்சரவுகள் சர்வசாதாரணம்; அநேக பள்ளிகள், ரூம் மேட்டுகள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக உதவுவதற்கு “சமரச திட்டங்கள்,” கருத்தரங்குகள் உட்பட “பெரும் முயற்சிகள்” எடுக்கின்றன.

முழுநேர பிரசங்க ஊழியத்திற்காக வீட்டை விட்டு வந்து வேறொருவருடன் ரூமைப் பகிர்ந்துகொள்வது இளம் கிறிஸ்தவர்களுக்கும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதாலும் “நடைமுறை ஞானத்தை” வெளிக்காட்டுவதாலும் பெரும்பாலும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதை மனதில் வைப்பது ஊக்கமளிக்கிறது.​—நீதிமொழிகள் 2:7, NW.

ஒருவரையொருவர் அறிந்துகொள்ளுங்கள்

ஒருவழியாக புதிய இடத்தில் செட்டில் ஆகும் பரபரப்பு அடங்கியதும் நீங்கள் வீட்டை நினைத்து ஏங்க ஆரம்பிக்கலாம். (எண்ணாகமம் 11:4, 5) எனினும் பழைய காரியங்களை எண்ணி எண்ணி ஏங்குவது அனுசரித்துப் போவதை கடினமாகவே ஆக்கும். “‘இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?’ என்று கேட்காதே; இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல” என்ற அறிவுரையை பிரசங்கி 7:10 (பொது மொழிபெயர்ப்பு) கொடுக்கிறது. ஆகவே முடிந்த மட்டும் உங்கள் சூழ்நிலையை சந்தோஷமானதாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

முதலில் உங்கள் ரூம் மேட்டைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ரூம் மேட்டுகள் உயிர்த்தோழர்களாக உண்மையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால் அவனிடம் அல்லது அவளிடம் அந்தளவுக்கு ஒட்டுதல் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கலாம். எனினும் அந்த நபரோடு சேர்ந்து வாழ வேண்டுமானால் முடிந்த மட்டும் சுமுகமான உறவை வைத்துக்கொள்வது நியாயமானதாக தோன்றவில்லையா?

“அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும்” நோக்கும்படி நமக்கு பிலிப்பியர் 2:4 சொல்கிறது. ஏதோ விசாரணை நடத்தும் தோரணையில் அல்லாமல், உங்கள் ரூம் மேட்டின் குடும்ப பின்னணியை, அவனு(ளு)டைய ஆர்வங்களை, இலக்குகளை, விருப்புவெறுப்புகளை பற்றி நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ள முடியுமா? உங்களைப் பற்றியும் சொல்லுங்கள். எந்தளவுக்கு ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறீர்களோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் புரிந்துகொள்வீர்கள்.

அவ்வப்போது காரியங்களைச் சேர்ந்து செய்ய திட்டங்களைப் போடுங்கள். “சில சமயங்களில் நானும் என் ரூம் மேட்டுகளும் வெளியே சாப்பிடப் போவோம், அல்லது கலை கண்காட்சியைப் பார்வையிட சேர்ந்து போவோம்” என்கிறாள் லீ. ரூம் மேட்டுகளாக இருக்கும் கிறிஸ்தவர்கள் சபை கூட்டங்களுக்குத் தயாரித்தல் அல்லது பிரசங்க ஊழியத்துக்கு செல்லுதல் போன்ற ஆவிக்குரிய காரியங்களை சேர்ந்து செய்வது நட்பின் பிணைப்பைப் பலப்படுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழி.

“என் ரூம் மேட் பைபிள் அடிப்படையான பொது பேச்சைக் கொடுத்தபோது அவனை உற்சாகப்படுத்துவதற்காக அவனுடைய சபைக்கு சென்றேன்” என டேவிட் சொல்கிறான். விளையாட்டு, இசை போன்றவற்றில் இருவரது ரசனைகளும் வேறுபட்டாலும் ஆவிக்குரிய காரியங்களிடம் உள்ள ஈடுபாடு அவர்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆன்மீக விஷயங்களைப் பற்றி எக்கச்சக்கமாக உரையாடுவோம், விட்டால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம்” என்கிறான் டேவிட்.

எனினும் எச்சரிக்கை: மற்றவர்களுடன் நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்ள முடியாதளவுக்கு உங்கள் ரூம் மேட்டுடன் ஒட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் ரூம் மேட் எங்கு போனாலும் கட்டாயம் உங்களையும் அழைத்துப் போக வேண்டுமே என நினைக்கிறாரா? அப்படியென்றால் அளவுக்கதிகமான உங்கள் நெருக்கம் அவருக்குத் தொல்லையாக தோன்ற ஆரம்பிக்கலாம். உங்கள் நட்பில் ‘விரிவாகுங்கள்’ என்பதே பைபிள் சொல்லும் புத்திமதி.​—2 கொரிந்தியர் 6:13, NW.

பொன் விதிக்கு இசைய வாழுதல்

ஒருவரையொருவர் அறிந்துகொள்கையில் உங்களுக்கிடையே பழக்கவழக்கங்களில், விருப்புவெறுப்புகளில், நோக்குநிலைகளில் ஒத்துப்போகாத காரியங்கள் இருப்பதையும் புரிந்துகொள்வீர்கள். “குற்றங்குறைகளை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்” என மார்க் என்ற இளைஞன் எச்சரிக்கிறான். வளைந்துகொடுக்காதிருப்பது அல்லது சுயநலவாதியாக இருப்பது கவலையையும் டென்ஷனையும்தான் உண்டுபண்ணும். அதே போலவே, உங்கள் ரூம் மேட் பெரும் மாற்றங்கள் செய்து உங்களோடு அனுசரித்துப் போக வேண்டுமென எதிர்பார்த்தாலும் டென்ஷனே மிஞ்சும்.

ரூம் மேட்டாக இருப்பது சம்பந்தமாக ஃபெர்னான்டோ ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறான்; “நீங்கள் தன்னலமற்றவராகவும் சுயநலம் கருதாதவராகவும் இருக்க வேண்டும்” என்கிறான். இது, பின்வருமாறு சொல்லும் பிரபல பொன் விதிக்கு இசைவாக உள்ளது: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) உதாரணமாக, ரூமின் வெப்பநிலை சம்பந்தமாக தனக்கும் தன் ரூம் மேட்டுக்கும் கருத்து வேறுபாடிருப்பதை ஃபெர்னான்டோ சீக்கிரத்தில் உணர்ந்தான்; அவனுக்கு ரூம் கொஞ்சம் சூடாக இருக்க வேண்டும், ஆனால் அவனுடைய ரூம் மேட்டுக்கோ ரூம் குளுகுளுவென இருந்தால்தான் தூக்கம் வரும். தீர்வு? “நான் கம்பளியை உபயோகிக்க ஆரம்பித்தேன்” என்கிறான் ஃபெர்னான்டோ. ஆம், மார்க் சொல்வது போல் “வளைந்துகொடுப்பவர்களாய் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் ஓரிரு விஷயங்களில் பொறுத்துப் போக வேண்டியிருக்கலாம்.”

பொன் விதியை நீங்கள் பின்பற்ற வேண்டிய மற்றொரு அம்சம் இதோ: உங்கள் ரூம் மேட்டின் ரசனைகளை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக, அவன் கேட்கும் இசை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? பெரும்பாலும் நீங்கள் விரும்பும் இசை பற்றி அவனும் அப்படித்தான் நினைப்பான். இசையைப் பொருத்ததில் உங்கள் ரூம் மேட்டின் ரசனை, ஒழுக்கம் சம்பந்தமாக இழிவானதாக இல்லாதவரை நீங்கள் சகித்துப் போக பழகிக்கொள்ளலாம். “இசையைப் பொருத்ததில் என் ரூம் மேட்டுக்கு வித்தியாசமான ரசனை இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பழகிப் போய்விட்டது” என்கிறான் ஃபெர்னான்டோ. மறுபட்சத்தில், ரூம் மேட்டு படிக்கையில் அவனுக்குத் தொந்தரவு தராமல் ஹெட்ஃபோனை உபயோகித்து இசையை அனுபவித்து மகிழலாம்.

பொன் விதியைப் பின்பற்றுவது பொருள் சம்பந்தமான காரியங்களில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உதாரணமாக, ஃபிரிட்ஜில் நீங்கள் எதையும் வாங்கி வைக்காமல், அங்கு இருப்பதை மட்டும் அனுமதி கேட்காமல் எந்நேரமும் எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் ரூம் மேட்டுக்கு ரொம்பவே கோபம் வரலாம். அதே சமயத்தில், நீங்கள் வாங்கி வந்த ஏதோவொன்றை உங்கள் ரூம் மேட்டு எடுத்து சாப்பிடுகையில் கோபப்படுவது அல்லது முறைத்துப் பார்ப்பது உண்மையில் சிநேகப்பான்மையான உறவுக்கு எந்த விதத்திலும் உதவாது. ‘தாராள மனதுடன் பகிர்ந்தளிக்கும்படி’ பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 6:18, பொ.மொ.) ரொம்பவே உங்களிடம் உரிமை கொண்டாடுவதாக நினைத்தால் மௌனம் சாதிக்காதீர்கள். உங்கள் பிரச்சினையை அமைதியாக, அன்பாக எடுத்துச் சொல்லுங்கள்.

ஒருவர் மற்றவரின் பொருளுடைமைகளை மதித்து நடக்க முயலுங்கள். மற்றவரின் அனுமதியின்றி ஏதோவொன்றை எடுப்பது அகந்தையான செயல். (நீதிமொழிகள் 11:2) உங்கள் ரூம் மேட்டுக்கும் தனிமை தேவை என்பதை உணர்ந்து நடந்துகொள்ளுங்கள். ரூமுக்குள் நுழைவதற்கு முன்பு கதவைத் தட்டுவது போன்ற இங்கிதங்கள் தெரிந்து நடந்துகொள்ளுங்கள். ரூம் மேட்டுக்கு மரியாதை கொடுத்தால், உங்களுக்கு மரியாதை கிடைக்கலாம். “வீட்டில் படிப்பதில் எங்க ரெண்டு பேருக்குமே பிரச்சினை இல்லை. நாங்க ரெண்டு பேருமே அதை மதித்து நடந்துக்குவோம், பேசாமல் அமைதியாக இருப்போம். ஆனா என் ரூம் மேட் வேறு ஏதாவது செய்ய விரும்பினால் நான் படிப்பதற்கு லைப்ரரிக்குப் போயிடுவேன்” என்கிறான் டேவிட்.

வாடகையில் உங்கள் பங்கை உரிய நேரத்தில் கொடுப்பது அல்லது உங்களுக்குரிய வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற விஷயத்தில் நம்பகமானவராக இருப்பதையும் பொன் விதியைப் பின்பற்றுவது உட்படுத்துகிறது.

சண்டை சச்சரவுகளை சரிசெய்தல்

பைபிள் காலங்களில் பெரிதும் மதிக்கப்பட்ட பவுல், பர்னபா எனும் கிறிஸ்தவர்கள் மத்தியில் “கடுங்கோபமூண்ட[து]. (அப்போஸ்தலர் 15:39) உங்கள் இருவருக்கும் இடையே அப்படியொரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? தனிப்பட்ட கருத்துவேறுபாடு அல்லது உங்களை பொறுமையின் எல்லைக்கே கொண்டுபோய் விடும் எரிச்சலூட்டும் சில பழக்கவழக்கம் இருக்கலாம். ஒரு விஷயத்தில் ஒத்துப்போகாததால் அல்லது ஒரு சமயம் காரசாரமான விவாதம் செய்ததால், இனி இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என அர்த்தமா? இல்லவே இல்லை. பவுலும் பர்னபாவும் தங்கள் கருத்துவேறுபாடுகளை சரிசெய்து கொண்டார்கள். ரூமைவிட்டு ஒரேயடியாக வெளியேறுவது என்ற முடிவை எடுக்காமல் நீங்களும் அவர்களைப் போல் ஒருவேளை பிரச்சினையைச் சரிசெய்து கொள்ளலாம். உங்களுக்குக் கைகொடுத்து உதவும் சில பைபிள் நியமங்கள் இதோ.

“ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”​—பிலிப்பியர் 2:3.

“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”​—எபேசியர் 4:31, 32.

“ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”​—மத்தேயு 5:23, 24; எபேசியர் 4:26.

பலன்கள்

ரூம் மேட்டுகளுடன் வாழும் இளம் (சின்னஞ்சிறியவர்கள் அல்ல) கிறிஸ்தவர்கள், “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்ற சாலொமோன் ராஜாவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை தாங்களே ருசித்துப் பார்த்திருக்கிறார்கள். (பிரசங்கி 4:9) வேறொருவருடன் ரூமைப் பகிர்ந்துகொள்வது பயனுள்ளதாய் இருப்பதை அநேகர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். “நல்ல விதத்தில் மற்றவர்களுடன் ஒத்துப்போகவும் அனுசரித்து நடக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிறான் மார்க். “உங்களைப் பற்றியே நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். அதே சமயத்தில் ரூம் மேட்டுகள் நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள தூண்டுகோலாக அமையலாம்” என்றும் சொல்கிறாள் ரனே. “புதிய ரூம் மேட்டுடன் தங்க ஆரம்பித்த சமயத்தில் நான் சரியான சுயநலவாதி. ஆனால் பிடிவாதம் பிடிக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன். என்னை மாதிரி அவளும் நடந்துகொள்ளாததால் அவள் செய்வதெல்லாம் தவறாகிவிடாது என்பதை இப்போது புரிந்துகொண்டிருக்கிறேன்” என லின் ஒப்புக்கொள்கிறாள்.

ரூம் மேட்டுடன் ஒத்துப்போவதில் முயற்சியும் தியாகமும் உட்பட்டிருப்பது உண்மை. ஆனால் பைபிள் நியமங்களைப் பின்பற்ற நீங்கள் கடினமாய் முயன்றால், சமாதானமாக சேர்ந்து வாழ்வீர்கள்; அதுமட்டுமா, ரூம் மேட்டுடன் சேர்ந்து வாழ்வதை அனுபவித்து மகிழ்வீர்கள். (g02 6/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b எமது மே 8, 2002 வெளியீட்டில் “ரூம் மேட்டை அனுசரித்துப் போவது ஏன் படுகஷ்டமாக இருக்கிறது?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 16-ன் படம்]

உங்களுக்கு உரியதாக இல்லாததை எடுத்து சாப்பிடுவது டென்ஷனுக்குக் காரணமாகலாம்

[பக்கம் 17-ன் படம்]

ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்ளுங்கள்