Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிப்ஸ் 3 உடற்பயிற்சி செய்யுங்கள்

டிப்ஸ் 3 உடற்பயிற்சி செய்யுங்கள்

“உடற்பயிற்சி ஒரு மாத்திரையாகக் கிடைத்தால், அதைத்தான் எல்லா டாக்டர்களும் எழுதிக்கொடுப்பார்கள்.” (எமோரி யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசன்) நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக நாம் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், உடற்பயிற்சிக்கு நிகர் உடற்பயிற்சிதான்.

உடற்பயிற்சி செய்யுங்கள். நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போம், தெளிவாக யோசிப்போம், உற்சாகமாக உணர்வோம், எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வோம்; அதோடு, சரிவிகித உணவும் சாப்பிட்டு வந்தால், உடலைக் கச்சிதமாக வைத்துக்கொள்ள முடியும். கடுமையாகவோ, வலி ஏற்படும் விதமாகவோ உடற்பயிற்சி செய்யக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை வாரத்தில் பல தடவை, தவறாமல் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதயம் வேகமாய் துடிக்கும் விதத்தில், நன்கு வியர்க்கும் விதத்தில் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; உதாரணமாக, மெதுவாக ஓடுவது, விறுவிறுவென நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஓடியாடி விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அப்படிச் செய்தால், நம்முடைய உடல் வலுவடையும்; மாரடைப்போ, பக்கவாதமோ வராமல் தடுக்கும். இத்தகைய உடற்பயிற்சிகளோடு சேர்த்து, மிதமான பளுதூக்கும் பயிற்சியும், கட்டழகுப் பயிற்சியும் செய்துவந்தால் நம்முடைய எலும்பு, தசை, கைகால் ஆகியவை உறுதியடையும். நம்முடைய உடலில் வளர்சிதை மாற்றம் அதிகளவில் நடைபெற இப்படிப்பட்ட உடற்பயிற்சிகள் உதவும், இதனால் நம் எடையும் தானாகவே குறைந்துவிடும்.

உடற்பயிற்சியை உற்சாகமாய் செய்யலாம்

நடங்கள். ஆறிலிருந்து அறுபது வரை எல்லாருக்குமே உடற்பயிற்சியால் பலன் கிடைக்கும்; அதற்காக, ‘ஜிம்’மிற்குத்தான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், கார், பஸ், ‘லிப்ட்’ போன்றவற்றைத் தவிர்த்து, நடந்து செல்வதாகும். நடக்கிற தூரத்தில் உள்ள இடத்திற்குப் போக ஏன் பஸ்ஸையோ காரையோ எதிர்பார்க்கிறீர்கள், நடந்தே போகலாமே! சிலசமயம், இப்படி நடப்பதால், வண்டியில் போவதைவிட நீங்கள் சீக்கிரமாக போய் சேர்ந்துவிடுவீர்கள். பெற்றோரே, உங்கள் பிள்ளைகளைக் கூடுமானவரை வெளியே ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள். இதனால், அவர்களுடைய உடல் வலிமையடையும்; முழு உடலும் ஒரே சீராக வளர்ச்சியடையும். ஆனால், ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடுகிற வீடியோ கேம்ஸ் போன்ற விளையாட்டுகளில் இதுபோன்ற பலன்கள் கிடைக்காது.

எளிமையான உடற்பயிற்சி செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்; அதைச் செய்ய வயதுவரம்பு இல்லை. ஒருவேளை, நீங்கள் வயதானவராக, உடல்நிலை சரியில்லாதவராக, இதுவரை உடற்பயிற்சியே செய்யாதவராக இருந்தால், ஒரு டாக்டரின் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சியைத் தொடங்குங்கள். ஆனால், கண்டிப்பாகத் தொடங்குங்கள். வயதானவர்களும்கூட படிப்படியாக உடற்பயிற்சியைத் தொடங்கி, அதை அளவாகச் செய்துவந்தால் அவர்களுடைய தசையும் எலும்புகளும் வலுப்பெறும். அதோடு, அவர்கள் தடுமாறி கீழே விழுவதும் குறையும்.

இந்தத் தொடர் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ரூஸ்டமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவருக்கும்கூட உடற்பயிற்சியே கைகொடுத்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு, அவரும் அவரது மனைவியும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்; காலையில் எழுந்து மெதுவாக ஓட ஆரம்பித்தார்கள். இப்படி, வாரத்திற்கு ஐந்து நாட்கள் செய்து வந்தார்கள். அவர் சொல்கிறார்: “ஆரம்பத்திலே, ‘ஜாகிங்’ போகாமல் இருக்க நாங்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்வோம். ஆனால், தனியாகப் போகாமல் இரண்டு பேராகப் போவதால் எங்களுக்கு ஒரு உந்துதல் கிடைக்கிறது. இப்போது அது எங்களுக்குப் பழக்கமாக ஆகிவிட்டது, இதை நாங்கள் ஆர்வமாகச் செய்கிறோம்.” (g11-E 03)