Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிப்ஸ் 5 உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உத்வேகம் அளியுங்கள்

டிப்ஸ் 5 உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உத்வேகம் அளியுங்கள்

“விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 13:16) நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க ஆசைப்படுகிறீர்களா? ஆரோக்கியம் சம்பந்தமான அடிப்படை தகவல்களைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்; அதன்படி சில மாற்றங்களைச் செய்யுங்கள்.

கற்றுக்கொண்டே இருங்கள். பல நாடுகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு விஷயங்களை டி.வி, புத்தகங்கள், கல்வித் திட்டங்கள் வாயிலாகக் கற்றுக்கொடுக்கின்றன; அவற்றிலிருந்து பயனடையுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உடலைக் கெடுத்துக்கொள்ளாமல் இருக்க, உதவும் அடிப்படை விஷயங்களை அவற்றிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள். அறிவுரைகளைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டு, மாற்றங்களைச் செய்யத் தயாராயிருங்கள்.

பெற்றோர்களே, நல்ல பழக்கவழக்கங்களை நீங்கள் கற்றுக்கொண்டு கடைப்பிடித்து வந்தால், உங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளும்கூட அதைக் கடைப்பிடிப்பார்கள். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது, சுத்தமாய் இருப்பது, சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது, உடற்பயிற்சி செய்வது, நோய் வருமுன் காப்பது ஆகியவற்றை நீங்கள் பின்பற்றினால், உங்கள் பிள்ளைகளும் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டு பயன் அடைவார்கள்.—நீதிமொழிகள் 22:6.

இன்னும் என்னென்ன செய்ய வேண்டும்? ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. ஆரோக்கியத்திற்குக் கைகொடுக்கிற பழக்கவழக்கங்களை காலம் முழுக்க கடைப்பிடிக்க வேண்டும். நீண்ட நாட்களாக நம்முடன் ஒட்டிக்கொண்டிருக்கிற கெட்ட பழக்கங்களை உதறித்தள்ளுவது சுலபமாக இருக்காது. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்வதற்கும்கூட பலமான தூண்டுதல் தேவை. ‘பயங்கரமான வியாதி வந்துவிடும், செத்தே போய்விடுவோம்’ என்றெல்லாம் தெரிந்தாலும்கூட, கெட்ட பழக்கங்களை நிறுத்துவதோ, நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவதோ சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படியானால், எது அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும்? அவர்கள் வைக்க வேண்டிய ஓர் உயர்ந்த குறிக்கோள்; இதை அவர்கள் மட்டுமல்ல, நாமும்கூட மனதில் வைத்திருக்க வேண்டும். அது என்ன?

ஆரோக்கியமாக, திடமாக இருந்தால்தான் தம்பதியர் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க முடியும்; பெற்றோர் பிள்ளைகளுக்குப் பக்கபலமாக இருந்து, அவர்களுக்குப் பயிற்சியளிக்க முடியும். வளர்ந்த பிள்ளைகள், அவர்களுடைய வயதான சொந்தங்களைக் கவனித்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் சமுதாயத்திற்கு வரமாக இருப்போம், இல்லாவிட்டால் சாபமாகத்தான் இருப்போம். மற்றவர்கள்மீது அன்பும் அக்கறையும் இருந்தால்தான் இதையெல்லாம் நாம் செய்வோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும்விட பலமான தூண்டுதல், படைப்பாளர்மீது நமக்கு இருக்கும் பக்தியும், நன்றியுணர்வும்தான். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் தந்த விலைமதிப்பற்ற பரிசாகிய உயிரைப் பொக்கிஷமாய்ப் பாதுகாக்க விரும்புகிறார்கள். (சங்கீதம் 36:9) நாம் ஆரோக்கியமாக இருந்தால்தானே கடவுளுக்கு நன்றாகச் சேவை செய்ய முடியும். ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இதைவிட உயர்ந்த காரணம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? (g11-E 03)

ஆரோக்கியமாய் வாழ்ந்தால் கோடி நன்மை